Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Jul 19, 2026

ஒருபா ஒருபஃது - தேங்காய்

பாயிரம்

வேலை செய்யச் சொல்வதிலே
மேலா ளர்போல் தேர்தகையாள்
வேலை வாங்கிப் பழகிப்போய்
வெட்டி யாய்ச்சும் மாதானே
காலை யாட்டிக் கொண்டமர்ந்து
காலைத் தேநீர் கேட்கின்றீர்
சேலை யாட்டிச் சொன்னாளே
தேங்காய் உரித்து வாவென்று

1. மட்டை

மட்டை யோடு கிடக்கின்ற
மாதேங் காயைக் கண்டயர்ந்தேன்
தட்டை யுருண்டை நீள்வடிவந்
தாங்கி யந்தத் தேங்காயோ
கொட்டி வைக்கும் நெற்குவியற்
குதிரைப் போலத் தோன்றியது
வெட்டுங் கத்தி கொணர்ந்தவளோ
வியந்த வாயை மூடென்றாள்

2. நார்

கத்தி யால்வெட் டும்போது
கதறி யழுத வத்தேங்காய்
சித்தங் கலங்கி நிற்பதுபோல்
சிதறத் துகள்கள் வீசியதே
குத்தக் குத்த நார்பெருக்கிக்
குதலை மொழியாய் உதிர்த்ததுவே
எத்து ணைப்பற் றுடைமையினை
எடுத்துக் காட்டி நிற்கிறதே

3. காய்

கடிய மட்டை நார்விலகக்
காட்டும் வடிவோ  முரணாகும்
குடுமித் தலையும் முக்கண்ணும்
குதுக லச்சி ரிப்போடு
விடிய விடியத் தெருக்கூத்தை
விரித்துச் செல்லும் திறமுடைய
கடியங் கார னைக்கண்முன்
காட்டும் அழகில் மயங்கிநின்றேன்

4.
பலகா லங்கள் பண்பட்டுப்
பகலோன் விசையாற் பிணைப்புற்ற
உலக உருண்டை தன்னச்சில்
உழலும் காட்சி பொருந்திவரும்
சலச்ச லக்கும் ஓடையிலே
தாவிக் குதிக்கும் மீன்கொத்த
அலகை நீட்டும் கொக்கைப்போல்
அந்தக் குடுமி இருந்ததுவே

5. ஓட்டின் நிறமும் வரிகளும்

அடர்ந்த மஞ்சள் நிறமொக்கும்
அதன்மேல் வரிகள் பலவாகப்
படர்ந்தி ருத்தல் உலகவரை
படத்தில் வடக்குத் தெற்காகக்
கடக்கும் கோடு போன்றிருக்கும்
கடக்க முடியா தமர்ந்திருந்தேன்
நடக்கு மாவுன் னிடம்வேலை
நாவா னயந்தா ளிதோவென்றேன்

6. தரம்

கெட்டித் தன்மை யறிதற்கும்
கெடாத தன்மை யறிதற்கும்
தட்டிப் பார்த்தேன் தேங்காயைத்
தரமா யுளதே தண்ணீரின்
மட்டத் தளவை யறிதற்கும்
வாய்ப்பென் றாட்டிப் பார்த்தேனே
ஒட்டா வுறவு போலின்றி
ஓட்டி னுள்ளே ஒருகுடும்பம்

7. குடுமி

பல்ல டுக்குத் தோல்மட்டும்
பாரென் காயம் என்பதுபோல்
சொல்ல டுக்கிப் பாட்டெழுதிச்
சொக்க வைக்கும் புலவர்போல்
மெல்ல டுக்கு நார்கொண்டே
மேனி காட்டும் குடுமியதாம்
வல்ல பிடிப்புக் கேற்றதுவாய்
வாய்த்த பெருமை யென்சொல்வேன்

8. பருப்பு

ஒற்றை அடியே போதுமென
ஒழுங்கா யுடைந்த திரண்டாக
மற்றைச் சீரைச் சொல்வானேன்
மாறாக் குணத்த னெனநிற்பான்
உற்ற பருப்பு வெண்ணிறமா
யுவகை காட்டப் பல்லிளிக்கும்
சுற்றி நிற்கும் சீனத்தின்
சுவரைப் போன்ற உருக்காட்டும்

9. நீர்

குழிந்த குளத்தில் நிறைநீராய்க்
குவிந்த நீரோ தண்ணியது
செழிய தாது கலந்ததனாற்
சேர்க்கும் இனிய சுவையினையே
வழியுங் கண்ணீர்த் துளியைப்போல்
வழிந்த வதனைப் பருகியதும்
அழியாத் துன்பம் அழிந்ததைப்போல்
அகத்தின் மகிழ்வால் வியந்தேனே

10. சில்

சில்லென் றிருந்த நீர்பருகிச்
சிறுவர் ஆடும் விளையாட்டுச்
சில்லைப் போன்று பெயர்த்தேனே
திருந்தாக் கள்வன் மனப்போக்காய்ச்
சொல்ல முடியா வடிவிலெலாம்
துண்டு துண்டாய்க் கண்டேனே
இல்லாள் வந்தாள் விரைந்துசெய
இயலா தாவென் றிடித்தாளே

 - தமிழகழ்வன்

Jan 18, 2026

அருட்சுடரோன்

அருட்சுடரா லாவன செய்வான் பொருட்பொதி
பூவுலகை அன்பிற் புணர்ந்து

கதிர்வரவைக் காண விழையும் எதிர்வரவை
ஏற்று வழிசெ யுலகு

அறம் வளரட்டும்

கைகளை நம்பிக் களங்காண்க பொய்களைப்
போக்கி நிலைக்கும் வழிக்கு        1

செய்கை சிறந்தன வாகுக பொய்வழிப்
புல்லர்ப் புலமோடச் செய்து           2

மெய்வழியோர் மேன்மை பெருகட்டும் உய்வழி
ஓர்ந்து நலஞ்செய்க வே                 3

தீமை யெனத்தெரிந்தும் தேர்ந்திழைப்பார் வாய்மை
வழிதேடா மூடர் பிறர்க்கு                4

மதியிலார் மானம் விழையார் விதியென்பார்
வீண்பேச்சு வீரரா வார்                    5

Dec 1, 2025

கோபிநாத் - கலைவாணி

கலை:
பெருங்கோபி  கையர்தம் பேரன்புக் குரியவனாய்
வருங்கோபி நாதன்பேர் வடிவாக வாய்த்தவரே!
பொருங்கோபி ணைத்திருக்கும் பொறிவில்லின் நாணாக
ஒருங்கோவி யத்தழகாய் உயர்வோடு மனங்கொள்வீர்!

கோபி:
கலைவானில் அழகாகக் கலைந்தோடும் முகிலூடே
கலைகலையாய் நடக்கின்ற கலைகற்ற நிலவாகக்
கலையாத கனவோடு காலமெலாம் சேர்ந்திருப்போம்
கலைவாணி கவினாலே கலையாலே கனிவாலே!

Nov 26, 2025

ஆனந்தி

அன்புச் செல்லம் ஆசை வெல்லம் - ஆனந்தி
இன்பச் சொல்லில் இன்னா இரிக்கும் - ஆனந்தி
என்புக் கென்பாய் என்றோள் பற்றும் - ஆனந்தி
உன்புத் தகத்தே உறைவி டந்தா - ஆனந்தி

Oct 14, 2025

பெருங்கருணை

ஈர்ப்பு விதியென இயற்பியல் உரைக்கினும்
சேர்ப்ப தென்னவோ செயும்பெருங் கருணையே
சீர்த்த மனத்தினர் செம்மையாய் அறிகுவர்
ஆர்த்த அன்பினால் அரும்பெரு வெளியமே

Oct 12, 2025

விழுதாய் வியக்கும் சிற்றறிவன்

பொழுது சாயுங் காலத்தே
    பொன்னாய் மின்னும் மின்னோடே
கெழுத கைமை வாய்ந்தவராம்
     கேள்வி ஞானம் வாய்த்தவராம்
தொழுத கையார் பாலாஜி
      தோன்றும் ஞானம் தானுரைப்பார்
விழுதாய் வியக்கும் சிற்றறிவன்
     விரையத் துணிவேன் வீட்டுக்கே

Sep 30, 2025

ஆதியே வாழி!

இருள்வெளி எங்கும் எழுகதி ராலே
பொருள்விளங் குறச்செய் பொருளுடைப் பொருளே! 
அருள்வெளிக் கடலே! ஆதியே நாளும்
கருத்தினில் இருத்திக் கைதொழு வேனே!

Jun 2, 2025

உண்மை

தன்னுள்ளம் நன்று பிறனுள்ளம் தீதென
உன்னு மடத்தனத்தார் ஓடாகத் தேய்ந்தாலும்
உன்னா துலகவரை ஒன்றாகக் காணாது
மன்னு மிதுவே மறை

சும்மா இருத்தல் சுகம்

ஆய்ந்த பொருள்கண்டோர் ஆயிரஞ் செய்தாலும்
வாய்ந்த நிறைநிலை வாராதே - வாய்ந்தமையா(து)
உம்மா லியலாத ஒன்றைச் செயப்புகற்குச்
சும்மா இருத்தல் சுகம்
😂

பொலிவொடு வாழ்க

செவியி னிக்கும் நன்மொழி சேரக்
கவியி னிக்கும் யாப்புடைக் கலையாய்ச்
சுவையி னிப்பாய்ச் சுடர்மதி யுறவாய்ப்
புவியிற் பூஉம் பொலிவொடு வாழ்க!

🌟🌟🌟🌟🌟🌟

May 12, 2025

அடுத்த அடி வைத்தனன்

கணியமுந் தமிழுங் கண்ணென வெண்ணி
யணிய மாக வடுத்த வோரடி
வைத்தனன் வைத்தென் னுள்ளத் துவந்து
தைத்தன நாடித் தனியொரு நிலைக்கே!

Apr 14, 2025

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

ஆதவன் அயனத்(து) ஆதி
   அருந்திரு நன்னாள் தன்னில்
சோதனை யாவும் நீங்கிச்
   சூழுல கெல்லாம் நன்று
தீதெனப் பாத்துப் பார்த்துத்
   திருந்திய வாழ்வை மேற்கொண்(டு)
ஈதலா னிசைபெற் றோங்கி
   எழுபிறப் பினிது வாழ்க!
                               - தமிழகழ்வன்

Dec 27, 2024

விரும்புவீர்

நேரிசை ஆசிரியம்

அண்டத் துள்ளது பிண்டத் துள்ளதான்
அனைத்தும் தொடர்புடை ஆற்ற லுடைத்தாய்க்
கொடுப்பது கொடுக்கும் விடுப்பது விடுக்கும்
வினைத்தது விளைக்கும் விளைத்தது வினைக்கும்
நினைப்பது நடத்தும் நடந்தது நினைக்கும்
இனைத்தென உணரா இன்னுயிர்
வினைத்தகு மக்காள் விரும்பு வீரே!

Dec 9, 2024

சமூக வலைத்தள உறவுகள்

அகமே அகமே தனிமையினை
   ஆளத் தெரியா எனக்கென்றே
இகமே வாய்த்த தென்பதுவாய்
   இந்தச் சமூக வலைத்தளங்கள்
முகமே அறியா உறவுகளை
   முழுதும் நம்பிப் பேசுகிறேன்
திகட்டத் திகட்டப் பேசுகின்ற
   தித்திப் பான பேச்சுடையள்

அண்ணன் தம்பி என்றேயான்
  அழைத்தல் மூலம் என்னுறவைத்
திண்ண மாக உரைக்கின்றேன்
   தீமை யில்லா என்பேச்சை
வண்ண மயமாய் மாற்றுவது
   வாஞ்சை எனக்கு வேறென்ன?
எண்ணம் தூய்மை என்போக்கில்
   எந்தத் தவறும் இல்லையன்றோ?

அன்பு பாசம் அன்றாடம்
   ஆத ரிக்கும் அவர்சொற்கள்
இன்புக் கிடமாம் நிழற்படங்கள்
   எடுத்து நானும் அனுப்புவதும்
நன்று நன்றென் றவருரைக்கும்
    நயமாம் சொல்லைக் கேட்பதுவும்
துன்பம் மறக்கத் துணைநிற்கும்
    தூணாய் நின்று வழிநடத்தும்

ஆனால் இன்றோ நானவருக்(கு)
   அனுப்ப வில்லை புதுப்படத்தை
ஏனோ? பேச மறுத்துவிட்டார்
   என்மேல் அன்பைப் பொழியவில்லை
தேனாய் வந்து விழுகின்ற
   தித்திப் பான சொல்லில்லை
போனால் போதும் எனமீண்டும்
   போட்டேன் எடுத்த படத்தினையே

படத்தைப் பார்த்துப் பழையபடி
  பாசம் பொழியத் தொடங்கிவிட்டார்
அடடா என்ன நடக்கிறதோ?
   ஆர்வம் குழப்பம் எனக்கின்று
கடந்து விடவா? அவர்கொண்ட
   கருத்தும் சொல்லும் தவறென்று
தொடர்ந்து விடவா? உறவினையே
  தொல்லை ஏது மில்லையென்றே
                                   - தமிழகழ்வன்

Dec 1, 2024

பெஞ்சல் புயல் (Cyclonic storm Fengal)

இலங்கையில் நீர்பரப்பி இன்னும் போதாது
நிலைகொண்டு நிலைகொண்டு நேரிய தமிழ்நாட்டிற்
பெயல்வேண்டிப் புயலாய்ப் பெஞ்சலெனப் பேர்கொண்டு
வயனெடு வளம்பரப்பும் வான்மழை வாழியவே!
                                - தமிழகழ்வன்

Nov 30, 2024

இது விளையாட்டா?

உலகம் இந்நாள்  உணரா தவளே!
அலரினைக் கண்டொரு நாளும் அஞ்சா(து)
ஈண்டென் செய்கிறாய்? இதுவிளை யாட்டா?
வேண்டுவ தென்னவோ? வேட்கை என்னவோ?
நாடொறும் நாடி வலைத்தளம் மூலம் 
அறியாப் பலரொ(டு) அளவ ளாவலும் 
மீண்டும் மீண்டும் முகிழ்க்கும் மலராய்
அடுத்த நாளே மறந்ததாய்க் காட்டி
உறவு முறையில் உடன்பிறந் தான்போல்
உரிமைச் சொற்கொண்(டு) உரையா டுவதும் 
எல்லை மீறியோர் எடுத்தாள் கின்ற
குலவு மொழிக்கும் குதுகலம் அடைதலும்
பாது காப்பினைக் காற்றினில் பட்டமாய்
யாது முணராது பறக்க விடலும் 
எங்கே முடியும் என்றறி யாத
நங்காய் உனக்கு நல்லழ கிலவே!

Nov 14, 2024

காலம் கடந்தபின் வந்த ஞானம்

உள்ளத் துள்ளே ஓடுவ தென்ன?
கள்ளத் துள்ளே கரைத லின்றி
மெல்ல மெல்லப் புரிந்து கொள்ள
நல்ல வாய்ப்பாய் வாய்த்த சமூக
வலைத்தளத் தூடே வரையறை யின்றி
அளவ ளாவும் ஆவல் கொண்டு
களவ ளாவ லாகக் கனிந்தேன்
இஃதென் னுரிமையோ? இடந்தரு நிலைமையோ?
உறவா? நட்பா? உறவில் எவ்வகை?
முகமறி யாத முனைவிஃ(து) அறமா?
காலம் பதில்சொலக் காத்திருந் தேனே
காலம் கடந்தபின் வந்தது ஞானமே
                             - தமிழகழ்வன்

நண்பர் அருண்குமார் எழுதச் சொல்ல எழுதியது.

Oct 26, 2024

மீனழகு - ஆசிரிய விருத்தம்

மின்னி மின்னிச் சிரிக்கின்ற
   மீன்கள் கோடி வானத்தில்
கண்ணில் பட்ட ஒருமூன்று
   கருத்தில் நுழைந்து களிப்பூட்டும்
மின்னும் அவையோ நேர்க்கோட்டில்
   மீண்டும் காணோம் எனத்தேடும்
அன்ன நிலவு குழந்தையைப்போல்
   ஆர்வத் தோடு நான்களிப்பேன்

பல்வான் அலகு தூரத்தில்
   பல்லைக் காட்டும் மீனழகு
நில்லா மேகம் மறைத்தாலும்
   நின்றொ ளிர்ந்தொ ளிந்திருக்கும்
எல்லாம் உணர வைக்கின்ற
   எண்ணம் கூட்டும் இவ்வுலகில்
இல்லாச் சுவையும் பொதித்திருக்கும்
   இன்னும் இன்னும் களிப்பூட்டும்

எண்ணி எண்ணி வியந்திருந்தேன்
   எல்லா மீனும் ஒளிருமெனக்
கண்கள் விருந்தால் களித்திருக்கக்
   கடிதில் மறையும் சிலமீன்கள்
விண்ணில் தொலைவில் ஒளிர்வதெல்லாம்
   விரும்பா தோவந் தருகமைய
நண்ண லில்லை நம்கைக்கு
   நடப்ப தில்லை நம்மோடே

- கருத்தாக்கம்: அருண்குமார்
- கவியாக்கம்: தமிழகழ்வன்

Oct 24, 2024

காரணம் உண்மையா பொய்யா?

காரண மின்றிக் காரிய மில்லை
காரண மொன்றக் கவலைக ளில்லை
காரண மில்லாப் பொய்ம்மையி னாலே
காரியம் நன்மை பெறுவது மில்லை
காலமும் சிலவே கண்களை மறைக்கும்
கடிதினில் உண்மை கருவிழி நிறைக்கும்
காரணம் பொய்யின் காலடி வீழின்
கசப்பென மாறும் வாழ்க்கையும் பாழே!