Oct 7, 2015

வேலனை வேண்டுவோம் - 2

வேண்டியதை வேண்டியும், வேண்டாததை வாய்விட்டுக் கூறியும், வேலனை எண்ணியும் என் பள்ளி நாள்களில் அவ்வப்போது நான் எழுதிய கவிதைகளின் தொகுப்பு.

தரவு கொச்சகக் கலிப்பா

அழகுத்
தேவனே!உன் அடியன் படுதுயரம்
அழகென இரசித்தாயோ? அக்கறை விடுத்தாயோ?
பிழைகள் செய்திடூஉம் பேதை நெஞ்சமதை
வழங்கி வருத்துகிறாய்! வேறென யான்சொல்வேன்?           1

உறுதியஃ துடனிருக்கச் செயலதனைச் சிறப்பாக
இறுதியடைந் திடச்செய்வாய் இறையே!என் ஐயாவே!
பெறுதியெனத் தருவதெலாம் பெற்றிடவும் அருள்வாயே!
அறுமுகனே ஆற்றலுடன் ஆற்றிடவே ஆற்றிடுவாய்!           2

எந்நன்மை எமக்கருள இத்துயரைத் தந்திட்டாய்?
வந்தருள்வாய்! வளமெல்லாம் தந்தருள்வாய்! வடிவேலா!
சிந்தனையை ஒன்றாக்கிச் சிறந்திடவே செய்திடுவாய்!
அந்தவொரு பெருஞ்செல்வம் குலையாமல் காத்திடுவாய்!             3

கலங்கிடூஉம் நெஞ்சமிதைக் காணத்தான் பொறுக்குமோ?உன்
உலகம்சுற் றிட்டவலை வாழ்க்கையத னைப்போல
அலைகின்ற மனத்துடனே அறிவுதனைப் புகட்டிடவே
நிலையில்லா யென்முன்னே நினைத்தாயே நிலைகொளுமோ?       4

செயல்சீர்மை யுற்றிடவும் சேர்கிளர்ச்சி யற்றிடவும்
கயமையது பற்றலதும் காரெண்ணம் சிற்றலதும்
முயற்சியிலே தயக்கிலதும் முன்செல்லப் பயக்குவதும்
மயிலேறும் மன்னவனே! முன்னின்ற ருள்வாயே!                 5

தானுண்டு தன்வேலை யுண்டென்றி ருந்தேனை
ஏனின்றிவ் வாட்டமது மாட்டுவித்தாய் ஆறுமுக!
நானின்று ணர்ந்தனனே! நன்மையதுந் தின்மையதுந்
தான்வாரா முன்செய்த புண்ணியமும் பாவமுமே!                 6

நாளும் தமிழ்ப்பணி நான்செய்ய வேண்டும்
நாவில்நின் திருநாமம் நான்சொல்ல வேண்டும்
நானில நன்மைக்கே நானெண்ண வேண்டும்
நாளும்நின் னருளாளே நிறைவேற்ற வேண்டும்                      7

மனிதமன முடைத்தான திண்மைக்கென் னளவதனை
நனிசிறப்பாய் உரைப்பாயே! நாயகனே! நல்லவனே!
கனிகின்ற மனதளித்தாய்! பின்னுமதைக் காயாக்கித்
துனிகிளர்வைத் தாராதே! தனித்தமிழுக் குருகுமனாய்!         8

வலியிலா நெஞ்சருளிக் கலிதரு கின்றாயேன்?
மலிதொல்லை யாகத்தான் மனமென்றும் வேதனையில்
வலிந்தெமக்கு வந்ததுவோ? வாழ்வதனில் சோதனையும்
வலிசெயலில் இன்றித்தான் கிலிபடுத்து கின்றாயே!             9

நின்றே மகிழ்ந்ததுவும் நீங்கா நெகிழ்ந்ததுவும்
நன்றென நினைந்ததுவும் நான்சரி யின்றெனவும்
இன்று வருந்துவதும் ஈந்ததி யேனையா?
குன்றம் அமர்ந்தவனே! குமர! கூறையா!                                  10

இடைவந்த துயரிதுவோ? என்றுவளர் அயர்விதுவோ?
நடைநின்ற நல்வழியை நான்மீண்டும் அடையாமல்
தடையென்று தந்தமையால் தவித்திடவும் விதியாமோ?
மடையுடைந்த தமிழ்வெள்ள! மன்னவனே! பகர்வாயே!   11

பகர்ந்தனை நன்றெனவே! பாசம் மிகுந்தவனே!
அகந்தை அழிந்ததுவே! அறிவு நிலைத்திடவே
மகிழ்ந்துனைத் துதித்திடவே வரமும் அருள்வாயே!
பகரும் தந்திடுவேன்பகர்ந்த பெருமாளே!                               12

உன்னுடைவை வேலாலென் வினையெல்லாந் தீர்த்திடுவாய்!
புன்செய்கை யனைத்தினையும் புரண்டோடச் செய்திடுவாய்!
என்கைகள் செய்கின்ற எச்செயலும் நின்னருளே
முன்னியவை முருகா!உன் அருள்தன்னால் முடியுமாறே! 13

மனமாகி அதுசெய்யும் மதியாகு பவனே!
மனம்பொருந்த உனைப்பாடி ஒருநாளு மறவேனே!
மனமுணர்ந்த மறைபொருளாய் உறைந்தபதி யோனே!
மனக்கலக்கம் முற்றிலுமே மறைந்திடவே அருள்வாயே!   14

ஏங்காநில் புத்தியிலே என்னெஞ்சம் தோய்கிறதேன்?
தாங்காமல் உழன்றிடுதல் துயர்துடிப்புச் செய்கையெலாம்
நீங்காமல் நினைவிற்கு நித்திரையைத் தாராமல்
தாங்காவல் தனித்தலைவ! தீர்ப்பாயே! தீர்ப்பாயே!                    15
                              - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

No comments:

Post a Comment