Dec 31, 2023

காந்தி ஆசிரியர் - இரங்கற்பா



காலத்தால் அழியாத
காவியமாய்க் கவிமழையாய்
வாழத்தான் விளைந்தவரே
வாழ்வாங்கு வாழ்ந்தவரே!

வருத்தவளை வேயரசர்
மாமுடியின் மேலாம்
கருத்துமழை வழிகாட்டிக்
கண்கலங்கச் சென்றவரே!

ஆங்கிலமும் அருந்தமிழும்
அமுதாக்கிக் கற்பித்தீர்!
தீங்கிரிக்க நாடெல்லாம்
திருக்குறளை எடுத்துரைத்தீர்!

திருக்குறளில் கணிதவியல்
தேர்ந்தெடுத்துச் சொன்னவரே!
திருக்குறளே பெருந்தவமாய்த்
தொழுதெழுந்து வாழ்ந்தவரே!

கணக்குப் பிணக்கறுத்து
மணக்குமெனக் காட்டியவரே!
வணங்குவோம் எம்வாழ்வைச் 
செதுக்கியவரே! ஆசானே!
                                     - கண்ணீருடன் 
தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

Nov 10, 2023

மனிதம்

மனிதம்
என்பது மட்டுமே
அடையாளம்

மற்ற உயிர்களினின்று
வேற்றுமைப்படுத்தும்
அடையாளம்

நாடு இனம்
மதம் மொழி
வகுப்பு குலம்குடி
இன்னும்
எத்தனையோ பெயர்கொண்டு
எப்படியெல்லாம் அடையாளம்கொண்டு
பிரிந்து பிரிந்து மனிதம் இழந்து
படைமேற் கொண்டு போர்செய்து
படைத்த வரலாற்றால்
மனிதம் மறந்த மனம்

இவை எல்லாம் துறந்து
மனிதத்தோடு மனம் ஒன்றுவது
எந்நாளோ?

Nov 4, 2023

போரை நிறுத்துவீர்

நிலைமண்டில ஆசிரியப்பா

உலகம் உவத்தல் உடைத்தா காது
நிலைஇய தன்மை நீடிக் காது
கலகம் கலகம் காணின் எங்கும்
பன்னூ றாண்டுகள் பாரில் வாழ்ந்தும்
நன்னூல் அறங்கள் நாணும் படியாய்ப்
பக்குவம் பெறாஅது பண்பிற் சிறவாது
கொலைவெறி கொண்டார் கொடுங்கோன் மறவர்
ஒன்று படாஅ உள்ளங் கொண்டார்
நின்றெதிர் புரியும் நெடும்போர் காணீர்
இனமென மதமென மொழியென வகுப்பென
எத்தனை பிரிவுகள் எத்தனை பிரிவுகள்
இயற்கையான் அழிவுகள் போதா வென்று
பகைமை பூண்டு படைமேற் கொண்டு
கொன்று குவிக்கும் கொடுமை காணீர்
யாரை நோவதி யாரை நோவதி
யாரை நோவதோ? யாங்கா ணேமே.

Oct 20, 2023

போரை நிறுத்துவீர்

நேரிசை வெண்பா

ஒன்றா(து) உடைகின்ற உள்ளத்தார்க்(கு) எந்நாளும்
பொன்றாது போரே புரிந்துணர்வீர் - நின்று
நிலைவாழ நேயமே நேரிய வாறாம்
குலையாது காப்போம் குடி

Oct 5, 2023

என்செய்வேன் பராபரமே!

தரவு கொச்சகக் கலிப்பா

எண்ணரும் எண்ணங்காள்! எனைவைத்துச் செய்கின்ற
இன்னல்கள் என்னுமா(று) இயக்குவதைக் காண்கின்றேன்
இன்னரும் மூளையினை ஏன்பற்றித் தாக்குகின்றீர்?
என்னையாட் கொண்டீரோ ஏதுக்கும் உதவாதே!

விண்ணுக்கும் மண்ணுக்கும் வீழ்ந்தெழுந்து குதிக்கின்ற
எண்ணங்கள் கண்டீரோ? எனைப்பாடு படுத்துவதே
கண்ணாகக் கொண்டுய்யும் காணாத எலாஞ்செய்யும்
அண்ணாஅ மலையானே! அருளுவாய் அடிச்சரணே!

மதுவுக்கே அடிமையென மனம்நொந்து குடிப்பாரோ
எதுவுமிங்குத் தாங்குகின்றார் எண்ணத்தின் வலைவீழ்ந்து
சிதையாது காக்கின்றார் சிகைநரையும் இல்லாது
அதுவுமில்லை இதுமில்லை எதுவுமில்லை என்பிழைப்போ?

ஒன்றுமிலை என்றாலும் ஓயாஅ(து) ஒழியாது
நின்றநிலை மாறாது நிம்மதியாய் வீடாது
வென்றநிலைச் சிரிப்போடு வேடிக்கை பார்க்குமந்த
என்றனிலை எண்ணத்தை என்செய்வேன் பராபரமே!

Oct 3, 2023

இராஜதுரை - இரங்கற்பா

நேரிசை ஆசிரியப்பா

இராஜ துரையெனும் இன்பெயர் தாங்கி
வராத வரமாய் வாய்த்த தவனே!
அறிவியல் அறிஞனாய் அனைத்தும் முயலும்
நெறியில் நின்று நினைத்தன செய்து
காட்டும் திறமை கைவரப் பெற்று
வாட்டம் போக்கும் வடிவழ கோனே
மின்னைக் கொண்டு தன்னை முடித்த
நின்னை எண்ணி எண்ணி யுருகிக்
கண்ணீர் உகுக்கும் குடும்பம்
காணாய் காணாய் கானுறைந் தவனே!

Sep 10, 2023

நான் ஏணி பேசுகிறேன்

கவியரங்கத் தலைவர் வணக்கம்

யாப்புக் கென்ன குறையிங்கு?
   யாரும் கவிஞர் ஆகிடலாம்
தோப்புக் குள்ளே பலகுயில்கள்
   தோன்றும் வண்ணம் ஊக்கிடலாம்
காப்புக் காடாய் விளங்குகின்றார்
   கலைகள் வளர்க்க முனைப்புடனே
சேர்ப்புச் செய்வார் செம்மலவர்
   சேலம் பாலன் வாழ்கவையா!

அவையடக்கம்

தோப்புக்குள் ளேபுகுந்து தோரணங்கட் டத்துணிந்தேன்
யாப்புக் கவிஞர்காள்! ஏற்றருள்வீர் எம்பாவை!

பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

ஏற்றி விட்ட ஏணியினை
   இனியும் வேண்டா என்றுரைப்பார்
எட்டி உதைப்பார் உதைத்தாலும்
   என்றன் மக்கள் இவரன்றோ?
காற்றில் விட்ட பட்டமது
   கயிற்றை அறுத்துப் பறக்குமன்றோ?
கண்கள் தூசு பட்டதுமே
   கண்ணீர்க் குளத்தில் தவிக்குமன்றோ?
மாற்றம் வாழ்வைப் புரட்டிவிடின்
   மக்கள் மனங்கள் திருந்துமன்றோ?
மற்றும் ஓர்வாழ் உள்ளதென்று
   மானம் துறந்து வழிசேரும்
ஊற்றி னைப்போல் பெருக்கெடுக்க
   உடைய இடமே சேருமன்றோ?
உண்மை உடைமை எதுவென்றங்(கு)
   உள்ளம் தெளிவு பெறுமன்றோ?                  1

எண்ணி எண்ணி உளம்நிறைத்தேன்
   ஏணி ஆனேன் ஏற்றிவிட்டே
எனக்கோ இன்னும் ஏமாற்றம்
   ஏனோ இந்தத் தடுமாற்றம்?
நண்ண வேண்டும் நல்வழியை
   நாளும் உணர்ந்து கைக்கொள்ளேன்
நட்டார் நலனே நலனென்று
   நட்ட மரமாய் நான்நின்றேன்
கண்ணே மணியே எனப்போற்றி
   கருத்தை அகத்தே நன்றேற்றிக்
கடலே அன்ன தமிழுணர்த்திக்
   கவிழ்ந்த கலமாய் ஆனேனே
அண்ணற் கெளிதா யகம்விளைத்தும்
   அண்ணல் என்றே பேர்பெற்றும்
அன்பே என்றன் வழியென்றும்
   அற்றேன் வாழ்க்கை பிறர்வாழ!                  2

என்றன் வாழ்க்கை இயல்பறிந்தார்
   என்றன் உள்ளப் பொருளுணர்ந்தார்
இன்றும் இல்லை இனியுமில்லை
   என்னும் நிலைமை வாராது
நன்றே உலக நலன்கருதி
   நலமே விளைக்கும் செவியுள்ளார்
பொன்றும் துணையும் வாழ்ந்திருப்பார்
   புவியில் புனிதர் பேறுபெற்றே
அன்றும் இன்றும் எப்பொழுதும்
   அறமும் பொருளும் நனிவிளக்கி
அகிலம் காக்கும் இலக்கியத்தை
   அள்ளிப் பருகி நலம்வாழ்வோம்
கன்று தாயை மறப்பதில்லை
   கவிதை அறத்தை மறப்பதில்லை
கவிஞன் உலகை வழிநடத்திக்
   கடமை செய்தல் வாழ்வாகும்                     3

Sep 1, 2023

ஓ! ஏணியே!

ஓ! ஏணியே!
ஏன் நீயே
உன்னைக் குறைத்து மதிப்பிட்டு
உடைந்து போகிறாய்?

வாழ்வின் ஏற்றங்கள் எல்லாம்
வகைவகையாய் வந்துசேர
ஊற்றுப் பெருக்காய்
உடையன தருகிறாய்!

ஏணியென வாழ்ந்துவிட
ஏற்றுக்கொண்ட வாழ்விலே
ஆணியெனப் புதைந்துவிட்ட
ஆற்றலை எல்லாம்
வெளிக்கொணர்ந்து
மாற்றங்கள் பலவரினும்
மாறாதது ஏணியென
மார்தட்டுவதில்
மண்ணுக்கும் பயனில்லை

மாற்றத்தை ஏற்காத
வசதியான இடம்
சதியான இடம் என்பதை மறவாதே

எதிர்பார்ப்புகளால்
ஏமாற்றங்கள் ஏற்படுவது
இயற்கைதான்
எதிர்பாராமல்
என்னத்தை மாற்றிவிட முடியும்

மாற்றம் வேண்டுவார் மனத்தில்
குறிக்கோள் எனும் எதிர்பார்ப்பு வேண்டும்.

Aug 31, 2023

மடையுடைத்து வெள்ளம் வருமே!

கடைந்தவெணம் குடைந்தகுணம் நடைதளர்ந்த(து) எனவே
உடைந்தமனம் அடைந்தவினப் படைமறத்தல் தகுமோ?
இடையிடையே இணங்கமுடி யாதிருக்க ஏதோ
மடைபோட்டுத் தடுத்தாலும் உடைத்துவெளம் வருமே!

Aug 23, 2023

மூன்றாம் சந்திரயான்

தென்புலம் காணத் தெளிந்து தெளிந்து
இன்புளத் தோடு இறங்கிய சந்திரயான்!

***

அதோ பார்!
மூன்றாம் சந்திரயான்
அழகாய்த் தரை இறங்கியதை!

நிலவின் தென்துருவத்தை
வெற்றியோடு தொட்டது 
விளங்கொளிக் கதிர்வீசி!

***

நிலவே! நலமா?
சந்திரயான் எனும் எந்திரன் யான்
வந்திறங்கினேன் மூன்றாம் தலையினன்

நீ சுற்றிவரும் தாய்ப் பூவுலகின்
பெருமக்கள் பரவலுடை
இந்தியாவின் வேட்கை
என் வேட்கை

உன் தென்புலத்துத் துருவத்தைக்
காணாத பல கண்களின் வேணவா தீர்க்க
விவேகத்தோடு விரைந்து வந்தேன்

எத்தனை எத்தனை உள்ளங்கள்
கைகூப்பி வேண்டிக் கைதட்டிக் கொண்டாடுகின்றன

வரலாற்றுச் சிறப்புடைத்தாய்
வார்த்தெடுத்துச் சூழ்ந்தனர்
வளமிக்க இந்தியர்!

இனி,
பாட்டி சுட்ட வடையை
வாங்கித் தின்ன நேரில் வருவர்
நேர்த்திக் கடன் செலுத்த விரைதல் போல

***

Aug 22, 2023

அருஞ்செயலுக்குத் தேவை ஆர்வமே

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

ஆயிரம் உந்தல் இருந்தாலும்
   ஆர்வமி லாத செயலென்னின்
மாயிருள் போலக் கண்கட்டும்
   மடுவெனப் போகும் மாமலையும்
ஆயிரம் தடைகள் வந்தாலும்
   ஆர்வம்நி றைந்த செயலுக்குத்
தீயன தாரா(து) அதுவளரும்
   தெரிந்து செய்வீர் அருஞ்செயலே

Jul 17, 2023

காக்கைக்குச் சோறு!

வானத்து நிலா
காணாமல் போகட்டும்
வயிறாரச் சோறு கிடைக்கும்
காக்கைக்கு!

Jul 9, 2023

எண்ணம் தெளிவு பெறுக

இல்லை இல்லை இல்லை இல்லை
    உண்மை யாக இல்லையே
தொல்லை தொல்லை தொல்லை தொல்லை
    ஆசை கொள்ளல் தொல்லையே
எல்லை எல்லை எல்லை எல்லை
    இல்லை எல்லை யானவன்
மெல்ல மெல்ல மெல்ல மெல்ல
    நெஞ்சி லேற்று வாழவே!

எண்ணி எண்ணி எண்ணி எண்ணி
    ஏனு ழந்து நைகிறாய்
திண்ணி தென்ற உன்ற னுள்ளம்
    தெளிவி ழந்து பொங்கவே
மண்ணி லேது மன்ன லில்லை
    மண்ணை யன்றி உலகிலே
எண்ணி எண்ணி எண்ணி எண்ணி
    எண்ணம் தெளிவு பெறுகவே

என்ன மாயம் என்ன மாயம்
    இந்த மனித வாழ்வுதான்
என்ன வென்று ணர்ந்து தெளிதல்
    என்ன என்ன என்னவோ?
மின்னி மின்னி மின்னி மின்னி
    மின்னும் ஒளியி ழக்குமே
மன்னி மன்னி மன்னி மன்னி
    மண்ணில் நிலைப்ப தில்லையே

Jun 30, 2023

இளைய மகன் கதிர்வேலன்

முத்தங் கொடுத்தே முறைக்கும் சினமாற்றும்
முத்துச் சிரிப்பின் முதல்வனே - வித்தகனாய்
விந்தை மிகச்செய்யும் வேறு படுத்துமொரு
சிந்தைக் கதிர்வேல னே!
                      - தமிழகழ்வன் சுப்பிரமணி

வானீய மேலெழுந்து வா

விரும்பியன விட்டொழித்து வேறுசெயப் புக்கின்
பொருந்தாது போமன்றே பொய்யாய் - வருந்தாது
தேனீயின் வாய்ப்புக வாழ்க்கை வருந்தாது
வானீய மேலெழுந்து வா
                                  - தமிழகழ்வன்

Jun 29, 2023

கடனில் மூழ்கி...

குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா அவர்களின் மலரும் உள்ளம் என்னும் நூலில் சட்டை போட்ட குரங்கு என்னும் தலைப்பில் அமைந்த பாடலைப் படித்தபின் எழுதியது

இந்தக் குரங்கைப் போலவே
    இற்றை மனிதர் வாழ்விலே
கந்து வட்டிக் கடனிலும்
    கலக்க மூட்டும் கடனிலும்

மூழ்கிச் சிக்கித் தவிக்கிறார்
    மூளை யின்றித் திரிகிறார்
பாழ்கி ணற்றைப் பார்க்கிறார்
    பாதை மாறித் திரிகிறார்
                                 - தமிழகழ்வன்

Jun 14, 2023

ஓயாத சிந்தனைகள்

உள்ளுக்குள் ஓராயிரம்
ஓயாத சிந்தனைகள்
பாடாய்ப் படுத்தும்

நாட்டையா பிடிக்கப் போகிறேன்?
நாடகத்திலா நடிக்கப் போகிறேன்?
வேட்டைக்கா போகிறேன்?
வேதனையிலா வாடுகிறேன்?

இல்லை இல்லை எதுவும் இல்லை
எதுவு மில்லாத இந்த மனந்தான்
இத்துணைப் பாடு படுகிறது.

May 31, 2023

வெங்கடேசன் மாமாவின் பணி ஓய்வுப் பாராட்டு விழாவில் வாசித்த கவிதை

இன்னிசை மொழிபேசி
என்றென்றும் வாழ்த்தும்
மாணிக்க மாமணியே!
எங்கள் மாமா மணியே

மின்னியல் வளத்துறையில்
மின்னும் பணிசெய்த
மாணிக்க மாமணியே!

தொன்னூல் கலைகள்
தொட்டுத் தெளிந்து
தெருக்கூத்தும் சோதிடமும்
மின்னச் செய்கின்ற
மாணிக்க மாமணியே!

பன்னூ றாண்டுகள்
வையம் வாழ்த்த வாழியவே!
வேங்கடத்து ஈசனாய்
எங்கள் வெங்கடேசனார்
வளம்பல பெற்று
வாழிய வாழியவே!

May 2, 2023

விழியால் தென்றலை முத்தமிட்டவள்

கட்டுக் கடங்காத கன்னியே என்னுள்ளம்
மெட்டுக் கடங்காது வேவதேன் - பட்டுத்
தெறித்தநின் சேல்விழி தென்றற்கு முத்துப்
பொறித்ததோ மையிட்ட போது.

யாருடைய கட்டுப்பாட்டுக்கும் அடங்காத கன்னியே!

நீ உன்னுடைய மீன்போன்ற வடிவுடைய கண்களுக்கு மை தீட்டிக் கொண்டிருந்த போது, வந்து மோதிய தென்றலை உன் கண்கள் முத்தமிட்டனவோ?

என் உள்ளம் உன்னை நினைத்து இசைப் பாட்டின் மெட்டுக்கும் மயங்காது வெந்து தவிப்பதேன்?

Mar 16, 2023

ஏழு ஆண்டுகள் at opentext

கொடுமை யன்று கொடும்ஐ என்று
விடுமை இன்றி வினைசெய விழைந்தேன்
விளைந்தேன் விளைந்தேன் வளமொடு விளைந்தேன்
எண்ணிய பெறேஎன் என்றன் வாழ்வை
நுண்ணிதின் நோக்க அதற்குமேல் பெற்றேன்
ஏழ்நல் லாண்டுகள் என்னைத் தாங்கி
வாழ்வித்(து) இன்னும் எழுகவென்(று) ஊக்கும்
ஒன்றிய சொன்மை ஓபன் டெக்ஸ்டே!
ஒளிவும் மறைவும் இல்லா எழுத்தாய்த்
தெளிவுறு சிந்தை திகைப்புறு விந்தைத்
தகவல் தொழில்நுட்பம் தன்னில் தேர்ந்த
மிகவல் லமைகொள் விறுவிறு நிறுவனம்
எவ்வகை யானும் மகிழ்ச்சி ஒன்றே
செவ்விய கொள்கை செய்நலம் போற்றி
வாழ்த்து வேனே வாழ்த்து வேனே!

Feb 23, 2023

தமிழே!

மஞ்சள் குளிப்பாட்டி மையிட்டு முப்பாலும்
மிஞ்சப் புகட்ட மிகவளர்ந்தாய் - மஞ்சரையே
கொஞ்சிப் புகட்டுவோம் கொண்டாடிக் கொண்டாடி
நெஞ்சம் புகட்டுவோம் நீடு

Feb 19, 2023

தேவைப்படும்போது...

தேவைப் படும்போது தேடுவாய்! நீபிறர்க்குத்
தேவைப் படும்போது தேடப் படுவாய்!
உலகத்(து) இயக்கம் இதுவே இதுவே
பலகற்(று) அறிந்து பழக்கு

Jan 30, 2023

நேயக்காரி

நெஞ்சைப் பிழியும் நேயக் காரியே
மஞ்சள் பூசிய மாயக் காரியே

செஞ்சவளே செஞ்சவளே
சிவந்த கண்களால் செஞ்சவளே

மல்லிப் பூவின் வாசம்
மனத்தைப் மயக்கிப் பேசும்
சொல்லிச் சென்றாயே
சோகம் வென்றாயே

என்ன நினைப்போ
எப்படி நான் அறிவேன்
வண்ணச் சிலையே
வடிப்பவன் வந்தேனே

இருளான என்றன் நெஞ்சம்
பொருளான வெளிச்சம் கொஞ்சம்
மருளாதே மருளாதே
மாற்றிப் பேரொளி தருவாயே

முத்துமணியே முத்துமணியே
சற்று தணியே சற்று தணியே

கற்றுத் தருவாய் கற்றுத் தருவாய்
கனியக் கனியக் கற்றுத் தருவாய்

இன்னதென்று சொல்லாமல்
என்னவென்று அறிவேனோ
என்னை வென்ற உன்மொழியில்
என்னை மறந்து தவிப்பேனே

காலம் மாறும் கருத்துகள் மாறும்
காதல் மட்டும் மாறாது
வேதனை வேண்டாமே
போதனை ஏன்தானோ?

Jan 11, 2023

நண்பன் புகழேந்தி - பிறந்தநாள் வாழ்த்து

விரும்பிய யாவும் பெற்று
   விளக்கென விளங்குங் கோவாம்
கரும்பெனப் பேச்சில் நின்று
   கவியென விளங்கும் பேரான்
பெரும்படை வந்த போதும்
   பேறெனும் பொறுமை காத்துச்
சுரும்பெனச் சுறுசுறுப்பாய்ச்
   சுழற்றுவான் மட்டைப் பந்தே

கிள்ளி எறிவோம்

அள்ளி விடுதற்கோர் அளவில்லை வாய்வந்த
கள்ளச் சேதியெலாம் கணக்காக வடிவமைப்பார்
எள்ளி நகையாட ஏற்றமணிக் கருத்துகளைக்
கிள்ளி எறிவோமிக் கீழ்மையை அகற்றுதற்கே

Jan 10, 2023

மொழிபெயர்ப்பு

காணவில்லை மாயமானாரே
நம்ம சிவா
கைலாச ஊரு சென்றாரே
கொடுப்பதைக் கொடுங்கள்
விடுவதை விடுங்கள்
கையைக் கொடுத்துவிட்டு ஓடிவிட்டாரே (காணவில்லை)

ஆகாயம் மேலே இட்டாரே
நம்ம சிவா
பாதாளம் கீழே விட்டாரே
நடுவில் இந்த பூமியை
தோணிபோல மிதக்கவிட்டாரே (காணவில்லை)

காண தந்த மாய வாதனு (கன்னடப் பாடல்)