Dec 27, 2020

மணிக்குறள் - 26. பணத்தாசை விடு

செல்வம் நிலையாமை தேர்ந்தொழுகி வாழுதல்
பல்வகை இன்பம் தரும்                                  251

என்றும் முடிவிலா(து) இன்னுமின்னும் வேண்டுமெனும்
பொன்றுந் துணையும் புதைத்து                252

நன்றும் நலனிலவும் சீர்தூக்கிப் பாராமல்
என்றும் இழிவு தரும்                                        253

படுகுழியில் தள்ளும் பணத்தாசை வேண்டா
விடுத்து நலவழி வேண்டு                              254

வாழ்வை வளமாக்கும் என்பது போல்காட்டித்
தாழ்வுக்குத் தானாம் துணை                      255

ஒன்றா உறவுகள் ஓயாக் குழப்பங்கள்
நின்றாடும் உள்ள நிலை                                256

பொருள்சேர்க்கப் பாடுபடல் நன்றாம் பொருளோ
இருள்சேர்த்(து) ஒதுங்கி விடும்                    257

அறமறந்(து) ஆக்கும் அருஞ்செல்வம் நன்மை
அறமறந்(து) ஆக்கும் அழிவு                         258

ஒருநொடியில் போமந்த ஒன்றாத செல்வம்
வருந்துவதே வாழ்வின் பயன்                     259

பணத்தாசை விட்டொழிக்கப் பார்வை தெளிந்து
குணம்நாடும் இன்பம் கொடுத்து             260

Dec 20, 2020

மணிக்குறள் - 25. மதுவை மற

மயக்கும் மதுவை மறப்பாய் உறுதி
பயக்கும் மனத்தைப் படைத்து                      241

மானம் பறக்க மயங்கியென் சாதித்தாய்?
ஈனப் பிறவி இது                                                   242

நல்லுலகம் காண்பமென எண்ணி நரகமெனும்
கொல்லுலகம் காண்பாய் கொடிது             243

கல்லீரல் கெட்டுக் கடைவழிக்குக் கானாட்டும்
கல்லீர முங்காணாக் காடு                               244

தடுமாறி யுள்ளம் தடமாறச் செய்யும்
கொடுமாரி கொல்லுங் குடி                             245

சாலையும் சாக்கடையும் சந்தும் புரண்டுறங்குங்
காலையும் மாறாக் கலை                                246

மயக்கம் கலக்கம் மனத்தில் குழப்பம்
பயக்கும் அரியவாம் பண்பு                            247

இரவா பகலா இடியா மழையா
அரவா கொடியா அரிது                                     248

குளிரா வெயிலா குளமா கரையா
களிப்பா இலையே கலி                                      249

மதுவிரும்பித் தன்குடும்ப மானத்தைப் போக்க
மதுவிரும்பித் தானழிக்கும் மாண்பு            250

Dec 15, 2020

பைந்தமிழ்ச்செம்மல் திருவாளர் பே.வள்ளிமுத்து அவர்கள்



புதுக்கவி நாயகராம் - இவர்
புதுப்புதுக் கவிதையின் தாயகமாம்
மதுதரும் போதையைப்போல் - மனம்
மயக்கிடும் சிலேடையில் ஓங்கிடுவார்!
சீரொடு யாப்பறிந்தே - தனிச்
சீருடன் பாக்களை யாத்திடுவார்

என மரபு மாமணி பாவலர் மா.வரதராசனார் அவர்களால் பாராட்டப்பட்டவர், மிகச்சிறந்த மரபு பாவலர், புதுக்கவிதைப் புயல், சிலேடைச் சிங்கம், இயற்கையை வியந்து வியந்து பாடும் இன்னிசைக் கவிஞர் பைந்தமிழ்ச்செம்மல் திருவாளர் பே.வள்ளிமுத்து அவர்கள்.

அவர் தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் ஒன்றியம் கரடிகுளம் என்னும் ஊரில் 1982-ஆம் ஆண்டு பிறந்தார். முத்தாகத் தமிழ் பாடும் இவரைப் பெற்றோர் பேச்சிமுத்து – ராமுத்தாய் அவர்கள் மட்டுமன்று; இந்நாட்டு மக்களுந்தான்.

கல்வியின் மீது தீராத காதல் கொண்ட அவர் முதுகலைத் தமிழ் (M.A.), இளநிலைக் கல்வியியல் (B.Ed.), ஆய்வியல் நிறைஞர் (M.Phil) ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார். அவர் பள்ளியில் மாணவர்களுக்குத் தமிழைக் கற்பித்து இளைய சமுதாயத்தைத் தமிழ் எழுச்சியோடு வீறுகொண்டு எழச் செய்யும் தமிழாசிரியர் (எடப்பாடி ஒன்றியம் -சேலம் மாவட்டம்) ஆவார்.

தமிழ்ப்பணி: அவர் 13 வயதில் கவிதை இயற்றத் தொடங்கினார். பைந்தமிழ்ச்சோலை முகநூல் குழுமத்தில் பாவலர் மா.வரதராசனாரிடம் முறையாக யாப்பிலக்கணம் பயின்று மரபு கவிதை எழுதி வருகின்றார். பைந்தமிழ்ச் சோலையின் உறுப்பினராகவும், அதன் எண்பேராயத்தில் உறுப்பினராகவும், மரபு பாக்களைப் பயிற்று விக்கும் துணையாசிரியருள் ஒருவராகவும், தமிழ்க்குதிரின் துணையாசிரியராகவும் பொறுப்பேற்றுப் பல்வேறு தமிழ்ப் பணிகளை ஆற்றி வருகிறார்.

சிலேடைக் கவிஞரான அவருக்குப் பாவலர் மா.வரதராசனார் இயற்றிய சிலேடைக் கவிதை:

வள்ளியைச் சேர்த்ததால் வண்டமிழ் தேர்தலால்
தெள்ளிய சோலை திரிதலால் - உள்ள
முருகுதமிழ்ப் பாவி லுறைதலால் ஒன்றும்
முருகனும் வள்ளிமுத்து வும்!

இயற்கை இயம்பி: அவர் எப்போதும் கற்பனை ஓடையில் கவித்துவம் நிறைந்த மீன்களைப் பிடித்துக் கொண்டிருப்பவர். மண்மீன்களைச் சுவைப்பது மட்டுமன்றி விண்மீன்களையும் ஒரு கை பார்ப்பவர். காட்டருவிகளோடு கொஞ்சிக் குலவிக் கொண்டிருப்பவர். வயல்வெளிகளிலும், பூஞ்சோலைகளிலும் சுற்றித் திரியும் அவருக்கு முகிலும் மகிழ்மதியும் சொந்தப் பிள்ளைகள். இத்தகு இயற்கைக் கவிஞரின் இலக்கியப் படைப்புகளாவன:

 இரட்டுற மொழிதல் நூறு (சிலேடை வெண்பாக்கள்) என்ற இவரின் முதல் நூல் மதுரை உலகத் தமிழ்ச்சங்கத்தால் அரங்கேற்றம் செய்யப்பட்டது. இந்நூலைச் சிறந்த நூலாகத் தேர்வுசெய்து ஈரோடு தமிழ்ச் சங்கம் மூன்றாம் பரிசு வழங்கியது.

மேலும் அவர்,
 வள்ளிமுத்து கவித்துவம் 100
 காக்கைவிடு தூது
 இயற்கைப் பாவை
 பட்டாம்பூச்சி (சிறுவர் பாடல்)
ஆகிய நூல்களை இயற்றியுள்ளார். இவை அச்சில் உள்ளன. இவற்றோடு அணியில் ஆயிரம் என்ற நூலைத் தொடராக எழுதிவருகிறார்.

அவருடைய கவித்துவத்திற்கு ஒரு சான்று:

வாய்க்கால் வழிந்தோடும் நீர்வரப்பில் செந்தட்டான்
பூக்கால் மிதித்தருகம் புல்வளைக்கும் -நோக்குங்கால்
வில்வளைந்து நீர்கிழித்து மெல்லிசை தோற்றுவிக்க
நெல்வயலும் ஆடும் நெளிந்து...!

புரட்சிப் புயல்: ‘உலகம் சமநிலை பெற வேண்டும்; உயர்வு தாழ்விலா நிலை வேண்டும்’ என்னுமாறு உயரிய சமூகச் சீர்திருத்தக் கருத்துகளை நெஞ்சமெல்லாம் நிறைத்துக் கொஞ்சு தமிழில் உலகமெல்லாம் கொண்டு சேர்ப்பவர். இவரது பாடல்களில் புரட்சிக் கருத்துகள் வெடிக்கும். புரட்டுக் கதைகள் மடியும். காலத்திற்கேற்ற சிந்தனையைத் தூண்டும் கருக்கொண்ட கவிஞர் அவர். ஆம்.. அதற்கொரு சான்று:

சாதியென்னும் சாக்கடையில் பன்றிகளாய்ப் புரளுகின்ற
சாத்திரத்தை உடைக்கவேண்டும் எழுக..!
ஆதியிலே வந்துநின்ற கேடுகெட்ட மூடத்தனம்
அத்தனையும் தொலைக்கவேண்டும் திமிர்க..!
பாதியிலே புகுந்தெழுந்து பாவையரின் அறிவொடுக்கும்
பெண்ணடிமை ஒழியவேண்டும் வருக..!
நீதியொன்றால் நாட்டிலெங்கும் சமத்துவமே நிலைக்கவேண்டும்
நீயதற்குப் புரட்சிக்கவி தருக...!

பட்டங்களும் விருதுகளும்: அவர்
• பைந்தமிழ்ச்செம்மல்
• நற்றமிழாசான்
• சந்தக்கவிமணி
• விரைகவி வேந்தர்
• பைந்தமிழ்ச்சுடர்
• ஆசுகவி எனப் பல பட்டங்களைப் பைந்தமிழ்ச்சோலையில் பெற்றுள்ளார். மேலும்
• சிலேடைச் செம்மல் (ஈரோடு தமிழ்ச்சங்கம்)
• கவியொளி (ஈரோடு தமிழ்ச்சங்கம்)
• கவி காளமேகம் (உலகப் பாவலர் தமிழன்னைத் தமிழ்ப்பேரவை)
• வீறுகவி முடியரசனார் விருது
முதலிய பட்டங்களையும் விருதுகளையும் பெற்றுள்ளார்.

தொடர்ந்து மரபு கவிதையின் பல்வேறு யாப்பிலக்கியங்களையும் படைத்து வருகின்றார். இத்தகைய தமிழறிஞர் வாழுங் காலத்தில் யாமும் பிறப்பெடுத்தோம் என்பதை எண்ணும்போது உள்ளம் களிகொள்கிறது. அன்னாருக்கு என்னுடைய வணக்கங்களைத் தெரிவித்து மகிழ்கிறேன்.

Dec 13, 2020

மணிக்குறள் - 24. புதுத்தொழில் கொணர்க

மண்ணில் தொழில்கள் மலரும் வழிகளை
எண்ணி இதயத்(து) இருத்து                                231

புவிவாழ வேண்டும் புதிய தொழில்கள்
கவியாரம் சூட்டிக் கருது                                      232

இயற்கை குலையாத இன்றொழில்கள் வேண்டும்
முயற்சி முதலாம் முனை                                     233

மக்கள் தொகைப்பெருக்க வாழ்வினை மேம்படுத்தப்
பக்கத் துணையாம் தொழில்                            234

வேலையிலாத் திண்டாட்டம் வேண்டுமோ? மாற்றியதை
வேலையிலே கொண்டாட்டம் வேண்டு        235

துறைதோறும் நுட்பத்தைத் தோண்டியெடுத்(து) ஆள்க
குறைகளையக் கொள்க குறி                            236

புத்துணர்(வு) ஈயும். புதுத்தொழில் வேட்டலில்
ஒத்துணர்ந்(து) ஓங்குவோம் வா                      237

கணினியின் கைகளில் காலம் கனிந்த(து)
அணிந்தா யிரம்படை ஆழ்ந்து                        238

வறுமை நிலையொழிந்து வாழ்க்கை உயரக்
குறுகும் மனத்தைக் குடை                                239

நாளும் புதுத்தொழில் நாட்டு நலம்பயக்க
ஆளும் நெறியை அறி                                         240

Dec 6, 2020

மணிக்குறள் - 23. வரதட்சணை வேண்டாதே

சீர்கொண்டு வாவென்று சீர்குலைப்ப(து) ஐயகோ
போர்த்தும் புலித்தோல் பசு                           221

துணைநம்பி வந்தவளைத் துன்பத்தில் தள்ளிப்
பணம்நம்பிப் பாழாக்கல் பாழ்                    222

சீதனம் வேண்டுமெனத் தீங்கிழைத்துக் கொல்கின்றார்
வேதனை யன்றோ விடை                              223

வாழவந் தாளை வதைத்தல் முறையாமோ?
தாழத் துணிந்தாய் தணி                               224

மங்கையராய்த் தோன்றுதற்கு மாதவம் செய்தவரை
அங்கையில் தாங்குவோன் ஆண்              225

பொருள்வேண்டி வாழாதீர் புன்னகை போதும்
இருள்நீக்கி வாழ்க இணைந்து                   226

மணக்கொடை வேண்டா மனக்கொடை போதும்
பணத்துக்கு வேண்டாவே போர்                227

தட்சணை வேண்டித் தரங்குறைத்துக் கொள்ளாதே
நட்பென வாகி நட                                            228

பழக்கமெனப் பேசும் பழங்கதைகள் வேண்டா
வழங்கும் வரைமுறை மாற்று                    229

சீர்வரிசை கேட்டுச் சிரிப்பழித்து வாழாதீர்
சீர்வரிசைச் சான்றோரைச் சேர்               230

Dec 4, 2020

கவி தைக்கத் தேவை

கவிதைக்குத் தேவை கற்பனை
கருத்தினில் நிற்கச் சொற்பனை
கவிதைக்கத் தேவை கட்டுக்
குலையாத யாப்புத் திட்டு