Sep 30, 2020

வானம் தொடலாம் வா - கவியரங்கம்

பாவலர் மா.வரதராசனார் வணக்கம்

மாரி பொழிந்ததிரு மாவரதர் தாள்போற்றி
மாரி யெனப்பொழிய வேண்டுகிறேன் - ஊரில்
கவிஞன் எனவுலவக் காரணனாய் ஆயுங்
குவிநீண்மாங் காட்டுக் குயில்

முனைவர் அர.விவேகானந்தனார் வணக்கம்

அரங்கம் அதிர அருங்கவி செய்யும்
அரங்கவிவே கானந்தர் ஆற்றல் - வரமாம்
உரம்போற்றி வானத்(து) உயரந் தொடுவேன்
வரம்பாற்றிக் காக்க வரைந்து

பைந்தமிழ்ச் சோலையின் பெருமை

வானுயர்ந்த சோலையிலே நான்நடந்த பாதையெலாம்
தேனுகரும் வண்டாகத் தேடியதால் - நானுயர்ந்தேன்
பைந்தமிழை நன்குணர்ந்தேன் பாடிக் களித்திருப்பேன்
செய்தமிழைச் செவ்வனே தேர்ந்து

வானம் தொடலாம் வா

வானம் தொடலாம்வா வாவென்(று) எனையழைத்தீர்
நானும் தொடலாமே என்றிருந்தேன் - வானம்
தொடத்தான் முடியுமோ? தொட்டுப்பார் என்று
நடத்தான் வருவோம் நயந்து                                           1

வண்ணங்கொள் வெண்ணிலவே வான(ம்)விட்டு வாராயோ?
விண்ணிலே பாதையில்லை வீணனாய்க் - கண்ணிருண்டு
போவேனோ? காலம் பொதித்திருக்கும் உண்மையெலாம்
தேர்வேனே தேர்வேந்தன் நான்                                       2

முடிவில்லை வானோடு முந்தி முயல
முடிவில்லை தேட முயன்றான் - அடிவில்லை
தேடி அகழ்ந்தான் திறம்போற்று நம்பிக்கை
நாடிச் செயலே நலம்                                                            3

அகரம் அழியாச் சிகரம் வரதன்
தகரத் தமிழேஎ தங்கம் - பகர
இனிய தமிழின் இலக்கணங் கற்று
நனியுயர்வோம் வானம் நயந்து                                      4

வானமகள் நாண வழிதேடிச் செல்கின்ற
ஞானம் பிறந்துள்ள நற்காலம் - போன
பொழுதெலாம் நன்றென்று போற்றியுளங் கட்டி
விழுதெனத் தாங்கல் விடிவு                                               5

கேளடி கண்மணி கேள்வி முயல்வதால்
தாளடி வீழ்தல் தவிர்ப்பதே - கோளறு
மாவழியாம் உள்ளத்து வல்லமை பெற்றுயர்வாய்
போவழி இன்பம் பொதிந்து                                               6

மனந்திறந்து கூஉம் மணிக்குயிலாய்த் தோன்றிக்
கனவை நனவாக்கிக் காட்டு - மனமே
வழிச்செலுத்தி ஆக்கம் வகையாய்ப் படைக்கும்
விழிசெலுத்தி வேண்டியன வெல்                                    7

ஆயிர மாயிரம் அவ்வானம் தானீயும்
வாயிலில் வாய்ப்புகள் வந்திறங்கும் - போயிறங்கிச்
செய்தொழிலைச் செவ்வனே செய்க செயல்வீர!
மெய்யாகும் வாழ்க்கை விழைந்து                                  8

போகும் வழியறிந்து போகிறேன் மேலேயென்(று)
ஏகும் நிலையினை எட்டுக - தோகை
விரிமா மயில்போல் விசும்பை அறிக
உரியன ஏற்க உழைத்து                                                        9

காட்டுக் குயிலின் கனிந்த மனத்துளே
பாட்டுக்குப் பஞ்சமுண்டோ பாட்டுக்கு? - நாட்டுந்
திறமெலாம் பைந்தமிழ் தீட்டிய ஆறே
அறம்பொருள் இன்பம் அறிந்து.                                      10

No comments:

Post a Comment