Sep 30, 2020

வானம் தொடலாம் வா - கவியரங்கம்

பாவலர் மா.வரதராசனார் வணக்கம்

மாரி பொழிந்ததிரு மாவரதர் தாள்போற்றி
மாரி யெனப்பொழிய வேண்டுகிறேன் - ஊரில்
கவிஞன் எனவுலவக் காரணனாய் ஆயுங்
குவிநீண்மாங் காட்டுக் குயில்

முனைவர் அர.விவேகானந்தனார் வணக்கம்

அரங்கம் அதிர அருங்கவி செய்யும்
அரங்கவிவே கானந்தர் ஆற்றல் - வரமாம்
உரம்போற்றி வானத்(து) உயரந் தொடுவேன்
வரம்பாற்றிக் காக்க வரைந்து

பைந்தமிழ்ச் சோலையின் பெருமை

வானுயர்ந்த சோலையிலே நான்நடந்த பாதையெலாம்
தேனுகரும் வண்டாகத் தேடியதால் - நானுயர்ந்தேன்
பைந்தமிழை நன்குணர்ந்தேன் பாடிக் களித்திருப்பேன்
செய்தமிழைச் செவ்வனே தேர்ந்து

வானம் தொடலாம் வா

வானம் தொடலாம்வா வாவென்(று) எனையழைத்தீர்
நானும் தொடலாமே என்றிருந்தேன் - வானம்
தொடத்தான் முடியுமோ? தொட்டுப்பார் என்று
நடத்தான் வருவோம் நயந்து                                           1

வண்ணங்கொள் வெண்ணிலவே வான(ம்)விட்டு வாராயோ?
விண்ணிலே பாதையில்லை வீணனாய்க் - கண்ணிருண்டு
போவேனோ? காலம் பொதித்திருக்கும் உண்மையெலாம்
தேர்வேனே தேர்வேந்தன் நான்                                       2

முடிவில்லை வானோடு முந்தி முயல
முடிவில்லை தேட முயன்றான் - அடிவில்லை
தேடி அகழ்ந்தான் திறம்போற்று நம்பிக்கை
நாடிச் செயலே நலம்                                                            3

அகரம் அழியாச் சிகரம் வரதன்
தகரத் தமிழேஎ தங்கம் - பகர
இனிய தமிழின் இலக்கணங் கற்று
நனியுயர்வோம் வானம் நயந்து                                      4

வானமகள் நாண வழிதேடிச் செல்கின்ற
ஞானம் பிறந்துள்ள நற்காலம் - போன
பொழுதெலாம் நன்றென்று போற்றியுளங் கட்டி
விழுதெனத் தாங்கல் விடிவு                                               5

கேளடி கண்மணி கேள்வி முயல்வதால்
தாளடி வீழ்தல் தவிர்ப்பதே - கோளறு
மாவழியாம் உள்ளத்து வல்லமை பெற்றுயர்வாய்
போவழி இன்பம் பொதிந்து                                               6

மனந்திறந்து கூஉம் மணிக்குயிலாய்த் தோன்றிக்
கனவை நனவாக்கிக் காட்டு - மனமே
வழிச்செலுத்தி ஆக்கம் வகையாய்ப் படைக்கும்
விழிசெலுத்தி வேண்டியன வெல்                                    7

ஆயிர மாயிரம் அவ்வானம் தானீயும்
வாயிலில் வாய்ப்புகள் வந்திறங்கும் - போயிறங்கிச்
செய்தொழிலைச் செவ்வனே செய்க செயல்வீர!
மெய்யாகும் வாழ்க்கை விழைந்து                                  8

போகும் வழியறிந்து போகிறேன் மேலேயென்(று)
ஏகும் நிலையினை எட்டுக - தோகை
விரிமா மயில்போல் விசும்பை அறிக
உரியன ஏற்க உழைத்து                                                        9

காட்டுக் குயிலின் கனிந்த மனத்துளே
பாட்டுக்குப் பஞ்சமுண்டோ பாட்டுக்கு? - நாட்டுந்
திறமெலாம் பைந்தமிழ் தீட்டிய ஆறே
அறம்பொருள் இன்பம் அறிந்து.                                      10

Sep 27, 2020

மணிக்குறள் - 13. ஆளுமை ஓங்குக

ஆளுமை என்ப(து) அரசர்க்கு மட்டுமன்று
தோளுளான் யார்க்கும் உரிது                              121

நின்று நிலைப்படுத்தி நீடுவாழ் வாழ்வுதரல்
நன்றுடை யாளன் நயம்                                           122

கடமை தவறாக் கனிவுடைய னாகி
மடமை அகற்றுவான் மாண்பு                              123

செய்யுந் தொழிலாண்மை செய்திறத்து நிற்குமந்தச்
செய்யுளத்துப் பண்பாட்டைச் சேர்                    124

மெய்வழியில் பேர்நிறுத்தி மேன்மை யுறுவதுவே
செய்யுந் தவமாம் செழித்து                                  125

ஆளும் முறைமை அறிந்து பயன்விளைக்கும்
ஆளுமையைத் தேர்தல் அறிவு                            126

எண்ணத்துத் தோன்றிய ஏற்ற முறுவழியை
எண்ணற்றோர் எண்ணத்துச் சேர்                      127

ஆக்கல் எளிதே அதனை அழியாது
காக்கலே ஆளுமைக்குக் காட்டு                          128

விடாஅ முயற்சியால் வெல்லும் வழியறிவாய்
தொடாஅ(து) அயர்தல் தொலை                           129

ஆளுமை ஓங்குக ஆற்றலால் செந்தமிழ்
ஆளுமை ஓங்குக ஆண்டு                                         130

Sep 20, 2020

மணிக்குறள் - 12. மந்தி இந்தி மாய்க

இந்தி மொழியானை இந்தி மொழியென்று
வந்து திணிப்பதா வாழ்வு?                        111

இந்தியைப் பேசுவோன் இந்தியன் என்றுறுத்தி
மந்தியாய் வந்திறங்கும் பார்                   112

குரங்கினைப் போலே குறுக்கு வழியில்
அரங்கேறப் பார்க்கும் அது                        113

இந்தியன் என்றினியும் எண்ணல் பெருந்தவ(று)
இந்தியன் என்ப(து) இழுக்கு                      114

இந்தியேன்? மந்தியாய் இந்தியை ஏந்தியேன்?
சந்தியில் நிற்கவோ? சாடு                         115

ஆளும் எவருக்கும் அன்பில்லை பண்பில்லை
நீளும்வா லொன்றே உளது                        116
 
இனங்கள் பலவிங்(கு) இதையறி யாத
வனத்துக் குரங்கு வகை                             117

பரந்த மனமில்லான் பாராள வந்தால்
வரமில்லை கேடு வரும்                              118

வேற்றுமையில் ஒற்றுமை வேரறுந்து போனதே
ஆற்றல் அரிதே அகம்                                   119

எழுவாய் தமிழா எழுவாய் தமிழா
விழுங்குகின்ற வாயை விழுங்கு             120

Sep 13, 2020

மணிக்குறள் - 11. தீண்டாமை ஒழிக

தீண்டா தொழுகல் ஒழுக்கமெனச் சொல்லுதல்
வேண்டாமை வேண்டும் நிலத்து                                101

திட்டமிட்டுத் தீண்டாமைத் தீக்கொள்கை ஏற்படுத்தி
வட்டமிட்டு வாட்டுவதோ மாண்பு?                            102

உள்ளம் உடைமை உயர்விழிவு பாராமை
கள்ளம் பிறிதென்று காண்                                            103

பாவம் பெருங்குற்றம் பாரில் மனிதமின்மை
தேவையிலாத் தீநோயே தீய்                                        104

யாவரும் கேளிரென யாவரும் நோக்கும்நாள்
நோவறு நாளாம் நுவல்                                                    105

எல்லாம் தொழிலே இழிவில்லை என்றுணர்க
எல்லார்க்கும் வானம் இனிது                                        106

அறிவுடைமை என்பதி யாதெனின் நெஞ்சச்
செறிவுடைமை நேயத்துக் கண்                                   107

படும்பா(டு) அறியாத பாழ்மக்கள் நெஞ்சம்
கொடும்பாவம் செய்துள்ள கூடு                                  108

மதமினம் சாதி மொழிநிறம் என்று
விதவிதமாய்க் கொல்லும் விலங்கு                            109

விலக்கல் கொடிது விளக்கல் கடமை
மலர்ச்சி மனிதன் மனத்து                                              110

Sep 6, 2020

மணிக்குறள் - 10. மங்கி எரியும் நோய்

உருத்தெரி யாமல் உருத்தெரி யாமல்
கருத்தழிப்பாய் காணாமல் போ                                91

இனிவேண்டா ஆட்டம் இனிவேண்டா ஆட்டம்
மனித இனந்தழைக்க மங்கு                                        92

மங்கி எரிகின்றாய் வாழும் வழியின்றிப்
பொங்கி எரியும் புவி                                                        93

நோயினும் நோயச்சம் நோகவைத்துக் கொல்லுமெனும்
வாயின் வகைப்பட்டாய் வாடு                                    94

உடல்முழுதும் மூடி உயிர்வளியை நாட
அடாதன செய்தாய் அழி                                                95

வீட்டுக் கடங்கானும் வீட்டுக்குள் தானடங்க
நாட்டுங் கொடிய கொடி                                                  96

படாதன பட்டுலகம் பாழாக லாமா?
விடாஅ திருப்பதென் வீம்பு?                                            97

நாட்டு மருந்து நலமாக்கல் தானறிந்தும்
ஆட்டும் சனியாம் அரசு                                                    98

இன்னுமிருக் கின்றாயா? இல்லாமல் போனாயா?
என்றும் புரியாப் புதிர்                                                        99

ஆள்வது நோயா பணமா அறியேனே
மீள்வது போல்நடிப் பா?                                                    100

Sep 5, 2020

காந்தி ஆசிரியரின் வகுப்பில்


“வாழ்க்கையில் மிகவும் தேவையான மூன்று பூக்கள் சிரிப்பூ, படிப்பூ, சேமிப்பூ” என்று தொடங்குவார் என் ஆசிரியர் காந்தி அவர்கள். பள்ளியில் மட்டுமன்று. பள்ளிப் படிப்பை முடித்து நான் வேலைக்குச் செல்லும் இக்காலத்திலும் எங்கு அவரைச் சந்திக்க நேர்ந்தாலும் அவர் இம்மூன்று பூக்களை வலியுறுத்துவது வழக்கம்.

ஆசிரியர்கள் அறிவுரை வழங்குவது மாணவர்களுக்குப் பிடிக்குமா? எத்தனை மாணவர்களுக்குப் பிடிக்கும் என்று தெரியவில்லை. ஆனால் அறிவுரை எனக்கு அமுத மழையாகத் தெரிந்தது அவரால்தான். எட்டாம் வகுப்பில் எனக்கு வகுப்பாசிரியர். ஆங்கில ஆசிரியர். காலாண்டுத் தேர்வுக்கு முந்தைய முதல் பருவத் தேர்வில் எனக்கு 100/100 மதிப்பெண்கள் வழங்கினார். இன்னும் சொல்லப் போனால் அத்தேர்வில் எல்லாப் பாடங்களிலும் 100/100 வழங்கப்பட்டது. 500/500 என்று எழுதப்பட்ட தர அட்டையை (Rank Card) என்னைப் பெற்றோரிடம் காட்டும்போது அவர்கள் என்ன நினைத்தார்கள் என்று எனக்கு இதுவரையிலும் தெரியாது. ஆனால் நான் பெற்றதெலாம் ஊக்கம். ஊக்கம். ஊக்கம். அத்தகைய ஊக்கம் தரும் உயர்ந்தோர் என் ஆசிரியர்கள்.

“இந்த மாணவனுடைய விடைத்தாளைத் திருத்தும்போது பூதக் கண்ணாடியை வைத்துப் பார்த்தேன். ஆனால் ஒரு பிழையும் காண முடியவில்லை” என்று அவர் வகுப்பறையில் அன்று கூறும்போது எனக்கு எப்படி இருந்திருக்கும் என்று எண்ணிப் பாருங்கள். அதை இன்றும் மறவாமல் அவர் சொல்கிறார் என்பது எனக்கு இன்னும் வியப்பாக இருக்கிறது.

அவரிடம் ஒரே ஆண்டுதான் பயின்றேன். அந்த ஓராண்டில் நடந்த சில சுவையான நிகழ்வுகளை இனிக் காண்போம்.

அவர் பள்ளிக்கு வரும்போது ஓர் ஏழெட்டு நூல்களைக் கையில் கொண்டு வருவார். ஓய்வான நேரங்களிலெல்லாம் ஏதேனும் ஒரு புத்தகத்தை வாசித்துக் கொண்டிருப்பார். படிக்கும் பழக்கமே அவருக்கு மிகவும் விருப்பமானது. அவருடைய் வீட்டில் ஒரு நூலகமே வைத்திருக்கிறார் என்று கேள்விப்பட்டேன். ஒருநாள் அவருடைய வீட்டுக்குச் சென்று அவர் வைத்திருக்கும் புத்தக மாளிகையைக் கண்டு வியந்துநின்றேன். வாழ்க்கை முன்னேற்ற நூல்கள் சிலவற்றை என்னிடம் கொடுத்தார். அந்த நூல்களைப் படித்த எனக்கு அத்துணைக் கருத்துகளும் ஆனந்தக் கூத்தாகக் காட்சியளித்தன. ஒரு நூலில் ‘இந்த நூலைப் படித்து விமர்சனம் எழுதுவோர்க்குப் புத்தகப் பரிசு உண்டு’ என்று எழுதப்பட்டிருந்தது. எனக்கு அந்த நூலிலிருந்த கருத்துகள் மிகவும் பிடித்திருந்ததால் விமர்சனம் எழுதலாம் என எண்ணினேன். எப்படி எழுதுவது என்று தெரியாது. முயன்றேன். ஒரு நோட்டுப் புத்தகத்தில் விமர்சனங்களை எழுதி எழுதித் திருத்தினேன். கடைசியாக ஓர் இரண்டு பக்க அளவுக்கு எழுத முடிந்தது. ஓர் உள்நாட்டு அஞ்சல் உறையை வாங்கிக் கருத்துகளை எழுதி என் பள்ளி முகவரியை என் முகவரியாகப் போட்டுப் பதிப்பகத்திற்கு அனுப்பினேன். இதை நான் யாரிடமும் சொல்லவுமில்லை. நூல்கள் வந்தால் பார்ப்போம் என்றிருந்தேன். சிலநாளில் ஒரு கடிதத்தோடு 5 புத்தகங்கள் அஞ்சலில் வந்தன. எனக்குப் பெருவியப்பாகிப் போய்விட்டது. இச்செய்தியை அறிந்து ஆசிரியர்கள் பாராட்டினார்கள்.

என்னுடன் பயின்ற மாணவர்கள் சும்மா விடுவார்களா? எந்தப் புத்தகம் அது? என்ன விமர்சனம் எழுதினாய்? என்று கேட்டு என்னிடமிருந்த கருத்துகளை அவரவர் விருப்பப்பட்ட அளவுக்கு மாற்றி மாற்றி எழுதிக்கொண்டே இருந்தார்கள். கிட்டத்தட்ட ஒரு மாதக் காலம் அஞ்சல் அலுவலக ஊழியர் என் பள்ளிக்கு வந்துகொண்டே இருந்தார். அந்தப் பேறுபெற்ற பதிப்பகம் நர்மதா பதிப்பகம்.

வருத்தவளை வேயரசர் மாமுடியின் மேலாம்
வருத்த வளையாத மூங்கில் - தரித்திரமாய்
வேழம்பர் கைப்பட்டு மேதினியெல் லாந்திரிந்து
தாழுமவர் தம்அடிக்கீழ்த் தான்

பள்ளி 9 மணி வழிபாட்டுக் கூடலுக்குப் பிறகே தொடங்கும் என்றாலும் எங்கள் காந்தி ஆசிரியர் 8 மணிக்கே வரச் சொல்லுவார். சிறு தேர்வு வைத்துவிட்டு மீதம் இருக்கும் கொஞ்ச நேரத்தில் ஏதாவது இலக்கியப் பாடல்களை மாணவர்களுக்குக் கற்பிப்பார். படிப்பு மட்டுமன்று. நல்லொழுக்கமும் வேண்டும் என்று அவற்றைக் கற்பிப்பார். மேலே குறிப்பிட்ட ‘வருத்தவளை’ எனத் தொடங்கும் பாடல் அவரால் கற்பிக்கப்பட்டு என்னால் மறக்க முடியாத பாடலாகும். ஆனால் அவர் ஆங்கில ஆசிரியர்.

மற்ற ஆசிரியர்களுக்கெல்லாம் தமது பாடத்தையே கற்பிக்க நேரம் போதாமல் திணரும்போது இவருக்கு நேர மேலாண்மை கைவந்த கலை. ஆங்கிலப் பாடங்களை எளிதில் புரியும்படி நடத்தி இலக்கணப் பகுதியை இனிக்க இனிக்க நடத்தி எத்தனை முறை முடிகிறதோ அத்தனை முறையும் அவற்றைத் திருப்பித் திருப்பி நடத்தி நன்கு நினைவில் கொள்ள வழிவகுப்பார். அவர் பாடங்களைத் திரும்பத் திரும்ப எத்தனை முறை நடத்தினாலும் எனக்குச் சலிப்பு ஏற்பட்டதில்லை.

எட்டாம் வகுப்பு 'ஆ' பிரிவு ஆகிய அடுத்த வகுப்புக்கு அவர் கணக்குப் பாடம் எடுப்பார். கணக்குப் பாடம் நடத்தும் அவரது முறையை வேறு எந்தக் கணித ஆசிரியரிடமும் பார்த்ததில்லை. அதில் என்ன சிறப்பு என்றால் எடுத்துக் காட்டுக் கணக்குகளையும் சில பயிற்சிக் கணக்குகளையும் போட்டுக் காட்டிவிட்டு மற்ற பயிற்சிக் கணக்குகளைப் போடச் சொல்வதுவரை சரிதான். அதற்குப் பிறகுதான் சோதனையே. புத்தகத்தில் இல்லாத, புத்தகத்தை எழுதிய ஆசிரியர்கள்கூட எண்ணிப் பார்த்திராத, ஆனால் பயிற்சிக்குத் தொடர்புடைய கணக்குகளை வீட்டுப்பாடமாகக் கொடுப்பார். நல்ல வேளை. அவர் நமக்குக் கணக்குப் பாடம் எடுக்கவில்லை என்று மகிழ்ச்சிதான் .

அரும்பு மீசை முளைப்பதுபோல் அரும்பு கவிதைகள் முளைத்த காலம் அது. ஒருநாள் நாலைந்து சிறிய கவிதைகளை எழுதிக்கொண்டு பள்ளிக்குச் சென்றேன். அவர் பாடம் நடத்தி முடித்த பிறகு என்னுடைய கவிதைத்தாளை அவரிடம் காண்பித்தேன். அவற்றையெல்லாம் படித்துவிட்டு அவற்றை மாணவர்களுக்கும் எடுத்துச்சொல்லிப் பாராட்டினார்.

இதன்மூலம் ஒரு கவிதைப் போட்டிக்கான வாய்ப்பு வந்தபோது அவ்வாய்ப்பை எனக்கே அளித்தார். வேறொரு பள்ளியில் நடைபெற்ற அந்தக் கவிதைப் போட்டியில் கவிதையை வாசிக்கச் செல்லும் போது போட்டி நடுவர் புதுக்கவிதையா? மரபு கவிதையா? என்றார். இரண்டுக்கும் என்ன வேறுபாடு என்றறியாத நான் புதுக்கவிதை என்றேன். கவிதையை வாசித்துவிட்டு வந்த பின்னர் அந்த நடுவர் சொன்னார் அது மரபு கவிதை என்று. இப்படி வேறுபாடு தெரியாமலேயே அப்போட்டியில் பரிசும் வாங்கினேன்.

மற்றொரு முறை இளம் மாணவர்களுக்கான அறிவியல் நிகழ்ச்சியில் (YSSP - Young Student Scientist Programme) கலந்துகொள்ளும் வாய்ப்பையும் வகுப்பாசிரியர் என்ற முறையில் அவரே எனக்கு வழங்கினார். இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்தவர் அவர்.

அவர் வழக்கமாகக் கொண்டுவரும் ஏழெட்டுப் புத்தகங்களில் உறுதியாக ஒரு திருக்குறள் புத்தகமோ, அதன் உரையோ, அதுசார்ந்த கதைகளோ, விரிவான விளக்கங்களோ இருக்கும். எது எப்படியோ... திருக்குறளை மட்டும் தேடித்தேடிப் படித்தார். எம் பள்ளியில் சென்ற ஆண்டு நடத்திய பைந்தமிழ்ச்சோலை இலக்கியப் பேரவை திருவண்ணாமலைக் கிளையின் இலக்கியக் கூடலில் திருக்குறளில் கணிதவியல் எனும் தலைப்பில் சிறப்புரை வழங்கினார். அதில் நீத்தார் பெருமைக்கும் சுழியத்துக்கும் (0) அருமையான தொடர்பை எடுத்துரைத்தது என்னைக் கவர்ந்தது. அவரிடம் பேசும்போதெல்லாம் திருக்குறள் வெளிப்படும். இவ்வாறு காலம் முழுவதும் திருக்குறளோடு வாழ்ந்து வருகிறார். இப்போதுங்கூட வழியில் எங்குக் கண்டாலும் அவருடைய அன்பான அறிவுரையை அறவுரையைக் கேட்காமல் செல்வதில்லை.