Dec 20, 2022

என்னவெல்லாம்?

எனக்குள்ளே இருக்கும்
கவிதைக் கிறுக்கன்

கணத்திற்குக் கணம்
எட்டிப் பார்த்தவன்

இப்போது
எட்ட முடியா உயரம் சென்று
எல்லாம் தொலைத்துவிட்டான்

என்னவெல்லாம்?

கவிதோய்ந்த நெஞ்சினளின்
கருத்தறியக் காத்திருந்த
காதல் உள்ளம்

மாங்காயும் விளங்காயும்
மனத்தில் ஏற்றிச்
செப்பும்படிச் செய்த
செழிப்பால் கனிந்த உள்ளம்

கனியின்றிக் கனிவேது?
வஞ்சியின் தளையினுள்
வாஞ்சை மிகமிகக்
கருணை பிறந்த உள்ளம்

காட்சிப் படகில்
கருத்துத் துடுப்புடன்
காலக் கடலில்
உல்லாசமாய் இருந்து
உவந்த உள்ளம்

கருத்தில் மூழ்கிக்
கவிதையில் மூழ்கித்
தனிமையியிலும்
தனிமை தொலைத்து
மகிழ்ந்த உள்ளம்

யாப்புக் காட்டில்
ஆரவாரத்தோடு
ஆடிப் பாடித் திரிந்து
ஆனந்தப்பட்ட உள்ளம்

மா மத்தக யானையின்
மலைமீது பட்டுத் தெறிக்கும்
கடாஅம் கடாஅம்
ஓசையில் ஒன்றிய
ஒளிப்பில்லா உள்ளம்

இன்னும் இன்னும்
எத்தனையோ தொலைத்துவிட்ட
ஏதுமில்லா வாழ்க்கை
ஏந்திய செல்வத்தால்
என்ன பயன்?

கவிதை

கவலை தோய்ந்த போதெல்லாம்
   கவிதை வந்து கைகொடுக்கும்
கவரும் சொல்லின் ஆட்சியினால்
   கவலை துன்பம் கழன்றோடும்
துவண்ட நெஞ்சைத் தேற்றிவிட்டுத்
   துணையாய் வந்து நடப்பிக்கும்
உவகை ஊக்கம் உள்மயக்கம்
   உணர்வில் கலந்து நலம்பயக்கும்

Dec 6, 2022

ஆற்றலுடை அண்ணா மலை

காற்றுக்கும் மாரிக்கும் காணாத ஆணவமோ?
வீற்றிருந் தாளும் விமலனோ - தீத்தாளால்
மாற்றம் விளைவிக்கும் மாச்செயலைக் காண்பீர்அவ்
ஆற்றலுடை அண்ணா மலை

Nov 17, 2022

கார்த்திகைத் திங்கள்

கார்த்திகைத் திங்கள் கவினுறு நன்னாளால்
போர்த்திக்கொள் ளாதீர் பொழுது புலர்ந்தது
நீர்த்திவலை யெல்லாம் நெடும்பனை காட்டும்ஓ!
ஆர்த்தெங்கும் செல்கின்ற ஐயன் படைகாணீர்!
சாத்தன் சரித்திரம் சாய்த்துப்பேர் நின்றாலும்
ஏய்த்துப் பிழைப்பார்தம் எண்ணம் ஒடுங்கட்டும்
மூத்த தமிழ்க்குடியே! முன்னெழுந்து வாராய்!உன்
வார்த்தெடுக்கும் மாத்திறங்கள் பார்போற்றும் நாள்வருமே!

Sep 1, 2022

மழையே

மழையே மழையே வருவாயே!
   மாநிலம் மகிழப் பொழிவாயே!
தழைக்கச் செய்வாய் உலகத்தை!
   தகர்ப்பாய் எங்கள் கலக்கத்தை!

Aug 21, 2022

செருவெல்க செந்தமிழே!

தமிழ்வாழ்த்து

தகவற் றொழினுட்பக் காலத்துத் தகவமைந்(து)
அகவும் அருந்தமிழே! ஆற்றலைக் காட்டிப்
பகலாய் விளங்குவாய் பார்வென்(று) ஆளுவாய்
மகக்கடன் வேறென்ன காப்போம் மனமார்ந்தே

பாவலர் மா. வரதராசனார்க்கு வாழ்த்து

வரத ராசர் மனங்கொள் நேசர்
வரமாய் வந்து மரபைக் காக்கும்
பரந்த மனத்தார் பண்பிற் சிறந்தார்
தரமாய்த் தமிழைத் தருவார் போற்றி

அவையடக்கம்

எவையடங்குங் காலத்தும் சுவையடங்காச் செந்தமிழின்
பகையடங்கச் செய்தற்குப் பாட்டாலே பரவுவோம்
அவையடங்கிக் கருத்துரைப்போம் ஆன்றோர் குறைபொறுப்பீர்
கவைத்தறிவு பெருகற்குக் கரையில்லா விளக்காவீர்

செருவெல்க செந்தமிழே!

எத்தனையோ ஆண்டுகளாய் எவ்வளவோ பேரிடர்கள்
சத்தான செந்தமிழைத் தகர்த்தெறிய நின்றெதிர்த்தும்
அத்தனையும் பொடியாகி அகமழிந்து நிற்பதுகாண்
முத்தான செந்தமிழே முக்காலும் உலகாளும்                       1

கலந்தாலும் கலந்துகலந் தேபிரிந்தும் தனித்தமிழின்
குலந்தழைக்கும் குவலயத்தில் முன்னிற்கும் எழில்காணீர்
மலடில்லை மகப்பேறு பெற்றவளைத் தாயவளைத்
தலைதூக்கிக் கொண்டாடும் தமிழ்க்குலமே தமிழ்க்குலமே 2

தமிழன்றன் மறையெல்லாம் தான்மறைத்து வளர்ந்தாலும்
தமிழோசை யால்கெட்டுத் தவிக்கின்ற நிலைக்காகும்
அமிழ்தாகும் அவளுக்கு வேறேதும் இணையில்லை
தமிழோடு விளையாடத் தனித்திறமை வேண்டுமன்றோ 3

பாமரனின் நாக்கினிலே படியாவே பிறமொழிகள்
நாமறுக்க மாட்டாமல் நலம்விளைக்கும் தமிழ்மொழியே
ஏமமென எப்போதும் இருப்பதுவே இயற்கைமொழி
தீமையுற்றுப் பிறமொழிகள் செயற்கையினால் அழியும்மே 4

பலவாறாய்க் கிளைத்திருக்கும் மொழிக்கெல்லாம் தாயாகி
நிலையாக வீற்றிருப்பாள் நெஞ்சினிலே முக்காலும்
தலையிருக்க வாலாடும் தனித்திறமைக் கதையெல்லாம்
தலையிழந்து தரமிழந்து தாயின்றாள் தாம்பணியும் 5

செருவென்று வந்துவிட்டால் செருவென்று காட்டுபவர்
பொருவென்று பகைவர்தமைப் போயழிக்கும் வீரமிகு
திருச்செல்வர் பலவுண்டு திகைப்பேதும் தேவையில்லை
உருவழிக்க வியலாதே உண்மையென்றும் நிலைத்திருக்கும் 6

பல்குகின்ற துறையாவும் பாதையிடும் பெருந்திறமை
நல்குகின்ற தமிழ்த்தாயே! நானிலத்தை ஆள்பவளே!
செல்வமெலாம் நீயன்றித் தேர்வதிலை என்மனத்துள்
தொல்குடியன் எனப்பெருமை கொள்வேனே தொடர்ந்தகழ்ந்தே! 7


ஆரியமும் மகமதுவும் ஆங்கிலமும் ஆகிவரும்
பேரியக்கம் எல்லாஅம் பெரும்படையைக் கொண்டுவந்தும்
நீரியல்பைப் போன்ற நிலையான செந்தமிழின்
பேரிலக்க முத்தாழி முன்னிற்க முடியாதே!                                            8

Aug 16, 2022

சங்கத் தமிழ்வேள் - சங்கர சத்யா

சங்கத் தமிழ்வேட்குச் சத்தியநா ராயண
சங்கரர்க்குப் பாமாலை சாற்றுவோம் - பொங்கும்
உளம்நிறை செந்தமிழ் ஓட்டம் கவிதைக்
களம்நிறையக் காக்குந் தலை

Aug 13, 2022

முந்தைப் பிறந்தவள்யான் - ஒருபா ஒருபஃது

இயற்கையாய் நின்றேன் எடுத்தாண்ட வேந்தர்
முயற்சியால் மூன்றாய் வளர்ந்தேன் - செயற்கை
பலவாறாய் என்னைப் பதம்பார்க்க எண்ணித்
தலைவேறாய்ப் போனது காண்                                                      1

இயற்கை சிதைக்கும் செயற்கை வழக்கம்
இயற்கையே என்றும் இருக்கும் - அயர்ந்திந்த
பூமி அழிந்து புதுப்பிறவி கொண்டாலும்
ஆமிமிழ்ந்து தோன்றுவன் யான்.                                                    2

இயல்பின ளாய எனையழிக்க நின்றார்
முயற்சியெலாம் பாழாய் முடியும் - அயற்சியிலா(து)
ஆழ்ந்தகழ்ந் தாய்வார்க்(கு) அமிழ்த சுரபியாம்
வாழ்ந்தார் எனைக்கூறு வார்                                                           3

இயற்கையி னின்று செயற்கையை நாடி
முயற்சிகள் நீளல் முடிபோ - பெயர்ச்சிகள்
மேன்மேலும் வந்தென்னை வீழ்த்த நினைத்தாலும்
யான்மேலே நிற்பேன் இனிது                                                           4

உயர்ந்த பொருளாய் உணர்வார்க்(கு) உணர்வாய்ப்
பெயர்ந்து வளர்வார்க்கும் பேறாய் - அயராத
நல்லுள்ளந் தந்து நயத்தகு பாவடிக்கச்
சொல்லுள்ளம் சேர்ப்பேன் சுரந்து                                                   5

எனக்கென்ன போட்டி எடுத்தாளு வார்தம்
மனக்கவலை மாற்றும் மருந்து - தனக்குவமை
இல்லாத என்னை இனியவளைக் கையாண்டு
சொல்லாத தெல்லாமே சொல்                                                         6

என்னின் இளையார்க்கும் ஏற்ற இடந்தருவேன்
பொன்னின் பொலிவோ பொசுங்காது - மன்னும்
நிலைப்பே றுடையவள் நீண்டு தொடரும்
கலைவேறு யான்வேறோ காண்?                                                    7

வருமொழி யாவும் வளரும் தளரும்
ஒருமொழி யுண்டென்பார் ஓர்ந்தார் - அருமொழி
நிற்கும் பிறமொழி நீத்து விடுமியல்பே
பொற்குவையே காக்கப் படும்.                                                         8

முத்தமிழாய் முத்துதிர்க்கும் முந்தைப் பிறந்தவள்யான்
சொத்தாய்ப் பலர்க்குச் சுரந்தமுத - வித்தாய்த்
திகழும் விளக்கம் தெரிந்தவள் என்னை
இகழ்வார் இகழ்ந்தழி வார்                                                                   9

மொழிவார் மொழியாவேன் முத்தாய் முனைவார்
எழிலாவேன் இன்பம் இயற்றிப் - பொழிலாவேன்
காலத்(து) அழியாத காவியம் தந்துயர்ந்து
ஞாலத் திருப்பேன்யான் நன்று                                                          10

முத்துமணி அம்மா

முத்திரண்டு பெற்றவராம் முற்றறிவு தந்தவராம்
முத்துமணி அம்மா முகமலர்ந்து - முத்தியுற்றார்
வைகுண்டம் வந்தடைந்தார் வாழ்த்துவார் எந்நாளும்
செய்தவத்தால் செம்மையுறச் செய்து.

வெண்ணிலாவே!

வெண்ணிலாவே உன்னொளி அன்ன
என்னிலாவைக் கண்டென சொல்வாய்?
கண்ணிலாதான் கலங்குதற் போலே
மண்ணில்யானும் உழலுகின் றேனே

Jul 7, 2022

மென்பொருள் மேலாண்மை

Software support team provides a workaround 
until the development team finds a solution

ஆய்ந்தொரு தீர்வை அளிக்கும்வரை மென்பொருள்
தோய்ந்து விடாது தொடர்ந்திருக்க - வேய்ந்தளிப்போம்
தற்கா லிகமாய்த் தடைநீக்கி வாணிகம்
நிற்காது நீள்வதற் கே
                              - தமிழகழ்வன்

Jun 19, 2022

வண்ணப்பா

தத்தாதன தத்தாதன தத்தாதன தத்தா
தத்தாதன தத்தாதன தத்தாதன தத்தா
தத்தாதன தத்தாதன தத்தாதன தத்தா - தனதந்தா

முத்தாகிய முற்றோதிய முத்தார்தமிழ் வித்தே
முட்டாகிய முற்றாதன முற்றோடொழி சத்தே
முப்பாலது நிற்பாலது வற்றாததும் எற்றே - குறளன்றே
   முத்தேயமும் மிக்காயிசை தைத்தார்மனம் உற்றே
   செற்றேயிது குற்றேயடி எற்றேயுரை யுற்றும்
   முப்பாலிணை எப்பாலுமில் அக்காலம தித்தே – கொளவென்றே

சித்தாவென முத்தாவென அத்தாவென மற்றே
சொத்தேயென மிக்கோர்மனம் எக்காலமும் பற்றே
தெற்காயொரு பற்றாயவர் முற்றாயவும் நற்றேன் - உணவென்றே
   செற்றாரையும் நற்பாலரா நிற்பாரெனும் வித்தா
   நெய்ப்பாரவர் தப்பானவை சுட்டாதிலை சற்றே
   செப்பாதுள மெய்ப்பாடெது முற்றாவுல கிற்றே - அழகுஞ்சேர்

புத்தாகிய தெக்காலமும் பெற்றோர்நிலை யுற்றோம்
பொற்றாமரை நற்றாளிணை பெற்றேவுயர் வுற்றோம்
பொற்கோவிறை நற்பேருளம் பெற்றோமகிழ் வுற்றோம் – இணையின்றே
   புற்றார்மனம் பித்தாயலை வுற்றேநிலை கெட்டால்
   உற்றார்துயர் முற்றாவழி தெற்றாவில கிற்றே
   பொற்றாநிலை எற்றேயவர் பித்தேயழி வுற்றே - மனமொன்றே

கொக்கோதவ முற்றேயொரு முத்தேயது கொத்தே
அத்தேவழி நிற்றேநிலை சத்தாயொரு மித்தே
கொத்தாயென வித்தாயொரு முற்றானது தித்தே – வளமொன்றே
   கொப்பூழொரு சிற்றாருயிர் கொத்தாகியு தித்தே
   கைப்பாடுறு மக்கூழது துப்பாமமிழ் தத்தேன்
   எப்பாலினும் தப்பாதினி தப்பாலது முப்பால் - எனநிற்போம்

வண்ணக்கலித்துறை

தன்னன தானா தய்யன தானா தந்தானா

இன்னமு தாமே இல்லவ ளாலே என்பேனே
அன்னமு மாமே அல்லியு மாமே அன்போடே
பொன்னென வாமே புல்லுவ ளாமே பொங்காதே
சொன்னவை தாமே பொய்யவை வேறோ சிந்தாதே

வண்ணப்பா

தத்தத் தனதனந் தனனா
தத்தத் தனதனந் தனனா
தத்தத் தனதனந் தனனா - தனதானா

முக்கட் பரமனின் றுணையே
முத்தத் தகைமுகந் தயவே
முற்றுப் பெறுமனந் தருவாய் - அருள்வாயே!

மொட்டுச் சிறைவிரிந் தவனாய்
மட்டற் றுளமகிழ்ந் திடவே
முத்துத் தமிழனிங் குறவே - பணிவேனே

மக்கட் பெருமையங் கயலே
மச்சக் குலம்வளர்ந் தனையே
மக்கட் குறைகளைந் தருளே – மலையாளே

வற்றிப் பசியெனுந் துயரார்
வக்கற் றுனையெணுங் குரலார்
வட்டிற் சுவையடங் குணவால் - ஒளியாவாய்

விக்கித் தழுவர்தங் குறையோ
விட்டுப் புலமறந் துறைவாம்
விட்டுச் செலவருந் துறையாய் - இயல்வாயே

மெட்டுக் கொருபெருங் கவிதா
மெச்சித் தலைவணங் கினனே
வெற்றிக் கனிமகிழ்ந் தருளே - பெருந்தாயே!

திக்கற் றயலரென் றியலா(து)
இக்கட் டினிலுழன் றவரோ
திக்கித் திரிதலுண் டினியோ - அருளாலே

சிக்குத் துயரமுந் துடையேன்
தித்தித் தெவருமிங் கினிதே
சித்திக் கிறவருந் தவமே - உறுவாரே

வண்ண எண்சீர்விருத்தம்

தத்தத்தன தத்தத்தன தத்தத் தத்தா

வெற்றிக்கொடி கட்டிப்பறை கொட்டிப் பொற்றேர்
வெப்பக்களம் நிற்கத்தலை யற்றுப் பட்டேம்
பற்றுக்கொடி யற்றுச்சித றித்திக் கெட்டே
பக்கத்துணை முற்றத்தழி வுற்றுக் கெட்டேம்
எற்றுக்கினி மிச்சத்துயிர் துச்சத் துக்கே
எற்றைக்கொரு வெற்றிக்கொடி நட்டுச் செற்றே
வெற்றிக்கனி பற்றிப்பெரு மித்துச் செப்பேம்?
வெட்சித்திணை உச்சத்தினை மெச்சிக் கொட்டே!

வண்ணப்பா

தனன தனன தனன தனன
தனன தனன தனன தனன
தனன தனன தனன தனன. - தனதனா

முருக முதல முகிழு மொளிய
அருளும் அறுமு கமுள பெரும
முறுவ லுடனொ ருபடை யலொடு - வருவனே

முழுது முணர யுகமு முடியும்
அருமை பெருமை அகமும் அறியும்
முருகு முருகெ னவுரை உளமும் - உருகுமே

வருக வருக மயிலில் வருக
தருக அருளை மழைமு கிலென
வரம தருள மலரும் மனமும் - மகிழுமே

வரத ரருள வகைவ கையென
வடிவ முடைய கவிதை வருதல்
வரமெ னவுரை செயலும் உனது - கருணையே

ஒருமை யுடைய தனிமை நெறிய!
இருமை யுடைய பெருமை யுடைய!
மறுமை யிலுமுன் அடியன் எனவும் - அருளுமே

உலக உவகை உனது கதிரில்!
ஒளிரு மழகை உதடு பகரும்!
உரிமை யுறவ! உமையி னுயிர! - பனிவனே!

அருவி வழியும் நறிய பொழிலும்
மறையை மொழிய உரிய இடமும்
அலையு முகமும் அரிய மலையும் - உரியனே

அரிய பெரிய செழிய தமிழை
அகில முணரு முதலு மொழியை
அகம துணர மகிழ மகிழ - உடையனே

வண்ண நேரிசை வெண்பா

பைந்தமிழ்ச்சோலைத் தேர்வுத்தாள் வினா:
தத்ததன என்ற சந்தத்தில் ....ஈற்றசை தத்து என்ற சந்தத்தில் முடிய வண்ண நேரிசை வெண்பா எழுதுக.
------------------
முற்றறிவு பெற்றவரை முத்திபெறு சித்த(ர்)தமை
முற்றுமுண(ர்) முத்தமிழ வித்தகரை - வெற்றிகொள
வெட்சியணி நெற்றியுள கொற்றவனு(ம்) உச்சியென
மெச்சியணி வைத்திடுவ(ர்) முத்து

வண்ணப்பா

பைந்தமிழ்ச்சோலைத் தேர்வுத்தாள் வினா: 
பின்வரும் ஒருகலையைக் காண்க. அதனடிப்படையில் சந்தக்குழிப்பைக் கண்டறிந்து, கொடுக்கப்பட்ட ஒரு கலையை எங்காவது பயன்படுத்தி முழுமையான வண்ணப்பா எழுதுக.

இருவிழியு மூடாம லெனதுமன மாடாம
லிருமனமு மோயாது --- பூமானே

------------------
தனனதன தானான தனனதன தானான
தனனதன தானான – தானானா

இருவிழியு மூடாம லெனதுமன மாடாம
லிருமனமு மோயாது - பூமானே
   இதயமுழு தாளாம லினியவிசை கேளாம
   லிருமைநிலை மாறாம - லோடாதே

ஒருவழியும் பாராம லொருமைநிலை நீடாம
லுணருமொழி யோராமல் - வாழ்வேனோ
   ஒருதலைய தாகாது பசலையுறல் வீணாகும்
   உணர்வழிய லாகாது - தேமாவே

பெருமையொடு வாழாது பிழையைமனம் போறாது
பிரிவுநிலை யாகாது - வானேறும்
   பிறவிநிலை நீடாது பிறழலுற வீடேது
   பிரியமுள னேநீயும் - போகாதே

உருவழியும் ஊனாக உருகுமெழு காயாக
உதறிவிட லாகாது – வாவாவா
   உலகமதில் வீணாக ஒருபொழுதும் போகாமல்
   உறவுமுறை வீடாது - சேர்வோமே

வண்ணப்பா

பைந்தமிழ்ச்சோலைத் தேர்வுத்தாள் வினா: 
பின்வரும் ஒருகலையைக் காண்க. அதனடிப்படையில் சந்தக்குழிப்பைக் கண்டறிந்து, கொடுக்கப்பட்ட ஒரு கலையை எங்காவது பயன்படுத்தி முழுமையான எழுதுக.

கெட்டுவிடப் போகுதுடல் விட்டுவிடப் போகுதுயிர்
கெட்டமனத் தாசையதற் - காளா காதே

-----------------------

தத்ததனத் தானதன தத்ததனத் தானதான
தத்ததனத் தானதனத் - தானா தானா

கிட்டுவதற் கோவெளிது திட்டமுடைத் தானதது
கெட்டததைக் காணுவதற் - கேயே தேதோ?
  கெட்டுவிடப் போகுதுடல் விட்டுவிடப் போகுதுயிர்
  கெட்டமனத்(து) ஆசையதற் - காளா காதே

குட்டிவிடப் பேருமிலை குற்றமுடைத் தானதிலை
குற்றுயிருக் கானமனத் - தாளா யாரோ
  குற்றமெனக் கோடுதலை நெற்றியினிற் சேரவிடு
  குற்றமொழித் தோருதலைக் - காணே நீயே

கட்டுமனத் தேயுனது கட்டளையைத் தாவலிலை
கட்டுமனைக் காரியுளத் - தேதாம் வாழ்வே
  கற்றநெறிக் காலுறைக குற்றமறுப் பானுயர்வு
  கற்றதனுக் கானமலைத் - தேனாம் வானாம்

தட்டுமனக் காமமது பட்டவலைத் தீமையவை
தட்டிவிடச் சேருவதைக் - கேளாய் நீயே
  தக்கநிலைப் பாழுமது சச்சரவைத் தாருமது
  சற்றுநினைப் போடதனைத் - தேராய் வாயே

Jun 6, 2022

தத்துவோம் - 4

தத்துவோம் 001:

சில நேரங்களில் பெருமையை நிலைநாட்ட எருமையை மேய்க்க வேண்டியிருக்கிறது.

தத்துவோம் 002:

மனிதனின் இயல்பான குணங்களுள் ஒன்று பொறாமை (பொறுக்க முடியாமை). பொறாமையை மறந்து செய்யத் தகுந்தன செய்யின் வெற்றியே! பொறாமல் செய்யத் தகாதன செய்யின் அழிவே!

தத்துவோம் 003:

உலகில் மகான்களைவிடத் தன்னை மகானாக நினைத்துக் கொள்வோர் பலருண்டு.

தத்துவோம் 004:

பொய்யா உண்மையா என்று கேட்கும் காலத்திலன்றி
நம்பிக்கையா உண்மையா என்று கேட்கும் காலத்திலா வாழ்கிறோம்?

Jun 3, 2022

ஊக்குவோம் (அறுசீர் விருத்தம்)

எத்தனை தடைகள் வந்தாலும்
   எடுத்தெறிந் தின்னும் தொட்டுப்போ
சித்தனைப் போலே சிந்தனையைச்
   செவ்விய ஒன்றில் செலுத்திப்பார்
முத்தெனத் திறமை வெளிப்பட்டு
   முழுமையைப் பெறுவாய் முகமலர்வாய்
வித்தென வேகம் விளையட்டும்
   வினைகளைந் தின்பம் பெருகட்டும்

May 1, 2022

அனீஷ் செல்லப்பன் - பிரியா விடை வாழ்த்து

தெளிந்த சிந்தையும் தேர்ந்தநல் அறிவும்
களிப்பொடு கடமையைக் கண்ணெனப் போற்றும்
துடிப்பும் தோய்ந்த ஆர்வ மிகுதியால்
கடின மானதும் கடிதில் ஆற்றிடும்
அரிய வேந்தன் அனிஷே வாழ்க!
பெரியன படைத்துப் பார்போற்ற வாழ்க!

Apr 27, 2022

Typical support job

செய்செயலின் தோல்வியான் தேடி வருவார்க்குச்
செய்செயலின் தோல்வியான் தேடியதற்(கு) - உய்வழியைக்
கண்டுணர்ந் தாற்றலால் காண்கின்ற தோல்வியே
தொண்டுணர்வாய்த் தோன்றுதல் காண்.

I realize that I need failures in order to reproduce the issue.
If I am successful, I can't support my customers.

Apr 8, 2022

மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் - பிறந்தநாள் வாழ்த்துகள்

பாமர னென்றார்க்குப் பாமர மென்றாங்குத்
தேமரம் புளிமரம் விளமரம் விளக்கிக்
காய்கனி ஈந்து கவினுடை போர்த்தித்
தேய்பிறை யன்று தெரிவளர் பிறையென
மரபினை நாட்டி மானம் காக்கும்
வரதரை வாழ்த்தி வணங்கு வோமே.

Mar 22, 2022

பெருமைக்(கு) எருமைமேய்த்(து) அற்று

பண்பொடு வாழ்ந்தாலே பார்போற்றும் அஃதன்றி
நண்பர்முன் செல்வநிலை நாட்டுவார் -  உண்ண
வரும்படி இல்லா வறுமை யிருந்தும்
பெருமைக்(கு) எருமைமேய்த்(து) அற்று

Mar 8, 2022

இனிய மங்கையர் திருநாள் வாழ்த்துகள்

இன்னிசைச் சிந்தியல் வெண்பா

ஆக்கம் அழிவாய அவ்விரண்டும் பெண்ணவளின்
நோக்கிற் புதைந்துள நுண்பொருளால் நேருமே
தீக்கிணை யாரே தெளி

நேரிசைச் சிந்தியல் வெண்பா

தாயாய் மகளாய்த் தகுந்தநற் றாரமாய்ச்
சாயாத உள்ளத்துச் சான்றவளாய் - ஓயாத
தொண்டால் உயர்ந்தாள் தொடி

நிலைமண்டில ஆசிரியப்பா

மாண்புறு பெண்ணே! வயங்கொளிக் கண்ணே! 
காண்புறும் இன்பே! கனியே! அமிழ்தே! 
கைக்கொள் யாவும் மெய்ப்பொருள் ஆக்கி 
உய்வழி காணும் உயர்ந்த மணியே! 
வாழ்க! உள்ளம் மகிழ்வால் நிறைந்து 
வாழ்க! நாளும் பல்லவை ஆண்டே!

Feb 27, 2022

திருமுருகாற்றுப்படை- பகுதி - 9

புலவர்: எப்படியெல்லாம் முருகப் பெருமானைப் பாடி வணங்கலாம்?

நக்கீரர்: எங்கெல்லாம் திருமுருகப் பெருமானைக் காணும் நற்பேறு பெறுகிறாயோ அங்கெல்லாம், முகம் மலர்ந்து திருமுருகப்பெருமானை விரும்பி நோக்கி, வாயால் வாழ்த்திக் கைகளைத் தலைமீது குவித்து வணங்கி அவர்தம் திருவடிகளில் தலை பொருந்தும்படி விழுந்து வணங்கிப் போற்றிப் பாடுவாயாக!
எவ்வாறெல்லாம் வாழ்த்தலாம் என்றால்,
ü சிவபெருமானின் நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றிய தீப்பொறிகளை வானம், காற்று, தீ, நீர், நிலம் ஆகிய ஐவருள் ஒருவரான தீயானவர், தன் அழகிய கையிலே தாங்கிக் கொண்டு வந்து நெடிய பெரிய இமய மலையின் உச்சியில் 'சரவணம்' எனப்படும் தருப்பை வளர்ந்த பசுமையான சுனையில் இடவும், கார்த்திகைப் பெண்டிர் அறுவரால் பாலூட்டப் பெற்று வளர்ந்த ஆறு திருமுகங்களையுடைய பெருமானே!
ü கல்லால மரத்தின் கீழ் எழுந்தருளிய சிவபெருமானின் புதல்வரே!
ü இமயவான் மகளான பார்வதி தேவியாரின் மைந்தரே!
ü தீயோராகிய பகைவர்களுக்கு யமன் போன்றவரே!
ü வெற்றியை உடைய வெல்லும் போர்த்தெய்வமான கொற்றவையின் மைந்தரே!
ü அணிகலன்களை அணிந்த தலைமைத்துவம் உடைய காடுகிழாளின் குழந்தையே!
ü வானவர்களாகிய தேவர்களின் விற்படைகளுக்குத் தலைவரே!
ü கடம்பு மலர்களாலாகிய மாலையினை அணிந்த மார்பினை உடையவரே!
ü அனைத்து மெய்யான நூல்களின் உண்மையான பொருளை அறியும் புலமை உடையவரே!
ü போர்த்தொழிலில் ஒப்பற்றவரே! உலகமெலாம் அழியும் காலத்திலும் தீயோரை எதிர்த்துப் போரிடுவதற்கென்று எஞ்சி நிற்கும் ஒரே கடவுளே!
ü அந்தணர்க்குச் செல்வமாக விளங்குபவரே!
ü புலமையுடைவர்கள் புகழ்ந்து கூறும் சொற் கூட்டமாய் விளங்குபவரே!
ü தெய்வயானை, வள்ளி அம்மையார் ஆகிய மங்கையரின் கணவரே!
ü வலிமை உடைய வீரர்களுக்குள் அரியேறு போன்றவரே!
ü ஞான சத்தியாகிய வேலினைப் பெற்று விளங்கும் பெருமை பொருந்திய கையினை உடைய செல்வரே!
ü கிரௌஞ்ச மலையில் ஒளிந்திருந்த சூரபன்மனை அழித்து வென்ற குறையில்லாத வெற்றியையும் பெருமையையும் உடையவரே!
ü வானத்தைத் தொடும் குறிஞ்சி நிலத்திற்கு உரிமை உடைய தலைவரே!
ü உலகில் உள்ள எல்லா மொழிகளிலும் நூல் இயற்றும் புலவர்களுக்கெல்லாம் தலைவரே!
ü மூத்த பரம்பரையினையும் சிறந்த புகழினையும் உடையவராக என்றென்றும் இளைஞனாகவும் அழகனாகவும் திகழ்வதால் முருகன் என்னும் திருப்பெயரை உடையவரே!
ü விரும்பிச் செல்கின்றவர் வேண்டும் எல்லாவற்றையும் தந்தருளும் கொடை வள்ளலே!
ü பொருள் இல்லாது துன்புறுவோர்களுக்குத் தர வேண்டியே பொன்னால் ஆகிய அணிகளை அணிந்துள்ளவரே!
ü பரிசில் பெற வருகின்ற அனைவரையும் தழுவித் தாங்கிக் காத்து அருள்பவரே!
ü அசுரன் சூரபன்மனையும் அவன் தன் சுற்றத்தினரையும் அழித்து வென்ற காரணத்தால் 'மதவலி' என்னும் பெயரை உடையவரே!
ü மிகச்சிறப்பாகப் போரிடும் இளமை பொருந்திய வீரரே!
ü உண்மையான தலைவரே!
இவ்வாறு திருமுருகப் பெருமானைப் போற்றி வணங்குதலில் யான் அறிந்த அளவு கூறுகிறேன். இறைவனின் தன்மை அனைத்தையும் அளவிட்டறிதல் இயலாது. நீயும் அறிந்தவாறெல்லாம் திருமுருகப் பெருமானைப் போற்றி வணங்குவாயாக!
புலவர்: நன்றி ஐயனே! நற்பேறுடையேன்! ஒப்பில்லாத மெய்யறிவை உடைய பெருமானே! நின் திருவடிகளை அடைய எண்ணி வந்தேன் என்றும் உரைப்பேன் ஐயனே!
நக்கீரர்: நன்று. நன்று. அவ்வாறு உரைத்து நீர் எண்ணிய பரிசிலைப் பற்றிக் குறிப்பிடுவதற்கு முன்பே அவருடைய ஏவலாளர்கள், திருவிழா நிகழும் களத்தில் தோன்றுவது போலப் பொலிவுடன் தோன்றித், திருமுருகப்பெருமானை நோக்கி என்ன உரைப்பார்கள் தெரியுமோ?
புலவர்: அவர்கள் யாது உரைப்பர் ஐயனே?
நக்கீரர்: 'பெருமானே, அறிவு முதிர்ந்த சொற்களையுடைய இந்த இரவலன் இரங்கத்தக்கவன்; நின் அருளுக்குரியவன்; நின்னுடைய புகழை விரும்பி வந்துள்ளான்' என்று இனிய உறுதி பயக்கும் சொற்களைக் கூறி நிற்பார்கள்.
அப்போது தெய்வத்தன்மையும் வலிமையும் பொருந்திய வானத்தைத் தொடும் வடிவுடைய திருமுருகப்பெருமான் நின்முன்னே எழுந்தருள்வான். ஆயினும் காண்பவர்களுக்கு அச்சத்தைத் தரும் தெய்வ வடிவினை உள்ளடக்கிக் கொண்டு முந்தைய மணம் கமழும் தெய்வத்தன்மை உடைய இளமை பொருந்திய வடிவினைக் காட்டி, 'நீ அஞ்ச வேண்டா; உன்னைக் காத்தருள்வேன்; நின்வருகையை யான் முன்னரே அறிவேன்' என்று அன்புகூர்ந்த சொற்களைக் கூறி அருள்வான்.
மேலும் இருண்ட கடலால் சூழப்பட்ட இப் பெரிய உலகத்தில் தனிப்பெருமை வாய்ந்த ஒருவனாக நீ விளங்குமாறு மற்றவர்களும் பெறுவதற்கு அரிய பரிசிலைத் தந்தருள்வான்.
புலவர்: அருமை. நன்றி ஐயனே! திருமுருகப் பெருமானைக் காணும் ஆவலோடு செல்கிறேன்.
நக்கீரர்: இன்னுமோர் அழகிய இடத்தில் திருமுருகப்பெருமானைக் காண்பீராக!
புலவர்: அஃது எவ்விடம் ஐயனே?
நக்கீரர்: பல சிறு ஊற்றுகள் இணைந்து வெவ்வேறான துகிலால் ஆகிய பல கொடிகளைப் போன்று மலை உச்சியிலிருந்து அசைந்து அருவியாக வரும். அஃது, அகிற்கட்டையைச் சுமந்து கொண்டு வரும். பெரிய சந்தன மரத்தைச் சாய்த்துத் தள்ளும். சிறு மூங்கிலின் மலர் பொருந்திய கொம்பு தனிப்பட வேரைப் பிளந்துகொண்டு வரும்.
புலவர்: அடடா! அஃது வளப்பமுடைய அருவியாயிருக்கும் எனத் தோன்றுகிறதே.
நக்கீரர்: ஆம். அதனால் என்னவெல்லாம் நிகழும் தெரியுமா?
ü வானத்தைத் தொடுவது போன்ற நெடிய மலை மீது கதிரவனைப் போல் சிவந்து தோன்றி ஈக்கள் மொய்க்கின்ற குளிர்ச்சியும் மணமும் பொருந்திய தேன் கூடு சிதைவுறும்.
ü பலாப்பழத்தின் பல முற்றிய சுளைகள் அருவியில் விழுந்து கலக்கும்.
ü மலையின் உச்சியில் உள்ள சுரபுன்னை மரத்தின் பூக்கள் உதிரும்.
ü கருங்குரங்குடன், கரியமுகத்தை உடைய பெண் குரங்குகளும் குளிரால் நடுங்கும்.
ü நெற்றியில் புள்ளிகளை உடைய 'பிடி' எனப்படும் பெண் யானையும் மிகுதியான குளிர்ச்சியை உணரும்.
ü பெரிய யானையின் முத்தினை ஒத்த கொம்புகளையும், நல்ல பொன், மணிகள் ஆகியவற்றையும், பொடி வடிவத்தில் உடைய பொன்னையும் கொண்டு சேர்க்கும்.
ü வாழை மரத்தின் அடிப்பாகம் ஒடிந்து விழும்.
ü தென்னையின் இளநீர்க் குலைகள் உதிரும்.
ü மிளகின் கரிய கொத்துகள் விழுந்து சாயும்.
ü அழகான இறகைப் புறத்தேயுடையதும் இளமையுடன் கூடிய நடையையும் உடைய பல மயில்கள் அச்சமுறும்.
ü வலிமையுடைய பெண் கோழிகளும் அஞ்சி ஓடும்.
ü ஆண் பன்றியும், கரிய பனையின் புல்லிய செறும்பைப் போன்ற கரிய மயிரை உடைய உடலையும் வளைந்த அடியினையும் உடைய கரடியும் பெரிய கற்குகைக்குள் சென்று சேரும்.
ü கரிய கொம்பினையுடைய காட்டுப் பசுவின் நல் எருது அச்சத்தால் கதறும்.
இத்தகு விளைவுகளையெல்லாம் ஏற்படுத்தும்.
அவ்வாறு மலையின் உச்சியிலிருந்து 'இழும்' என்னும் ஓசையுடன் குதித்து விழும் அருவியினையும் முற்றிய பழங்களையும் உடைய சோலைகளைப் பெற்று விளங்கும் குறிஞ்சி நிலமாகிய பழமுதிர்சோலைக்கு உரிமை உடையவர் திருமுருகப்பெருமான்.
புலவர்: நன்றி ஐயனே! தாங்கள் என்னைத் திருமுருகப் பெருமானிடத்தில் ஆற்றுப்படுத்திய விதம் என்னுள் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்போதே திருமுருகப் பெருமானைக் காணச் செல்கிறேன்.
நக்கீரர்: நன்று. நன்று. திருமுருகப் பெருமானின் திருவருளால் நற்பேறு பெறுக. வாழிய நலம்.
********
மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரர் புலவர் ஒருவரைத் திருமுருகப் பெருமானிடத்தில் ஆற்றுப்படுத்திய 'திருமுருகாற்றுப்படை உரையாடல்' நிறைவுற்றது.
*********
எடுத்தாண்ட நூல்கள்:
1. திருமுருகாற்றுப்படை உரை - பேராசிரியர் சிங்காரவேலு சச்சிதானந்தம் (மலேசியா) (http://www.kaumaram.com)
2. திருமுருகாற்றுப்படை விளக்கம் - கி.வா.ஜெகந்நாதன் அவர்கள்

Feb 20, 2022

திருமுருகாற்றுப்படை- பகுதி 8

புலவர்: அருமை ஐயனே! வேலன் மகளிரோடு கூடி ஆடும் குரவைக் கூத்தைப் பற்றிச் சொன்னீர். அவன் திருமுருகப் பெருமானாகத் தன்னை ஆக்கிக் கொண்டு மகிழ்ச்சிக் கூத்தாடுவது கேட்கவே இன்பமாயிருக்கிறது. நேரில் பார்க்க வேண்டும் என்னும் ஆவல் மேலிடுகிறது.

நக்கீரர்: அது மட்டுமா? மற்றுமொரு விழாவைப் பற்றிச் சொல்கிறேன், கேளுங்கள் புலவரே!

புலவர்: அஃது என்ன விழா ஐயனே!

நக்கீரர்: செறிவான மலைப்பக்கங்களில் வாழும் மக்கள் அனைவரும் திருமுருகப் பெருமானை வாழ்த்திப் பாடி விழாக் கொண்டாடுகிறார்கள்.

விழாக் கொண்டாடுவதற்கான களத்தில் கோழிக் கொடி நட்டுக் கொடியேற்றத்துடன் தொடங்குவர். அவ்விழாவில் சிறிய தினை அரிசியைப் பூக்களுடன் கலந்து பல பாத்திரங்களில் பரப்பிப் 'பிரப்பு அரிசி'யாய் வைத்து, ஆட்டுக் கிடாயை அறுத்துக் கொண்டாடுகிறார்கள்.

[பிரப்பு - கூடை நிறைய இட்டு வைக்கும் நிவேதனப் பொருள்]

புலவர்: அவ்விழாவைப் பற்றி விளக்கிச் சொல்லுங்கள் ஐயனே! எங்கெல்லாம் அந்த விழாவைக் கொண்டாடுகிறார்கள்?

நக்கீரர்: அன்புடைய அடியார் திருமுருகப் பெருமானை

ü வழிபட்டுப் போற்றத் தக்க பொருத்தமான இடங்களிலும்,

ü வேலன் மிக்க மகிழ்ச்சியுடன் ஆடும் களத்திலும்,

ü காட்டிலும், சோலையிலும், அழகான தீவு போன்று ஆற்றின் நடுவே உள்ள சிறு நிலத்திலும்,

ü ஆறு, குளம் ஆகியவற்றின் கரைகளிலும், வேறு பல இடங்களிலும்,

ü நான்கு தெருக்கள் சந்திக்கும் இடங்களிலும் [நாற்சந்தி, சதுக்கம்],

ü மூன்று தெருக்கள் சந்திக்கும் இடங்களிலும் [முச்சந்தி],

ü புதுமலர்களை உடைய கடம்பு மரத்தின் அடியிலும், ஊரின் நடுவில் உள்ள மரத்தின் அடியிலும்,

ü மக்கள் கூடும் பொது மேடையை உடைய மன்றங்கள், பொதியில் ஆகியவற்றிலும்,

ü கந்து நடப்பட்டுள்ள இடங்களிலும் கொண்டாடுகிறார்கள்.

புலவர்: ஓ! நன்று ஐயனே! அவ்விழாவை எப்படிக் கொண்டாடுகிறார்கள்? என்ன செய்கிறார்கள்?

நக்கீரர்: அவர்கள்

ü நெய்யுடன் வெண்மையான சிறு கடுகினைக் கலந்து கோயிலின் வாயிலில் அப்புவர்;

ü திருமுருகப் பெருமானின் திருப்பெயரை மென்மையாக உரைத்து, இரு கைகளையும் கூப்பி வணங்குவர்;

ü வளம் பொருந்திய செழுமையான மலர்களைத் தூவுவர்;

ü வெவ்வேறு நிறமுடைய இரு ஆடைகளை ஒன்றன் மேல் ஒன்றாக அணிந்திருப்பர்;

ü கையில் சிவப்பு நூல் காப்பு நூலாகக் கட்டியிருப்பர்;

ü வெண்மையான பொரியைத் தூவி, வலிமை வாய்ந்த ஆட்டுக் கிடாயின் இரத்தம் கலந்த தூய வெண்மையான பிரப்பு அரிசியை பலி அமுதாகப் பல இடங்களில் வைப்பர்;

ü சிறிய பசுமையான மஞ்சளையும் நல்ல நறுமணப் பொருள்களையும் பல இடங்களில் தூவித் தெளித்திருப்பர்;

ü செவ்வரளி மலரால் ஆகிய மாலையைச் சீராக நறுக்கிக் கோயிலைச் சுற்றித் தொங்க விட்டிருப்பர்.

புலவர்: ஓ! மிகச் சிறப்பாகக் கொண்டாடி மகிழ்கிறார்கள் ஐயனே! அவர்கள் இவ்விழாவில் வேறு என்னவெல்லாம் செய்கிறார்கள்?

நக்கீரர்:

ü மணப்புகையை எடுத்து ஆராதனை செய்கின்றனர்;

ü குறிஞ்சிப் பண்ணில் இயற்றப் பெற்ற பாடல்களைப் பாடுகின்றனர்;

ü மலைமீதிருந்து விழும் அருவியின் ஓசைக்கேற்ப இசைக் கருவிகளை ஒலிக்கின்றனர்;

ü பல்வேறு வடிவமுடைய அழகான பூக்களைத் தூவுகின்றனர்.

இவை மட்டுமா?

புலவர்: இன்னும் வேறு என்ன சிறப்புள்ளது ஐயனே!

நக்கீரர்: குறமகளின் வெறியாடலைக் கேட்பீர்.

திருமுருகப் பெருமானுக்கு விருப்பமான குறிஞ்சி யாழ், துடி, தொண்டகம், சிறுபறை போன்ற இசைக் கருவிகளைக் குறமகள் இயக்கிப் பாடி ஆடுகிறாள். அவ்வாறு ஆடித் திருமுருகப் பெருமானைத் தன்மீது வரவைக்கிறாள். மாற்றுக் கருத்துடையோரும் இந்நிகழ்வைக் கண்டு அஞ்சும் அளவுக்கு ஆவேசம் அடைகிறாள். இவ்வாறு திருமுருகன்பால் வழிப்படுத்துகின்றாள். அத்தகு அழகு பொருந்திய அகன்ற ஊரில் கோயில் வழிபாடு அமைகின்றது.

புலவர்: ஓ! நன்று… நன்று. இத்தகு கோயில்களிலும் திருமுருகப் பெருமான் தங்குகிறார் எனச் சொல்ல வருகிறீர். அப்படித்தானே ஐயனே!

நக்கீரர்: ஆம் புலவரே! அவ்வாறு, மிகுதியான மகிழ்ச்சியுடன் ஆடிய களத்தில் ஆரவாரம் ஏற்படுவதற்குரிய பாடல்களைப் பாடி, ஊது கொம்புகள் பலவற்றையும் ஊதி, வளைந்த மணியினையும் ஒலிக்கச் செய்து, என்றென்றும் கெடாத வலிமையுடைய யானையை அல்லது மயிலினை வாழ்த்தித், தாம் விரும்பும் அருட்கொடைகளை விரும்பியவாறு அடைய வேண்டி அடியார்கள் வழிபடுவதற்கென்று, அந்தந்த இடங்களில் திருமுருகப்பெருமான் தங்குகிறான்.

புலவர்: நன்றி ஐயனே!

(தொடரும்...)

Feb 12, 2022

திருமுருகாற்றுப்படை - பகுதி 7

புலவர்: இன்னும் வேறு எங்கெல்லாம் திருமுருகப்பெருமான் உறைகிறார் ஐயனே?

நக்கீரர்: மற்றுமொரு சிறப்பான இடத்தைக் காணலாமா புலவரே?

புலவர்: ஆம் ஐயனே! அறிவுறுத்தி அகம் குளிரச் செய்க!

நக்கீரர்: அறுவகைப் பணிகளைச் செய்வோர் யாவர்?

புலவர்: அறுவகைப் பணிகளா? அவற்றைப் பற்றிச் சொல்லுங்கள் ஐயனே!

நக்கீரர்: ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஏற்றல், ஈதல் ஆகியன.

புலவர்: ஓ! நூல்களைக் கற்றல், கற்பித்தல், வேள்வி செய்தல், ஏனையோரின் நன்மைக்காக வேள்வி செய்வித்தல், மற்றவர்களிடமிருந்து பொருளைப் பெறுதல், மற்றவர்களுக்குப் பொருளைக்கொடுத்து உதவுதல் என்பன.

நக்கீரர்: ஆம். அந்த ஆறு வகைப் பணிகளையும் தவறாமல் நிறைவேற்றுபவர்கள் அந்தணர்கள்.

புலவர்: அவர்கள் எப்படிப்பட்டவர்கள்?

நக்கீரர்: அவர்கள் பழம்பெரும் குடியில் தோன்றியவர்கள்; நாற்பத்தெட்டு ஆண்டுகள் திருமணம் புரியாது வாழ்பவர்கள்; அறம் பொருந்திய கோட்பாடு உடையவர்கள்; மூவகைத் தீயால் வேள்வி செய்து பெறும் செல்வத்தை உடையவர்கள்; இயற்கையாகப் பிறக்கும் பிறப்போடு, கல்வியறிவு, அறிவுமுதிர்ச்சி ஆகியவற்றை எய்திய பிறகு 'மீண்டும் பிறத்தலால்' 'இரு பிறப்பாளர்' என அழைக்கப்படுபவர்கள்; ஒவ்வொரு நாளுக்கும் உரிய நல்ல நேரத்தைக் கணித்து மற்றவர்களுக்குத் தெரிவிப்பவர்கள். ஒவ்வொரு புரியிலும் மூன்று நூல் இழைகளைக் கொண்ட புரிகள் மூன்றால் ஆகிய ஒன்பது நூலிழைகளைக் கொண்ட பூணூலை அணிந்து கொண்டிருப்பவர்கள்.

புலவர்: அவர்கள் என்ன செய்கிறார்கள்?

நக்கீரர்: நீராடிய பின்னர் ஈரமான அந்த ஆடையையே அணிந்து தலையுச்சி மீது இரு கைகளையும் குவித்து, ஆறெழுத்து மந்திரத்தைச் சொல்லித், தம் நாவினால் மென்மையாகவும் இனிமையாகவும் பாடி நறுமணமுடைய மலர்களைத் தூவித் திருமுருகப் பெருமானை வழிபடுகின்றார்கள்.

புலவர்: அருமை அருமை!

நக்கீரர்: அத்தகு அந்தணர்கள் வாழ்ந்துவரும் திருவேரகத்திலும் திருமுருகப் பெருமான் மன மகிழ்வோடு அமர்ந்திருக்கிறார். அதுமட்டுமா…

புலவர்: அடடா! இன்னும் வேறு யாரெல்லாம் திருமுருகனை வணங்குகிறார்கள் ஐயனே!

நக்கீரர்: வேலனின் குரவைக் கூத்தைக் கண்டீரா?

புலவர்: குரவைக் கூத்தா? அஃது என்னவென்று அறியத் தருவீர் ஐயனே!

நக்கீரர்: பசுமையான கொடியால் நறுமணமுடைய சாதிக்காயையும் அழகான புட்டில் போன்ற தக்கோலக்காயையும் நடுவில் வைத்துக் காட்டு மல்லிகை மலருடன் வெண்கூதாள மலரையும் சேர்த்துத் தொடுக்கப்பட்ட கண்ணியைத் தலை முடி மீது அணிந்திருப்பான் வேலன். அவன் நறுமணம் பொருந்திய சந்தனம் பூசப்பெற்ற மஞ்சள் நிறத்தால் விளங்கும் மார்பினை உடையவன். கொடிய வில்லால் விலங்குகளை வேட்டையாடிக் கொடுமையான கொலைத் தொழிலைச் செய்பவன். அவன், நீண்ட மூங்கிற் குழாயில் முற்றி விளைந்த தேனாலான கள்ளின் தெளிவை மலையில் சிற்றூரில் வாழும் தம் சுற்றத்தாருடன் உண்டு மகிழ்ந்து தொண்டகப் பறையின் தாளத்துக்கு ஏற்பக் குரவைக் கூத்தாடுவான்.

புலவர்: குரவைக் கூத்தைப் பற்றி இன்னும் விளக்கிச் சொல்லுங்கள் ஐயனே!

நக்கீரர்: விரல்களால் அரும்புகளைத் தொட்டு அலைத்து அலர்த்தப்பட்டமையால் பல்வேறு வகை நறுமணம் வீசுவதும், ஆழமான சுனையில் மலர்ந்த மலர்களால் தொடுக்கப்பட்டதும், வண்டுகள் மொய்ப்பதுமான மாலையையும், தொடுக்கப்பட்ட ஏனைய மாலைகளையும் சேர்த்துக் கட்டிய கூந்தலையும் உடையவர்களாகவும், இலையைத் தலைமுடி மீது அணிந்த கஞ்சங் குல்லையையும் நறிய பூங்கொத்துகளையும் கடம்பு மரத்தின் மலர்க்கொத்துகளை இடையே இட்டுக் கட்டிய பெரிய குளிர்ந்த அழகிய தழையையும் வடங்களோடு கூடிய அணிகலன்கள் அணியப் பெற்ற இடுப்பில், ஆடையாக உடுத்தியவர்களாகவும், மயிலைப் போன்ற சாயலை உடையவர்களாகவும் விளங்கிய மகளிரொடு ஆடுவான் வேலன்.

புலவர்: ஓ! மகிழ்ச்சியோடு ஆரவாரிக்கும் கூத்தாக இருக்குமோ?

நக்கீரர்: ஆமாம் புலவரே! திருமுருகனே உள்ளத்தில் புகுந்தவனாக வேலினைக் கையில் கொண்டு ஆடுவதால் அவன் வேலன் ஆவான்.

புலவர்: கேட்கவே ஆவலாக உள்ளதே! நேரில் கண்டால் எப்படி இருக்கும்..?

நக்கீரர்: இன்னும் சொல்கிறேன். கேளுங்கள் புலவரே! அந்த வேலன் சிவந்த மேனியனாகக் காட்சியளிப்பவன்; சிவப்பு நிற ஆடையை அணிந்துள்ளவன்; அசோக மரத்தின் குளிர்ச்சி பொருந்திய தளிர்களை இரு காதுகளிலும் அணிந்துள்ளவன்; இடையில் கச்சை அணிந்துள்ளவன்; கால்களில் வீரக் கழல்களை அணிந்துள்ளவன்; சிவந்த வெட்சி மலர்களைத் தலைமுடியில் கண்ணியாக அணிந்துள்ளவன்; புல்லாங்குழல், ஊதுகொம்பு, இன்னும் பல இசைக் கருவிகளை உடையவன்; ஆடு, மயில், அழகிய சேவல் கொடியை உடையவன்; உயரமானவன்; 'தொடி' எனப்படும் அணிகலன் அணியப்பெற்ற தோள்களை உடையவன்; நரம்பாலாகிய இசைக் கருவிகளின் இசையை ஒத்த இனிய இசையோடு வருகின்ற மகளிர் குழாத்துடன் வருபவன்; சிறிய புள்ளிகளும் நறுமணமும் குளிர்ச்சியும் அழகும் உடையதாக, நிலத்தில் தோய்கின்ற ஓர் ஆடையை அணிந்திருப்பவன். குரவை ஆடவிருக்கும் பெண்மானைப் போன்ற மகளிரை முழவு போன்ற பெருமையுடைய தன் கைகளால் பொருந்தத் தாங்கித் தோளைத் தழுவியவாறு தன் பெருமை பொருந்திய கையை முதற் கையாக அம் மகளிர்க்குத் தந்து, ஒவ்வொரு குன்றின் மீதும் திருமுருகனைப் போல ஆடுவான்.

(தொடரும்…)

Feb 6, 2022

திருமுருகாற்றுப்படை - பகுதி 6

புலவர்: இன்னும் வேறு எங்கெல்லாம் திருமுருகப்பெருமான் உறைகிறார் ஐயனே?

நக்கீரர்: இதுவரை திருப்பரங்குன்றத்திலும் திருச்சீரலைவாயிலும் உறைபவன் திருமுருகப் பெருமான் என்று கண்டோமல்லவா? இப்போது ஒரு சிறப்பான இடத்தைப் பார்க்கப் போகிறோம் புலவரே!

புலவர்: அப்படியா! அப்படி என்ன சிறப்பு என்பதையும் விளக்கிச் சொல்லுங்கள் ஐயனே!

நக்கீரர்: சொல்கிறேன் புலவரே! அவ்விடத்தில் ஒரு திருக்கோயில் இருக்கிறது. அத்திருக்கோயிலில் முன்னே சென்று புகுவோர் யாரென்று அறிவீரோ?

புலவர்: யாருக்கு அந்த நற்பேறு கிட்டும்? அவர்கள் யார் ஐயனே?

நக்கீரர்: அவர்கள் மரவுரியை ஆடையாக உடுத்தியவர்கள்; வடிவாலும் நிறத்தாலும் அழகுடையவர்கள்; வலம்புரிச் சங்கைப் போன்ற வெண்மையான நரைமுடியை உடையவர்கள்; தூய்மையாக விளங்கும் வடிவினை உடையவர்கள்; மானின் தோலைப் போர்வையாகப் போர்த்துக் கொண்டுள்ளவர்கள்; உணவினை விலக்கிய நோன்பின் காரணமாகத் தசை வற்றிய நிலையில் மார்பு எலும்புகள் வெளிப்படும் தோற்றத்தை உடையவர்கள்; பகற்பொழுதிலும் உணவு உண்ணா நோன்பினைப் பல நாட்கள் கடைப்பிடிப்பவர்கள்.

புலவர்: அப்பப்பா, மிகவும் எளிமையாகவும் தவத்தில் வலிமையாகவும் இருக்கின்றனரே!

நக்கீரர்: ஆம்… அவர்கள் பகையினையும், நெடுங்காலம் தொடரும் சீற்றத்தினையும் அகற்றிய மனத்தினை உடையவர்கள்; பலவற்றைக் கற்றவரும் அறிந்திராத கல்வி அறிவினை உடையவர்கள்; கல்வியால் பெறும் அறிவிற்கே எல்லையாக விளங்கும் தலைமைப் பண்புடையவர்கள்; ஆசையினையும் கொடிய சினத்தினையும் விலக்கிய அறிவுடையவர்கள்; ஒரு சிறிதும் துன்பம் அறியாதவர்கள்; யாரிடத்தும் வெறுப்பில்லாது பொருந்தி ஒழுகும் மெய்யறிவினை உடையவர்கள். அத்தகு முனிவர்களே முன்னே சென்று திருக்கோயிலின் உள்ளே புகுவர்.

புலவர்: அடடா… அவர்களை எண்ணும்போதே உள்ளம் பூரிக்கிறது. ஆமாம்.. ஐயனே! ஓர் ஐய வினா! ஏன் அவ்வாறு? யாவரும் ஒரே நேரத்தில் சென்று காண முடியாதா? இறைவன் எல்லாருக்கும் பொதுவானவன்றானே!

நக்கீரர்: ஆம் புலவரே! யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் திருமுருகப் பெருமானைக் காணலாம். ஆனால், அங்கு நடந்த நிகழ்வையும், அத்திருக்கோயிலின் சிறப்பையும் அறியத் தருகிறேன். முனிவர்கள் ஏன் முன் சென்றார்கள் என்பது அப்போது புரியும்.

புலவர்: நல்லது ஐயனே! கேட்கும் ஆவல் மிகுந்துவிட்டது. கூறுங்கள்.

நக்கீரர்: முனிவர்கள் முன் சென்றார்கள் அல்லவா? அவர்களைத் தொடர்ந்து யார் செல்கிறார்கள் என்று பார்ப்போம். அவர்கள் வெண்புகை அல்லது பாலாவியை முகந்து ஆடையாக உடுத்தியதைப்போல் தூய மெல்லிய ஆடையினை அணிந்தவர்கள்; மலர்ந்த அரும்புகளாலாகிய மாலையினை அணிந்த மார்பினை உடையவர்கள்; தம் செவிகளால் இசையை அளந்து நரம்புகளைக் கட்டிய வார்க்கட்டினை உடைய நல்ல யாழ் இசையில் பயிற்சி பெற்றிருந்தவர்கள்; நல்ல உள்ளத்தை உடையவர்கள்; எப்பொழுதும் இனிய சொல்லையே பேசுபவர்கள். அத்தகைய இசைவாணர்களாகிய பாணர்கள் இனிய யாழின் நரம்புகளை இயக்குவதற்காக வருகை புரிந்தனர்.

புலவர்: ஓ! இசைவாணர்களா? நன்று நன்று. அவர்களைத் தொடர்ந்து?

நக்கீரர்: அவர்களைத் தொடர்ந்து, வேறு யாராக இருக்க முடியும்? சொல்கிறேன்

புலவரே! அவர்கள் நோயற்ற உடலை உடையவர்கள்; மாமரத்தின் ஒளி பொருந்திய தளிர் போன்ற நிறமுடையவர்கள்; உரைகல்லில் பொன்னை உரைக்கும்போது தோன்றும் பொன் துகள் போன்ற தோற்றமுடைய அழகு தேமலை உடையவர்கள்; காண்பதற்கினிய ஒளி பொருந்திய பதினெட்டு வடங்களாலாகிய மேகலையை அணிந்தவர்கள்; யாரென்று தெரிகிறதா? அவர்கள் பாடினி என்று அழைக்கப்படுகின்ற இசை வாணிகளாகிய மகளிர். அவர்களும் வருகை புரிந்தனர்.

புலவர்: ஓ! பாணர்களைத் தொடர்ந்து பாடினிகள். அப்பப்பா. அவர்கள் பாடுவதைக் கேட்கவே உள்ளம் இனிக்குமே! அவர்களைத் தொடர்ந்து?

நக்கீரர்: அவர்களைத் தொடர்ந்து, பெருந்தலைவர்கள்.

புலவர்: பெருந்தலைவர்களா? அவர்கள் யார்?

நக்கீரர்: நஞ்சுடன் கூடிய துளையையும் வெண்மையான பற்களையும், நெருப்புப்போல மூச்சுவிடும்போது காண்பவர்களுக்கு அச்சத்தை விளைவிக்கும் கடுமையான வலிமையினையும் உடையன பாம்புகள் அல்லவா? அத்தகைய பாம்புகளும் மடியும்படி அவற்றை அடித்து வீழ்த்துவதும் பல வரிகளை உடைய வளைந்த சிறகுகளையுடையதுமானது கருடன் எனப்படும் பறவை. அத்தகைய கருடன் தோற்றமளிக்கும் கொடியையுடைய திருமால்…

புலவர்: ஓ! கருடக் கொடியான். அவருக்கு அங்கே என்ன வேலை?

நக்கீரர்: அவர் மட்டுமா? தம் ஊர்தியான வெண்ணிறக் காளை தோற்றமளிக்கும் கொடியினை உயர்த்தியுள்ளவரும், பலரும் புகழ்ந்து போற்றும் திண்மையான தோள்களையுடையவரும், உமையம்மையைத் தம் இடப்பக்கத்தில் உடையவரும், இமைக்காத மூன்று கண்களையுடையவரும், முப்புரங்களை எரித்து அழித்தவருமான சிவபெருமான்…

புலவர்: அவருமா?

நக்கீரர்: அவர் மட்டுமா? ஆயிரம் கண்களை உடையவனும், நூற்றுக்கு மேற்பட்ட வேள்விகளைச் செய்து முடித்தலால் பகைவரை வென்று அவர்களைக் கொல்லும் வெற்றியை உடையவனும், முன்பக்கம் உயர்ந்த நான்கு கொம்புகளையும் அழகிய நடையினையும், நிலத்தைத் தொடுமாறு நீண்ட வளைந்த துதிக்கையினையும் உடையதும், புலவர்களால் புகழப்படுவதுமான 'ஐராவதம்' எனப்படும் யானையின் பிடரியின் மீது அமர்ந்தவனுமான இந்திரன். அம்மூவரும் அத்திருக்கோயிலில் வந்து சேர்ந்தார்கள்.

புலவர்: ஓ! அவர்களுக்கு என்ன வேண்டும்? அவர்கள் திருமுருகப் பெருமானைத் தேடிச் செல்லக் காரணம் என்ன?

நக்கீரர்: அவ்வாறு நான்கு பெருந்தெய்வங்களில் பிரமன் அல்லாத மற்ற மூவரும் உலகத்தைக் காத்தலையே தங்கள் கோட்பாடாகக் கடைப்பிடித்து வரவும், திருமாலின் கொப்பூழ்த் தாமரையில் தோன்றிய பிரமனுக்காகத், திருமுருகப் பெருமானின் திருவருளினை வேண்டி முப்பத்து முக்கோடித் தேவர்களுடனும் பதினெட்டுக் கணங்களுடனும் ஞாயிறு போன்ற ஒளியுடன் வரலாயினர்.

புலவர்: அவர்கள் விண்மீன்களைப் போன்ற தோற்றத்தினர்; காற்றினைப் போல் விரைவாகச் செல்லும் ஆற்றல் உடையவர்கள்; காற்றில் தீ எரிவதைப் போன்ற வலிமை உடையவர்கள்; வானத்தில் மின்னலுடன் இடி இடிக்கும் ஓசையை ஒத்த குரலை உடையவர்கள் ஆயிற்றே.

நக்கீரர்: ஆம் புலவரே! அத்தகையவர்கள் பிரமனைச் சிறையிலிருந்து விடுவிக்கவேண்டும் என்னும் வேண்டுகோளுடன் வானத்தில் வட்டமாய்ச் சுழன்று வந்து நின்றனர்.

புலவர்: அப்பப்பா... திருமுருகப் பெருமானின் புகழ் ஓங்குக!

நக்கீரர்: ஆம். அத்தகைய திருக்கோயில் உடைய திரு ஆவினன்குடி என்னும் ஊரில் குற்றமற்ற கொள்கையை உடைய தெய்வயானை அம்மையுடன் சில நாள்கள் அமர்ந்து இருப்பவர் திருமுருகப் பெருமான்.

(தொடரும்...)

Jan 30, 2022

திருமுருகாற்றுப்படை - பகுதி 5

புலவர்: ‘அது மட்டுமன்று…’ என்றால் வேறு எங்கெல்லாம் திருமுருகப்பெருமான் உறைகிறார் ஐயனே?

நக்கீரர்: சொல்கிறேன் புலவரே! திருப்பரங் குன்றத்தில் உறையும் திருமுருகப் பெருமான் அடுத்து எங்குச் செல்வார் தெரியுமா?

புலவர்: ஆகா! கேட்க ஆவலாக உள்ளேன்.

நக்கீரர்: திருமுருகப் பெருமான் வீற்றிருக்கும் யானையைப் பற்றி அறிவீரோ?

புலவர்: யானையின் மீது வீற்றிருக்கிறாரா? சொல்லுங்கள் ஐயனே!

நக்கீரர்: திருமுருகப்பெருமான் வீற்றிருக்கும் ஆண் யானை மிகுந்த வேகத்துடன் நடக்கும் நடையினைக் கொண்டு கடுமையாக வீசும் காற்றைப் போன்று விரைவாகச் செல்லக் கூடியது; யமனைப் போன்று தடுப்பதற்கு அரிதான வலிமை உடையது.

புலவர்: அப்பப்பா. அவ் யானையின் வலிமையும் வேகமும் போற்றற்குரியது.

நக்கீரர்: அது மட்டுமா… அதன் அழகைக் கேளீர். கூர்மையான முனையை உடைய அங்குசம் குத்துவதால் மத்தகத்தில் ஏற்பட்ட வடுவினை உடையது; புகர் எனப்படும் செம்புள்ளிகளை உடைய நெற்றியை உடையது; அசையும் நெற்றிப் பட்டத்தையும், பொன்னாலான வாடாத மாலையினையும், இரு பக்கங்களிலும் தாழ்ந்து தொங்குகின்ற மணியானது மாறி மாறி ஒலிக்கின்ற ஒலியினையும் உடையது.

புலவர்: அழகோ அழகு! கண்முன்னே காட்சிகள் விரிகின்றன. மேலும் சொல்லுங்கள் ஐயனே!

நக்கீரர்: தாமம், முகுடம், பதுமம், கிம்புரி, கோடகம் எனப்படும் ஐவேறு வகையில் அலங்கரிக்கப்பட்டு, மின்னலைப் போன்ற ஒன்றுக்கொன்று நிறத்தால் மாறுபடும் மணிமுடியுடன் அவருடைய திருமுடி காட்சியளிக்கின்றது. ஒளி பொருந்திய பொன்னால் ஆகிய 'மகரக்குழை' வடிவில் அமைந்த காதணிகள் தொலைதூரத்தில் உள்ள நிலமெங்கும் ஒளி வீசும் சந்திரனைச் சூழ்ந்துள்ள விண்மீன்களைப் போல ஒளி வீசி விளங்குகின்றன.

புலவர்: அடடா! அவருடைய மணிமுடியின் அழகும் மகரக் குழையின் அழகும் கண்கொள்ளாக் காட்சி!

நக்கீரர்: குற்றம் இல்லாத நோன்போடு தாம் மேற்கொண்ட செயல்களை நிறைவு செய்யும் அடியார்களின் மனத்தில் பொருந்தித் தோன்றும் ஒளிமிக்க நிறமுடையவர் திருமுருகப்பெருமான்.

புலவர்: அவருடைய ஆறு திருமுகங்களும் மலர்ந்திருக்கும் காரணம் அறிய வேண்டுகிறேன் ஐயனே!

நக்கீரர்: சொல்கிறேன் புலவரே!

1. உலகத்தைச் சூழ்ந்துள்ள மிகுதியான இருள் நீங்கி, அவ்வுலகம் குற்றம் இல்லாது விளங்கும் பொருட்டுப் பல கதிர்களை உடைய கதிரவன் தோன்றுவதற்குக் காரணமாய் விளங்குவது ஒரு திருமுகம்.

2. அன்பர் வேண்டிய வரங்களை அவர்களுக்கு அன்புடன் மகிழ்ந்து வழங்குவது மற்றொரு திருமுகம்.

3. அந்தணர்கள் தம் மரபு வழியில் மந்திரங்களை ஒலித்து இயற்றுகின்ற வேள்விகளை ஏற்று மகிழ்வது மற்றொரு திருமுகம்.

4. எந்த நூல்களும் ஆராய்ந்து உணர்த்த இயலாத மெய்ப்பொருளை, அனைத்துத் திசைகளையும் தன் ஒளியால் விளக்கும் திங்களைப் போல, முனிவர்களுக்கு உணர்த்தி விளக்குவது மற்றொரு திருமுகம்.

5. பகைவரைப் போரில் கொன்று அழித்துக் கள வேள்வியை இயற்றச் செய்வது மற்றொரு திருமுகம்.

6. பூங்கொடி போன்ற இடையும் இளமையும் உடைய குறவர் மகள் வள்ளியுடன் மகிழ்ச்சி அடைவது மற்றொரு திருமுகம்.

புலவர்: அடடா! ஒளி தருவது, அன்பர்க்கு அருள்வது, வேள்வி காப்பது, ஞானம் உணர்த்துவது, வீரம் விளைவிப்பது, வள்ளியோடு மகிழ்வது.

நக்கீரர்: ஆம்… அவருடைய ஆறு திருமுகங்களும் அவ் ஆறு தொழில்களை முறையாக நடத்துவதற்கு ஏற்ப அழகும், பெருமையும், ஒளியும், வலிமையும் பொருந்தியவர். அவருடைய மார்பில் அழகிய சிவந்த மூன்று வரிகள் உள்ளன. அவருடைய நிமிர்ந்த தோள்கள், ஒளி பொருந்திய வேலினை எறிந்து பகைவர்களின் மார்பைப் பிளக்கின்ற ஆற்றல் உடையன.

புலவர்: அருமை ஐயனே! அவருடைய பன்னிரு கைகள் என்ன செய்கின்றன?

நக்கீரர்: அதைத்தான் சொல்ல வருகிறேன் புலவரே!

1. ஒரு கை முத்திப் பேற்றினைப் பெற்று வானுலகம் செல்லும் முனிவர்களைக் காத்து ஏந்திய வண்ணம் உள்ளது.

2. ஒரு கை இடுப்பினைச் சார்ந்து விளங்குகின்றது.

3. ஒரு கை அழகிய செந்நிற ஆடையால் அலங்கரிக்கப் பெற்ற தொடையைச் சார்ந்து உள்ளது.

4. ஒரு கை யானையை அடக்குவதற்குரிய அங்குசத்தைச் செலுத்திய வண்ணம் உள்ளது.

5. ஒரு கை கேடயத்தைத் தாங்கிய வண்ணம் உள்ளது.

6. ஒரு கை வேற்படையினை வலப்பக்கம் நோக்கிச் சுழற்றிய வண்ணம் உள்ளது.

7. ஒரு கை அடியார்களுக்குத் தத்துவங்களை உணர்த்திய வண்ணம் மோன முத்திரையோடு மார்பின் மீது விளங்குகின்றது.

8. ஒரு கை மார்பில் புரளும் மாலையைச் சார்ந்துள்ளது.

9. ஒரு கை 'களவேள்வி தொடங்குக' என்னும் சைகை காட்டுகின்றது.

10. ஒரு கை கள வேள்வியின்போது ஓதப்படும் பாடலுக்கு ஏற்ற வகையில் இனிய ஓசையை உண்டாக்கும் மணியானது மாறி மாறி ஒலிக்கச் செய்கின்றது.

11. ஒரு கை வானத்திலிருந்து மேகமானது மிக்க மழையைப் பொழியுமாறு செய்கின்றது.

12. ஒரு கை வானுலக மகளிர்க்குத் திருமண மாலையைச் சூட்டுகின்றது.

புலவர்: அப்பப்பா. திருமுருகப்பெருமானின் பன்னிரு கைகளும் செய்யும் பணியைக் கேட்கவே மலைப்பாக இருக்கிறது.

நக்கீரர்: வானுலகத்தாரின் 'துந்துபி' போன்ற இசைக் கருவிகள் முழங்கவும், திண்ணிய வயிரம் வாய்ந்த ஊதுகொம்பு மிகுதியாக ஒலிக்கவும், வெண் சங்கு முழங்கவும், அச்சம் தரும் இடியைப் போன்ற ஓசையுடைய முரசுடன், மயில் அகவவும் வெற்றிக் கொடியின் கோழி கூவவும், ஆண் யானையின் மீதேறி வானின்வழி விரைவாகச் சென்று உலக மக்கள் போற்றும் உயர்ந்த புகழை உடைய திருச்சீரலைவாய் என்னும் திருச்செந்தூர் நகர் வந்து சேர்தலும் அவருடைய நிலையான பண்பேயாகும்; அதுமட்டுமன்று…

(தொடரும்...)

Jan 23, 2022

திருமுருகாற்றுப்படை- பகுதி 4

நக்கீரர்: தேவ மகளிர் பூச்சூடி ஆடியதைக் கண்டோம். போர்க்களத்தில் பேய்மகளிர் ஆடுவது பற்றித் தெரியுமோ?

புலவர்: பேய் மகளிரா? யார் அவர்கள்?

நக்கீரர்:  அவர்கள் எண்ணெய்ப் பசையின்றி உலர்ந்த பரட்டைத் தலைமுடியுடையவர்கள்; வரிசையற்ற பற்களும் பிளந்த பெரிய வாயும், பிறரை அச்சுறுத்தும் வகையில் சுழலும் பச்சை நிறக் கண்களும் உடையவர்கள்; சொரசொரப் பான வயிறும், காண்பவர்கள் அஞ்சும்படியான நடையும் உடையவர்கள்; பெரிய ஆந்தையைக் குண்டலமாகக் கொண்ட காதணி அணிந்த காதுகளை உடையவர்கள்; மார்பின் மீது வீழ்ந்து வருத்துகின்ற தொங்கும் பாம்பைக் கயிறாகக் கொண்டவர்கள்.

புலவர்: அப்பப்பா. எண்ணிப்பார்க்கவே மிகவும் அச்சமாக உள்ளதே. அவர்கள் என்ன செய்வார்கள்?

நக்கீரர்: போர்க்களத்தில் வீழ்ந்து மாண்ட அசுரரின் தலையைக் கிள்ளி எடுத்து அதன் கண்ணைத் தோண்டித் தினபார்கள். அப்படி உண்பதனால் கூரிய நகங்களைக் கொண்ட விரல்களில் அரத்தம் பூசிக் கொண்டிருக்கும். அது மட்டுமன்றி நாற்றமுடைய அத்தலையைத் தன் பெரிய கைகளில் ஏந்தியவாறு பிறருக்கு அச்சம் விளைவிக்கும் வகையில் நடந்து செல்வார்கள்.

புலவர்: அவர்கள் அப்படிச் செய்வது ஏன்? 

நக்கீரர்: துணங்கைக் கூத்து ஆடுவதற்காக.

புலவர்: துணங்கைக் கூத்தா? அப்படி என்றால் என்ன? 

நக்கீரர்: அசுரர்கள் போன்ற தீயவர்களுக்கு அச்சம் விளைவிக்கும் வகையில் அமைவது பேய் மகளின் துணங்கைக் கூத்து. தன் தோளை அசைத்தவாறு அசுரர்களின் நிணத்தைத் தின்ற வாயுடன் துணங்கைக் கூத்து ஆடுவாள் அவள். 

புலவர்: அவர்கள் ஏன் துணங்கைக் கூத்து ஆட வேண்டும்? 

நக்கீரர்: முருகப் பெருமான் போர்க்களத்தில் அசுரரை வீழ்த்தி அடைந்த வெற்றியைப் புகழ்ந்து பாடிக் கொண்டாடுவதற்காக. 

புலவர்: நக்கீரரே! என்னை மிகுந்த அச்சமடையச் செய்தீர். போர்க்களக் காட்சியை எண்ணிப் பார்க்கும்போது மிகவும் அச்சமாக உள்ளது. 

நக்கீரர்: இன்னும் சொல்கிறேன் கேளுங்கள். குதிரைத் தலையோடு கூடிய பெரிய மனித உடல் போன்ற உருவம் எடுத்துக் கடலிற் புகுந்து ஒரு மாமரம் போல் நின்றான் அசுரர்களின் தலைவனாகிய சூரபன்மன். அவ்வாறு மாமரமாய் நின்ற சூரபன்மனை, அறுவகை வடிவங்களெடுத்து அச்சுறுத்தி அவனுடைய ஆற்றலை அடக்கி, இரண்டாகப் பிளந்து கொன்ற குற்றமில்லாத வெற்றியைப் பெற்றுப் புகழ்பெற்ற சிவந்த வேலும் திருமேனியும் உடையவன் திருமுருகப் பெருமான்.

புலவர்: அடடா. திருமுருகப் பெருமானின் வெற்றி போற்றத் தக்கது.

நக்கீரர்: ஆம் புலவரே! அத்தகு திருமுருகப் பெருமானின் சிவந்த திருவடிகளை அடைவதற்குரிய செம்மையான உள்ளத்துடன் நன்மைகளையே செய்யும் கொள்கையுடன் மெய்ப்பொருளை உணர்ந்து அவனைக் காணச் செல்ல விரும்பினால் நீர் கருதிய வினையின் பயனை இப்போதே பெறுவாய்.

புலவர்: ஆம் ஐயனே! அம்முருகனைக் காண விரும்பி இவ்விடம் விட்டு நீங்கும் முடிவோடு வந்துள்ளேன். அவன் அருளைப் பெற எங்குச் செல்ல வேண்டும் எனக் கூறுவீர்.

நக்கீரர்: முருகன் உறையும் இடங்கள் ஒன்றா? இரண்டா? சொல்கிறேன் கேளுங்கள்.

மதுரை மாநகரின் நுழைவாயிலில், போரை விரும்பி மிக உயரமான நெடிய கொடிகளின் அருகில் பந்தும் பாவையும் வரிந்து கட்டப்பட்டுள்ளன. அவற்றை அறுத்துப் போரிட முன்வருவோர் யாரும் இல்லாமையால் அவை தொங்கிய வண்ணம் உள்ளன. அம் மாநகரின் கடை வீதிகளில் திருமகளே வீற்றிருப்பது போல செல்வம் கொழிக்கின்றது. மாளிகைகள் அமைந்திருக்கும் வீதிகளும் அங்கு உள்ளன. 

அந்நகரின் மேற்குத் திசையில் அமைந்திருக்கும் அகன்ற நெல் வயல்களில் முட்கள் பொருந்திய தண்டுகளை உடைய தாமரை மலர்கள் மீது வண்டுகள் இரவில் உறங்கும். பின்னர் வைகறையில் தேன் மணம் கமழும் நெய்தல் மலர் மீது மொய்த்திருக்கும். கதிரவன் தோன்றிய பின்னர் மலையின் சுனைகளில் கண்களைப் போல் பூத்துள்ள விருப்பம் தரும் மலர்களின் அருகே சென்று ரீங்காரமிடும். அத்தகு அழகிய இடமாகிய திருப்பரங்குன்றத்தின் மீது திருமுருகப் பெருமான் மனம் விரும்பி அமர்ந்துள்ளார். அங்கே சென்று காணலாம். அதுமட்டுமன்று…