Sep 14, 2019

சோலைக் கவியரங்கம் - 9 (என்னதவம் செய்தோம்)

கவியரங்கத் தலைமை :
மரபு மாமணி பாவலர் மா. வரதராசன்
முன்னிலை :
பாவலர் கருமலைத் தமிழாழன்


தமிழ்வாழ்த்து

எழுதி எழுதிக் குவித்தாலும்
என்றன் ஆவல் தீராதே
விழுது பலவாய் விழுந்திருந்து
வீற்றி ருக்கும் ஆல்போலப்
பழுதே இல்லாப் பைந்தமிழே
பாரில் சிறந்து வாழியவே
விழுமம் துடைக்கும் புலவர்கள்
வெற்றி பெற்று வாழியவே

தலைமை வாழ்த்து

பட்டி தொட்டி எவ்விடத்தும்
பாட்டுத் தொட்டி கட்டியதில்
இட்டுக் கட்டி இன்னிசையை
ஈட்டித் தந்தாய் வாழியவே
சொட்டும் பாக்கள் குடிக்கவந்த
சொக்கிப் போகும் சுரும்பானேன்
கட்டித் தேனே வீரியமாங்
காட்டுத் தேனே வாழியவே

முன்னிலை வாழ்த்து

தமிழாழம் காண்கின்ற ஆவ லாலே
தரணிக்குத் தொண்டியற்றும் நல்ல நோக்கத்(து)
அமிழ்தான செந்தமிழை அகத்தில் ஏற்றி
அழகான பாக்களினால் மகிழ்விப் பாரே
தமிழ்க்கடலில் பலகலங்கள் செலுத்து வாரே
தமிழ்முத்தம் தானெடுக்க எண்ணி ஆழ
அமிழ்ந்திருக்கும் தமிழாழன் ஐயா வாழ்க
அகிலத்தில் நின்பெருமை வாழ்க வாழ்க

அவையடக்கம்

காவளர்த்துக் கனியீயும் கண்கண்ட தெய்வமெனும்
மாவரத ராசர்தம் மாண்புடைய தமிழவையில்
பாவடையைச் செய்தளிக்கப் பகுத்துள்ளம் கொணர்ந்தேனே
பாவளங்கொள் அவையோரே பாவாடை பொறுத்தருள்வீர்

என்னதவம் செய்தோம்

யான்பெரியன் யான்கவிஞன் யானே எல்லாம்
யாதொன்றும் என்னாலே இயலும் என்று
மீன்போலே மின்னுகின்ற வீறு கொண்டு
மேதினியில் கவிஞர்கள் பலரும் உண்டு
நானென்னும் ஆணவத்தில் ஆடு கின்ற
நாவினிக்கத் தான்பாடும் கவிஞர் உண்டு
தான்கொண்ட முயலுக்கு மூன்றே கால்தான்
தடுமாறும் வாழ்வினிலே வீழ்ந்தார் அந்தோ

இந்நிலையில் கற்பதனை மறந்தார் கூடி
இறவாத புகழுடைய இன்ற மிழ்க்குச்
செந்நிலையைச் சேர்க்கின்றோம் என்றே எண்ணிச்
செருக்கோடு சீர்குலைத்தார் தளைம றந்தார்
வந்தெழிலைக் கூட்டுகின்ற தொடைம றந்தார்
வழக்கொழித்தார் வகையின்றிப் புதிதாய்ச் செய்தார்
நந்தமிழின் அருமையினை அறியா தாரால்
நலிவுற்ற செய்யுள்கள் வருந்தும் அன்றே

நைந்திருக்கத் தானாநம் செய்யுள் இந்த
நானிலத்தைத் திருத்துவதோ எவ்வா றென்று
செய்வதறி யாதேங்கிச் சிந்தை செய்தார்
செவ்வழியைக் கண்டறிந்தார் வரத ராசர்
கையற்றுக் கதறுகிற நிலையோ மாறிக்
கனிந்திருக்கும் பூத்திருக்கும் காய்த்தி ருக்கும்
பைந்தமிழச் சோலையிது பிறந்த வாறு
பைங்கனியின் சாறுதனைப் பிழிந்து தந்தார்

பல்வகையாய்ப் பாக்களுண்டு பாக்க ளோடு
படர்ந்திருக்கும் கொடியாக இனங்க ளுண்டு
சொல்வகைமைச் சுவையுண்டு சிந்தும் பாக்கள்
சோர்வகற்றி உயிர்த்திருக்க வைக்கும் சந்தத்(து)
இல்லத்தில் புகுத்தியதன் பின்னே வண்ணம்
எழில்சேர்க்கக் கற்பிப்பார் எல்லை இல்லாச்
செல்வங்கள் குவிந்திருக்கும் குதிரும் உண்டு
செழித்திருக்க என்னதவம் செய்தோம் யாமே
              - பைந்தமிழ்ச் செம்மல் தமிழகழ்வன்