Jan 30, 2022

திருமுருகாற்றுப்படை - பகுதி 5

புலவர்: ‘அது மட்டுமன்று…’ என்றால் வேறு எங்கெல்லாம் திருமுருகப்பெருமான் உறைகிறார் ஐயனே?

நக்கீரர்: சொல்கிறேன் புலவரே! திருப்பரங் குன்றத்தில் உறையும் திருமுருகப் பெருமான் அடுத்து எங்குச் செல்வார் தெரியுமா?

புலவர்: ஆகா! கேட்க ஆவலாக உள்ளேன்.

நக்கீரர்: திருமுருகப் பெருமான் வீற்றிருக்கும் யானையைப் பற்றி அறிவீரோ?

புலவர்: யானையின் மீது வீற்றிருக்கிறாரா? சொல்லுங்கள் ஐயனே!

நக்கீரர்: திருமுருகப்பெருமான் வீற்றிருக்கும் ஆண் யானை மிகுந்த வேகத்துடன் நடக்கும் நடையினைக் கொண்டு கடுமையாக வீசும் காற்றைப் போன்று விரைவாகச் செல்லக் கூடியது; யமனைப் போன்று தடுப்பதற்கு அரிதான வலிமை உடையது.

புலவர்: அப்பப்பா. அவ் யானையின் வலிமையும் வேகமும் போற்றற்குரியது.

நக்கீரர்: அது மட்டுமா… அதன் அழகைக் கேளீர். கூர்மையான முனையை உடைய அங்குசம் குத்துவதால் மத்தகத்தில் ஏற்பட்ட வடுவினை உடையது; புகர் எனப்படும் செம்புள்ளிகளை உடைய நெற்றியை உடையது; அசையும் நெற்றிப் பட்டத்தையும், பொன்னாலான வாடாத மாலையினையும், இரு பக்கங்களிலும் தாழ்ந்து தொங்குகின்ற மணியானது மாறி மாறி ஒலிக்கின்ற ஒலியினையும் உடையது.

புலவர்: அழகோ அழகு! கண்முன்னே காட்சிகள் விரிகின்றன. மேலும் சொல்லுங்கள் ஐயனே!

நக்கீரர்: தாமம், முகுடம், பதுமம், கிம்புரி, கோடகம் எனப்படும் ஐவேறு வகையில் அலங்கரிக்கப்பட்டு, மின்னலைப் போன்ற ஒன்றுக்கொன்று நிறத்தால் மாறுபடும் மணிமுடியுடன் அவருடைய திருமுடி காட்சியளிக்கின்றது. ஒளி பொருந்திய பொன்னால் ஆகிய 'மகரக்குழை' வடிவில் அமைந்த காதணிகள் தொலைதூரத்தில் உள்ள நிலமெங்கும் ஒளி வீசும் சந்திரனைச் சூழ்ந்துள்ள விண்மீன்களைப் போல ஒளி வீசி விளங்குகின்றன.

புலவர்: அடடா! அவருடைய மணிமுடியின் அழகும் மகரக் குழையின் அழகும் கண்கொள்ளாக் காட்சி!

நக்கீரர்: குற்றம் இல்லாத நோன்போடு தாம் மேற்கொண்ட செயல்களை நிறைவு செய்யும் அடியார்களின் மனத்தில் பொருந்தித் தோன்றும் ஒளிமிக்க நிறமுடையவர் திருமுருகப்பெருமான்.

புலவர்: அவருடைய ஆறு திருமுகங்களும் மலர்ந்திருக்கும் காரணம் அறிய வேண்டுகிறேன் ஐயனே!

நக்கீரர்: சொல்கிறேன் புலவரே!

1. உலகத்தைச் சூழ்ந்துள்ள மிகுதியான இருள் நீங்கி, அவ்வுலகம் குற்றம் இல்லாது விளங்கும் பொருட்டுப் பல கதிர்களை உடைய கதிரவன் தோன்றுவதற்குக் காரணமாய் விளங்குவது ஒரு திருமுகம்.

2. அன்பர் வேண்டிய வரங்களை அவர்களுக்கு அன்புடன் மகிழ்ந்து வழங்குவது மற்றொரு திருமுகம்.

3. அந்தணர்கள் தம் மரபு வழியில் மந்திரங்களை ஒலித்து இயற்றுகின்ற வேள்விகளை ஏற்று மகிழ்வது மற்றொரு திருமுகம்.

4. எந்த நூல்களும் ஆராய்ந்து உணர்த்த இயலாத மெய்ப்பொருளை, அனைத்துத் திசைகளையும் தன் ஒளியால் விளக்கும் திங்களைப் போல, முனிவர்களுக்கு உணர்த்தி விளக்குவது மற்றொரு திருமுகம்.

5. பகைவரைப் போரில் கொன்று அழித்துக் கள வேள்வியை இயற்றச் செய்வது மற்றொரு திருமுகம்.

6. பூங்கொடி போன்ற இடையும் இளமையும் உடைய குறவர் மகள் வள்ளியுடன் மகிழ்ச்சி அடைவது மற்றொரு திருமுகம்.

புலவர்: அடடா! ஒளி தருவது, அன்பர்க்கு அருள்வது, வேள்வி காப்பது, ஞானம் உணர்த்துவது, வீரம் விளைவிப்பது, வள்ளியோடு மகிழ்வது.

நக்கீரர்: ஆம்… அவருடைய ஆறு திருமுகங்களும் அவ் ஆறு தொழில்களை முறையாக நடத்துவதற்கு ஏற்ப அழகும், பெருமையும், ஒளியும், வலிமையும் பொருந்தியவர். அவருடைய மார்பில் அழகிய சிவந்த மூன்று வரிகள் உள்ளன. அவருடைய நிமிர்ந்த தோள்கள், ஒளி பொருந்திய வேலினை எறிந்து பகைவர்களின் மார்பைப் பிளக்கின்ற ஆற்றல் உடையன.

புலவர்: அருமை ஐயனே! அவருடைய பன்னிரு கைகள் என்ன செய்கின்றன?

நக்கீரர்: அதைத்தான் சொல்ல வருகிறேன் புலவரே!

1. ஒரு கை முத்திப் பேற்றினைப் பெற்று வானுலகம் செல்லும் முனிவர்களைக் காத்து ஏந்திய வண்ணம் உள்ளது.

2. ஒரு கை இடுப்பினைச் சார்ந்து விளங்குகின்றது.

3. ஒரு கை அழகிய செந்நிற ஆடையால் அலங்கரிக்கப் பெற்ற தொடையைச் சார்ந்து உள்ளது.

4. ஒரு கை யானையை அடக்குவதற்குரிய அங்குசத்தைச் செலுத்திய வண்ணம் உள்ளது.

5. ஒரு கை கேடயத்தைத் தாங்கிய வண்ணம் உள்ளது.

6. ஒரு கை வேற்படையினை வலப்பக்கம் நோக்கிச் சுழற்றிய வண்ணம் உள்ளது.

7. ஒரு கை அடியார்களுக்குத் தத்துவங்களை உணர்த்திய வண்ணம் மோன முத்திரையோடு மார்பின் மீது விளங்குகின்றது.

8. ஒரு கை மார்பில் புரளும் மாலையைச் சார்ந்துள்ளது.

9. ஒரு கை 'களவேள்வி தொடங்குக' என்னும் சைகை காட்டுகின்றது.

10. ஒரு கை கள வேள்வியின்போது ஓதப்படும் பாடலுக்கு ஏற்ற வகையில் இனிய ஓசையை உண்டாக்கும் மணியானது மாறி மாறி ஒலிக்கச் செய்கின்றது.

11. ஒரு கை வானத்திலிருந்து மேகமானது மிக்க மழையைப் பொழியுமாறு செய்கின்றது.

12. ஒரு கை வானுலக மகளிர்க்குத் திருமண மாலையைச் சூட்டுகின்றது.

புலவர்: அப்பப்பா. திருமுருகப்பெருமானின் பன்னிரு கைகளும் செய்யும் பணியைக் கேட்கவே மலைப்பாக இருக்கிறது.

நக்கீரர்: வானுலகத்தாரின் 'துந்துபி' போன்ற இசைக் கருவிகள் முழங்கவும், திண்ணிய வயிரம் வாய்ந்த ஊதுகொம்பு மிகுதியாக ஒலிக்கவும், வெண் சங்கு முழங்கவும், அச்சம் தரும் இடியைப் போன்ற ஓசையுடைய முரசுடன், மயில் அகவவும் வெற்றிக் கொடியின் கோழி கூவவும், ஆண் யானையின் மீதேறி வானின்வழி விரைவாகச் சென்று உலக மக்கள் போற்றும் உயர்ந்த புகழை உடைய திருச்சீரலைவாய் என்னும் திருச்செந்தூர் நகர் வந்து சேர்தலும் அவருடைய நிலையான பண்பேயாகும்; அதுமட்டுமன்று…

(தொடரும்...)

Jan 23, 2022

திருமுருகாற்றுப்படை- பகுதி 4

நக்கீரர்: தேவ மகளிர் பூச்சூடி ஆடியதைக் கண்டோம். போர்க்களத்தில் பேய்மகளிர் ஆடுவது பற்றித் தெரியுமோ?

புலவர்: பேய் மகளிரா? யார் அவர்கள்?

நக்கீரர்:  அவர்கள் எண்ணெய்ப் பசையின்றி உலர்ந்த பரட்டைத் தலைமுடியுடையவர்கள்; வரிசையற்ற பற்களும் பிளந்த பெரிய வாயும், பிறரை அச்சுறுத்தும் வகையில் சுழலும் பச்சை நிறக் கண்களும் உடையவர்கள்; சொரசொரப் பான வயிறும், காண்பவர்கள் அஞ்சும்படியான நடையும் உடையவர்கள்; பெரிய ஆந்தையைக் குண்டலமாகக் கொண்ட காதணி அணிந்த காதுகளை உடையவர்கள்; மார்பின் மீது வீழ்ந்து வருத்துகின்ற தொங்கும் பாம்பைக் கயிறாகக் கொண்டவர்கள்.

புலவர்: அப்பப்பா. எண்ணிப்பார்க்கவே மிகவும் அச்சமாக உள்ளதே. அவர்கள் என்ன செய்வார்கள்?

நக்கீரர்: போர்க்களத்தில் வீழ்ந்து மாண்ட அசுரரின் தலையைக் கிள்ளி எடுத்து அதன் கண்ணைத் தோண்டித் தினபார்கள். அப்படி உண்பதனால் கூரிய நகங்களைக் கொண்ட விரல்களில் அரத்தம் பூசிக் கொண்டிருக்கும். அது மட்டுமன்றி நாற்றமுடைய அத்தலையைத் தன் பெரிய கைகளில் ஏந்தியவாறு பிறருக்கு அச்சம் விளைவிக்கும் வகையில் நடந்து செல்வார்கள்.

புலவர்: அவர்கள் அப்படிச் செய்வது ஏன்? 

நக்கீரர்: துணங்கைக் கூத்து ஆடுவதற்காக.

புலவர்: துணங்கைக் கூத்தா? அப்படி என்றால் என்ன? 

நக்கீரர்: அசுரர்கள் போன்ற தீயவர்களுக்கு அச்சம் விளைவிக்கும் வகையில் அமைவது பேய் மகளின் துணங்கைக் கூத்து. தன் தோளை அசைத்தவாறு அசுரர்களின் நிணத்தைத் தின்ற வாயுடன் துணங்கைக் கூத்து ஆடுவாள் அவள். 

புலவர்: அவர்கள் ஏன் துணங்கைக் கூத்து ஆட வேண்டும்? 

நக்கீரர்: முருகப் பெருமான் போர்க்களத்தில் அசுரரை வீழ்த்தி அடைந்த வெற்றியைப் புகழ்ந்து பாடிக் கொண்டாடுவதற்காக. 

புலவர்: நக்கீரரே! என்னை மிகுந்த அச்சமடையச் செய்தீர். போர்க்களக் காட்சியை எண்ணிப் பார்க்கும்போது மிகவும் அச்சமாக உள்ளது. 

நக்கீரர்: இன்னும் சொல்கிறேன் கேளுங்கள். குதிரைத் தலையோடு கூடிய பெரிய மனித உடல் போன்ற உருவம் எடுத்துக் கடலிற் புகுந்து ஒரு மாமரம் போல் நின்றான் அசுரர்களின் தலைவனாகிய சூரபன்மன். அவ்வாறு மாமரமாய் நின்ற சூரபன்மனை, அறுவகை வடிவங்களெடுத்து அச்சுறுத்தி அவனுடைய ஆற்றலை அடக்கி, இரண்டாகப் பிளந்து கொன்ற குற்றமில்லாத வெற்றியைப் பெற்றுப் புகழ்பெற்ற சிவந்த வேலும் திருமேனியும் உடையவன் திருமுருகப் பெருமான்.

புலவர்: அடடா. திருமுருகப் பெருமானின் வெற்றி போற்றத் தக்கது.

நக்கீரர்: ஆம் புலவரே! அத்தகு திருமுருகப் பெருமானின் சிவந்த திருவடிகளை அடைவதற்குரிய செம்மையான உள்ளத்துடன் நன்மைகளையே செய்யும் கொள்கையுடன் மெய்ப்பொருளை உணர்ந்து அவனைக் காணச் செல்ல விரும்பினால் நீர் கருதிய வினையின் பயனை இப்போதே பெறுவாய்.

புலவர்: ஆம் ஐயனே! அம்முருகனைக் காண விரும்பி இவ்விடம் விட்டு நீங்கும் முடிவோடு வந்துள்ளேன். அவன் அருளைப் பெற எங்குச் செல்ல வேண்டும் எனக் கூறுவீர்.

நக்கீரர்: முருகன் உறையும் இடங்கள் ஒன்றா? இரண்டா? சொல்கிறேன் கேளுங்கள்.

மதுரை மாநகரின் நுழைவாயிலில், போரை விரும்பி மிக உயரமான நெடிய கொடிகளின் அருகில் பந்தும் பாவையும் வரிந்து கட்டப்பட்டுள்ளன. அவற்றை அறுத்துப் போரிட முன்வருவோர் யாரும் இல்லாமையால் அவை தொங்கிய வண்ணம் உள்ளன. அம் மாநகரின் கடை வீதிகளில் திருமகளே வீற்றிருப்பது போல செல்வம் கொழிக்கின்றது. மாளிகைகள் அமைந்திருக்கும் வீதிகளும் அங்கு உள்ளன. 

அந்நகரின் மேற்குத் திசையில் அமைந்திருக்கும் அகன்ற நெல் வயல்களில் முட்கள் பொருந்திய தண்டுகளை உடைய தாமரை மலர்கள் மீது வண்டுகள் இரவில் உறங்கும். பின்னர் வைகறையில் தேன் மணம் கமழும் நெய்தல் மலர் மீது மொய்த்திருக்கும். கதிரவன் தோன்றிய பின்னர் மலையின் சுனைகளில் கண்களைப் போல் பூத்துள்ள விருப்பம் தரும் மலர்களின் அருகே சென்று ரீங்காரமிடும். அத்தகு அழகிய இடமாகிய திருப்பரங்குன்றத்தின் மீது திருமுருகப் பெருமான் மனம் விரும்பி அமர்ந்துள்ளார். அங்கே சென்று காணலாம். அதுமட்டுமன்று…

Jan 15, 2022

திருமுருகாற்றுப்படை - பகுதி - 3

நக்கீரர்: கடம்பன் எனப் பெயர் பெற்ற முருகன், தலையில் சூடிக் கொள்ளும் கண்ணி (மாலை) யாது தெரியுமோ? அஃது எங்கிருந்து வருகிறது தெரியுமோ

புலவர்: நக்கீரரே! கேட்க ஆவலாக உள்ளேன். கூறுங்கள்.

நக்கீரர்: அதோ பாருங்கள். அந்த மிக உயரமான மலையில் பெரிய மூங்கில்கள் வளர்ந்துள்ளன. அம்மலையின் வளத்தை அறிந்தவருக்கே அந்தக் கண்ணியின் அருமை புரியும்.

புலவர்: ஓ... அப்படியா! அம்மலையின் சிறப்பு யாது?

நக்கீரர்: அம்மலையில் வாழும் தேவ மகளிர் எப்படிப்பட்டவர் தெரியுமோ?

புலவர்: அவர்கள் எப்படிப்பட்டவர்கள்?

நக்கீரர்: அம்மகளிர் செம்மையான சிவந்த சிறு பாதங்களையும், உறுதியான திரண்ட கால்களையும், நுட்பமாக வளைந்துள்ள இடையையும், மூங்கிலையொத்த தோள்களையும் உடையவர்கள். 'கிண் கிண்' என்று எப்போதும் ஒலித்துக் கொண்டே இருக்கும் கிண்கிணியை அவர்கள் கணுக்காலில் அணிந்திருக்கின்றனர்.

செயற்கையான சிவப்புநிறக் குழம்பில் தோய்க்கப் படவில்லையாயினும் 'இந்திர-கோபம்' எனப்படும் ஒருவகை சிவப்பு நிறப் பூச்சியின் நிறத்தை ஒத்த செந்நிறப்பூக்கள் போன்ற வடிவங்கள் பொறிக்கப் பெற்ற ஆடைகளை அணிந்திருக்கின்றனர். பல்வேறு வகை மணிகளை ஏழு வடங்களாகக் (சரங்களாகக்) கோக்கப்பட்ட மேகலையை இடையில் அணிந்திருக்கின்றனர்.

இயல்பிலேயே அழகுடைய அவர்கள் உயர்தரப் பொன்னால் செய்யப்பட்ட அணிகலன்களையும் அணிந்திருக்கின்றனர். நெடுந்தூரத்திலிருந்து பார்க்கும்போதும் ஒளி பொருந்திய குற்றமற்ற மேனியழகுடன் தோற்றம் அளிக்கின்றனர்.

‘நல்ல நெய்ப்புடைய கூந்தல்’ என்று தோழியர் புகழ்ந்துரைக்கும் கூந்தலை உடையவர்கள். சிவந்த காம்பினை உடைய சிறிய வெட்சிப் பூக்களைக் கூந்தலின் நடுவே வைத்துப் பசுமையான குவளை மலர்களின் இதழ்களைக் கிள்ளி அந்தக் கூந்தலில் இட்டிருக்கின்றனர்.

மேலும் 'சீதேவி', 'வலம்புரி' எனப்படும் தலைக் கோலங்களை வைத்திருக்கின்றனர். அழகிய நெற்றியில் திலகமிட்டிருக்கின்றனர். அதனால் நறுமணம் பொருந்திய அந்நெற்றியில் வாயைத் திறந்திருக்கும் சுறா மீனின் வடிவுடைய தலைக்கோலத்தை வைத்திருக்கின்றனர்.

முற்ற முடித்த குற்றமற்ற கொண்டையில் பெரிய குளிர்ந்த சண்பகப் பூவைச் செருகியிருக்கின்றனர். கரிய புற இதழையும் உள்ளே துளையையும் உடைய மருதின் ஒள்ளிய பூங்கொத்துகளை அதன் மீது இட்டிருக்கின்றனர். கிளையிலிருந்து தோன்றி நீரின் கீழ் அழகாய் விளங்கும் சிவந்த அரும்புகளால் கட்டப்பட்ட மாலையை அந்தக் கொண்டையில் வளைய வைத்திருக்கின்றனர்.

இரு காதுகளின் பின்புறத்தில் அசோக மரத்தின் ஒளியுடைய தளிர்களை இட்டுச் செருகித் தொங்க விட்டிருக்கின்றனர். அத்தளிர்கள் நுட்பமான பூணினை அணிந்த மார்பின் மீது அசைந்து கொண்டிருக்கும்.

வயிரமுடைய சந்தனக் கட்டையைத் தேய்த்துப் பெற்ற நறுமணமிக்க சந்தனக் குழம்பினை, மருத மரத்தின் மஞ்சள் நிறப் பூவினை அப்பியது போன்று, கோங்கினது அரும்பினை யொத்த இளமுலையில் அப்பி, அச்சந்தனக் குழம்பின் ஈரம் புலர்வதற்கு முன்பே விரிந்த வேங்கை மலரின் நுண்ணிய மகரந்தத் தாதினையும் அப்பி, அதன்மேல் விளாமரத்தின் சிறிய தளிர்களைக் கிள்ளித் தெறித்திருக்கின்றனர். இத்தகு கோல முடையவர்கள் அவர்கள்.

புலவர்: அடடா! அந்த மலை பலவகையான மரங்களையும் அவற்றின் மலர்களையும் மற்றவற்றையும் தாங்கி மிகுந்த வளமுடையதாக விளங்குகிறதே. அவ்வளவு அணிகளையும் மலர்களையும் சூடி அம்மகளிர் அழகுக்கு அழகாய்க் காட்சி அளிப்பாரே! அவர்கள் அங்கு என்ன செய்கிறார்கள்?

நக்கீரர்: ‘கோழிக்கொடி நீண்ட காலம் வாழ்வதாக' என்று வாழ்த்தி, மலைகள்தோறும் எதிர் ஒலி உண்டாகும்படி அவர்கள் ஒருங்கே கூடிப் பாடி ஆடுகின்றனர்.

புலவர்: கோழிக்கொடி என்பதென்ன?

நக்கீரர்: கோழியின் உருவம் வரையப்பட்ட வெற்றிக்கொடிக்குக் கோழிக்கொடி என்று பெயர்.

புலவர்: அவர்கள் ஏன் கோழிக்கொடியை வாழ்த்திப் பாடி ஆடுகிறார்கள்?

நக்கீரர்: அது போரில் வெற்றி கொள்ளும் திருமுருகப் பெருமானின் கொடியாகும்.

புலவர்: நன்று நன்று. அம்மலையின் சிறப்புகளை இன்னும் சொல்லுங்கள் ஐயனே

நக்கீரர்: அம்மலை மிக உயரமாக வளர்ந்து நிற்கும் மரங்களையுடையது. மரம் ஏறுவதில் வல்ல குரங்குகளும் ஏறுவதற்கு அறியாத வகையில் அமைந்திருப்பது. வண்டுகளும் மொய்க்க இயலாத அந்த அதிக உயரத்தில் செங்காந்தள் மலர்கள் மலர்ந்திருக்கும்.

புலவர்: அடடா. கண்கொள்ளாக் காட்சி. நன்று நன்று. முருகப் பெருமான் தலையில் சூடிக் கொள்ளும் கண்ணியைப் பற்றி இன்னும் சொல்லவே இல்லையே.

நக்கீரர்: அதைப் பற்றித்தான் கூறுகிறேன் புலவரே! தீயைப் போன்ற நிறமுடைய அந்தச் செங்காந்தள் மலர்களால் ஆகிய குளிர்ச்சி பொருந்திய பெரிய மாலையைத் தலையில் சூடிக்கொள்பவன் திருமுருகப் பெருமான்.

புலவர்: நன்றி ஐயனே! அருமை அருமை! முருகனின் கையில் இருக்கும் வேலைப் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்கள்.

நக்கீரர்: பாறைகளை உடையதும், முற்றும் பனியாக உறைந்திருப்பதும் ஆகிய கடலின் உள்ளே புகுந்து, அக்கடலின் உள்ளே மாமரமாய் ஒளிந்து நின்ற அசுரர்களின் தலைவனாகிய சூரபன்மனைக் கொன்றது அந்த நீண்ட வேல். அஃது இலையைப் போன்ற ஒளி பொருந்திய தலைப் பாகத்தை உடையது.

புலவர்: நன்றி ஐயனே!

Jan 9, 2022

திருமுருகாற்றுப்படை - பகுதி - 2

நக்கீரர்: புலவரே! இன்னும் கேட்பீர். பேரழகும் வலிமையும் வாய்ந்த எம்பெருமானின் திருவடிகள் தம்மைச் சார்ந்தவரைத் தாங்கிக் காத்தருள்கின்றன.

புலவர்: அத்திருவடிகளே முத்திப்பேறாக விளங்குவன அன்றோ?

நக்கீரர்: ஆம். அவனையே அடிபணிதலன்றி உலகில் வேறு பேறும் வேண்டுமோ?

புலவர்: முருகனின் கால்களைப் பற்றிச் சொன்னீர். கைகளைப் பற்றிச் சொல்லுங்கள் ஐயனே!

நக்கீரர்: ஆம்.. அவனுடைய கால்களையே பற்றிக் கொண்டவன் ஆதலால் கால்களைப் பற்றிச் சொன்னேன். அவனுடைய கைகள் எதைப்பற்றும் தெரியுமோ? அவை பகைவரைப் பற்றி அழிப்பதிலேயே விருப்பம் கொள்ளும். அவை கார்காலத்து முகில்கள் ஒன்றோடொன்று இடித்துக்கொண்டு எவ்வளவு ஆற்றலை வெளிப்படுத்துமோ அவ்வளவு வலிமை பொருந்தியவை.

புலவர்: அப்பப்பா... அவன் யாருடைய கணவன்?

நக்கீரர்: குற்றமற்ற கற்பினையும் ஒளி பொருந்திய நெற்றியினையும் உடைய தெய்வயானை அம்மையின் கணவன் அவன்.

புலவர்: அம்மையை வணங்குகிறேன்.

நக்கீரர்: முருகனுக்குக் கடம்பன் என்னும் பெயரும் உண்டு. ஏன் தெரியுமா?

புலவர்: சொல்லுங்கள் நக்கீரரே.

நக்கீரர்: கடல்நீரை முகந்து கருவுற்ற முகிற் கூட்டம், இடியும் மின்னலுமாய் ஏற்படுத்தும் பேரொளி பொருந்திய வானத்திலிருந்து மாபெரும் மழைத்துளிகளைப் பொழியுமல்லவா?

புலவர்: ஆம்... கார் என்னும் மழைப் பருவத்தின் தொடக்கத்தில் அது பெருமழையாய்ப் பொழியும்.

நக்கீரர்: அத்தகு காலத்தில் முதலில் பெய்யும் மழையைத் 'தலைப்பெயல்' என்போம் அல்லவா? அந்த முதல் மழையால் காடுகளில் குளிர்ச்சியும் நறுமணமும் ஒருசேரப் பொருந்தியிருக்கும்.

புலவர்: எப்படி?

நக்கீரர்: மழையில் தழைத்து வளரும் தாவரங்களின் தழைமிகுதியால் குளிர்ச்சி பொருந்தியிருக்கும். மலர்களின் மிகுதியால் நறுமணம் பொருந்தியிருக்கும்.

புலவர்: அடடா… முதல் மழையால் செம்மை பொருந்திய காடு. நினைக்கவே மனம் குளிர்கிறது.

நக்கீரர்: அத்தகு முதல் மழையால் இருள் போன்று அடர்த்தியாகத் தழைத்து வளர்வது செங்கடம்பு மரம்.

புலவர்: ஆமாம்… இம்மரம் கார்ப்பருவத்தில் மலரும் இயல்புடையததாதலால் ‘கார்க்கடம்பு’ என அழைக்கப்படும்.

நக்கீரர்: ஆம். அம்மரம் பருமனான அடிப்பாகத்தை உடையது. அம்மரங்களில் மலரும் கடம்ப மலர்கள் சிவப்பு நிறம் உடையன. அவை தேர்ச்சக்கரத்தைப் போன்ற வட்ட வடிவுடையன. குளிர்ச்சி பொருந்தியன. அத்தகு மலர்களால் தொடுக்கப்பட்ட கடம்ப மாலை புரளுகின்ற திருமார்பினன் முருகன். அதனால் அவனுடைய மற்றொரு திருப்பெயர் 'கடம்பன்' என்பதாகும்.