Apr 29, 2016

வளையற்சிந்து - தூது

தென்றலினை நெஞ்சுதனைச்
  செந்தமிழை முகிலை - மான்
  சேர்பணத்தைக் குயிலைக் - கிளி
  செம்மலரைத் துகிலைத் - தூது
 சேர்த்திடவே ஏவிடுவார்
 செவ்வேலோன்  மயிலை


அன்னம்புகை யிலைவிறலி
 அரவஞ்சேர் வண்டு - காக்கை
 அருநாரை நண்டு - நெல்
 அரும்பலவாம் கொண்டு - பேர்
 அழகுமாலை கொண்டுவாராய்
 அகங்குளிரக் கண்டு

         - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

Apr 26, 2016

இலாவணிச் சிந்து


எங்குலந்த ழைக்கவந்த தங்கமக ளென்றுனையான்
என்னுளத்தே வைத்திடுவேன் ஏத்தி ஏத்தி
தங்குளத்துத் துள்ளலிலே பங்குகொள வந்தவளே
தங்கமகப் பாடலினைச் சாத்திச் சாத்தி
                        - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

Apr 15, 2016

அதுகவிதை?

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

மலையொன்றைச் சுண்டெலிகள் மயிரால் கட்டி
      மறுபக்கம் சாய்த்துவிட முயல்வ தைப்போல்
கலைநுட்பம் கற்றுணராக் கருத்துக் காலக்
      கவிதைசெயப் புறப்பட்டுக் கண்டெ டுத்த
அலைபட்ட நெஞ்சன்ன அழகே இல்லா
       அதுகவிதை புதுக்கவிதை கவிதை வேறென்?
 கலைக்கொலையைக் கண்டுள்ளம் கவன்றே சொல்வன்
       கவியழகைக் காணாத கவியும் ஏனோ?
                     - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

என்பே தமர்க்காம்

கட்டளைக் கலித்துறை

என்பே தமர்க்காம் எனவுளும் உள்ளம் இயன்றவர்தம்
அன்பே உலகின் அறவழி யென்றே அறிந்திடுவாய்
அன்பே சிவமென்(று) அறைந்திடு வாரே அவனியில்பின்
என்பே தமுந்தான் எதிர்நிலா(து) ஓடி இரிந்திடுமே!

                             - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர் 

ஒயிற்கும்மி

பாடிடு வாய்மனம் நாடிடு வாய் - அந்தப்
பாவகை யாவையும் தேடிடு வாய்
    படியாமையும் ஒருநாளினில்
    வழியாகிடும் படியாகிடும்
        பண்பினைத் தோண்டவி லக்கண மாம்!

      - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

கும்மிச் சிந்து

கண்டதைக் கேட்டதைப் பாடிடு வேன்- உளம்
கொண்டதை உண்டதைப் பாடிடு வேன்.
பண்டையோர் வாழ்க்கையைப் பாடிடு வேன் - மலர்
பைந்தமிழ்ச் சோலையைப் பாடிடு வேன்!

                                  - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

Apr 4, 2016

நொண்டிச்சிந்து

சிந்துவைச் சிந்தையி லே - கொளத்
தித்திக்கும் எண்ணங்கள் சித்திக்கு மே
தந்தமிழ்த் தந்தத்த மிழ் - செறி
சந்தத்தைச் சிந்திடும் அந்தத்த மிழ்.

                 - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

ஆனந்தக் களிப்பு

சிந்தனை செய்கைசொல் ஒன்றாய் - நின்று
சீரிய வாழ்வினைக் கொண்டுசெல் நன்றாய்!
தந்தையும் தாயும்காண்  தெய்வம் - அந்தத்
தாரணி என்பாரைப் போற்றியே உய்வம்                           1

கந்தனை உள்ளத்துக் கொண்டேன் - அந்தக்
காந்தனைச் செந்தமிழ்ச் சொல்லுக்குள் கண்டேன்
எந்துணை என்றும வன்றான் - எதிர் 
ஏதேதும் துன்பமும் தந்திட நின்றால்                                 2
       
                                       - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்