Jan 9, 2022

திருமுருகாற்றுப்படை - பகுதி - 2

நக்கீரர்: புலவரே! இன்னும் கேட்பீர். பேரழகும் வலிமையும் வாய்ந்த எம்பெருமானின் திருவடிகள் தம்மைச் சார்ந்தவரைத் தாங்கிக் காத்தருள்கின்றன.

புலவர்: அத்திருவடிகளே முத்திப்பேறாக விளங்குவன அன்றோ?

நக்கீரர்: ஆம். அவனையே அடிபணிதலன்றி உலகில் வேறு பேறும் வேண்டுமோ?

புலவர்: முருகனின் கால்களைப் பற்றிச் சொன்னீர். கைகளைப் பற்றிச் சொல்லுங்கள் ஐயனே!

நக்கீரர்: ஆம்.. அவனுடைய கால்களையே பற்றிக் கொண்டவன் ஆதலால் கால்களைப் பற்றிச் சொன்னேன். அவனுடைய கைகள் எதைப்பற்றும் தெரியுமோ? அவை பகைவரைப் பற்றி அழிப்பதிலேயே விருப்பம் கொள்ளும். அவை கார்காலத்து முகில்கள் ஒன்றோடொன்று இடித்துக்கொண்டு எவ்வளவு ஆற்றலை வெளிப்படுத்துமோ அவ்வளவு வலிமை பொருந்தியவை.

புலவர்: அப்பப்பா... அவன் யாருடைய கணவன்?

நக்கீரர்: குற்றமற்ற கற்பினையும் ஒளி பொருந்திய நெற்றியினையும் உடைய தெய்வயானை அம்மையின் கணவன் அவன்.

புலவர்: அம்மையை வணங்குகிறேன்.

நக்கீரர்: முருகனுக்குக் கடம்பன் என்னும் பெயரும் உண்டு. ஏன் தெரியுமா?

புலவர்: சொல்லுங்கள் நக்கீரரே.

நக்கீரர்: கடல்நீரை முகந்து கருவுற்ற முகிற் கூட்டம், இடியும் மின்னலுமாய் ஏற்படுத்தும் பேரொளி பொருந்திய வானத்திலிருந்து மாபெரும் மழைத்துளிகளைப் பொழியுமல்லவா?

புலவர்: ஆம்... கார் என்னும் மழைப் பருவத்தின் தொடக்கத்தில் அது பெருமழையாய்ப் பொழியும்.

நக்கீரர்: அத்தகு காலத்தில் முதலில் பெய்யும் மழையைத் 'தலைப்பெயல்' என்போம் அல்லவா? அந்த முதல் மழையால் காடுகளில் குளிர்ச்சியும் நறுமணமும் ஒருசேரப் பொருந்தியிருக்கும்.

புலவர்: எப்படி?

நக்கீரர்: மழையில் தழைத்து வளரும் தாவரங்களின் தழைமிகுதியால் குளிர்ச்சி பொருந்தியிருக்கும். மலர்களின் மிகுதியால் நறுமணம் பொருந்தியிருக்கும்.

புலவர்: அடடா… முதல் மழையால் செம்மை பொருந்திய காடு. நினைக்கவே மனம் குளிர்கிறது.

நக்கீரர்: அத்தகு முதல் மழையால் இருள் போன்று அடர்த்தியாகத் தழைத்து வளர்வது செங்கடம்பு மரம்.

புலவர்: ஆமாம்… இம்மரம் கார்ப்பருவத்தில் மலரும் இயல்புடையததாதலால் ‘கார்க்கடம்பு’ என அழைக்கப்படும்.

நக்கீரர்: ஆம். அம்மரம் பருமனான அடிப்பாகத்தை உடையது. அம்மரங்களில் மலரும் கடம்ப மலர்கள் சிவப்பு நிறம் உடையன. அவை தேர்ச்சக்கரத்தைப் போன்ற வட்ட வடிவுடையன. குளிர்ச்சி பொருந்தியன. அத்தகு மலர்களால் தொடுக்கப்பட்ட கடம்ப மாலை புரளுகின்ற திருமார்பினன் முருகன். அதனால் அவனுடைய மற்றொரு திருப்பெயர் 'கடம்பன்' என்பதாகும்.

No comments:

Post a Comment