Oct 14, 2019

சோலை விழா - திருவண்ணாமலை - கவிப்பொழிவு

கவிஞர் தமிழகழ்வன்

தமிழ் வாழ்த்து

மாறாத பேரின்பம் மனஞ்சேர வெனையாளும்
ஆறாகப் பேரருவித் தேராகத் தேருள்ளப்
பேறாகப் பாவலர்தம் பாவாக நாவாகக்
கூறாக வுயிர்தன்னுள் குடிகொள்ளும் தமிழ்வாழி! 1

அவையடக்கம்

நன்கவி நற்கவி நாடியோர் முன்பென்
புன்கவி புகுமெனப் புகுந்தனன்; புலவோர்
இன்கவி இயற்றுவர்; எளிதினில் இயலா(து)
என்கவி இயற்றுவன்? எனைப்பொறுத் தருள்க 2

பைந்தமிழ்ச் சோலை

தமிழண்டா தமிழண்டா என்று சொல்வார்
தமிழ்மொழியை அண்டாவில் தூக்கிப் போட்டுத்
தமிழ்வளர்ப்போம் தமிழ்வளர்ப்போம் என்று சொல்லும்
தமிழறிஞர் பலருண்டு தமிழ்நன் னாட்டில்
அமிழ்தான தமிழ்மொழியின் வளமை யான
அடுக்கடுக்காய்க் காய்நகர்த்தி ஆடும் ஆட்டம்
இமைப்பதுவும் நொடிப்பதுவும் கணக்கா கும்மே
இதையறியான் எங்ஙனந்தான் தமிழ்வளர்ப்பான் 3

எழுத்தசைந்து சீராகித் தளைந்து நிற்கும்
எண்ணியெண்ணி அடிநிற்கும் தொடுத்த மாலை
கழுத்துக்குப் புகழ்சேர்க்கும் கவினைச் சேர்க்கும்
கணக்கறியா தியற்றுவது கவிதை யாமோ?
பழுத்ததமிழ் பாதைமாறிப் போதல் நன்றோ?
பாக்கள்ளைக் குடிப்பதற்குப் பணம்வேண் டும்மோ?
விழுவதுவோ? வீணரெனத் திரிதல் நன்றோ?
விருப்புற்று மரபினிலே கவிதை செய்வோம் 4

எனவெழுந்த பைந்தமிழச் சோலை இஃதே
எழிலாகப் பாவியற்றப் பயிற்சி தந்து
கனவுகளை நிறைவேற்றும் செம்மை செய்யும்
கடிதினிலே பாட்டியற்ற வைக்கும் சந்தம்
மனத்தினிலே பதிப்பிக்கும் வண்ணப் பாட்டு
மனம்பொருந்தப் பாடவைக்கும் மகிழ்ச்சி கூட்டும்
தனனதன தானான தடங்க லின்றித்
தந்துசுவை கூட்டுமுயிர் வாழ்வி னுக்கே 5

வாய்க்க ரும்பது வாய்தவக் கோளது
வாய்த்தி கழ்ந்திரு மாமழை மாமலை
வாய்க்கொ ழுந்தது மாமணி வாய்த்திரு
வாய்ச்சிந் துந்தமிழ் வானெனுஞ் சோலையே! 6
நின்றது நெஞ்சினில் நேயம்; விட்டெனைச்
சென்றது துயர்வழித் தேங்கல்; புலவரின்
மன்றினில் நிற்குமிம் மாயம் செய்தது
கன்றுளங் காட்டிய காவின் இனிமையே 7

இனியன வாகிய ஈயுஞ் சோலையே
நனிவளர் செம்மையை நல்குஞ் சோலையே
பனிநுனி நெடும்பனை பார்க்கும் சோலையே
தனித்திறம் கொண்டுளஞ் சாரும் சோலையே 8

பைந்தமிழ்ச் சோலைப் பாவலர் மாலை
பார்ப்பவர் யாரையும் ஈர்க்கும்
ஐந்திலக் கணத்தின் அகத்தினை யெளிதில்
அறியநல் உய்வழி காட்டும்
நைந்துவி டாது செய்யுளின் திறத்தை
நானிலத் துக்குணர்த் தும்மே
பைந்தமிழ்ச் சோறு பகிர்ந்துணு மாறு
பண்பொடு படைத்துயர் வோமே! 9

நாடு நெஞ்சினை நாடிவி ரைந்தரு
நாவில் நேர்நிரை நாட்டியம் ஆடுயர்
சூடு பாமலர் சுந்தரத் தேனிலா
சுற்றும் பூமியில் கால்பட வேநிலார்
வீடு பேறளி வித்தக மாமறை
விந்தைப் பேரொளிப் பைந்தமி ழாமறை
காடு; செய்யுளச் செய்யுடம் சோலையே
கன்று போலுளம் கொண்டவன் மாலையே! 10

சோலையை ஆற்றுப்படுத்தல்

நற்றமிழ்ப்பாச் சுமந்துவரும் நல்லுள்ளத் தென்றலிடம்
"பொற்றமிழில் பாட்டிசைக்கும் புலவன்யார்?" எனக்கேட்டேன்
"அற்றமிலாப் பைந்தமிழின் சோலையென ஒன்றுண்டு
சிற்றுளியாய் வந்தாரும் சிறப்பாகப் பாவடிக்கக்
கற்பிக்கும் பெருஞ்செயலில் கனிவுதனைக் கனியாக்கி
நற்றுணையாய் நிற்கின்ற நல்லதமிழ்ச் சோலையிலே
கற்றுவரும் கனியாகக் கவிஞர்கள் பலருண்டு
முற்றுமுணர்ந் தாயாநீ முகிழ்ப்பவெலாம் எங்கிருந்து?" 11

பைந்தமிழ்ச்சோலை வாழ்த்து

நல்லதமிழ்ச் சோலையிது நாவாரப் பாடுமிது
சொல்லில்வளம் சேர்க்குமிது சோர்வின்றி உழைக்குமிது
பல்சுவையில் பாட்டிசைக்கும் பாவல்லோர் கூடலிது
பல்கலையாய்ப் பாவளர்க்கும் பைந்தமிழச் சோலையிதே! 12

மலைக்கவைத்த யாப்புகளை வகுத்தெளிதாய்த் தேனாக்கி
உலகமுழு(து) ஒண்டமிழை ஓங்கச்செய் பைந்தமிழின்
பலவிதமாய்ப் பலநாள்கள் காய்காய்கள் கனிகனிகள்
அலகிலவாய் அளிக்கின்ற அருஞ்சோலை வாழியவே 13

காவலர் பூமி வாழ்க கதிரவன் மதியம் வாழ்க
நாவளர் சொற்கள் வாழ்க நகையுளங் கற்க வாழ்க
காவளர் கவிஞர் வாழ்க கனிந்துள கவிஞர் வாழ்க
பாவலர் மாலை வாழ்க பைந்தமிழ்ச் சோலை வாழ்க 14

ஆழ்தமிழ் கற்று வாழ்க

வாழ்க்கையில் வாய்க்கும் யாவும்
   வகைவகை அறிந்து வாழ்க
தாழ்ச்சிகொள் எண்ணம் வேண்டா
   தரணியே உனக்கா கத்தான்
காழ்ப்புணர் வகன்றோ டட்டும்
   காய்ப்பன காய்ந்தோ டட்டும்
ஆழ்தமிழ் கற்று வாழ்க
   அகமகிழ் வோடு வாழ்க