Aug 13, 2022

முந்தைப் பிறந்தவள்யான் - ஒருபா ஒருபஃது

இயற்கையாய் நின்றேன் எடுத்தாண்ட வேந்தர்
முயற்சியால் மூன்றாய் வளர்ந்தேன் - செயற்கை
பலவாறாய் என்னைப் பதம்பார்க்க எண்ணித்
தலைவேறாய்ப் போனது காண்                                                      1

இயற்கை சிதைக்கும் செயற்கை வழக்கம்
இயற்கையே என்றும் இருக்கும் - அயர்ந்திந்த
பூமி அழிந்து புதுப்பிறவி கொண்டாலும்
ஆமிமிழ்ந்து தோன்றுவன் யான்.                                                    2

இயல்பின ளாய எனையழிக்க நின்றார்
முயற்சியெலாம் பாழாய் முடியும் - அயற்சியிலா(து)
ஆழ்ந்தகழ்ந் தாய்வார்க்(கு) அமிழ்த சுரபியாம்
வாழ்ந்தார் எனைக்கூறு வார்                                                           3

இயற்கையி னின்று செயற்கையை நாடி
முயற்சிகள் நீளல் முடிபோ - பெயர்ச்சிகள்
மேன்மேலும் வந்தென்னை வீழ்த்த நினைத்தாலும்
யான்மேலே நிற்பேன் இனிது                                                           4

உயர்ந்த பொருளாய் உணர்வார்க்(கு) உணர்வாய்ப்
பெயர்ந்து வளர்வார்க்கும் பேறாய் - அயராத
நல்லுள்ளந் தந்து நயத்தகு பாவடிக்கச்
சொல்லுள்ளம் சேர்ப்பேன் சுரந்து                                                   5

எனக்கென்ன போட்டி எடுத்தாளு வார்தம்
மனக்கவலை மாற்றும் மருந்து - தனக்குவமை
இல்லாத என்னை இனியவளைக் கையாண்டு
சொல்லாத தெல்லாமே சொல்                                                         6

என்னின் இளையார்க்கும் ஏற்ற இடந்தருவேன்
பொன்னின் பொலிவோ பொசுங்காது - மன்னும்
நிலைப்பே றுடையவள் நீண்டு தொடரும்
கலைவேறு யான்வேறோ காண்?                                                    7

வருமொழி யாவும் வளரும் தளரும்
ஒருமொழி யுண்டென்பார் ஓர்ந்தார் - அருமொழி
நிற்கும் பிறமொழி நீத்து விடுமியல்பே
பொற்குவையே காக்கப் படும்.                                                         8

முத்தமிழாய் முத்துதிர்க்கும் முந்தைப் பிறந்தவள்யான்
சொத்தாய்ப் பலர்க்குச் சுரந்தமுத - வித்தாய்த்
திகழும் விளக்கம் தெரிந்தவள் என்னை
இகழ்வார் இகழ்ந்தழி வார்                                                                   9

மொழிவார் மொழியாவேன் முத்தாய் முனைவார்
எழிலாவேன் இன்பம் இயற்றிப் - பொழிலாவேன்
காலத்(து) அழியாத காவியம் தந்துயர்ந்து
ஞாலத் திருப்பேன்யான் நன்று                                                          10

No comments:

Post a Comment