Oct 31, 2015

இதழகல் வெண்பா

இதழகல் குறள்வெண்பா

எந்தாய்! எழிலாய்! எனைக்காத் தகலச்செய்!
கந்தா!நின் கையால் கலி

இதழகல் நேரிசை வெண்பா

ஐய!நின் ஆக்கச் செயல்திறத் தையெண்ணிச்
செய்யச்சீர் எண்ணத்தார் சேர்ந்திடச் - செய்யிதனை
யென்றாண் டதனைச் செழிக்கச்செய் யாற்றலை
நன்றாய்நான் சாற்றலெந் நாள்?

இதழகல் இன்னிசை வெண்பா

கண்ணா யெனநான் அழைத்தேன்நின் கண்காணா
தெண்ணாதே யென்றறைந்தாய்! என்செய்கேன்? ஏந்திழையே!
எண்ணத்தே நீநிறைந்தாய் எங்கே தனித்தியங்க?
தண்ணிய நெஞ்சத்தைத் தா

                              - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

Oct 30, 2015

சுபாஷினி

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

மேன்மையும் மென்மை யுஞ்சேர்
  மொழிதனை யணியாய்க் கொண்ட
தேன்மொழிச் செல்வி வாழி!
  திகழொளி யோவி யஞ்செய்
வான்சிறப் பெய்தும் எண்ண
  வண்ணமும் வாழி! வாழி!
கான்கொளும் ஆற்றைப் போலக்
  கவிசெயும் தோழி வாழி!
          - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

Oct 23, 2015

கால ஓட்டக் காட்டாற்று வெள்ளம்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

காய்-காய்-காய்-காய்-மா-தேமா

காலோட்டக் காட்டாற்று வெள்ளமது கரைகளையும் கரைத்துக் காட்டும்
மேலோட்ட மாய்க்காணச் 'செருக்குற்ற வாழ்வுனது மெலியார் தம்மைக்
கோலோச்சும் அதிகாரம் கொண்டாய்நீ' எனச்சொல்லும் குறைகா ணுள்ளத்
தாலோட்டம் நிற்காது தடைகளெலாம் கடந்துசெலும் தனித்தன் மையே!
                                          - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

Oct 22, 2015

சிவன்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

விளம்-மா-விளம்-மா-விளம்-காய்

கங்கையும் பிறைகொள் திங்களும் சென்னி; கண்ணுதல் அறுபொறியும்; 
மங்கையும் பாகம் மறைந்தவன் கோலம் மண்சுமந் திடுவடிவாய் 
அங்கெழுந் தருளு மடியவர்க் கடியன் ஆயினும் முடியடியும் 
பங்கய னும்பாற் கடல்வசிப் பவனும் பார்த்திலன் அதிசயனே! 
                                                                 - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

Oct 10, 2015

முருகன்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் (விளம்-மா-மா)

முருகனே! கந்த னே!கார்
  முகில்வணன் மருக னே!செந்
திருக்கரத் தால ருள்சேர்
  திருப்பரங் குன்றக் கோனே!
செருப்புகு செவ்வேல் வீர!
  சீரலை வாயிற் கோவே!
திருப்புகழ் நாளும் ஓத
  திருவருள் மோதும் அன்றே!                          1

சேவலுஞ் செவ்வே லுங்கை
   சேர்ந்தொரு தீரம் காட்டும்
காவலுக் கும்ப ழத்தால்
   காவலுக் கங்கு பாகு
நாவலை உலுக்கிப் பாட்டி
   நாவளம் நாணச் செய்தே
ஆவலைப் பெருக்கி ஆங்கே
   அருந்தமிழ் பருகி னானே!                              2
          - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

Oct 7, 2015

தமிழில் பெயரிடுக

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

அழகாய்த் தமிழில் பெயர்வைத்தல்
   ஆகா தென்றே திரிகின்ற 
பழகாத் தமிழன் பெருமையெலாம்
    பாருக் குரைக்க நான்வருவேன் 
அழகே தமிழாம் அதைவிட்டெங்(கு)
    அழகைத் தேடிச் செல்கின்றீர் 
பழகப் பழகத் தான்றெரியும்
    பழமும் பாலும் தமிழென்றே 
                    - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

வேலனை வேண்டுவோம் - 2

வேண்டியதை வேண்டியும், வேண்டாததை வாய்விட்டுக் கூறியும், வேலனை எண்ணியும் என் பள்ளி நாள்களில் அவ்வப்போது நான் எழுதிய கவிதைகளின் தொகுப்பு.

தரவு கொச்சகக் கலிப்பா

அழகுத்
தேவனே!உன் அடியன் படுதுயரம்
அழகென இரசித்தாயோ? அக்கறை விடுத்தாயோ?
பிழைகள் செய்திடூஉம் பேதை நெஞ்சமதை
வழங்கி வருத்துகிறாய்! வேறென யான்சொல்வேன்?           1

உறுதியஃ துடனிருக்கச் செயலதனைச் சிறப்பாக
இறுதியடைந் திடச்செய்வாய் இறையே!என் ஐயாவே!
பெறுதியெனத் தருவதெலாம் பெற்றிடவும் அருள்வாயே!
அறுமுகனே ஆற்றலுடன் ஆற்றிடவே ஆற்றிடுவாய்!           2

எந்நன்மை எமக்கருள இத்துயரைத் தந்திட்டாய்?
வந்தருள்வாய்! வளமெல்லாம் தந்தருள்வாய்! வடிவேலா!
சிந்தனையை ஒன்றாக்கிச் சிறந்திடவே செய்திடுவாய்!
அந்தவொரு பெருஞ்செல்வம் குலையாமல் காத்திடுவாய்!             3

கலங்கிடூஉம் நெஞ்சமிதைக் காணத்தான் பொறுக்குமோ?உன்
உலகம்சுற் றிட்டவலை வாழ்க்கையத னைப்போல
அலைகின்ற மனத்துடனே அறிவுதனைப் புகட்டிடவே
நிலையில்லா யென்முன்னே நினைத்தாயே நிலைகொளுமோ?       4

செயல்சீர்மை யுற்றிடவும் சேர்கிளர்ச்சி யற்றிடவும்
கயமையது பற்றலதும் காரெண்ணம் சிற்றலதும்
முயற்சியிலே தயக்கிலதும் முன்செல்லப் பயக்குவதும்
மயிலேறும் மன்னவனே! முன்னின்ற ருள்வாயே!                 5

தானுண்டு தன்வேலை யுண்டென்றி ருந்தேனை
ஏனின்றிவ் வாட்டமது மாட்டுவித்தாய் ஆறுமுக!
நானின்று ணர்ந்தனனே! நன்மையதுந் தின்மையதுந்
தான்வாரா முன்செய்த புண்ணியமும் பாவமுமே!                 6

நாளும் தமிழ்ப்பணி நான்செய்ய வேண்டும்
நாவில்நின் திருநாமம் நான்சொல்ல வேண்டும்
நானில நன்மைக்கே நானெண்ண வேண்டும்
நாளும்நின் னருளாளே நிறைவேற்ற வேண்டும்                      7

மனிதமன முடைத்தான திண்மைக்கென் னளவதனை
நனிசிறப்பாய் உரைப்பாயே! நாயகனே! நல்லவனே!
கனிகின்ற மனதளித்தாய்! பின்னுமதைக் காயாக்கித்
துனிகிளர்வைத் தாராதே! தனித்தமிழுக் குருகுமனாய்!         8

வலியிலா நெஞ்சருளிக் கலிதரு கின்றாயேன்?
மலிதொல்லை யாகத்தான் மனமென்றும் வேதனையில்
வலிந்தெமக்கு வந்ததுவோ? வாழ்வதனில் சோதனையும்
வலிசெயலில் இன்றித்தான் கிலிபடுத்து கின்றாயே!             9

நின்றே மகிழ்ந்ததுவும் நீங்கா நெகிழ்ந்ததுவும்
நன்றென நினைந்ததுவும் நான்சரி யின்றெனவும்
இன்று வருந்துவதும் ஈந்ததி யேனையா?
குன்றம் அமர்ந்தவனே! குமர! கூறையா!                                  10

இடைவந்த துயரிதுவோ? என்றுவளர் அயர்விதுவோ?
நடைநின்ற நல்வழியை நான்மீண்டும் அடையாமல்
தடையென்று தந்தமையால் தவித்திடவும் விதியாமோ?
மடையுடைந்த தமிழ்வெள்ள! மன்னவனே! பகர்வாயே!   11

பகர்ந்தனை நன்றெனவே! பாசம் மிகுந்தவனே!
அகந்தை அழிந்ததுவே! அறிவு நிலைத்திடவே
மகிழ்ந்துனைத் துதித்திடவே வரமும் அருள்வாயே!
பகரும் தந்திடுவேன்பகர்ந்த பெருமாளே!                               12

உன்னுடைவை வேலாலென் வினையெல்லாந் தீர்த்திடுவாய்!
புன்செய்கை யனைத்தினையும் புரண்டோடச் செய்திடுவாய்!
என்கைகள் செய்கின்ற எச்செயலும் நின்னருளே
முன்னியவை முருகா!உன் அருள்தன்னால் முடியுமாறே! 13

மனமாகி அதுசெய்யும் மதியாகு பவனே!
மனம்பொருந்த உனைப்பாடி ஒருநாளு மறவேனே!
மனமுணர்ந்த மறைபொருளாய் உறைந்தபதி யோனே!
மனக்கலக்கம் முற்றிலுமே மறைந்திடவே அருள்வாயே!   14

ஏங்காநில் புத்தியிலே என்னெஞ்சம் தோய்கிறதேன்?
தாங்காமல் உழன்றிடுதல் துயர்துடிப்புச் செய்கையெலாம்
நீங்காமல் நினைவிற்கு நித்திரையைத் தாராமல்
தாங்காவல் தனித்தலைவ! தீர்ப்பாயே! தீர்ப்பாயே!                    15
                              - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

வேலனை வேண்டுவோம் - 1

வேண்டியதை வேண்டியும், வேண்டாததை வாய்விட்டுக் கூறியும், வேலனை எண்ணியும் என் பள்ளி நாள்களில் அவ்வப்போது நான் எழுதிய கவிதைகளின் தொகுப்பு.

கலிவிருத்தம்

அடியன் படுதுயர் நொடியில் நீக்கும்
வடிவே லவனே! வரமொன் றருள்வாய்!
முடிவெ டுத்தபின் முயற்சியில் தளராத்
திடமன முடன்றன் னம்பிக்கை தருவாய்!                    1

இடரிழு விசைக்கெதிர் விசைதந் தென்னைத்
திடமன முடையனாய்த் திரும்பிடச் செய்வாய்!
மடமெனும் மாவிருள் மருண்டிடச் செய்து
தடமாய் மாற்றுக தடைகள் எல்லாம்                              2

இன்ன லென்ப தில்லை; இனியுன்
பன்னிரு கையால் பகலென வைப்பாய்
மன்னவ னெஞ்சில்! மீச்சிறு தவறும்
என்னுள் இலதாய் இலங்கிடச் செய்வாய்!                    3

என்றன் இறைவாஎன்னைக் காக்க!
கொண்ட செயலைக் குறைவா ராமல்
அன்பன் யானும் ஆற்றிடச் செய்குவை
அன்புத் தெய்வமேஅருள்புரி வாயே!                              4

எண்ணிய எண்ணம் இடைநிற் காமல்
தண்ணீ ராகத் தவழ்ந்தோ டிடவே
பண்ணியல் பேச்சைப் பழகச் செய்வாய்!
தண்ணிய தாகத் தருவாய் நெஞ்சம்!                                  5

எண்ணிய தியற்றினைஎன்மன துரைத்தனை;
தண்ணிய நெஞ்சினைத் தாங்கிட வருளினை;
பண்ணிடும் செயலின் பக்குவ முணர்த்தினை;
எண்ணருஞ் செய்தனைஎன்சொலி மகிழ்வேன்?          6

எண்ணெழுத் திரண்டும் எழில்நிறை பிழையற!
கண்செவி இரண்டும் கவனம் விழிப்பாய்!
திண்மனம் தெள்ளறி விலங்கிக் குறிக்கோள்
கொண்டிடச் செய்வாய் குமரவேல் நாதா!                         7

சுந்தர மணியாய்சுகந்தந் திடுவாய்!
எந்தத் துயரமும் எனையணு காமல்
உந்தன் திருவடி சரணடை கின்றேன்
கந்தா என்னைக் காத்திடு வாயே!                                          8

செய்யுஞ் செயல்களைத் தீதற உணர்வேன்!
செய்யுஞ் செயல்சேர்ந் தாவியாய்ப் புணர்வேன்!
மெய்யு ணர்ந்து மேற்புணர் உயிர்போல்
எய்யும் கணைகள் எய்திடப் புரிவாய்!                                  9

நினைத்தவை நிறைவுற நின்னருள் தருவாய்!
அனைத்திலும் முழுமை அடைந்திடச் செய்வாய்!
வினைதீ யனவாம் எனைவிட் டகலவும்
உனையனு தினமும் உள்ளவும் செய்வாய்!                    10

நுண்ணறி விலங்கி நன்னெறி செல்லப்
பண்ணிசை யறிவு பழகிடச் செய்வாய்!
எண்ணிய வேலை இடைநிற் காமல்
திண்ணியத் துடனே தீர்வழி தருவாய்!                                11

மந்த புத்தியன்மறுமொழி பேசிலேன்;
சிந்தனை செய்கிலேன்சீக்கிரம் உணர்ந்திலேன்;
நிந்தனை என்னை யானே செய்குவேன்;
எந்தையே முருகாஎமக்கருள் புரிவாய்!                           12

முறையல் லாதன நிறைந்திடு மெனின்மனக்
குறையால் நோவேன் குமரவேல் நாதா!
இறையேவேண்டும் இன்பொருள் தருவாய்!
முறையே உறுதியாய் வளர்ந்திடச் செய்வாய்!                 13

திணிப்பால் என்னைத் திணற வைக்கிறாய்
பிணியால் என்னைப் பிறழ வைக்கிறாய்
கணித்தும் என்னைக் கலங்க வைக்கிறாய்
அணித்த மிழ்தனின் அறுமுக வேலனே!                              14

விழைந்தவை தருவாய் விநோத நாதா!
கழையு மாகி யளியினி நீராய்த்
தழைத்திடச் செய்வாய் தனியற மாக
உழைப்பை நம்புவோர்க் குறையில் தருவாய்!                 15
                  - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்