Jul 18, 2021

உள்ளமும் வளர்ச்சியும்

தமிழகழ்வன் சுப்பிரமணி

காப்பு
அப்பனே! அந்தமிழ் ஆர்வல! ஆக்குகின்ற
இப்பனுவல் ஏதும் இடருறாமல் - செப்பமாய்ச்
செய்ய வலனென்று சேதி உரைத்தலுக்(கு)
உய்யும் உயர்விதி கூறு

அவையடக்கம்
என்செய எண்ணியான் என்செய்கின் றேனோஒ
புன்செயல் எல்லாம் பொறுத்தருள்வீர் - நன்செயும்
புன்செயும் இந்தப் புவிமீதில் உண்டேமன்
இன்செயல் என்றேயேற் பீர்

நூல்
உலகம் உவப்ப உழலச் செயுமவ் வுயர்ந்தவனைப்
பலரும் புகழும் பகலவன் தன்னைப் பணிந்தமுதக்
கலவை எனவே கலந்த உயிர்களைக் காத்தருளும்
நிலவுல கத்தை நினைத்தியான் பொங்கி மகிழ்பவனே! 1

மகிழ்ச்சி நிறைந்து மனத்தினில் ஓங்கி வளர்வதற்கே
பகிர்ந்து பலவுயிர் ஓம்பிக் கருத்தொடு வாழ்குவமே
அகிலந் தனிலே அதுவே முறைமை அழிப்பதற்கே
திகிலைப் பரப்பும் திகைசெயல் எல்லாம் திருத்துவமே 2

திருந்தித் தெளிந்து திகழ்சொல் லுரைத்துத் திருத்துகவே
வருந்தி வகையாய் வடிவமைப் பாயே வளர்நலமும்
பொருந்திப் பெரிதுவக் கின்ற பெருமை யடைந்துலகில்
இருந்ததற் கான இனிய புகழை இயம்புதற்கே 3

இயம்புக சொற்கள் இனிமை தரவே இகழ்ச்சியெலாம்
நயம்புக மாறும் நலமே அருளுமிந் நானிலத்தில்
பயந்த பெருவெளிப் பாதை முழுதும் பயன்படற்கே
வியந்தளக் கின்ற விருப்பம் உடைத்தாய் ஒளிர்தரவே 4

ஒளிர்தரும் ஒண்மீன் உடனுழல் கோள்கள் ஒருவிதியால்
தெளிவுற வோங்கித் திகைக்க வைப்ப தறிகுவையோ
ஒளியும் இருளும் உளவே இலவே ஒருங்கிணைந்து
மிளிருமொன் றோடு சுழியம் எனவே வெளிப்படுமே 5

வெளிப்பா டுடைமை உளத்துக்கண் ணோடும் விளைவுகளைத்
தெளிவாய் எடுத்துத் திளைக்கச் செயுமத் திருவினையால்
ஒளிப்பா டுடைமையின் உண்மையும் இன்மையும் ஒருங்குவைத்துக்
களிப்பைத் தருவதன் காரணம் ஓர்க கருதிவைத்தே 6

வைத்த பெருவிதி மாபெருஞ் சட்டம் வகைவகையாய்ப்
பொய்த்து விடாது புலிபசுத் தோல்போர்த்த அக்கதையாய்
மெய்த்து விடாது வெள்ளறி வோடு விளங்குவதால்
உய்க்கும் வழியமைத் தோங்கி வளர்க்க உயிர்களையே 7

உயிர்களை நாடி உதவிகள் தேடி ஒருங்கிணைத்துப்
பயிர்களைப் போலே பதமாய்த் திருத்திப் பழக்குகின்ற
உயிர்த்தலை வன்றனை ஓர்ந்திவண் டேர்க ஒருவழியே
துயர்துடைக் கின்ற துணைவன் அவனே சுடர்விளக்கே 8

விளக்கொன்று வேண்டும் விடியல் நமக்கு விளக்குதற்கே
உளமிருந் தால்தான் உயர்வுக் கொருவாய் உருப்படுமே
களங்காண் ஒருவன் கருதிய யாவும் களமழிக்கா(து)
உளங்கொ ளொருவனாய் ஓங்கி வளர உயர்த்துகவே 9

உயர்த்துக உன்கை உலகமும் உன்கை ஒருவிதிசெய்
செயற்கையால் சேரழி வுக்கோர் முடிவைச் செயல்படுத்தி
இயற்கை யுடனே இயயைந்தநல் வாழ்வை இறையருள்வான்
உயர்வோ உழைப்பால் உணர்வாய் உணர்வாய் உலகினிலே 10

நூற்பயன்
உள்ளத் துறையும் உடைசிந் தனையெலாம்
வெள்ளத் திருத்தி வெளிக்கொணரப் - பள்ளங்
கடந்தேறும் நல்ல கனிவாழ்வு பெற்றுத்
தடமமைப்பீர் தாங்குதர ணிக்கு.

பைந்தமிழ்ச் சோலை - ஆசுகவிச் சுழல் 02

அமர்வு02 - சிற்றிலக்கியம்

தலைப்பு: நற்றமிழ் நான்மணிமாலை

காப்பு
நல்ல தமிழ்பற்றி நான்மணி மாலையிட
வல்லானே! வாழ்த்தி வணங்குவோம் - சொல்லால்
சுடச்சுடப் பாவியற்றத் தூணா யிருந்தே
தடங்கலின்றிப் பேரருள் தா!

அவையடக்கம்
ஆசு கவிச்சுழலாம் அந்தச்சூ றாவளியில்
பேசுதற்கு வந்தோம் பெருந்தகையீர் - தூசாம்யாம்
எங்கள் குறைபொறுப்பீர் ஏந்தலீர் பைந்தமிழாள்
செங்குரவீர் வாழ்க சிறந்து

1. தங்க மணியாரம் தமிழ்மீது சூட்டப்
பொங்குளத் தோடு பொதியில் வருகவே

2. கெழீஇய இன்பம் கேள்கா தளிக்கச்
செழீஇய உள்ளமொடு ஜெனிஅசோக் வருகவே

3. வடம்பிடித்துத் தமிழ்த்தேரை வழிநடத்திச் செல்ல
நடராசன் ஐயா நாடி வருகவே

4. நயாஅத் தோடு நற்பா நல்க
நியாஅஸ் மரைக்காயர் நேயமொடு வருகவே

நூற்பயன்
நன்மதி நாட்டம் நலமொடு தானீயும்
பொன்மதி யாந்தமிழ்ப் பேரிசைக்க - இன்பம்
பெருகிநல் வாழ்வளிக்கும் பேறு பலபெற்(று)
இருமையும் வாழ்வீர் இயைந்து.

Jul 17, 2021

அண்ணாமலையானே!

வான்கொண்ட கதிரவனும் வடிவழகு மதிநிலவும்
தான்கொண்ட இருகண்ணாய்த் தண்ணுதலில் ஒருகண்ணாய்
மீன்விழியாள் இடப்பாகம் மீதுறையும் மலையானே
நான்முகனும் திருமாலும் நயந்துணரா மலையானே

Jul 14, 2021

பண்ணால் அகமாற்றுவேன்

என்னதான் செய்வதிங்கே? ஏதுசெய் தாலுந்தான்
தன்னிறை வென்றொன்று தான்கொளா - மின்னலாய்
எண்ணங்கள் மாற்றி எடுத்ததெலாம் வேண்டுமெனில்
வண்ணங்கொள் வாழ்வா? வதை                                  1

வதைபடு நெஞ்சினன் வன்சொல்லைக் கேளா(து)
உதைபடு நாளா உழன்று - கதைமாறுங்
கானத்து வாசமாய்க் காட்டி நடப்பனோ
ஈனத்(து) இழிபிறப்பா யான்?                                            2

யான்செய்த பாவமென்ன யாமத்தும் துஞ்சாது
வான்கொள் நிலவோடு வாட்டத்தைத் - தான்பகிர்வேன்
தேனாம் இனியவளே தேனீயாய்க் கொட்டியதால்
ஊனடங்கிப் போனேன் உழன்று                                     3

உழன்றுழன்(று) ஓடாய் உடைந்தழும் உள்ளம் 
பழங்கதைகள் எல்லாஅம் பாழாய் - முழம்போட
வெற்றுக்கை வீசி வெறுக்கை வெறுத்தேனோ
பற்றுக்கோ(டு) இல்லாப் படி                                             4

படித்த படியான் படியான் எனையும் 
அடியன் எனவாக்கல் ஆமோ? - முடியா 
அடியா முழுதுண ராதார் அடைவேன் 
அடியை அறியா தவன்                                                         5

தவந்தாங்கி வாழ்ந்தேன் தனக்கு நிகரில்
எவரும் எனவிருந்தேன் இன்றும் - அவந்தாங்
ககமாய் நிகரிலேன் ஆனேனை இன்னும்
இகமாந் தழைக்கும் இனி?                                                 6

இனியொன்று செய்வேன் எனவென்று நன்றாய்
நனிமகிழச் சூழ்ச்சி நலமே - பனிக்கின்ற
கண்ணாள் படும்பார்வை காணாது நொந்தேனா
பண்ணால் அகமாற்று வேன்.                                          7

மாற்றுவேன் என்று மனமாறிச் சென்றறிந்தேன்
மாற்றங்கள் எல்லாம் மறையுமே - கூற்றமே
மாற்றரிய மாவிசையாம் மண்ணுயிர்க் கெல்லாஅம்
போற்றியுயிர்ப் பாக்கல் பொலிவு                                 8

பொலிவுடைய நெஞ்சிலும் போற்றுத லின்றி 
நலிவடையும் எண்ணம் நடத்தும் - வலிய
விதியின்பால் நாளை விழாஅது காப்பாய்
மதியின்பம் சேர்க்கும் வழி           9

வழியறி யாது வகைதெரி யாது
சுழியினின்(று) ஒன்று துலங்கத் - தொழில்நடத்திச்
செல்லவொரு தூண்டுகோல் தேடுக வெல்லும்வாய் 
இல்லையென்ப(து) இல்லையே என்       10