Nov 29, 2020

மணிக்குறள் - 22. எல்லை மறவரை ஏத்து

வீட்டை மறந்து வினையொன்றே மேற்கொண்டு
நாட்டுக்(கு) உழைப்பார் நயந்து                       211

குடும்பம் குழந்தை குழாஅம் மறந்தும்
கடும்பாலை நிற்பார் களித்து                           212

கருவென்று கொள்வாரே காத்தல் நமக்காய்ச்
செருவென்று சேர்ப்பார் நலம்                           213

துன்பத்தை இன்பென்பார் தூணாகத் தாங்குவார்
என்புருக்கும் அக்குளிரும் ஏற்று                       214

எல்லையில் இல்லையெனில் எல்லாம் அழிந்தொழிந்(து)
இல்லாமல் போவோமே இன்று                          215

எயில்காத்தல் போலவே எல்லையைக் காக்கத்
துயில்காணாத் தோள்களைப் போற்று          216

அதிரப் பொருதழிப்பார் ஆற்றலைப் போற்று
சதியையே சாகடிப்பார் சாற்று                         217

எல்லாய் இயங்குவார் எண்ணத்தில் நிற்பதுவோ
எல்லையைக் காத்தலொன்றே எண்               218

நாட்டுப்பற்(று) ஒன்றே நினைவினிற் கொள்வாரைப்
பாட்டினிற் கொண்டு பரவு                                  219

பொல்லாப் பகையழித்துப் பொன்வாழ்(வு) அளிக்கின்ற
எல்லை மறவரை ஏத்து                                          220

Nov 22, 2020

மணிக்குறள் - 21. குறிக்கோள் கொள்க

குறிக்கோளைக் கொண்டு குறையை அகற்று
வறிஞனாய் வாழாதே! வாழ்!                              201

நாளும் நமது குறிக்கோளைக் கைக்கொள்ளக்
கோளும் அயரும் கொடுத்து                               202

கொள்கை யிலாதவன் கொள்கை யெதுவெனின்
கொள்கை இழக்கும் குறை                                 203

நோக்கம் இலாதவன் நோவான்றன் கையிலே
ஆக்கம் இலாஅ(து) அழித்து                                204

மறத்தலும் உள்ளம் விடுத்தலும் மாண்போ?
துறவி யெனக்கொள் தவம்                                 205

அச்சாணி யாவ(து) அகத்துறை கோளேயாம்
பொச்சாஅ வாமை புகழ்                                      206

குறுங்கோள் நெடுங்கோள் குறைவிலா வாழ்வுக்(கு)
உறுங்கோள் உணர்தல் உயர்வு                       207

திட்டம் இடற்குத் தெளிவான கோள்வேண்டும்
எட்டாக் கனியாவ தேது?                                     208

காலம் அறிந்து கடமை உணர்ந்தாற்றின்
ஞாலம் நினது வழி                                                  209

ஞாலத்தைக் கொள்ளும் நயனறிந்து கோள்கொண்டு
காலத்தோ(டு) ஆற்றிக் களி                                210

Nov 15, 2020

பைந்தமிழ்ச்செம்மல் தமிழகழ்வன் சுப்பிரமணி


‘அகடவிதமது’ என்னும் கவிதைத் தொகுப்பின் மூலம் தனது முதல்நூலின் தலைப்பினாலே அனைவரையும் திக்குமுக்காடச் செய்த இளங்கவி தமிழகழ்வன். சொல்லாற்றலில் வல்லாற்றல் கூட்டும் சுந்தரக் கவிஞரான தமிழகழ்வன் இருபத்தோராம் நூற்றாண்டில் மரபு கவிதையின் அத்தனை வடிவங்களிலும் புகுந்து விளையாடும் ஆற்றல் மிக்கவர். இற்றைத்திங்கள் தமிழ்குதிரின் கதாநாயகனாக வருகிறார். வாருங்கள் அவரைப் பற்றி அறிந்து கொள்வோம்..

தீபங்கள் போற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் 1987ஆம் ஆண்டு சேகர் – பூமாதேவி இணையோரின் தவப்புதல்வனாகத் தோன்றியவர் சுப்பிரமணி. தமிழ்மீதுள்ள காதலால் தமிழகழ்வன் என்னும் புனைபெயரைக் கொண்டார்.

பள்ளிப் பருவத்திலே பாடப் பகுதியாக யாப்பிலக்கணம் இடம்பெறாத வகுப்பிலும் தனக்குக் தமிழ் கற்பித்த ஆசிரியர்கள் மூட்டிய ஆர்வத்தீயால் யாப்பிலக்கணம் கற்றுத்தான் பாட்டெழுத வேண்டும் என முயன்று மரபு கவிதைகளை மட்டுமே கைக்கொண்டு வளர்ந்தார்.

பைந்தமிழ்ச் சோலையின் ஆசான் மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் அவர்களிடமும் பைந்தமிழ்ச் செம்மல் கவினப்பன், பைந்தமிழ்ச் செம்மல் முனைவர் அர.விவேகானந்தன் ஆகியோரிடமும் தமிழ் இலக்கணங்களைக் கற்று முறையாக மரபு கவிதைகளை எழுதி வருகிறார். ‘புலம் மிக்கவரைப் புலமை தெரிதல்’ என்பதற்கேற்பப் பைந்தமிழ்ச் சோலையின்மீதும் பாவலர் மா.வரதராசனார் மீதும் அளவில்லாப் பற்றுடையவர்.

பொறியியல் பட்டம் பெற்று மென்பொறியாளராய்த் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றி னாலும் அகவல் பாடும் ஆற்றலில் அறிந்து கொள்ளலாம் அன்னாரின் தமிழ்ப்பற்றை. ஆர்வத்துடன் செய்யும் செயலுக்கு எத்தனை தடைகள் வந்தாலும் அவை தடக்கற்களாக மாறிவிடும் என்பதுபோல, பள்ளிப்படிப்போடு தமிழைக் கற்றல் நின்றுவிடக் கூடாது என, இளநிலைத் தமிழிலக்கியமும் பயின்றுள்ளார்.

கதை, கவிதை, கட்டுரையென இலக்கியத் துறையின் அத்தனை வடிவங்களிலும் வலம் வரும் இளைஞரான தமிழகழ்வன் அவர்கள் பைந்தமிழ்ச் சோலையின் மின்னிதழான தமிழ்க்குதிர் இதழின் முக்கிய ஆசிரியராவும் பணியாற்றுகிறார்.

வாள்வீச்சென ஒளிவிசும் மிகச்சிறந்த பாவகைகளைப் படைக்கும் இவர் கவியரங்க மேடைகளிலும் அறிமுகமாகி அலங்கரிக்கின்றார். அதோடு மட்டுமல்லாமல் மதுரைத் தமிழிலக்கிய மின்தொகுப்புத் திட்டத்தில் (Project Madurai) தன்னார்வலனாக இணைந்து உதவியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

என்கடன் பணிசெய்து கிப்பதே என்ற சான்றோர் வாக்கிற்கிணங்க ஓய்வு கிடைக்கும்போதெல்லாம் ஓடோடித் தமிழ்பணியாற்றுமிவர் பைந்தமிழ்ச் சோலையின் உறுப்பினராகவும், எண்பேராயத்தில் உறுப்பினராகவும், பயிற்றுவிக்கும் துணை யாசிரியர்களுள் ஒருவராகவும், பைந்தமிழ்ச் சோலை – திருவண்ணாமலைக் கிளையின் துணைத்தலைவராகவும் பொறுப்பேற்றுள்ளார் அவ்வியக்கத்தின் மூலமாகக் குழந்தைகளுக்கு இலக்கண முறைப்படியான தமிழ்ப்பெயர்களைப் பரிந்துரைத்தல், செய்யுளிலும், உரைகளிலும் இலக்கணப் பிழைகளைக் களைந்து உதவுதல், யாப்பிலக்கண வகுப்பெடுத்தல் எனத் தமிழ்த்தொண்டு செய்கிறார்.

படிப்பவன் அறிவைப் பெறுகிறான்; படிப்பின் வழியாகப் படைப்பவனே அதில் முழுமையடை கிறான். ஆம் இக்கவிஞரும்

· தமிழர்தம் காலக் கணிதம் எங்கே போனது?
· வடசொற் கிளவி வடவெழுத்து ஒரீஇ…
· தமிழில் பெயர் வைப்பது எப்படி?
· தமிழாதங்கம்
· ஆத்தீகமும் நாத்தீகமும்
· திருமுருகாற்றுப்படை – உரையாடல்
போன்ற தரமான கட்டுரைகளை எழுதிச் சான்றோர் பலராலும் பாராட்டைப் பெற்றுள்ளார். அதோடு மட்டுமல்லாமல் சிறுகதையிலும் கோலோச்சும் இவர்

· அமிழ்தினும் ஆற்ற இனிதே,
· அன்புத்தொல்லை
· நீரில் உறங்கும் நிறைபிணி தீர்க்கும் (வாழ்க்கைக் கதை)
· காந்தி ஆசிரியரின் வகுப்பில் (வாழ்க்கைக் கதை)
போன்ற கதைளையும் எழுதியுள்ளார்.

· புதுமைப் பொங்கல் பொங்குக
· எல்லோரும் கொண்டாடுவோம்
· கலையாத கனவுகள்
· என்னை எழுதச் சொன்னது வானே!
· தமிழெங்கள் வளமிக்க உளமுற்ற தீ
· என்ன தவம் செய்தேன்
· ஏருக்குச் சீர் செய்வோம்
· போற்றப்பட வேண்டியது தாய்மை
· விழுதைத் தேடும் வேர்கள்ஔ
· சமூக முன்னேற்றத்திற்கு வேண்டியது - தொழில் வளர்ச்சி
· வானம் தொடலாம் வா
என்னும் தலைப்புகளில் தமிழகத்தின் பல ஊர்களிலும் கவியரங்க மேடையில் பங்காற்றுகிறார். மேலும் பல கவியரங்கங்களில் தலைவராகவும் பொறுப்பேற்றுள்ளார்.

பைந்தமிழ்ச்செம்மல், நற்றமிழாசான், சந்தக் கவிமணி, ஆசுகவி, விரைகவிவாணர், பைந்தமிழ்க் குருத்து, பைந்தமிழ்க்கதிர், வீறுகவியரசர் முடியரசன் விருது, கவியொளி போன்ற பட்டங்களையும் விருதுகளையும் பெற்று ஆற்றல் மிக்க எழுத்தாளராக வலம்வரும் தமிழகழ்வன் சுப்பிரமணி அவர்களுக்கு ஆனந்தி என்ற மனைவியும், தமிழ்க்குமரன், கதிர்வேலன் என்ற இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

பூமலர் தேடிப் புகுந்து நறுந்தேனுண்ணும் வண்டைப்போல் தமிழ்த்தேன் உண்டு யாவருக்கும் வழங்கும் தமிழகழ்வன் சுப்பிரமணி அவர்கள் எல்லா வளமும் பெற்றுத் தமிழன்னையின் புகழைத் தரணியெங்கும் கொண்டு செல்லும் ஒப்பற்ற பணிசெய்ய நாமும் உவகையுடன் வாழ்த்துவோம்.
பைந்தமிழ்ச் செம்மல் வள்ளிமுத்து

மணிக்குறள் - 20. செவிச்செல்வம் சேர்

நல்லவை கேட்க நயம்பெருகும் நல்வழியில்
வெல்லவைக்கும் கேள்வி விரும்பு                    191

ஆய்ந்தறியக் காண்கின்ற ஐயமெல்லாம் நீங்கிவிடும்
தோய்ந்தறிக கேள்வி தொடர்ந்து                     192

ஆசான்சொல் கேட்டறியும் ஆர்வம் உடைத்தாயின்
வீசாதோ தென்றல் வியந்து                                 193

கல்லா தவருக்கும் கேள்வியே மேலறிவாம்
அல்லா தனநீக்கும் ஆறு                                        194

நல்லார்சொல் கேட்டல் நனியினி(து) அல்லார்சொல்
கேளாமை யாண்டும் இனிது                              195

செவிவழியே சேர்க்கின்ற செல்வம் உளமார்ந்(து)
அவியாய் இனிக்கும் அறி                                     196

கேள்வி முயல்வதால் கேடறுத்(து) உய்விக்கும்
கோள்வினையும் கோடும் குலைந்து               197

ஊதிப் பெரிதாக்கும் ஊர்வம்பு வேண்டாது
காதினைக் காத்தல் கடன்                                     198

அறிவுறூஉஞ் செஞ்செவி ஆக்கத்திற்(கு) ஆக்கம்
செறிவுறூஉந் தோறும் செழிப்பு                         199

கவிவழிச் சேர்ந்த கலைகட்கும் ஆக்கம்
செவிவழிச் செய்தியாய்ச் சேர்ந்து                    200

Nov 8, 2020

மணிக்குறள் - 19. அகத்தை ஆள்

சொற்றோன்றி நிற்கச் சுரங்கமாய் வாய்த்திருக்கும்
வற்றா வரமாம் அகம்                                181

வரமென வாய்த்த வயங்ககத்தைக் காத்தல்
தரமாக்கும் நற்புகழ் தந்து                      182

அகந்தோன்றும் ஆக்கம் அகிலத்தை ஏற்றத்
தகவாகும் தன்மை யுணர்                      183

அகத்தினை ஆளவிட ஆக்கம் அழியும்
அகத்தினை ஆள்க அறிந்து                   184

அறிவின் துணையால் அகத்தை நிறுத்திச்
செறிவாய்ந் தறிதல் சிறப்பு                   185

அகத்திலே அன்பிருக்க ஆக்கமெலாம் இன்பம்
முகத்திலே தோன்றும் பொலிவு          186

அகத்திணைக்கும் ஆற்றும் புறத்திணைக்கும் ஆதி
அகத்தினை ஆள்கநல் ஆறு                  187

மனம்போன போக்கிலே போனால் மனித
இனமழிந்(து) இல்லாது போம்             188

நெஞ்சை நிலைநிறுத்தி நேர்வன தேர்ந்தாய்ந்து
நஞ்சை அகற்று நலம்                              189

உள்ளத்தின் ஆற்றலை ஓர்ந்தறிக எந்நாளும்
அள்ளக் குறையா அமிழ்து                    190

Nov 1, 2020

மணிக்குறள் - 18. சுற்றுச்சூழல் காப்போம்

சுற்றுப் புறச்சூழல் தூய்மையாய் வைத்திருத்தல்
தொற்றுநோய் இல்லா நலம்                     171

சூழலின் தூய்மையைக் காத்தலே யாவர்க்கும்
பாழில்லா வாழ்வு தரும்                               172

மண்ணையும் விண்ணையும் மாசுகள் இல்லாது
கண்ணெனக் காத்தல் கடன்                      173

தொழில்கள் தொலைநோக்குப் பார்வையொடு வேண்டும்
கழிவுமே லாண்மையும் கொண்டு           174

கழிவை முறையாய்க் கழித்தல் உலகை
அழிவினின்று காக்கும் அறம்                     175

இயற்கையைக் காவாக்கால் இல்லைநம் வாழ்க்கை
புயற்கையால் பூவுலகு பாழ்                       176

இயற்கை யுணர்க இயைந்து புரிக
செயற்கை சிறப்புத் தரும்                           177

சூழலைக் காப்பது சூழலைத் தேர்ந்தொப்ப
வாழலே ஆக்கும் வளம்                                178

நிலம்நீர் வளிதீ நெடுவிசும் பைந்தின்
நலத்தினை நாடு நலம்                                 179

சூழலைக் காக்கும் தொலைநோக்குப் பார்வையே
வாழற்(கு) உறுதி வழி                                    180