Aug 17, 2021

அரங்கேற்றம் - ஐந்தணிப் பாட்டு (அலங்காரப்பஞ்சகம்) - ஐம்புலனைந்தணி - பகுதி 3

வெண்பா
சிறப்பாய் உலகில் தெரிவனவும் செம்மை
அறவே அகன்ற பொருளும் - திறந்த
விழிகளாம் எம்மால் விளங்கக் கடவீர்
மொழியவும் வேண்டுமோ மொய்ம்பு (21)

கட்டளைக் கலித்துறை
மொய்ம்புறு பாட்டின் முயற்சியி லும்வாழ் முகங்களில்நான்
நம்பக மாயொரு நல்லிடம் சேர்வதே நல்லிசையாம்
வம்பெனச் சற்றெனை மேல்படைத் தால்குரல் வண்டினம்போல்
ஞம்மென நம்மென வந்திடும் பாட்டும் எனதருளே (22)

அகவல்
அருளைத் தேடி அகங்கடந் தோர்க்கும்
பொருளைத் தேடிப் புலம்பு வோர்க்கும்
நலந்தரு வதுவோ நாவின்
மலர்ச்சி யன்றோ மறுமொழி இலவே (23)

விருத்தம்
இலையிற் றழையிற் தொடங்கியதாம்
  இன்னும் பலவாய் வளர்ந்ததுவாம்!
கலையாய்ப் பலவா மாடையினாற்
  கவனங் கவர்வா ரெனைப்பேணி!
நிலையா தென்றே சொல்வாரும்
  நித்தம் நீர்கொண் டெனையாட்டித்
தலையாங் கடனாய்த் தாங்குவதால்
  தவிர்ப்பார்ச் சேருந் தீயனவே (24)

வண்ண விருத்தம்
தானன தாத்தத் தனதனா
  தானன தாத்தத் தனதனா

தீயன கேட்கத் துணிகிலேன்
  தீவினை போக்கத் தொழுகிறேன்
வாயொடு மூக்கைப் புரிகிலேன்
  மாவிழி நோக்கிற் கலைகிலேன்
காயமும் வாட்டப் பணிகிறேன்
  காதென தாட்டத் துழல்கிறேன்
மாயனின் பாட்டிற் குளிர்கிறேன்
  மாலனை யீர்க்கத் தொடர்வனே! (25)

வெண்பா
தொடர்வனென் சீரினைத் தொல்லையங் காலத்(து)
அடர்வனத் தாதி இருந்தோர் - தொடர்புக்(கு)
ஒருமொழி இன்றி உருவரைந்தார் நெஞ்சில்
இருந்ததைக் காட்டக்கண் ஏற்று (26)

கட்டளைக் கலித்துறை
ஏற்ற மெனில்விண் நோக்கி இருக்கும் எழல்மறந்த
தூற்றெனில் கீழே துவளல்! எனக்கித் தொடர்முரணாம்
ஆற்றலைக் கூட்டி யடித்தரை நோக்கியே யான்வளர்வேன்
தோற்ற அழகென் துணையால் ஈடு சொலலெளிதோ? (27)

அகவல்
எளிதோ வாழ்க்கை ஏற்றமுந் தாழ்வும்
அளிப்பதில் என்பங்(கு) அளப்பரி தாகும்
வாய்ப்பும் பெறுவேன் வாய்ப்புண்
காய்ப்பும் பெறுவேன் கணக்கில காண்கவே (28)

விருத்தம்
காண்போர்க்குக் களிதருதல் கண்கவரும் தோற்றம்!
  கவின்நாசி நுகர்ந்திடவே கமகமசவ் வாது!
ஆண்வாய்க்கும் பெண்வாய்க்கும் அன்றாடம் பேச்சு!
  அவரவரின் வடிவழகே எனவழக்கம் ஆச்சு!
தீண்டிநிதஞ் செவிநிறைக்கும் செய்திகளிற் பாதி
  திருவென்றால் உடல்பற்றித் தேர்வதுதான் மீதி!
மாண்புடனே மெய்போற்றல் வழமையெனக் கொண்டார்!
  மனநலனும் பிறநலனும் வாய்த்தவராய் நின்றார்! (29)

வண்ண விருத்தம்
தந்தான தனந்தான தனதனனா
  தந்தான தனந்தான தனதனனா

நின்றாலும் நடந்தாலும் பணிதொடர்வேன்
  நெஞ்சோடு கலந்தாடி யொலிதருவேன்
குன்றாக உயர்ந்தாலும் இசைதனையே
  கொண்டாடி மகிழ்ந்தாட வழிவிடுவேன்
ஒன்றாக இணைந்தாடு விழிகளொடே
  ஒன்றாக அலுங்காம லுடன்வருவேன்
என்றாலும் நெருங்காது கடமையினை
  எந்நேர மிருந்தாலு முடன்புரிவேன்! (30)

No comments:

Post a Comment