Oct 31, 2021

மழையே!

ஆசிரியத் தாழிசை

வாளும் வில்லும் வானவிற் கிணையோ?
மீளும் இயற்கை மேதினி செழிக்க
நாளும் பொழிக நல்ல மழையே!

முகந்த நீரினை முழுக்கரு வாக்கிப்
புகத்தந் தாற்றில் பொங்கும் வெள்ளம்
அகத்தில் மகிழ்வே ஆருயிர் மழையே!

மின்னும் பொன்னாய் விண்விளை யாட
இன்னும் எதுவோ இங்கு வேண்டும்
மன்னுக மழையே மன்னுக மழையே!
                                  - தமிழகழ்வன்.

Oct 16, 2021

நல்லாரா? பொல்லாரா?

சொல்லால் நடங்காட்டிச் சோகக் கதைநாட்டிப்
பொல்லாங்கு செய்வார்க்குப் போயுதவி செய்யாதீர்
நல்லார் எனவெண்ணி நம்பிக்கை கொண்டாரைப்
புல்லார் எனவெண்ணும் பொய்யர் மிகுந்துள்ளார்

Oct 5, 2021

உள்ளத் தனையது உயர்வு

தமிழ்வாழ்த்து

அள்ளக் குறையா அமிழ்த சுரபியாய்
உள்ளுதொறும் ஊறும் மணற்கிணறாய்த் - தெள்ளுதமிழ்த்
தாயே! விளங்கும் தனிச்சிறப் புற்றனை!
நீயே மகிழ்ச்சிக்கு நெய்

அவையடக்கம்

ஆசான் வரத ராசரை வணங்கினேன்
பேசாக் குழந்தை பேச விழைந்து
வீசா நின்ற விதைச்சொல் லுடையேம்
ஏசா தெம்மை ஏற்பீர் நன்றே

கவியரங்கின் நோக்கம்
நேரிசை ஆசிரியப்பா

அக்கினிச் சிறகுகள் ஆக்கி வைத்த
அன்பு மிகுந்த அறிவிய லாளர்
அன்னை நாட்டின் அரும்பெருந் தலைவர்
அப்துல் கலாஅம் ஐயா அவர்தம்
பிறந்த நாளை நினைவு கூர்ந்து                                 5
நிகழ்த்தப் பெறூஉம் நெடுநேரத் தொடராம்
பன்னாட்டுச் சாதனைச் சங்கமம் ஆகிய
இந்த நிகழ்வில் இனிதாய் இணைந்து
இந்தக் கவிதை அரங்கைத் தொடங்குவாம்
உள்ளத்து அனையது உயர்வெனக் கூறிய            10
வள்ளுவப் பெருந்தகை வாக்கை
உள்ளு வோமே உயர்வடை வோமே

தொடக்கக் கவிதை
நிலை மண்டில ஆசிரியப்பா

உள்ளத் தனையது உயர்வா கும்மே
உள்ளம் என்றால் என்னை? ஊக்கம்
வெள்ளம் வந்து மேலும் மேலும்
பள்ளம் நோக்கிப் பாய்தல் போலே
உள்ளத் தனையது உயர்வா கும்மே               5
உள்ளம் வேண்டும் உலையா முயற்சிக்கு
உள்ளம் வேண்டும் உடைய தொழிலுக்கு
உள்ளம் வேண்டும் உண்ணு தற்கும்
உள்ளம் இலையோ ஒன்றும் இல்லை
ஊக்கத் தளவே ஆக்கத் தளவாம்                     10
ஊக்கத் தளவே உலகம் உய்யும்
ஊக்கத் தளவே உண்மை விளங்கும்
ஊக்கம் இன்மை இன்மை வகுக்கும்
உள்ளத் தனையது உயர்வெனப் பாட
உள்ளத் துவகை யோடு மன்றம்                         15
ஏறி வந்தோம் ஏற்றம் உரைக்கப்
பதின்மர் இங்கே பங்கேற் கின்றோம்
உள்ளம் என்னும் ஊக்கம் பற்றிச்
சொல்லில் சுவைபடச் சொல்ல விழைந்தோம்
நல்ல கருத்தை நாடிக் கேட்டு                             20
வெல்லும் உலகை உருவாக் குவமே

1. வள்ளி முத்தே வருக வருகவே
முத்துக் கவிதை சொத்துக் குவிகை
பட்டுச் சிவிகை பாட்டுக் குவிதை
நட்டுக் காத்து நல்ல மரமாய்ச்
சொட்டுந் தேனாய்ச் சோலைக் குயிலே
வள்ளி முத்தே வருக வருகவே

சொல்லில் சொல்ல வியலாக் கருத்தும்
மெல்ல உருக்கி மெருகு தீட்டி
அள்ளித் தந்தீர் அருமை அருமை
வள்ளிமுத் தாரே வாழ்கபல் லாண்டே!

2. பால சுப்பிரமணியன் ஐயா
புதுவைத் தமிழ்ச்சங் கத்தின் செயலர்
புதுவது படைக்கும் புகழ்மிகு ஏணி
மதுவுக்குப் புதுவை என்பதை மாற்றி
மதுக்கவி தைக்குப் புதுவை என்று
மற்று மொருவர் வாய்ம லர்ந்தார்
பால சுப்பிரமணியன் ஐயா வருக
பாலன்ன நற்கவி படைத்துத் தருக

பாட்டுக்கு இங்கே போட்டியா என்ன?
காட்டுக் காட்டென்று காட்டி விட்டார்
அப்பப்பா
கட்டுக் கட்டாய்க் கவிதை மூட்டை
பட்டுத் தெறிக்குது பாரீர் பாரீர்
பால சுப்பிர மணியன் ஐயா
ஆல மரம்போல் ஆயிரங் கவிதை
மேலும் மேலும் தந்து தாங்குவீர்
வாழ்க வாழ்க வளமொடு வாழ்க

3. சதீஸ்குமார்
அருந்தமிழ் ஆற்றலை அகத்தில் புகுத்திப்
பெருமை கொள்ளப் பேரவா வோடு
புதுமை புகுத்த பிறந்த புயலே
மதுர மாயொரு கவிதை தருக
வருக வருக சதீஸ்குமார் வருக

தனித்திறங்கொள் சதீஸ்குமார் வாழ்க வாழ்க
சரஞ்சரமாய் அவர்தொடுத்த கவிதை வாழ்க
சாதனையைச் சடுதியிலே புரிந்தார் வாழ்க
தாதவிழ்பூ மலர்தல்போல் வாழ்க வாழ்க

4. பரமநாதன் ஐயா
இணுவில் என்னும் எழிலூர் பெற்ற
இனிய கவிஞர் பரம நாதரே!
முத்து முத்தாய்ப் பாடும் பைந்தமிழ்ச்
சொத்துக் குவையே! சோர்வுகள் நீக்கும்
முத்துப் ‘பரல்கள்’பட்டுத் தெறிக்கும்
வித்தகம் விளைக்கும் வீறுகொள் கவிஞரே!
வருக வருக அருங்கவி தருக

அழகாக ஒருகவிதை ஆக்கித் தந்தீர்
அதுவரமே என்கின்றேன் ஆகா ஆகா
மழைஇரண்டு வரமாக வாய்த்த தின்று
மகிழ்ச்சியிலே திளைக்கின்றோம் வாழ்க வாழ்க
வழங்குவதில் பெருங்குடமாய் வாய்த்தீர் வாழ்க
வாக்கினிலே இனியதையே வைத்தீர் வாழ்க
பழம்பெருமை மறவாத பண்பர் வாழ்க
பரமநாதன் ஐயாவே வாழ்க வாழ்க

5. விஜயலட்சுமி
உள்ளத் தனையது உயர்வே என்பதைத்
தெள்ளத் தெளிவாய்த் தேர்ந்த வாழ்வால்
அள்ளித் தருக அரங்கம் வருக
வெள்ளி மின்னல் உள்ளம் கொண்ட
விஜய லட்சுமி அம்மா வருக

சென்ற இடமெல்லாம் வெற்றி வெற்றி
சேர்ந்து வருமே செம்மை தருமே
அருங்கவி ஆக்கி அகிலம் தந்தீர்
பெருமை யோடு வாழ்க வாழ்க

6. கண்ணன்
இளைய சமுதாயம் இனிது வாழக்
களைவார் துன்பம் கவிதைக் கட்டால்
கண்ணின் மணியாய்க் கருத்துக் கொண்ட
கண்ணன் ஐயா வருக வருக
கனிச்சுவை தனிச்சுவை யாகத் தருக

இடிமுழக்கம் இதுவன்றோ எழுச்சிக் கவியே
இன்னும்யாம் கேட்பதற்கும் ஆவல் கொண்டோம்
படிமுறைமை நேரத்தைப் பார்த்துப் பார்த்து
பாயுமுளம் தேற்றியிருக் கின்றோம் ஐயா
விடியட்டும் உம்மாலே உள்ளம் வைத்து
விதைப்போமே ஊக்கத்தால் வீழ்ந்தி டாதே
நெடிதுபுகழ் நீர்பெற்று வாழ்க வாழ்க
நேயமுள பெருங்கவியே வாழ்க வாழ்க

7. அழகர் சாமி
பழகு தமிழின் செம்மையினைப்
பார்த்துப் பார்த்து நுண்ணறிந்தே
அழகு கவிதை படைப்பவரே
ஆற்றல் மிக்க பெரும்புலவர்
பழக இனியர் பண்பாளர்
பாக்கள் பாட வாருமையா
அழகர் சாமி அரங்கினிலே
அகிலம் போற்றும் அருங்கவியே

நன்றாய் நெய்த கவிதந்தீர்
நலமே விளைக்கும் கவிதந்தீர்
பொன்றாப் புகழொடு வாழியவே
பொங்கும் மகிழ்வொடு வாழியவே

8. ஷேக் அப்துல்லாஹ் அ
இறைமை இதயக் கோயிலில் இருத்தி
முறைமை தவறா முதுநல் லறிஞர்
நிறைமனம் கொண்ட நித்திலக் கவிஞர்
சிறுமை மனத்தார் சிறைவிட் டெழவே
ஷேக் அப்துல்லா
ஐயா வருக அருங்கவி தருக

உள்ளத் துணர்வை அடுக்கிக் காட்டிக்
கள்ளம் அகற்றிக் கனியாய் வாழ்வு
கொள்ளச் செய்தி சொன்னார் அன்னார்
வெள்ளம் போலே மகிழ்வொடு வாழ்க

9. விஜயகுமார் ஜனார்த்தனன்
கன்னி முயற்சியாய்க் களம்புகு காளையாம்
இன்னல் நீக்கியோர் இனிமையுள வாழ்வுக்குச்
சின்ன கவிஞனெனத் தேற்றி அவைவந்தார்
பென்னம் பெரிதான கவிதை தருவாரே
விஜயகுமார் ஜனார்த்தனன் அவர்களே வருக
வியக்கும் செந்தமிழ்க் கவிதை தருக

உள்ளத்தில் தோன்றுகின்ற எண்ணங் கட்கு
உருவத்தைத் தந்துவக்கும் நிலைக்குச் செய்தார்
உள்ளத்தின் ஊக்கத்தை உணர்ந்து கொள்ள
உண்மையினைத் தெரிந்துரைத்தார் வாழ்க வாழ்க

நிறைவு கவிதை
ஊக்குங் கவிதைகள் உளம்நிறை வுறவே
கேட்டோம் தெளிவோம் கேள்விக ளாலே
இயலாச் செயலென ஏதும் இல்லை
முயலாச் செயலால் முழுதும் வீணே
செயலாக் குவமே செம்மை சேரவே                       5
வெள்ளத்து அனைய மலர்நீட்டம் என்றார்
வள்ளுவப் பெருந்தகை வாழ்வில் ஊக்கத்து
அளவோ உயர உயர அவர்தம்
உயர்வும் மிகுமென உயர்ந்த கருத்தைத்
தெள்ளிதின் உரைத்த தெய்வம் அன்றோ           10
ஊக்கு விப்பார் ஊக்கு வித்தால்
ஊக்கு விற்பான் தேக்கு விற்பான்
என்பார் பெரியோர் எத்துணை உண்மை
உள்ளம் இலாதவர் எய்தார் செல்வம்
உள்ளுஞ் செயலை உறுதியாய்ச் செய்ய              15
விளங்கா திருந்ததும் பிடிபடும் அதனை
ஆய்ந்து நோக்கி அகம்சேர்ப் போமே
ஐயா அப்துல் கலாஅம் அவர்தம்
மெய்வழி நின்று மேன்மை யுறுவோம்
உய்வழி செய்வோம் உலகின் புறவே                       20

Oct 4, 2021

மலையன்ன துன்ப வகைத்து

நலந்தானா உள்ளம் நகைமுகத்தாள் கேட்க
நலமே எனநா நவிலும் உளமோ
மலையன்ன துன்ப வகைத்து

Oct 3, 2021

தேங்காஅ நின்ற நினைவு

ஏங்காநின் றாளுமவன் எப்போது காண்பனெனத்
தாங்காஅ உள்ளத்துச் சாரத் தவிப்பவட்குள்
தேங்காஅ நின்ற நினைவு

தூங்கா விழியிரண்டில் தூணாவான் நெஞ்சுறைத்து
நீங்கா மொழிதன்னால் நீர்மையிலாச் சொல்பிதற்றித்
தேங்காஅ நின்ற நினைவு

ஆங்கா வலனென்(று) அகமுரைத்துத் தான்நீங்கத்
தேங்காதல் சொல்மொழிந்து தேடிவரு வன்பொருள்
தேங்காஅ நின்ற நினைவு