Jan 15, 2019

சோலைக் கவியரங்கம் - 8 இப்படித்தான் விடியும்.

கவியரங்கத் தலைவர்
பைந்தமிழ்ச்செம்மல் தமிழகழ்வன் சுப்பிரமணி

கவியரங்கத் தொடக்கக் கவிதை

தமிழ் வாழ்த்து

புலவர்க்குத் தனையீந்த பொற்றமிழே! ஊற்றமிழ்தே!
சொலவியலாச் செம்மையினைத் தொண்டுமுதல் கொண்டுள்ள
பலகலைகள் வளர்த்தெடுத்துப் பன்னெடுங்கால் சிறப்பாகத்
தலைமுறையைத் தழைக்கச்செய் தண்டமிழே! வாழியவே!

சோலை வாழ்த்து

மலைக்கவைத்த யாப்புகளை வகுத்தெளிதாய்த் தேனாக்கி
உலகமுழு(து) ஒண்டமிழை ஓங்கச்செய் பைந்தமிழின்
பலவிதமாய்ப் பலநாள்கள் காய்காய்கள் கனிகனிகள்
அலகிலவாய் அளிக்கின்ற அருஞ்சோலை வாழியவே

பைந்தமிழரசு மரபு மாமணி 
பாவலர் மா.வரதராசனார் வாழ்த்து

மாவரத மாமணியே மாங்காட்டுத் தமிழ்முனியே
பாவரத்தைத் தருகின்ற பருகுந்தேம் பாவணியே
தா’வரத்தை’ எனக்கேட்க நாவளரும் முன்பேநீர்
ஆவலினைக் கூட்டியுயிர் அரும்பசிக்குச் சோறூட்டி
‘நீவளர்க’ எனவந்து நிற்கின்ற தனிப்பெருமை
யாவளத்தால் யாமுரைப்பேன்? எவ்வாறென் உளமுரைப்பேன்?
பாவளர்க! நிலம்வாழப் பன்னெடுநாள் பைந்தமிழின்
காவளர்க! நலம்வாழ்க! கனியுள்ளம் வாழியவே!

அவையடக்கம்

பேரறி வுடையன் என்றெண்ணிப்
   பேதைமை செய்யும் மூடன்போல்
சீரறி வுடைய பெரியோர்முன்
   சிற்றறி வுடையன் வாய்திறந்தேன்
காரறி வேயென் அறிவாகும்
   கருத்தினில் கவியில் பிழைத்தாலோ
பேரறி வாளர் பொறுத்தருள்க
   பிழைகளைந் தென்னை வளர்த்தருள்க

புத்தாண்டு, பொங்கல் வாழ்த்து

அழகிய தமிழுக்(கு) ஆண்டுமுறை
... ஐயன் வள்ளு வன்போற்றி
வழங்குதல் கண்டு வரவேற்போம்
... வருக வருக புத்தாண்டே

இன்பம் பொங்கும் புத்தாண்டோ
... இரண்டா யிரத்தோர் ஐம்பஃது
முன்னோர் போற்றி வாழ்த்துவமே
... முறைமை போற்றி வாழ்த்துவமே

பழகு செய்யுள் அக்காலப்
... பழமை போற்று! பொங்கட்டும்
வழங்கு செய்யுள் இக்காலப்
... புதுமை சாற்று! பொங்கட்டும்

பொங்க லோடு புத்தாண்டு
... போற்றிப் பாடி வாழ்த்துவமே
எங்கும் செய்யுள் நிறையட்டும்
... இன்பப் பொங்கல் பொங்கட்டும்

கவியரங்கத் தலைமைக் கவிதை

புவிநிலவும் நிலைமை சொல்லிப்
... புதுமையினைப் படைக்க வேண்டிக்
கவியரங்கம் வந்தோர் வாழ்க
... கவியின்பம் சுவைப்போர் வாழ்க
குவித்திருக்கும் குப்பை யன்ன
... கொடுந்துயரம் போக்கி வாழத்
தெவிட்டாத தமிழைக் கேட்போம்
... செவியேறத் தமிழைக் கேட்போம்

நல்லெழுச்சி உள்ளத்தில் நிகழ வேண்டும்
... நல்லவொரு குமுகாயம் மலர வேண்டும்
நல்லதமிழ் செந்நாவில் ஏற வேண்டும்
... நாடுநம தென்றெண்ணி வாழ வேண்டும்
வல்லவனாய்ச் செய்செயலில் திகழ வேண்டும்
... மண்காக்கும் வளம்காக்கும் மானம் வேண்டும்
பொல்லாத செயல்யாவும் அழிய வேண்டும்
... பொன்னுலகம் எனுமாறு போற்ற வேண்டும்

அறமில்லாச் செய்கையினைச் செய்ய வேண்டா
... ஆற்றலினை உள்ளொளித்துத் திரிய வேண்டா
சிறைப்பறவை எனும்நிலைமை நமக்கு வேண்டா
... செறுத்துமனம் வெறுத்தொதுக்கித் திரிய வேண்டா
வறண்டிருக்கும் பாலையென வாழ்க்கை வேண்டா
... வன்முறைகள் ஒருநாளும் வேண்டா வேண்டா
கறுத்திருக்கும் உளம்வேண்டா கவிதை செய்வோம்
... கனவெனவே இருப்பவற்றை நனவாய்ச் செய்வோம்

எப்படித்தான் விடியுமென எண்ணி எண்ணி
... எழுந்தவுளத்(து) ஆதங்கம் எடுத்துக் கொட்டி
இப்படித்தான் விடியுமெனின் விடிவெ தற்கோ?
... இப்படித்தான் விடிவதுவோ? தவறே அன்றோ?
இப்படித்தான் விடிவதுவே சரியே ஆகும்
... இப்படித்தான் விடியுமென இடித்து ரைப்பார்
இப்படியாய் இருபதின்மர் எழுச்சி பெற்றிங்(கு)
... எப்படித்தான் உரைக்கின்றார் எழுந்து கேட்போம்

கவியரங்க நிறைவு கவிதை

வாழ்த்து

அன்பால் உலகம் மகிழ்வெய்த
... ஆளும் தலைமை சிறப்பெய்த
இன்பம் சூழத் துயர்தீர
... எண்ணி எண்ணிக் கவிசெய்த
நன்ன யங்கொள் நங்கவிஞர்
... நாளும் சிறக்க வாழ்த்துவமே!
இன்ன ருங்க னிச்சோலை
... என்றும் வாழ வாழ்த்துவமே!

இப்படித்தான் விடியும்.

விடியல் என்றால் என்ன?
... விடையாய் வருவ தென்ன?
விடுக்க வேண்டுவ தென்ன?
... வீடு பேறும் என்ன?
விடியும் நிலையொன் றுண்டு
... விடியா நிலையும் உண்டு
விடையைத் தேடிப் போவோம்
... விடியல் கண்டு வாழ்வோம்

துன்பநிலை கடப்பதுவே விடியல் ஆகும்
... துன்பநிலை துடைப்பதுவே விடியல் ஆகும்
அன்புவழி ஆளுவதே விடியல் ஆகும்
... ஆசைகளை விடுப்பதுவே விடியல் ஆகும்
சென்றநிலை நின்றநிலை தேர்ந்தெ டுத்துத்
... தேடுதலில் பெறும்விடையே விடியல் ஆகும்
இன்றுமுதல் ஒன்றெடுப்போம் என்னும் கொள்கை
... ஏற்றநிலை உளம்நிறுத்தல் விடியல் ஆகும்

குடியாலே விடியாத குடும்பங்கள் கோடி
... குடிமகனாய்க் கடனாற்றாக் கோமான்கள் கோடி
மடியாலே விடியாத குடும்பங்கள் கோடி
... மற்றவரைக் குறைசொல்லும் மனத்தாராய்க் கோடி
விடியாதா? எனப்புலம்பி வீணிருப்பார் கோடி
... விதியென்று பேர்சொல்லி விளங்காதார் கோடி
படிக்காது பணியாது பண்படாது பற்றிப்
... பதிக்காது பயனெங்கே என்பாரும் கோடி

கற்றுப் பெற்ற மேன்மையினால்
... கால்வைக் கின்ற செயல்களிலே
வெற்றி பெற்று விடிவதுவும்
... வெற்றுத் தனமாய் விடியாமல்
சுற்றித் திரிந்து போவதுவும்
... சுமையாய்ப் பூமிக்(கு) இருப்பதுவும்
உற்ற உளத்துத் தன்மையினால்
... உறுகு ளத்து நீர்ப்பூவாய்

நன்றி!

புவியறி வுறவே போற்றும் அறத்தைச்
செவியறி வுறுத்தும் செம்மை நெறியைக்
கவியெனும் ஆற்றில் கடனாய் ஆற்றும்
கவிஞருக் கெல்லாம் கோடி நன்றி!

Jan 14, 2019

வடசொற் கிளவி வடவெழுத்து ஒரீஇ… பகுதி 2

பைந்தமிழ்ச் செம்மல்
தமிழகழ்வன் சுப்பிரமணி

மொழிமுதல் எழுத்துகள்

தமிழார்வலர்களுக்கு வணக்கம்!

சென்ற பகுதியில் மெய்ம்மயக்கம் பற்றிப் பார்த்தோம். இப்பகுதியில் மொழிமுதல் எழுத்துகளைப் பற்றிப் பார்ப்போம்.

ஒவ்வொரு சொல்லும் எந்தெந்த எழுத்தில் தொடங்கலாம் என்பதைப் பற்றிக் கூறும் பகுதியே மொழிமுதல் எழுத்துகளாம்.

தொல்காப்பியம் காட்டும் மொழிமுதல் எழுத்துகள்:

உயிரெழுத்துகள் பன்னிரண்டும் மொழிமுதலாகும்.

மெய்யெழுத்துகள் மொழிமுதலாகா.

உயிர்மெய்யெழுத்துகளில் மொழிமுதலாகும் எழுத்துகளின் பட்டியலைக் கீழே காண்போம்.

க - வரிசையில் 12 உயிர்மெய்யெழுத்துகள்

த - வரிசையில் 12 உயிர்மெய்யெழுத்துகள்

ந - வரிசையில் 12 உயிர்மெய்யெழுத்துகள்

ப - வரிசையில் 12 உயிர்மெய்யெழுத்துகள்

ம - வரிசையில் 12 உயிர்மெய்யெழுத்துகள்

ச - வரிசையில் ச, சை, சௌ ஆகிய மூன்று எழுத்துகளைத் தவிர மற்ற ஒன்பது எழுத்துகள்

வ - வரிசையில் வ, வா, வி, வீ, வெ, வே, வை, வௌ ஆகிய எட்டு எழுத்துகள்

ஞ - வரிசையில் ஞா, ஞெ, ஞொ ஆகிய மூன்று எழுத்துகள்

ய - வரிசையில் யா என்னும் ஒரே எழுத்து

எந்த எழுத்தும் தன்னைக் குறிக்கும் இடத்து மொழிமுதல் ஆகி வரும்

நு - குற்றியலுகரமாகி மொழிமுதலில் வரும்

மேலே கூறப்பட்ட இலக்கண மரபிலிருந்து, வேறுபட்டுச் செய்யுளின்கண் திரிந்து முடிவனவும், இருவகை வழக்கின்கண்ணும் வழங்குமிடத்தான் மருவித் திரிவனவும் ஆகியவற்றை நல்லளவையாகிய ஆராய்ச்சியான் வழக்கு நடக்கும் இடத்தை உணர்ந்து, கூறப் பெற்ற இலக்கண நெறியோடு பொருந்த நடத்த வேண்டும் என்னும் தொல்காப்பியப் புறனடையை வழியாய்க் கொண்டு நன்னூலார் காலத்தில் சில மாற்றங்கள் எழுந்தன. அவையாவன:

ச - வரிசையில் மேலே குறிப்பிட்ட ஒன்பது எழுத்துகளோடு, ச, சை, சௌ ஆகியனவும் (பன்னிரண்டும்)

ய - வரிசையில் ‘யா’வுடன் ய, யு, யூ, யோ, யௌ ஆகியனவும்

ஞ - வரிசையில் ஞா, ஞெ, ஞொ ஆகிய மூன்றோடு 'ஞ'கரமும் மொழிமுதல் ஆகி வரும்.

ங - அ, இ, உ, எ, யா ஆகிய எழுத்துகளின் பின், மொழிமுதல் ஆகி வரும்.

இனி, அவற்றுக்கான எடுத்துக்காட்டுகள் சிலவற்றைக் காண்போம்.

உயிரெழுத்துகள்: அம்மா, ஆடு, இலை, ஈசல், உரல், ஊஞ்சல், எலி, ஏணி, ஐந்து, ஒளி, ஓடம், ஔவியம்

மெய்யெழுத்துகள்: எந்தச் சொல்லும் தனித்த மெய்யெழுத்துகளை மொழிமுதாலாகக் கொள்ளாது. அது வடமொழியிலும் பிறமொழிகளிலும் மட்டுமே வரும். எனவே "க்ருபா, த்ருதி, ப்ரபு, ம்ருணாளினி, வ்யாசா" - போன்ற வட சொற்கள் "கிருபா, திருதி, பிரபு, மிருணாளினி, வியாசர்" என எழுதப்பட வேண்டும்.

உயிர்மெய்யெழுத்துகள்:

க - கடை, காக்கை, கிளி, கீரி, குயில், கூட்டம், கெண்டை, கேழல், கை, கொட்டை, கோட்டம், கௌவை

த - தன்மை, தாழை, திண்மை, தீது, துன்பம், தூக்கம், தென்றல், தேக்கம், தை, தொண்டு, தோண்டு, தௌவை

ந - நங்கை, நாடு, நிலம், நீலம், நுகர்ச்சி, நூல், நெல், நேற்று, நை, நொய், நோய், நௌவி

ப - பட்டம், பாடம், பித்தன், பீடு, புகழ், பூதம், பெண்மை, பேறு, பை, பொன், போட்டி, பௌவம்

ம - மண், மான், மின், மீன், முரண், மூடன், மென்மை, மேன்மை, மை, மொழி, மோதிரம், மௌவல்

ச - சருகு, சான்றோர், சிலை, சீற்றம், சுற்றம், சூழ்ச்சி, செற்றம், சேவல், சைகை, சொல், சோறு, சௌரம்

வ - வண்டு, வான், விடு, வீடு, வெற்று, வேல், வையம், வௌ

ஞ - ஞமலி, ஞாண், ஞெகிழி, ஞொள்கிற்று

ய - யவனர், யாறு, யுகம், யூகி, யோகி, யௌவனம்

நு - நுந்தை

ங - அங்ஙனம், இங்ஙனம், உங்ஙனம், எங்ஙனம், யாங்ஙனம்

தன்னைக் குறிக்கும் இடத்து எல்லா உயிர்மெய்களும் மொழிமுதல் ஆகி வருதல் - ஙிகரம், டகரம், வுகரம், ரகரம், யீகாரம், வூகாரம், ஞைகாரம்

இவ்வாறு, மேலே குறித்த மொழிமுதல் எழுத்துகளைத் தவிர மற்ற எழுத்துகளில் தொடங்கும் எந்தச் சொல்லையும் ஆராய்ந்து ஏற்றவாறு பயன்படுத்த வேண்டும். எடுத்துக்காட்டாக, வடமொழியிலும் பிற மொழிகளிலும் பல்கிப் பெருகி வழங்கிவரும் பல சொற்கள் லகரம், ரகரம், டகரம் ஆகியவற்றையும் அவற்றின் வரிசை எழுத்துகளையும் மொழிமுதலாகக் கொண்டுள்ளன. அத்தகைய சொற்கள் தமிழுக்கு வரும்போது எப்படியெல்லாம் மாற்றிப் பயன்படுத்த வேண்டும் என்பதைப் பிறகு பார்க்கலாம்.

மொழிமுதல் எழுத்துகளைப் பற்றிப் பேசும்போது, ஔவையாரின் ஆத்திசூடியும், கொன்றை வேந்தனும் நமக்கு நினைவில் வரும். (தொடரும்)

Jan 8, 2019

நித்திரை கலைந்தேன் தேவதையே!

என்
நெஞ்சம் குளிர்ந்தது நேசம் மலர்ந்தது
நித்திரை கலைந்தேன் தேவதையே!
உன்
செவ்விய சொல்லால் செம்மொழி யானேன்
சித்திரம் போல நின்றாயே!

என்
கண்ணில் பற்றிய காதல் தீ
நெஞ்சில் பற்றிய காட்டுத்தீ

மின்னலே! என் கண்ணில் தோன்றிய மின்னலே!
கன்னலே! என் சொல்லில் தோன்றிய கன்னலே!

காரிரு ளான காதல் காட்டில்
கண்ணைக் கட்டி விட்டாயே!
கண்கள் சிமிட்டி என்னைத் தூண்டிக்
கவிஞன் ஆக்கி விட்டாயே!

வண்ணப் பட்டங்கள் வானில் மட்டுமா?
எண்ணப் பட்டங்கள் ஏட்டில் மட்டுமா?