Aug 24, 2021

அரங்கேற்றம் - ஐந்தணிப் பாட்டு (அலங்காரப்பஞ்சகம்) - ஐம்புலனைந்தணி - பகுதி 10

வெண்பா
நேரில் நிகழ்வதைக் கண்ணுற் றவரையே
சாருமாம் நீதிமன்றம் தக்கதாய் - ஓருவீர்
எப்புலன் தன்னிலும் என்னையே சால்பென்பீர்
இப்பொழு தாயினும் ஏற்று (91)

கட்டளைக் கலித்துறை
ஏற்ற பணியை இடையே யிலாமல் இயற்றிடுவேன்
ஊற்றம் உடைய உடலை ஒருவா றியக்கிடுவேன்
சீற்றம் படைத்திடும் தும்மலில் நாற்புலன் சீர்நடுங்கும்
ஆற்றல், இயக்கல், அதிர்த்தலில் நானோர் அரசெனவே (92)

அகவல்
அரசும் ஆண்டியும் அவனவன் வாயின்
முரசம் சொல்லும் முறைமை யாலே
வாய்தவங் கொள்ள வாய்த்தவை வெல்லும்
நோய்தவங் கொள்ளும் நொய்ந்த சொல்லால்
வாய்மையும் தூய்மையும் வழியாய்
வாய்கொள வாழ்வு வான்புகழ் பெறுமே (93)

விருத்தம்
பெற்றவர் தங்கள் பிள்ளைகள் எல்லாம்
  பெருமையு றுவதை மெச்சுதற்போல்
மற்றநற் புலன்காள் மழலையில் நீங்கள்
  வழங்கிடும் மொழியில் மகிழ்கின்றேன்!
குற்றமொன் றோரேன்! குறையெதுங் காணேன்!
  குழந்தைகள் கொள்ளும் சீரெல்லாம்
உற்றிடு மென்னை யெனவுணர்ந் தேனே!
  உயர்வினி லிறும்பூ தெய்துகிறேன்! (94)

வண்ண விருத்தம்
தனதன தனந்த தனதானா
  தனதன தனந்த தனதானா

உயர்வினில் மயங்கு முளமாவேன்
  ஒலியொடு விளங்கு பொறியாவேன்
தயவொடு புரிந்த பணியாலே
  தமிழொடு நனைந்த வரமாவேன்
பயனுற விளைந்த இசையாலே
  பசிதனை மறந்த தவமானேன்
அயர்வற நினைந்து நாடோறும்
  அமுதினை வழங்க யிணைவேனே! (95)

வெண்பா
ஏற்றுக்கொள் கின்றேன் எனைப்போல் பிறபுலனும்
மாற்றுக் குறையா வகையென்றே - சாற்றுங்கால்
எல்லாப் புலனும் இறைவன் கொடுத்ததே
எல்லாம் மதிப்புடைத் தே (96)

கட்டளைக் கலித்துறை
தேவன் படைத்தான் தெளிவு கொடுத்தான் திறன்கொடுத்தான்
ஆவல் அமைத்தான் அடக்கும் வழிகளும் ஆங்குரைத்தான்
மூவல் தவிர்த்தொரு முக்தியைச் சேர்க்க முடிந்தமட்டும்
தாவல் அறுப்போம் சமமெனச் சேர்வோம் தரமுணர்ந்தே (97)

அகவல்
உணர்வி லோங்கி உடலும் உளமும்
புணரும் வாழ்வே பொன்வாழ் வாகும்
புலன்கள் யாவும் புணர்ந்த உணர்வால்
நலங்காண் உயிரே நனியினிது வாழும்
ஒவ்வொரு புலனும் ஒன்றிய திறனால்
செவ்வை யாகச் செய்பணி
இவ்வுல கேத்தும் இன்பமே இன்பமே (98l

விருத்தம்
இன்பத் திற்கே ஐம்புலனும்!
  இன்பந் தானே இவ்வியற்கை!
இன்பத் திற்கே இப்புவியும்!
  இன்பத் தேட்டம் இயல்பாகும்!
இன்பஞ் சிறிதில் ஏறிடுவோம்!
  இன்பம் பெரிதை எண்ணிடுவோம்!
இன்பே எங்கள் ஐவரையும்
  இணைக்கும் தமிழின் இன்னொருபேர்! (99)

வண்ண விருத்தம்
தனனா தந்தனன தந்தா
 தனனா தந்தனன தந்தா
  தனனா தந்தனன தந்தா தனதானா

இணைவோ மைம்பொறிக ளொன்றாய்
 மகிழ்வா யன்பொடுக லந்தே
  எவரோ டும்பகைமை யின்றே உறவானோம்

இறையோ னின்கருணை யொன்றால்
 வளமா கும்பணியும் நன்றே
  இனியே துந்தடைகள் வந்தா லுடனோடும்

துணிவாய் நம்கடமை யொன்றே
 பெரிதாய் நெஞ்சுறுதி கொண்டே
  தொடர்வோ மின்ப(ம்)வரு மென்றே நகையோடே

துணையா குந்தமிழ்வி ருந்தால்
 மனமோ பண்புடனெ ழுந்தே
  சுகரா கந்தனில்மி தந்தே களிகூர

அணியா யொன்றிணைய நம்போ
 லினியோ ரிங்கெவரு முண்டோ
  அழகாய் நம்பணியில் நன்றே விளையாதோ

அடடா நம்பெருமை கண்டே
 அதனா லின்பமது கொண்டே
  அமுதூ றுங்கவியை யின்றே வனைவாரே

உணவே கொஞ்சுதமி ழென்றே
 நினைவால் நம்பும்நமை வென்றே
  உயிரோ யெங்குசெலு மென்றே புரியீரோ

உணர்வா லிங்கிதைய றிந்தே
 செவியான் மன்றினிலு வந்தே
  ஒலியால் நன்றியினை யின்றே பொழிவேனே ! (100)

Aug 23, 2021

அரங்கேற்றம் - ஐந்தணிப் பாட்டு (அலங்காரப்பஞ்சகம்) - ஐம்புலனைந்தணி - பகுதி 9

வெண்பா
போகுந் துயரிறையின் பொன்னடி போற்றுகையில்
ஆகும் திருவெல்லாம் அஃதறிவோம் - வாகாய்
விழியிரண் டுண்டாயின் வேத முதல்வன்
எழிலதும் கண்டுய்வோம் ஈண்டு (81)

கட்டளைக் கலித்துறை
ஈண்டொரு தெய்வத் திணையடி சேர்ந்தால் இறுகிடும்கண்
வேண்டிய தெல்லாம் விளம்பி விளம்பி வியந்திடும்வாய்
தூண்டிய வேர்வைத் துளியில் உடல்விழத் துள்ளும்செவி
ஆண்டிடும் தூப அமைதியில் ஆழ்தல் எனதுழைப்பே (82)

அகவல்
உழைப்பிரிந் துடன்சேர் நட்புப் போலத்
தழைத்த வாயின் தடங்கண் டோர்ந்து
சேரத் துன்பம் தேடி வாரா
என்னெனின் என்ன இல்லெனின் இல்லெனத்
தன்னள விருத்தும் தனிவாய்
பொன்னெனப் போற்றும் பொருள வாமே (83)

விருத்தம்
பொருளென்னுஞ் செல்வமது போனாற் கூடப்
  பொருட்டாகக் கொள்ளாமல் மீள்வார் உண்டே!
இருளென்னும் நோயதனில் மெய்தான் வீழ்ந்தால்
  இடர்ப்பாடு தான்கடத்தல் எளிதா காதே!
அருளென்னும் நெறிச்செல்வம் அதுபோ னாலோ
  அத்தனையும் போனதுதான்! மீட்பே இல்லை!
கருமாலின் கருணையினை மெய்யாய்ப் போற்றிக்
  கடைத்தேறல் நங்கடனே மெய்யாற் போற்றி! (84)

வண்ண விருத்தம்
தனத்தான தனன தனதானா
  தனத்தான தனன தனதானா

கடைத்தேறும் வழியை உணர்வீரே
  களிப்பான விசையில் நனைவீரே
மிடுக்கான செவியை அறியீரோ
  விலக்காம லுணர முயல்வீரே
குடத்தோடு திறமை யொளியாமல்
  குணத்தோடு வளர விடுவீரே
படித்தாலு மறிய முடியாத
  படைத்தோனின் புகழை நினைவீரே! (85)

வெண்பா
நினைவினில் நிற்கும் கடந்தகால் ஓட்டம்
அனைத்தும் விழிகண்டால் அன்றோ - கனவெனினும்
காண்பதே இன்பமாம் கண்களின் சீர்பாட
வேண்டுமோ இன்னும் விரிப்பு (86)

கட்டளைக் கலித்துறை
விரித்துரை பேசிடும் வள்ளுவம் மூக்கின் விணையதனை
விருந்தின ரோடும் விளைகிற காதல் வியப்பினொடும்
பொருத்திடும் இன்னும் புகழுள தாமோ புவியுயிர்க்கு
மருந்தெனத் தன்னால் வளர்வதும் என்றன் மகத்துவமே (87)

அகவல்
மகத்துவம் அறிவாய் மன்னுஞ் செறிவாய்
அகத்துவக் கின்ற ஆற்றலும் கொள்ளும்
வாய்தான் காது வரையில் நீளப்
பேய்தான் என்று பெருமையும் உரைப்பார்
இடம்பொருள் ஏவல் இனிது பார்த்து
நடம்புரி வாயே நன்றாய்
வாழும் வாழும் வகையறி வீரே (88)

விருத்தம்
வகையாய்ப் பெருமை பலபேசும்
  மற்ற புலன்காள்! நீங்களெலாம்
வகையாஞ் செய்கை ஒன்றிரண்டே
  வழங்கு கின்றீர்! மெய்யெனிலோ
தகையும் கைகால் தோல்நரம்பு
  தழைக்கும் இதயம் நீரகங்கள்
வகையாய்ப் பற்ப லுறுப்புகட்செய்
  வகைபல செயலும் என்னுடைத்தே! (89)

வண்ண விருத்தம்
தனந்த தானா தனதானா
  தனந்த தானா தனதானா

உடைந்து போவேன் செவிடானால்
  உறைந்து நோவேன் புரியாமல்
குடைந்த தாலே பழுதானேன்
  குமைந்து நானே தனியானேன்
முடிந்து போனா லொலியேது
  முடங்க லாமோ வெனநானே
தொடர்ந்து கேளா நிலைமாறத் 
  தொடங்கு வேனே பணிநேரே! (90)

Aug 22, 2021

அரங்கேற்றம் - ஐந்தணிப் பாட்டு (அலங்காரப்பஞ்சகம்) - ஐம்புலனைந்தணி - பகுதி 8

வெண்பா
ஓடும் விழிப்பாவை ஒன்றதே வீழ்த்தாதோ
மாடு பிடிக்கும் மறவரை - ஆடும்
விழியழகில் வீழ்ந்தார் பலமன்னர் என்றே
மொழியாதோ முன்படைத்த நூல் (71)

கட்டளைக் கலித்துறை
நூலை அளக்கும் நெறியெனச் சான்றோர் நுவன்றிடுவார்
ஆளை அளக்கும் அருஞ்செயல் நானதை ஆற்றிடுவேன்
மேலில் மணக்கும் வியர்வையும் நாற்றமும் மேலறிந்து
நாளை அளக்கும் நயம்நான் படைப்பேன் நலம்நிறைத்தே (72)

அகவல்
நிறைவுறு நெஞ்சம் நெறிப்பட நிறுத்திக்
குறைவயி றுண்டு குடலைக் காக்கத்
தலைப்பட எண்ணின் தன்வாய் நாப்பல்
அலைபடல் நிறுத்தி ஆக்கிய சோற்றைப்
பகுத்துண்டு வாழ்தல் பண்பாம்
தொகுத்துண்டு வாழின் தீராப் பிணியே (73)

விருத்தம்
பிணியெப் புலன்றா னுற்றாலும்
  பேச்சில் கேட்பார் மெய்நோவா?
அணியெப் புலன்றா னுற்றாலும்
  அழைப்ப ததனை மெய்யழகே!
கணையை நோதல் தவறென்றும்
  கைவில் தனைச்சொல் வீரென்றும்
மணியாம் மொழியு முள்ளதுவே!
  மற்றவை கணையாம்! மெய்வில்லே! (74)

வண்ண விருத்தம்
தத்தன தனதன தனதானா
  தத்தன தனதன தனதானா

மற்றவர் பணியினை விடமேலாய்
  மட்டற உயர்பணி புரிவேனே
உற்றவ ருடனொலி வடிவாக
  ஒப்புர வொடுதரு செவியானே!
நற்றமி ழமுதினை நிதம்நாடும்
  நற்றவ முனிவரின் அருளாலே
பெற்றவ னிறைவனை மறவேனே
  பித்தென இசையினில் மலர்வேனே! (75)

வெண்பா
மலர்கின்ற கண்ணின்றி வஞ்சியெழில் எங்ஙன்
புலப்படும் ஆங்குப் புகல்வீர் - அலர்கின்ற
தாமரை யன்னமுகம் கண்டு திளைக்கையில்
ஏமம் பெருகல் இயல்பு (76)

கட்டளைக் கலித்துறை
இயல்பில் மகளிர் இழைகூந் தலதில் இருக்குமணம்
வியப்பாய் எழவே விரிஞன் புரிவிளை யாடலதில்
நயமாய் எழுவினா நானிலா தங்கு நடக்குமதோ?
மயலால் எழுந்து வளர்வினா என்றன் மகிழ்ச்சியதே (77)

அகவல்
மகிழும் வாழ்வாம் மனத்திற் காதலால்
நெகிழ்ந்த நேரம் மனைவியை வஞ்சப்
புகழ்ச்சியாய் ஒருசொல் புகன்றால் போதும்
வாயைக் கொடுத்து வாங்கிக் கட்டும்
மாயைப் பிடியில் மாட்டும்
நேய மன்றோ நீள்வாய்க் கொழுப்பே (78)

விருத்தம்
கொழுப்பைச் சேர்த்தால் கொழுத்திடுவேன்!
  குறியாய் நடந்தால் இளைத்திடுவேன்!
தொழுதற் காகப் பணிந்திடுவேன்!
  துடிப்பாய் விளையாட் டாடிடுவேன்!
விழுதாய்த் தொடருஞ் சந்ததியும்!
  மெய்களின் காத லதனாலே!
அழலேன் வீணே பிறபுலன்காள்?
  அண்ணன் சிறப்பில் பங்குறுவீர்! (79)

வண்ண விருத்தம்
தனத்தா தந்தன தாத்தனா
  தனத்தா தந்தன தாத்தனா

சிறப்பா யென்பணி யாற்றுவேன்
  சிரித்தே பண்பொடு போற்றுவேன்
குறட்பா வன்புட னூட்டுவேன்
  குறிப்பால் வென்றுளம் நாட்டுவேன்
அறத்தோ டின்பமும் மீட்டுவேன்
  அடுக்கா யின்சுவை கூட்டுவேன்
வெறுக்கு மன்பரை யாற்றுவேன் 
  விருப்பு டன்துயர் போக்குவேன்! (80)

Aug 21, 2021

அரங்கேற்றம் - ஐந்தணிப் பாட்டு (அலங்காரப்பஞ்சகம்) - ஐம்புலனைந்தணி - பகுதி 7

வெண்பா
மகிழுமோ உள்ளம் மணமொலியூண் பட்டென்(று)
அகன்ற விழியிலையேல் ஆங்குப் - பகிர்கின்ற
காட்சியை ஒட்டிக் களிப்பும் மிகுமன்றோ
மாட்சி வளக்கண்ணுக் கே (61)

கட்டளைக் கலித்துறை
கேட்பதும் பார்ப்பதும் கேடா யிருப்பினும் கீழுடல்மேல்
ஆட்படும் காற்றில் அழுக்கே இருப்பினும் ஆங்கவைதான்
நாட்பட நாட்பட நம்முள் பழகிடும் நானெனக்கோர்
ஊற்றமி லாவிடம் உற்றில் நகர்வேன் உதவியிதே (62)

அகவல்
உதவி வேண்டி ஒருவன் வந்தான்
சிதைக்கும் பசிப்பிணி தீர்க்க நாடிப்
பசிக்கிற தென்றன் பசியைப் போக்கப்
புசிக்க வென்னுள தென்றான் வாயால்
வாய்க்கா தவனின் வாயோ உரைத்தது
வாய்தா னுளது வந்தவனோ
நோய்தாக் காலே நொறுங்கி னானே (63)

விருத்தம்
நோய்தாக் காலும் பிறப்பினிலும்
  நொய்மை நல்கும் விபத்தினிலும்
போய்ச்சேர்ந் தாலோ பிறபுலன்கள்
  புழுவாய்த் துடிப்பார் வாடிடுவார்!
வாய்ப்பை எணிப்பின் மனந்தேறி
  வாழ்வார் மாற்றுத் திறனோடே!
போய்ச்சேர்ந் தாலோ பொன்னுடம்பு!
  போச்சுது! மாண்டார்! மீட்புண்டோ? (64)

வண்ண விருத்தம்
தந்தா தனத்தன தானதனா
  தந்தா தனத்தன தானதனா

உண்டோ எனக்கிணை மேனியிலே
  ஒன்றா யுழைப்பவர் வாழ்வினிலே
பண்பா யுயர்த்திட வேமுனைவேன்
  பந்தா யுருட்டிட வேநினையேன்
கண்டார் வருத்திய போதினிலும்
  கந்தா வெனப்புகழ் பாடிடுவேன்
நன்றா யிசைப்பவர் ரோடுறவாய்
  நன்றே வளத்துட னேயுறைவேன்! (65)

வெண்பா
வேண்டா தவரோ விருப்புக் குரியரோ
ஈண்டொரு பார்வை எடுத்துரைக்கும் - யாண்டும்
ஒருசொலு மின்றி உணர்த்தும் குறிப்பால்
புருவ முயர்த்தி விழி (66)

கட்டளைக் கலித்துறை
விழிக்கோர் உடைவின் விளியிலை ஆயினும் மூக்குடைந்தால்
பழிக்கோர் அடியெனப் பாரில் மனிதர் பதறிடுவார்
மொழிக்கோர் உளறல் செவிக்கோர் இடறல் திகழுடல
இழுக்கோர் அழிவாம் இழைவதென் மேலே இகழ்மணமே (67)

அகவல்
மணக்கும் மணக்கும் வாய்ம ணக்கும்
பிணக்கும் சுணக்கும் பிரிந்து வறக்கும்
செந்தமிழ்க் கதிரலை வேலனைச் சீரலைச்
செந்தூர்க் காரனைச் சேர்ந்தே
அந்தமில் ஆனந்தத் திருப்புகழ் பாடவே (68)

விருத்தம்
வேயாம் மெய்யென்னில் விதமாய் நவதுளைகள்
ஆய ரிளங்கோபன் அவன்கைக் குழலெனவே
மாயை யகன்றாங்கே மற்றோர் பிறப்பின்றித்
தோயு மிசையதனிற் றுலங்கித் திளைப்பேனே! (69)

வண்ண விருத்தம்
தனத்தா தய்யன தாத்தானா
  தனத்தா தய்யன தாத்தானா

திளைப்பேன் நல்லன கேட்டால்யான்
  திகைப்பே னல்லன கேட்டாலே
களைப்பால் மெல்லின நாற்றாவேன்
  கணக்காய் வல்லின ஊற்றாவேன்
வளைத்தே யள்ளிடு காற்றோடே
  மலைத்தே னுள்ளமு மீர்ப்பாலே
முளைத்தேன் செவ்விய பாட்டோடே
  முடிப்பேன் மெய்யதன் வீட்டோடே (70)

Aug 20, 2021

அரங்கேற்றம் - ஐந்தணிப் பாட்டு (அலங்காரப்பஞ்சகம்) - ஐம்புலனைந்தணி - பகுதி 6

வெண்பா
போற்றலாம் மற்ற புலன்களையும் என்றாலும்
ஆற்றலில் மிக்கவர் யாமென்றே - ஏற்பீர்
இறையைத் தொழுபவர் இன்னருள் பார்வை
குறைவின்றிக் கோருவதைக் கொண்டு (51)

கட்டளைக் கலித்துறை
கொண்டுள கோபக் குறிப்பை உணர்த்திடக் கூறுவதென்?
அண்டிட வேண்டா அவருக்கு மூக்கில் அனல்கொதிக்கும்
மண்டிடும் கோபி யெனும்பத மன்றோ? வளர்சினமும்
பண்டுள வீரம் படைத்தவன் தந்த பலம்,புகழே (52)

அகவல்
புகழைப் புகலும் புலனாம் வாய்த்தமை
அகழ்ந்த சொல்லால் அளந்து சொல்வேன்
முனையும் எந்நா முயற்சிப் பிறப்பால்
வனையும் சொல்லே வாய்க்கும்
படியே ஒலிக்கும் படைப்புக் குரியனே (53)

விருத்தம்
படைப்புக் கிறைவன் பண்ணிய தென்னுரு!
விடையி லமர்வான் வீட்டுவ தென்னுரு!
நடையி லுயர்மால் நாட்டுவ தென்னுயிர்!
விடைவே றுண்டோ? வெல்புலன் மெய்யதே! (54)

வண்ண விருத்தம்
தய்யா தனன தனதனனா
  தய்யா தனன தனதனனா

மெய்யா மிறைவன் மலரடியை
  மெய்யா யுருகி வழிபடவே
செய்வே னமுத இசையுடனே
  செல்வே னொலியின் வடிவினிலே
பொய்யா துவர மருள்பவனால்
  பொல்லா தமன நிறைவுறுவேன்
மெய்யோ டுழலு மினியவனாய்
  வெல்வே னுலகு செவியெனும்நான்! (55)

வெண்பா
நாணமோ நல்லறச் சீற்றமோ நெஞ்செழும்
மாணமோ வல்ல கருணையோ - வீணதாய்ச்
சொல்லெடுக்க வேண்டா துணையாய் விழிகளே
நல்லமுறை காட்டும் நடித்து! (56)

கட்டளைக் கலித்துறை
நடித்திடும் கண்கள் நலமிலாப் பொய்வாய் நயந்துரைக்கும்
நொடிந்திடும் மேனி நெறியிலாக் காதுகள் நோக்கிழக்கும்
துடித்திடும் நல்லிறை தோதாய் வளர தொடர்ந்திருந்தே
அடிப்பினும் பொய்யாம் அழுக்கறி யாநான் அரியவனே (57)

அகவல்
அரியவன் யானே அறிய உரைப்பேன்
அரிசியை உண்ணும் அருஞ்சொல் பேசும்
வழியா கும்மே வாயென் றாலே
விழியா செவியா மெய்யா கும்மா
மூக்கா கும்மா முனைந்தும்
தாக்கா தீரும் கணைச்சொல் லாலே (58)

விருத்தம்
சொல்லுக்கு வேராகும் மொழியே கண்டீர்!
  சொற்கொள்ளுஞ் சிறப்பெல்லாம் மொழியைச் சேரும்!
நல்லானொன் றீகின்றா னென்றா லந்த
  நல்லமனம் வாழ்த்திடுவோம்! கரத்தை அன்றே!
சொல்லுவதைக் கேளுங்கள்! அதுபோற் றானே
  சொல்லுகின்ற பிறபுலனின் சிறப்பெல் லாமும்
எல்லாமுஞ் சேர்ந்திருக்கும் மெய்யைச் சேரும்!
  ஏதுபுகல் மெய்யில்லை என்றால் இங்கே? (59)

வண்ண விருத்தம்
தந்தா தனதன தனதனன
  தந்தா தனதன தனதனன

இங்கே கவிமழை பொழிகிறது
  இன்றோ புயலென விரிகிறது
அங்கே வருபவ ரெவரெனினும்
  அன்பா லுளமது நனைகிறது
செங்கோ லொடுதமி ழுலகமதில்
  செண்டாய் மணமது நிறைகிறது
இங்கே செவியென தொலிபரவ
  எங்கோ வொருமனம் மகிழ்கிறது! (60)

Aug 19, 2021

அரங்கேற்றம் - ஐந்தணிப் பாட்டு (அலங்காரப்பஞ்சகம்) - ஐம்புலனைந்தணி - பகுதி 5

வெண்பா
அறிவீர் உலகினில் அன்பதனைக் காட்டப்
பொறியாம் விழியினைப் போலென்(று) - அறிவிப்பார்
கண்மணி என்றே களித்துரைப் பாரென்னில்
விண்வரை செல்லுமெம் பீடு (41)

கட்டளைக் கலித்துறை
பீடுடை என்றனைப் பேணிடும் செய்கை பெரியதன்று
நாடுள வெப்ப நிலைமை அறிந்து நலம்புனைந்து
மூடிய தேகம் முழுதும் குளிர்ச்சியை முன்படைப்பேன்
ஈடென மற்றோர் இருத்தல் பொதுப்பெயர் அவ்வளவே (42)

அகவல்
அவ்வள வெவ்வள வாகும்? எனக்குச்
செவ்வள வறியாச் செய்கை யுறவால்
துன்பமே மிஞ்சும் துணையாய்
இன்பமாய் மாற்றலை இனியான் பகர்வேன் (43)

விருத்தம்
பகரும் வாயெல்லாம் பாடட்டும் மெய்புகழே!
நுகரும் நாசியெலாம் நுகரட்டும் மெய்மணமே!
அகன்ற விழிசெவிகள் அருந்தட்டும் மெய்யேற்றம்!
இகத்தில் இவைதானே இன்பமிங்குப் புலன்கட்கே! (44)

வண்ண விருத்தம்
தனதான தய்யன தானனனா
  தனதான தய்யன தானனனா

புலனாக மெய்யொடு கூடிடுவேன்
  பொலிவான மெய்வழி யேவிழைவேன்
தலையாய செல்வமும் நானெனவே
  சரியாக வள்ளுவம் பேசியதே
கலையாத கல்வியும் நாடிவரும்
  கனிவாக நல்வழி கூறிவிடும்
நிலையாத இல்லற வாழ்வினிலே
  நிறைவோடு நல்லற மேபுரிவேன்! (45)

வெண்பா
அறம்புரி வோரை அகமகிழ் வோடு
புறக்கணால் கண்டு புகழ்வர் - திறம்படக்
கண்ணிலையேல் ஆங்குக் களிப்பில் சிறுகுறையே
எண்ணினால் ஏற்கலாமெஞ் சீர் (46)

கட்டளைக் கலித்துறை
சீர்பெறும் மாலை நறுமணம் பெற்றால் சிலிர்ப்பதுவும்
போர்பெறும் ரத்த புலால்மணம் உற்றால் புளிப்பதுவும்
நேர்பெறும் என்றன் நிறையாற் றலில்தான் நினைவெனும்மா
ஊர்பெற் குற்ற உதவிகள் என்றன் உடைமைகளே (47)

அகவல்
உடைமை எதுவோ உண்மை வாய்மை
கடைமை நீக்கிக் கடமை போற்றிச்
செயற்கருஞ் செயற்குச் சொல்லாய்ப்
பயத்தல் யான்செய் பயனா கும்மே (48)

விருத்தம்
பயனிங் கென்னாற் பலவாங் கண்டீர்
  பாரீர் செய்யும் வினையெல்லாம்
பயனாய் நிறையப் பலவாஞ் செயலும்
  பண்ணு மென்றன் கரங்களதே!
பயணம் செல்லும் பாத மெனதே!
  பயனும் பலநூ றதிலுண்டாம்!
வியக்கும் படியாய் விந்தை களெல்லாம்
  விளைந்த தென்னாற் றானன்றோ? (49)

வண்ண விருத்தம்
தன்னா தானா தாத்தந்தா
  தன்னா தானா தாத்தந்தா

என்னால் தானே கேட்கின்றீர்
  என்னால் தானே பேச்சென்றீர்
நன்னா ளோடே பூக்கின்றீர்
  நம்மோ டேதான் மூச்சென்றீர்
முன்னா லேபா ராட்டென்றால்
  முன்னே றாதோ சாற்றுங்கள்
சொன்னே னேதோ சொற்கொண்டு
  சும்மா யானே போற்றுங்கள்! (50)

Aug 18, 2021

அரங்கேற்றம் - ஐந்தணிப் பாட்டு (அலங்காரப்பஞ்சகம்) - ஐம்புலனைந்தணி - பகுதி 4

வெண்பா
புரியும் செயல்யாவும் பூவிழி இன்றிப்
புரிதலும் செம்மையாய்ப் போகா - அரிய
விழியிரண் டின்றி விரைந்து பணியில்
எழிலாய் இயங்குவதெவ் வாறு (31)

கட்டளைக் கலித்துறை
உடுப்பது மேனி, விழிப்பவை கண்கள், உலகினர்சொல்
மடுப்பது காது மடமட என்றே விழுங்கிடும்வாய்
சொடுக்கிடும் மூளை நடத்திட நால்வர் சொலுமறிவை
முடிப்பதும் வாழ விடுப்பதும் நானென் மூச்செனவே! (32)

அகவல்
மூச்சுப் பிடிக்க மொடமொடக் குடித்துப்
பேச்சுக் குழறிப் பிறவி மறக்கச்
சாக்கடை சந்து தெருக்கள்
போக்கிடந் தெரியாது புரளவைப் பேனே (33)

விருத்தம்
புரளப் பஞ்சுப் பொதிகட்டில்
  புரக்க வாசச் சவுக்காரம்!
திரண்டு கொழிக்கப் பலபயிற்சி!
  தேடி யணியும் நல்லாடை!
மிரட்டும் நோய்கட் கெதிராக
  மேனி முழுதுஞ் சோதனைகள்!
உருளும் புவிவாழ் மாந்தரெனக்
  குவந்தே செய்யும் பணிகளிதே! (34)

வண்ண விருத்தம்
தனதன தந்தந் தனதானா
  தனதன தந்தந் தனதானா

பணிகளி லென்றுங் குறைவேது
  பகலிர வென்றுங் கிடையாது
இணையொடு நெஞ்சங் கனிவாக
  இறைதொழ வன்புந் துணையாக
குணநலன் விஞ்சுந் தமிழாலே
  குருவரு ளென்றுந் துணைதானே
அணிகளு மின்பந் தருமோசொல்
  அழகிசை சிந்துஞ் செவிதானே! 35

வெண்பா
தானே இயங்கும் தரத்தோ டிமைகொண்
டேனோ இறைவன் எமைப்படைத்தான் - ஏனென்னில்
எந்தம் சிறப்பினை இவ்வுலகம் உய்த்துணர
இந்தக்காப் பெந்தமக் காம் (36)

கட்டளைக் கலித்துறை
காம்பெனக் காணும் கடிமலர் உண்டதில் கண்வழுக்கும்
சோம்பலில் மேனியும் தூங்கையில் காதும் தொடர்பிழக்கும்
ஓம்பிடும் மூச்ச தொருநொடி ஓய்ந்தால் உயிர்வருமோ?
வேம்புணும் வாயுமென் வேலையைப் பார்க்க முயன்றிடுமே (37)

அகவல்
முயற்சி இன்றி மூன்று வேளையும்
அயர்ச்சி இன்றி அள்ளி யுண்ணப்
பயிற்சி வேண்டுமோ பாரீர்
வயிற்றின் ஆணைக்கும் வணங்கா தவனே (38)

விருத்தம்
வணக்கம் பலவுண் டென்றாலும்
  மடங்கித் தரையில் நான்வீழ
வணங்கும் வணங்கே தலைவணங்காம்!
  மற்றீ தெதனா லென்பீரேல்
வணக்கம் பெறுவார் திருமுன்னர்
  வணங்கும் என்னைச் சரணமெனப்
பிணக்கம் இன்றித் தருவதனால்!
  பெருமை சேர்க்கும் என்பணிவே! (39)

வண்ண விருத்தம்
தான தனன தனதான
  தான தனன தனதான

வேத வொலியில் மகிழ்வோடு
  மேவி யுலவு புலனாவேன்
நாத வடிவி லிறையோனை
  நாடு மடிய ரொடுவாழ்வேன்
பாதை யறியு முணர்வோடே
  பாயு மெனது மனமேதான்
காத ணிகளி னசைவோடே
  காத லுறவை யறிவேனே (40)

Aug 17, 2021

அரங்கேற்றம் - ஐந்தணிப் பாட்டு (அலங்காரப்பஞ்சகம்) - ஐம்புலனைந்தணி - பகுதி 3

வெண்பா
சிறப்பாய் உலகில் தெரிவனவும் செம்மை
அறவே அகன்ற பொருளும் - திறந்த
விழிகளாம் எம்மால் விளங்கக் கடவீர்
மொழியவும் வேண்டுமோ மொய்ம்பு (21)

கட்டளைக் கலித்துறை
மொய்ம்புறு பாட்டின் முயற்சியி லும்வாழ் முகங்களில்நான்
நம்பக மாயொரு நல்லிடம் சேர்வதே நல்லிசையாம்
வம்பெனச் சற்றெனை மேல்படைத் தால்குரல் வண்டினம்போல்
ஞம்மென நம்மென வந்திடும் பாட்டும் எனதருளே (22)

அகவல்
அருளைத் தேடி அகங்கடந் தோர்க்கும்
பொருளைத் தேடிப் புலம்பு வோர்க்கும்
நலந்தரு வதுவோ நாவின்
மலர்ச்சி யன்றோ மறுமொழி இலவே (23)

விருத்தம்
இலையிற் றழையிற் தொடங்கியதாம்
  இன்னும் பலவாய் வளர்ந்ததுவாம்!
கலையாய்ப் பலவா மாடையினாற்
  கவனங் கவர்வா ரெனைப்பேணி!
நிலையா தென்றே சொல்வாரும்
  நித்தம் நீர்கொண் டெனையாட்டித்
தலையாங் கடனாய்த் தாங்குவதால்
  தவிர்ப்பார்ச் சேருந் தீயனவே (24)

வண்ண விருத்தம்
தானன தாத்தத் தனதனா
  தானன தாத்தத் தனதனா

தீயன கேட்கத் துணிகிலேன்
  தீவினை போக்கத் தொழுகிறேன்
வாயொடு மூக்கைப் புரிகிலேன்
  மாவிழி நோக்கிற் கலைகிலேன்
காயமும் வாட்டப் பணிகிறேன்
  காதென தாட்டத் துழல்கிறேன்
மாயனின் பாட்டிற் குளிர்கிறேன்
  மாலனை யீர்க்கத் தொடர்வனே! (25)

வெண்பா
தொடர்வனென் சீரினைத் தொல்லையங் காலத்(து)
அடர்வனத் தாதி இருந்தோர் - தொடர்புக்(கு)
ஒருமொழி இன்றி உருவரைந்தார் நெஞ்சில்
இருந்ததைக் காட்டக்கண் ஏற்று (26)

கட்டளைக் கலித்துறை
ஏற்ற மெனில்விண் நோக்கி இருக்கும் எழல்மறந்த
தூற்றெனில் கீழே துவளல்! எனக்கித் தொடர்முரணாம்
ஆற்றலைக் கூட்டி யடித்தரை நோக்கியே யான்வளர்வேன்
தோற்ற அழகென் துணையால் ஈடு சொலலெளிதோ? (27)

அகவல்
எளிதோ வாழ்க்கை ஏற்றமுந் தாழ்வும்
அளிப்பதில் என்பங்(கு) அளப்பரி தாகும்
வாய்ப்பும் பெறுவேன் வாய்ப்புண்
காய்ப்பும் பெறுவேன் கணக்கில காண்கவே (28)

விருத்தம்
காண்போர்க்குக் களிதருதல் கண்கவரும் தோற்றம்!
  கவின்நாசி நுகர்ந்திடவே கமகமசவ் வாது!
ஆண்வாய்க்கும் பெண்வாய்க்கும் அன்றாடம் பேச்சு!
  அவரவரின் வடிவழகே எனவழக்கம் ஆச்சு!
தீண்டிநிதஞ் செவிநிறைக்கும் செய்திகளிற் பாதி
  திருவென்றால் உடல்பற்றித் தேர்வதுதான் மீதி!
மாண்புடனே மெய்போற்றல் வழமையெனக் கொண்டார்!
  மனநலனும் பிறநலனும் வாய்த்தவராய் நின்றார்! (29)

வண்ண விருத்தம்
தந்தான தனந்தான தனதனனா
  தந்தான தனந்தான தனதனனா

நின்றாலும் நடந்தாலும் பணிதொடர்வேன்
  நெஞ்சோடு கலந்தாடி யொலிதருவேன்
குன்றாக உயர்ந்தாலும் இசைதனையே
  கொண்டாடி மகிழ்ந்தாட வழிவிடுவேன்
ஒன்றாக இணைந்தாடு விழிகளொடே
  ஒன்றாக அலுங்காம லுடன்வருவேன்
என்றாலும் நெருங்காது கடமையினை
  எந்நேர மிருந்தாலு முடன்புரிவேன்! (30)

Aug 16, 2021

அரங்கேற்றம் - ஐந்தணிப் பாட்டு (அலங்காரப்பஞ்சகம்) - ஐம்புலனைந்தணி - பகுதி 2

வெண்பா
வல்லான் எனைப்போல் வளவுலகில் யாருமிலை
எல்லாப் பொருளின் இயல்பையும் - வல்லதாய்க்
காட்டும் விழியென்னைக் கல்விக்(கு) உவமைசொலி
ஏட்டிலிடும் வள்ளுவம் இங்கு (11)

கட்டளைக் கலித்துறை
குறையுள தேகக் குறிப்பை உணர்த்தக் குழைந்திடுவேன்
நிறைவழி வாழ்ந்திட நிச்சய மூச்சை நிகழ்த்திடுவேன்
மறைபுகழ் யோக பிராணா யாம வழிக்குதவி
சிறப்புறு மென்போல் செயல்பட வல்லவர் செப்புமினே (12)

அகவல்
செப்புவீர் எதனால் செவ்வா யாலே
உப்பும் புளிப்பும் உள்ள பிறவும்
உணர வைப்ப(து) உறுவாய்
கணக்காய்க் கதுவாய் மெதுவாய் அரைக்குமே (13)

விருத்தம்
மேனிநான் பேச வந்தேன்!
மெய்யேதான் பேச வந்தேன்!
நானிலம் போற்றும் கண்வாய்
நாசியும் செவியும் வாழும்
மேனியின் பகுதி யன்றோ?
மெய்யின்றித் தனியே உண்டோ?
ஏனினும் வாதம் ஐயா!
எனக்கிணை யாருண் டிங்கே! (14)

வண்ண விருத்தம்
கேள்விக் குறியின் வடிவாவேன்
கேள்விக் குரிய புலனாவேன்
வேள்விக் கடலி னிசையோடே
வேர்விட் டொழுகு மொலியாவேன்
நீள்வட் டமொடு செவியானும்
நேர்வெற் றியதன் விளைவாக
தோள்முட் டியசை யணிபோலும்
தோல்விக் குவிடை தருவேனே (15)

வெண்பா
தருவேன் தளிர்மகிழ்வும் மனத்திற்கு நாளும்
உருக்காட்டி மேலுமும் உள்ளத்(து) - இருக்கின்ற
துன்பத்தை நீரூற்றித் தோன்றச்செய் வேனன்றோ
என்பங்கிங் கெப்போதும் உண்டு (16)

கட்டளைக் கலித்துறை
உண்டெனக் குள்ளே உருசிறு ரோம உயர்படைகள்
கண்டவை உள்ளே கடவா வணமவை காத்திருக்கும்
கொண்டுள வாழ்வின் குறியாய்க் கசட்டின் குணம்துலக்கி
அண்டுதல் நீக்கும் அறிவினில் யாருளர் ஈடெனக்கே (17)

அகவல்
எனக்கா இந்த ஊன்பொதி அடிசில்
நினைத்த போதே நீரூறும் வாயில்
உள்ளம் உள்ளிய உணவைக்
கள்ள மின்றிக் களித்துண் பேனே (18)

விருத்தம்
உண்ணுஞ் சோறும் உவக்கும்பற் காட்சிகளைக்
கண்ணின் வழியும் காதருந்தும் தேனிசையும்
நுண்ணி நாசி நுகரும்பல் நல்மணமும்
எண்ணிப் பார்த்தால் ஏகுமின்ப மெனக்காமே! (19)

வண்ண விருத்தம்
தந்த தனந்த தனத்தானா
தந்த தனந்த தனத்தானா

இன்ப விருந்து படைப்பேனே
என்று முணர்ந்த தளிப்பேனே
வென்று நிமிர்ந்து களிப்பேனே
விந்தை யறிந்து வியப்பேனே
அன்பி லொளிர்ந்து மிடுக்காக
ஐந்து புலன்க ளடுக்கோடே
நின்று விரிந்த உறுப்பாவேன் 
நெஞ்சம் மலர்ந்து சிறப்போடே! (20)

Aug 15, 2021

அரங்கேற்றம் - ஐந்தணிப் பாட்டு (அலங்காரப்பஞ்சகம்) - ஐம்புலனைந்தணி - பகுதி 1

ஆக்கம்:

● வாழ்த்து, அவையடக்கம், நூற்பயன் : பைந்தமிழரசு மரபுமாமணி பாவலர் மா. வரதராசன்
● வெண்பா (கண்) - மன்னை வெங்கடேசன்
● கட்டளைக் கலித்துறை (நாசி) - விவேக்பாரதி
● அகவல் (வாய்) - தமிழகழ்வன் சுப்பிரமணி
● விருத்தம் (மெய்) - சுந்தர ராஜன்
● வண்ணம் (செவி) - சியாமளா ராஜசேகர்

***
காப்பு

தூரிகை யாலேயித் தூய வுலகாளும்
காரிகையே வுன்றன்றாள் காப்பாகச் - சீரிதெனச்
செப்புமணி ஐந்து செழுநற் பனுவலைத்
தப்பின்றிச் செய்வாய் தடம்.

அவையடக்கம்

மைத்தடத்தில் காலொற்ற மாசில் பனுவலென
வைத்திழுத்த சுண்டெலிபோல் வந்துற்றோம் - மெய்த்தடத்தில்
நிற்கும் அவையீர் நெடுங்கான லிப்பனுவல்
கற்கும்வழி என்பீர் கனிந்து!

நூல்!
ஐம்புலனைந்தணி

வெண்பா
பூமலி தோட்டமும் பொங்கு மியற்கையும்
யாமன்றோ காட்ட வகங்குளிரும் - தீமையைக்
காட்டி மனத்தில் கனலூட்டும் கண்கள்யாம்
ஏட்டிலும் இல்லையெமக் கீடு (1)

கட்டளைக் கலித்துறை
ஈடென உண்டோ இலங்கும் மணங்கள் இருப்பறிந்து
காடெனச் சேறெனக் கார்மழை மண்ணெனக் காற்றெனுமோர்
ஊடகம் சேர்க்கும் உணர்வுகள் சொல்லி, உயிரியங்கும்
வீடகம் வாழ வினைசெயும் மூக்கின் வியப்பினுக்கே! (2)

அகவல்
வியந்து வாயைப் பிளந்து நோக்கிப்
பயந்தன எண்ணிப் பாரே பேசும்
சொல்லால் உண்மை பொய்ம்மை
நல்லாண் மைக்கு நான்கா ரணனே (3)

விருத்தம்
நானென தென்றே எண்ணம்
நானிலம் வாழ்வோர்க் குண்டாம்!
நானென தென்ப தென்னே?
நாடினால் மெய்யே தோன்றும்!
நானென தென்ப தான்மா!
நவில்வதோ ஞான மார்க்கம்!
நானென தென்று பாரோர்
நவில்வதோ வென்னைத் தானே! (4)

வண்ண விருத்தம்
தன்னத் தானா தனதந்தா

என்னைத் தானே செவியென்றீர்
என்னைக் கேளா தவருண்டோ?
கன்னத் தோடே உறவென்றேன்
கன்னற் பாவால் மகிழ்கின்றேன்
வன்னத் தோடா லொளிர்கின்றேன்
வண்ணத் தோடே வனைகின்றேன்!
உன்னிப் போடே உணர்கின்றேன்
உன்மத் தோனா யொலிதந்தே! (5)

வெண்பா
தேனோ தினையோ சுவைக்கப் பணம்வேண்டும்
ஆனால் அகன்றிருக்கும் எம்மூலம் - தேனாய்
இனிக்கும் இயற்கையைக் காணல் எளிதாம்
எனைத்தும் பணச்செல(வு) இல் (6)

கட்டளைக் கலித்துறை
செலவிலை ஆயினும் சேர்க்கும் இணையச் செழும்பரப்பில்
உலகவர் பார்த்திடும் ஒவ்வொன் றினுக்கு மொருவிலையாம்!
பலகணி நின்றுநம் பக்கத்து வீட்டார் படையுணவைத்
தொலைவில் நுகரத் தொடும்விலை இல்லை! துணையெனதே! (7)

அகவல்
துணையாய் வருமே தொழுது பாட
அணைக்கும் அந்த அருஞ்சொல் லமிழ்தம்
பிறக்கும் வாயாய்ப் பெருமை
சிறக்கும் படியென் சீரிய வாழ்வே (8)

விருத்தம்
வாழு வாழ்வதும் வாழ்வெனச் சொல்வதும்
வாழு மெய்யிவன் வாழ்ந்திடு மட்டுமே!
சூழு மேதுயர் சூடெனில் நீங்கிட!
ஏழு கூவிலும் என்னிணை யில்லையே! (9)

வண்ண விருத்தம்
தன்னன தானன தய்யானா

என்னிணை யாருளர் சொல்வீரே
எண்ணினும் வேறிலை மெய்யீதே!
இன்மொழி பேசமு யல்வீரே
என்னுரை யாயிது கொள்வீரே
பொன்மொழி யேதமிழ் நல்லோரே
புன்னகை யோடுப யில்வீரே!
சொன்னது காதென நுள்ளாதீர்
சின்னவ னோயிலை வல்லோனே! (10)

Aug 2, 2021

வாய்

உண்பதற் குலகில் ஒராயிரம் உண்டு
கண்படும் எவையும் கருதி உண்பேன்
ஆசை தீரா அகத்துக் காகத்
தோசை நூறு தூர்ப்பேன் வயிற்றில்
கடுநோய்க் கெல்லாம் காரணம்
படுவாய் தானே பண்பிலன் யானே
வாய்ப்ப வெல்லாம் வாங்கி யுண்பேன்
வாய்ப்ப வெல்லாம் வகையாய் உரைப்பேன்
வாய்ப்புண் ணுக்கும் வாய்ப்புக்கும்
வாய்ப்ப தாமென் வாழ்க்கை யாமே