Nov 19, 2019

கவிதைப் பட்டிமன்றம்

ஈரோடு தமிழ்ச்சங்கத்தின் 30-ஆவது ஆண்டு விழாவில் புதுமையான முறையில் பாவலர் மா.வரதராசனார் அவர்களின் தலைமையில் பைந்தமிழ்ச்சோலைப் பாவலர் குழுவினரின் கவிதைப் பட்டிமன்றம் நடைபெற்றது.

கவிதையின் வெற்றிக்குப் பெரிதும் காரணம்...

சொற்சுவையே...

கவிஞர் மன்னை வெங்கடேசன்
கவிஞர் வள்ளிமுத்து
கவிஞர் தமிழகழ்வன்

பொருட்சுவையே...

கவிஞர் விவேக்பாரதி
கவிஞர் சாமிசுரேசு
கவிஞர் சுந்தரராசன்

சொற்சுவையே... கவிஞர் தமிழகழ்வன்

அந்தமிழ்த் தாயைப் போற்றி
   அடிமலர் வணங்கு கின்றேன்
இந்தநல் அவையி ருக்கும்
   இன்சொலர் யாவ ரையும்
வந்தனம் என்று கூறி
   வணங்குகின் றேனே தேனின்
சந்தமார் கவிதை செய்யும்
   கவிஞரை வணங்கு கின்றேன் 1

ஈரோடு தமிழச் சங்கம்
   என்றென்றும் வாழ்க வென்று
சீராட்டிச் சீர்கள் கூட்டிச்
   சிந்தைசேர் இன்பம் எல்லாம்
வேராக்கி விளைக்கும் பாக்கள்
   வியன்றமிழ்ப் பெருமை பேசப்
பாராட்டிப் போற்று கின்றேன்
   பாலனைய பால னையா 2

புன்னகையைப் பொன்னகையாய்ப் புனைந்தி ருக்கும்
   பொழிலாசான் எழிலாசான் வரத ராசர்
பொன்னடியைப் போற்றுகிறேன் உண்மை பாடிப்
   புத்துலகம் படைக்கின்ற வெங்க டேசர்
நன்கவிந்த கவியாலே நலஞ்சேர்க்கின்ற
   நன்முத்துச் சொன்முத்து வள்ளி முத்து
மன்னர்கள் இங்கிருக்க மனம கிழ்ந்தேன்
   மங்காத தமிழாலே கவிதை செய்தேன் 3

எதிரணியில் நின்றெம்மை ஏய்க்கத் தானே
   எடுப்பாரே பொருட்சுவையென் றெண்ணி யெண்ணி
அதிரடியாய்க் கவிபாடும் விவேகங் கொண்ட
   அருளாள்வான் பாரதியே வாழ்க வாழ்க
புதிதாகச் சுவைகூட்டும் பாங்கில் பாடும்
   புதுமைமொழி சாமிசுரேசு வாழ்க வாழ்க
விதவிதமாய்க் கவிசெய்யும் அழகு வேந்தன்
   வித்தகரே சுந்தரரே வாழ்க வாழ்க 4

******
புவியில் மனிதன் போற்றிச் செய்யும்
கவிதை சிறக்கக் காரணம் எதுவோ?

சொல்லா? பொருளா? சுவைமிகுந் ததுவே
சொல்வீர் புலவீர்! சிந்தனை செய்தே!

சுவைபடச் சொல்க என்பதே வழக்கு!
சுவைபடப் பொருளுரை என்பதா வழக்கு?

பொருண்மை தெரிதலும் சொன்மை தெரிதலும்
சொல்லின் ஆகும் என்மனார் புலவர்
அத்தகு சொல்லின் அருஞ்சிறப் புகளை
இத்தகு மவையில் இனிதாய் உரைப்பேன்

பெயரே வினையே இடையே உரியே
எனநால் வகைமை உடைய தாகும்
இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொல்
எனவும் நான்கு வகைமைய தாகும்
ஒருசொல் கூறிப் பலபொருள் செய்தலும்
பலசொல் கூறி ஒருபொருள் செய்தலும்
திணைபால் இடமொடு காலம் உணர்த்தலும்
ஆகு பெயரும் வேற்றுமைப் படுத்தலும்
தோகை விரிக்கும் மயிலைப் போலத்
தொகைவிரி எனஇரண் டாக நிற்றலும்
சொல்லாண் மையின் சொக்கும் அழகே!

ஐயன் வள்ளுவன் அழகாய் உரைப்பார்
கேட்டார்ப் பிணிக்கும் தகைமை உடையதும்
கேளாரும் விரும்ப மொழிவதும் சொல்லே

சொல்லுதல் எங்ஙனம் சிறக்கும் என்றால்
சொல்லலின் குற்றம் நீக்கும்போதே
நின்று விளக்கம் வேண்ட விடுத்துக்
குன்றக் கூறலும் குன்றக் கூற
வேண்டிய பொருளை விரித்துக் கூறலும்
தாண்டிய பின்னும் தடுத்து மீண்டும்
கூறிய கூறலும் கொண்டன விடுத்து
மாறு கொள்ளலும் வழுவுடைச் சொல்லை
ஏற்றிக் கூறலும் இடந்தடு மாறலும்
போற்றத் தகாதன பொதித்து வைத்தலும்
ஒன்றை விடுத்து வேறொன்று கூறலும்
தொடங்கும் போது சரியே முடிவைத்
தொடும்போ(து) அழிந்து போதலும் தோன்றும்
சொல்லோ பயக்கா திருத்தலும் ஆகிய
பத்துக் குற்றம் பார்த்து நீக்கிச்
சுவைபடச் சொல்வர் சொல்லேர் உழவர்

பின்னும்

வெல்லும் சொல்லே உலகில் இலையெனச்
சொல்லும் அழகைத் தொகுப்பர் பத்தாம்
சுருங்கக் கூறலும் விளங்க வைத்தலும்
அருஞ்சொல் அறைய இன்பம் பயத்தலும்
நல்ல சொல்லை நாட்டலும் ஓசை
வெல்லம் போலே வேட்கை மிகுத்தலும்
நுண்மையும் நுவலும் முறைமையும் உலகம்
அண்ணுதற் கெளிதாய் அமைதலும் சிறந்த
பொருளைத் தருதலும் பொருள்பொதி சான்றோர்
அருள்வழி வைத்தலும் ஆகிய பத்தே

அவ்வழிச் சொல்லின் அழகை ஆய்ந்து
செவ்வழி செய்வார் செந்தமிழ்ப் புலவோர்
சொற்கள் பலவாய்க் கிளைத்துக் கிளைத்துச்
சொக்க வைக்கும் அழகைக் காண்பீர்
பொருளோ பலவாய்க் கிளைக்கக் கிளைக்கப்
பொருண்மை சிதைந்து புதைந்தே போகும்

சொல்ல வந்த கருத்தை மட்டும்
சொல்ல மெல்ல மறையும் அதனை
அழகை ஏற்றி அலங்கரித் தாலோ
பழகுதற் கினிமை பன்னெடுங் காலம்
அழியா திருக்கும் அதனை எண்ணி
எதனுள் புகுத்தி எப்படிச் சொல்ல
விதமாய் விளையும் உலகில் நிலைக்கும்
என்றாய்ந்(து) உரைத்தவை எழிலார் சொற்கள் 5

வில்லி னின்று பறக்கின்ற
   வீரி யங்கொள் அம்பைப்போல்
சொல்லைத் தேர்ந்து சொக்கிப்போய்ச்
   சுவையாய் உரைக்கும் புலவர்தம்
சொல்லால் இன்பம் கொண்டாடச்
   சுடராய் விளங்கும் உளக்கோயில்
எல்லை இல்லாப் பேரின்பம்
   எல்லாம் சொல்லால் அறிவீரே 6

பொருளில் எங்கே சுவையுளது?
   பொதிந்த பொருளை எடுத்துரைக்க
அருளும் சொல்லே! அஃதன்றி
   ஆக்கம் இல்லை அறிவீரே
மருளும் அருளும் யாவையுமிம்
   மனங்கொள் சொல்லின் துணையாலே
பொருளைத் தேடிச் செல்வோர்க்குப்
   பொருள்இல் பாட்டே முன்தோன்றும் 7

எழுத்தும் சொல்லும் இன்றி
   எப்படிப் பொருளு ரைப்பார்
எழுந்த சுவையா தென்றே
   எண்ணிப் பொருளைப் பார்த்தேன்
எழுந்த யாவும் சொல்லை
   எதிர்க்க வியலா துறையும்
அழுத்திச் சொல்வேன் ஐயா
   அழகு சொல்லே சொல்லே! 8

சொல்லை இடமாற்றிப் போட்டுச்
   சுற்றி விடச்செய்தால் போதும்
எப்படி?
கரையாடக் கெண்டை கயத்தாட மஞ்ஞை
சுரையாழ அம்மி மிதப்ப - வரையனைய
யானைக்கு நீத்து முயற்கு நிலையென்ப
கானக நாடன் சுனை
இப்படிச்
சொல்லை இடமாற்றிப் போட்டுச்
   சுற்றி விடச்செய்தால் போதும்
இல்லை பொருளெங்கே என்பார்
   இறப்பார் பொருள்தேடி நாளும்
சொல்லைச் சீரமைத்து வைத்துப்
   சொக்கும் பொருள்கோளை வைத்துச்
சொல்லின் அரும்பெருமை ஏற்கும்
   சுழலும் புவிநாளும் ஐயா 9

பொருளில் விளங்கும் நயங்களினைப்
   பொதித்தல் சொல்லால் இயன்றிடுமா?
அருள்கூர்ந்(து) இந்தக் கதைகேளீர்
   அடர்ந்த காட்டில் இராமன்தான்
அருளும் குகனின் உள்புகுந்தான்
   அவனைத் தொடர்ந்த பரதன்மேல்
பொருந்தா திருந்து சினங்கொண்டு
   பொங்கும் குகன்சொல் கேட்பீரே 10

ஆழ நெடுந்திரை யாறு கடந்திவர் போவாரோ
வேழ நெடும்படை கண்டு விலங்கிடு வில்லாளோ
தோழமை என்றுஅவர் சொல்லிய சொல்ஒரு சொல்லன்றோ
ஏழமை வேடன் இறந்திலன் என்றெனை ஏசாரோ

அஞ்சன வண்ணனென் ஆருயிர் நாயகன் ஆளாமே
வஞ்சனை யால்அர செய்திய மன்னரும் வந்தாரே
செஞ்சரம் என்பன தீயுமிழ் கின்றன செல்லாவோ
உய்ஞ்சிவர் போய்விடி னாய்க்குக னென்றெனை ஓதாரோ

தகரப் பாட்டுக் கோர்தலைவன்
   தமிழைத் தாங்கி மகிழ்ந்தானே
அகர முதலாய் அவன்வாங்கி
   அகத்தில் ஏற்றி அழகாகப்
புகழும் வண்ணம் கவிசெய்தான்
   புலவன் சொல்லைக் கேட்போமா?
இகழ்தல் அவன்றன் போக்காமே
   இனிமை சேர்க்கும் சொல்லாலே 11

கருக்கூடி அப்பொழுதே பொழியும் மேகம்
   காளமேகம் மதுமேக மயக்கந் தானே
ஒரு கூத்தைக் கேட்டீரோ நச்சுப் பாம்பை
   ஒருகயிறாய் ஆக்கித்தான் பூண்ட நாதன்
தெருத்தெருவாய்ப் பிச்சையெடுத்து உண்ணச் சென்றும்
   தேர்ந்தெடுத்த காளம்மேளம் குஞ்ச ரத்தோ(டு)
இருந்தானே எனவஞ்சப் புகழ்ச்சி செய்தான்
   இதுவன்றோ சொல்வன்மை இன்பம் இன்பம் 12

தாதி தூதோ தீதென்றும்
   தத்தை தூ(து)ஓ தாதென்றும்
தூதி தூதும் ஒன்றென்றும்
   துத்தி தத்தாதே யென்றும்
ஆதி வரதன் அறைந்(து)ஆனார்
   அழகு காள மேகமென
நீதி உரைப்பீர் ஐயாவோ
   நிறைந்த சொல்லே சிறப்பென்று 13

நன்றி நன்றி எனக்கு இந்த
   நல்ல வாய்ப்பைத் தந்தமைக்கு
நன்றி நன்றி ஈரோட்டுத்
   தமிழச் சங்கப் பேரவைக்கு
நன்றி நன்றி பாலன்ஐயா
   நன்றி நன்றி வரதன்ஐயா
பொன்றும் வரையில் தமிழ்பேசிப்
   பொத்திப் பொத்திக் காப்போமே 14

Oct 14, 2019

சோலை விழா - திருவண்ணாமலை - கவிப்பொழிவு

கவிஞர் தமிழகழ்வன்

தமிழ் வாழ்த்து

மாறாத பேரின்பம் மனஞ்சேர வெனையாளும்
ஆறாகப் பேரருவித் தேராகத் தேருள்ளப்
பேறாகப் பாவலர்தம் பாவாக நாவாகக்
கூறாக வுயிர்தன்னுள் குடிகொள்ளும் தமிழ்வாழி! 1

அவையடக்கம்

நன்கவி நற்கவி நாடியோர் முன்பென்
புன்கவி புகுமெனப் புகுந்தனன்; புலவோர்
இன்கவி இயற்றுவர்; எளிதினில் இயலா(து)
என்கவி இயற்றுவன்? எனைப்பொறுத் தருள்க 2

பைந்தமிழ்ச் சோலை

தமிழண்டா தமிழண்டா என்று சொல்வார்
தமிழ்மொழியை அண்டாவில் தூக்கிப் போட்டுத்
தமிழ்வளர்ப்போம் தமிழ்வளர்ப்போம் என்று சொல்லும்
தமிழறிஞர் பலருண்டு தமிழ்நன் னாட்டில்
அமிழ்தான தமிழ்மொழியின் வளமை யான
அடுக்கடுக்காய்க் காய்நகர்த்தி ஆடும் ஆட்டம்
இமைப்பதுவும் நொடிப்பதுவும் கணக்கா கும்மே
இதையறியான் எங்ஙனந்தான் தமிழ்வளர்ப்பான் 3

எழுத்தசைந்து சீராகித் தளைந்து நிற்கும்
எண்ணியெண்ணி அடிநிற்கும் தொடுத்த மாலை
கழுத்துக்குப் புகழ்சேர்க்கும் கவினைச் சேர்க்கும்
கணக்கறியா தியற்றுவது கவிதை யாமோ?
பழுத்ததமிழ் பாதைமாறிப் போதல் நன்றோ?
பாக்கள்ளைக் குடிப்பதற்குப் பணம்வேண் டும்மோ?
விழுவதுவோ? வீணரெனத் திரிதல் நன்றோ?
விருப்புற்று மரபினிலே கவிதை செய்வோம் 4

எனவெழுந்த பைந்தமிழச் சோலை இஃதே
எழிலாகப் பாவியற்றப் பயிற்சி தந்து
கனவுகளை நிறைவேற்றும் செம்மை செய்யும்
கடிதினிலே பாட்டியற்ற வைக்கும் சந்தம்
மனத்தினிலே பதிப்பிக்கும் வண்ணப் பாட்டு
மனம்பொருந்தப் பாடவைக்கும் மகிழ்ச்சி கூட்டும்
தனனதன தானான தடங்க லின்றித்
தந்துசுவை கூட்டுமுயிர் வாழ்வி னுக்கே 5

வாய்க்க ரும்பது வாய்தவக் கோளது
வாய்த்தி கழ்ந்திரு மாமழை மாமலை
வாய்க்கொ ழுந்தது மாமணி வாய்த்திரு
வாய்ச்சிந் துந்தமிழ் வானெனுஞ் சோலையே! 6
நின்றது நெஞ்சினில் நேயம்; விட்டெனைச்
சென்றது துயர்வழித் தேங்கல்; புலவரின்
மன்றினில் நிற்குமிம் மாயம் செய்தது
கன்றுளங் காட்டிய காவின் இனிமையே 7

இனியன வாகிய ஈயுஞ் சோலையே
நனிவளர் செம்மையை நல்குஞ் சோலையே
பனிநுனி நெடும்பனை பார்க்கும் சோலையே
தனித்திறம் கொண்டுளஞ் சாரும் சோலையே 8

பைந்தமிழ்ச் சோலைப் பாவலர் மாலை
பார்ப்பவர் யாரையும் ஈர்க்கும்
ஐந்திலக் கணத்தின் அகத்தினை யெளிதில்
அறியநல் உய்வழி காட்டும்
நைந்துவி டாது செய்யுளின் திறத்தை
நானிலத் துக்குணர்த் தும்மே
பைந்தமிழ்ச் சோறு பகிர்ந்துணு மாறு
பண்பொடு படைத்துயர் வோமே! 9

நாடு நெஞ்சினை நாடிவி ரைந்தரு
நாவில் நேர்நிரை நாட்டியம் ஆடுயர்
சூடு பாமலர் சுந்தரத் தேனிலா
சுற்றும் பூமியில் கால்பட வேநிலார்
வீடு பேறளி வித்தக மாமறை
விந்தைப் பேரொளிப் பைந்தமி ழாமறை
காடு; செய்யுளச் செய்யுடம் சோலையே
கன்று போலுளம் கொண்டவன் மாலையே! 10

சோலையை ஆற்றுப்படுத்தல்

நற்றமிழ்ப்பாச் சுமந்துவரும் நல்லுள்ளத் தென்றலிடம்
"பொற்றமிழில் பாட்டிசைக்கும் புலவன்யார்?" எனக்கேட்டேன்
"அற்றமிலாப் பைந்தமிழின் சோலையென ஒன்றுண்டு
சிற்றுளியாய் வந்தாரும் சிறப்பாகப் பாவடிக்கக்
கற்பிக்கும் பெருஞ்செயலில் கனிவுதனைக் கனியாக்கி
நற்றுணையாய் நிற்கின்ற நல்லதமிழ்ச் சோலையிலே
கற்றுவரும் கனியாகக் கவிஞர்கள் பலருண்டு
முற்றுமுணர்ந் தாயாநீ முகிழ்ப்பவெலாம் எங்கிருந்து?" 11

பைந்தமிழ்ச்சோலை வாழ்த்து

நல்லதமிழ்ச் சோலையிது நாவாரப் பாடுமிது
சொல்லில்வளம் சேர்க்குமிது சோர்வின்றி உழைக்குமிது
பல்சுவையில் பாட்டிசைக்கும் பாவல்லோர் கூடலிது
பல்கலையாய்ப் பாவளர்க்கும் பைந்தமிழச் சோலையிதே! 12

மலைக்கவைத்த யாப்புகளை வகுத்தெளிதாய்த் தேனாக்கி
உலகமுழு(து) ஒண்டமிழை ஓங்கச்செய் பைந்தமிழின்
பலவிதமாய்ப் பலநாள்கள் காய்காய்கள் கனிகனிகள்
அலகிலவாய் அளிக்கின்ற அருஞ்சோலை வாழியவே 13

காவலர் பூமி வாழ்க கதிரவன் மதியம் வாழ்க
நாவளர் சொற்கள் வாழ்க நகையுளங் கற்க வாழ்க
காவளர் கவிஞர் வாழ்க கனிந்துள கவிஞர் வாழ்க
பாவலர் மாலை வாழ்க பைந்தமிழ்ச் சோலை வாழ்க 14

ஆழ்தமிழ் கற்று வாழ்க

வாழ்க்கையில் வாய்க்கும் யாவும்
   வகைவகை அறிந்து வாழ்க
தாழ்ச்சிகொள் எண்ணம் வேண்டா
   தரணியே உனக்கா கத்தான்
காழ்ப்புணர் வகன்றோ டட்டும்
   காய்ப்பன காய்ந்தோ டட்டும்
ஆழ்தமிழ் கற்று வாழ்க
   அகமகிழ் வோடு வாழ்க

Sep 14, 2019

சோலைக் கவியரங்கம் - 9 (என்னதவம் செய்தோம்)

கவியரங்கத் தலைமை :
மரபு மாமணி பாவலர் மா. வரதராசன்
முன்னிலை :
பாவலர் கருமலைத் தமிழாழன்


தமிழ்வாழ்த்து

எழுதி எழுதிக் குவித்தாலும்
என்றன் ஆவல் தீராதே
விழுது பலவாய் விழுந்திருந்து
வீற்றி ருக்கும் ஆல்போலப்
பழுதே இல்லாப் பைந்தமிழே
பாரில் சிறந்து வாழியவே
விழுமம் துடைக்கும் புலவர்கள்
வெற்றி பெற்று வாழியவே

தலைமை வாழ்த்து

பட்டி தொட்டி எவ்விடத்தும்
பாட்டுத் தொட்டி கட்டியதில்
இட்டுக் கட்டி இன்னிசையை
ஈட்டித் தந்தாய் வாழியவே
சொட்டும் பாக்கள் குடிக்கவந்த
சொக்கிப் போகும் சுரும்பானேன்
கட்டித் தேனே வீரியமாங்
காட்டுத் தேனே வாழியவே

முன்னிலை வாழ்த்து

தமிழாழம் காண்கின்ற ஆவ லாலே
தரணிக்குத் தொண்டியற்றும் நல்ல நோக்கத்(து)
அமிழ்தான செந்தமிழை அகத்தில் ஏற்றி
அழகான பாக்களினால் மகிழ்விப் பாரே
தமிழ்க்கடலில் பலகலங்கள் செலுத்து வாரே
தமிழ்முத்தம் தானெடுக்க எண்ணி ஆழ
அமிழ்ந்திருக்கும் தமிழாழன் ஐயா வாழ்க
அகிலத்தில் நின்பெருமை வாழ்க வாழ்க

அவையடக்கம்

காவளர்த்துக் கனியீயும் கண்கண்ட தெய்வமெனும்
மாவரத ராசர்தம் மாண்புடைய தமிழவையில்
பாவடையைச் செய்தளிக்கப் பகுத்துள்ளம் கொணர்ந்தேனே
பாவளங்கொள் அவையோரே பாவாடை பொறுத்தருள்வீர்

என்னதவம் செய்தோம்

யான்பெரியன் யான்கவிஞன் யானே எல்லாம்
யாதொன்றும் என்னாலே இயலும் என்று
மீன்போலே மின்னுகின்ற வீறு கொண்டு
மேதினியில் கவிஞர்கள் பலரும் உண்டு
நானென்னும் ஆணவத்தில் ஆடு கின்ற
நாவினிக்கத் தான்பாடும் கவிஞர் உண்டு
தான்கொண்ட முயலுக்கு மூன்றே கால்தான்
தடுமாறும் வாழ்வினிலே வீழ்ந்தார் அந்தோ

இந்நிலையில் கற்பதனை மறந்தார் கூடி
இறவாத புகழுடைய இன்ற மிழ்க்குச்
செந்நிலையைச் சேர்க்கின்றோம் என்றே எண்ணிச்
செருக்கோடு சீர்குலைத்தார் தளைம றந்தார்
வந்தெழிலைக் கூட்டுகின்ற தொடைம றந்தார்
வழக்கொழித்தார் வகையின்றிப் புதிதாய்ச் செய்தார்
நந்தமிழின் அருமையினை அறியா தாரால்
நலிவுற்ற செய்யுள்கள் வருந்தும் அன்றே

நைந்திருக்கத் தானாநம் செய்யுள் இந்த
நானிலத்தைத் திருத்துவதோ எவ்வா றென்று
செய்வதறி யாதேங்கிச் சிந்தை செய்தார்
செவ்வழியைக் கண்டறிந்தார் வரத ராசர்
கையற்றுக் கதறுகிற நிலையோ மாறிக்
கனிந்திருக்கும் பூத்திருக்கும் காய்த்தி ருக்கும்
பைந்தமிழச் சோலையிது பிறந்த வாறு
பைங்கனியின் சாறுதனைப் பிழிந்து தந்தார்

பல்வகையாய்ப் பாக்களுண்டு பாக்க ளோடு
படர்ந்திருக்கும் கொடியாக இனங்க ளுண்டு
சொல்வகைமைச் சுவையுண்டு சிந்தும் பாக்கள்
சோர்வகற்றி உயிர்த்திருக்க வைக்கும் சந்தத்(து)
இல்லத்தில் புகுத்தியதன் பின்னே வண்ணம்
எழில்சேர்க்கக் கற்பிப்பார் எல்லை இல்லாச்
செல்வங்கள் குவிந்திருக்கும் குதிரும் உண்டு
செழித்திருக்க என்னதவம் செய்தோம் யாமே
              - பைந்தமிழ்ச் செம்மல் தமிழகழ்வன்

Aug 15, 2019

தமிழில் பெயர் வைப்பது எப்படி? - சில கருத்துகள்

பைந்தமிழ்ச் செம்மல்
தமிழகழ்வன் சுப்பிரமணி

1. தமிழ்ப்பெயரிட விரும்பாத தமிழர்கள்

அன்னைத் தமிழே! அமிழ்தத் தமிழே!
உன்னை யன்றி ஒன்றும் அறியேன்!

வடசொற் கலப்பின்றி அழகான தமிழ்ப்பெயரைத் தம் குழந்தைக்கு வைக்க, இக்காலத் தமிழர்களுக்குத் துணிவில்லை.

அழகாய்த் தமிழில் பெயர்வைத்தல்
   ஆகா(து) என்றே திரிகின்ற
பழகாத் தமிழன் பெருமையெலாம்
   பாருக்(கு) உரைக்க நான்வருவேன்
அழகே தமிழாம் அதைவிட்டெங்(கு)
   அழகைத் தேடிச் செல்கின்றீர்
பழகப் பழகத் தான்தெரியும்
   பழமும் பாலும் தமிழென்றே

முதலில் 'நல்ல தமிழ்ப்பெயர் சொல்லுங்கள்' என்பார்கள். ‘இரண்டு, மூன்று எழுத்துகளில் வருமாறு சிறிய பெயராக இருக்க வேண்டும்’ என்பார்கள். மூன்று எழுத்துகளுக்கு மேலுள்ள பெயர்களை வைத்தால் அவர்களது வாயில் நுழையாமல் போய்விடுமா? பெயர் புதுமையாக இருக்க வேண்டும் என்பார்கள். என்ன பெயர் சொன்னாலும் அது பழையதாக இருக்கிறதே என்பார்கள். தமிழ்மொழி பழைமையானதே என்பது அவர்களுக்குப் புரிவதில்லை. அவர்கள் புதுமை என்று, பெயரில் எதிர்பார்ப்பதெல்லாம் ஷ, ஹ, ஜ, ஸ, க்ஷ, ஶ்ரீ என்ற ஆறில் ஓரெழுத்தாவது இருக்க வேண்டும் என்பதே. அப்படி அமைந்தாலும் அமையாவிட்டாலும், இணையத்தில் தேடி எப்படியாவது ஒரு வடசொல்லையே தேர்ந்தெடுப் பார்கள். மக்களுக்குப் புரிகின்ற எளிய தமிழ்ச் சொற்கள் எல்லாம் பழையதாய்ப் போய்விட்டன. புரியாத சமற்கிருதச் சொற்களெல்லாம் புதியதாய்த் தென்படுகின்றன. இப்படித்தான் இருக்கிறது இன்றைய தமிழ்நாட்டின் நிலை.

"எங்கும் தமிழ்; எதிலும் தமிழ்" என்று பேசுபவரை, 'நடைமுறைக்கு ஒத்துவராத ஏதோ செயலைச் செய்கின்றார்' என்னும் நோக்கில் நோக்கு கின்றனரோ? அந்நியத் தாக்கத்தால் அந்த அளவுக்கா வழக்கொழிந்து போய்விட்டது தமிழ்? பேச்சளவில் நின்றுவிடாமல், செயலில் காட்டுவோர் எத்தனை பேர்? தமிழா! எப்போது விழிக்கப் போகிறாய்?

தொல்காப்பியரும், நன்னூலாரும் சொல்லும் மொழிமுதல் எழுத்துகளை மதியாமல், சோதிடம் கூறுகின்ற மொழிமுதல் எழுத்துகளை ஏற்றுக் கொள்ளும் அந்த நொடியில், நீங்கள் தமிழர் என்பதை மறந்துவிடுகின்றீர்.

அங்ஙனம் மொழிமுதல் எழுத்துகளை மறந்து, சோதிடம் குறிப்பிடும் பெயருக்கான முதல் எழுத்துகளைக் கொண்டே பெயர்வைக்கும் பழக்கம் தோன்றியதும், அந்நிய ஆதிக்கம் மேலோங்கியதற்குக் காரணம் ஆகும். இப்போது தமிழில் பெயர் வைப்பது எப்படி எனக் கட்டுரை எழுதும் நிலைக்கு நாம் வந்துவிட்டோம்.

2. தமிழில் பெயர் வைப்பது எப்படி?

தமிழில் பெயரிட விரும்புவோர் பின்வருவன வற்றைக் கருத்தில் கொள்ளலாம்.

 தமிழ்ச் சொல்தானா என்பதை உறுதி செய்ய, சொல்லின் வேர்ச்சொல்லைத் தேடிப் பாருங்கள்.

 பெயர்ச்சொற்களுக்கான விகுதிகளைக் கருத்தில் கொள்ளுங்கள்.

 தமிழிலக்கியங்களில் இடம்பெற்ற பெயர்களின் அமைப்பையும் அழகையும் கருத்தில் கொள்ளுங்கள்.

 மொழிமுதல் எழுத்துகள், மொழி இறுதி எழுத்துகள், மெய்ம்மயக்கம் போன்ற விதிகளைக் கருத்தில் கொள்ளுங்கள்.

 இவ்விதிகளை அடிப்படையாய்க் கொண்டு நன்னூலார் செய்த வடமொழியாக்கப் பகுதிகளைக் கருத்தில் கொள்ளுங்கள். எடுத்துக்காட்டாக, ஆகாரத்தில் பெயர் முடிவது, தமிழ்ப்பெயர் முறைமையாக இருக்காது என்பது என் எண்ணம். தமிழ்ச்சொற்கள் பலவற்றை வடமொழிப் படுத்த, இந்த ஆகார நீட்சி பயன்பட் டிருக்கிறது. இகரம், ஐகாரத்தில் முடிவது போலப் பெண்களுக்கான பெயர்களைத் தேர்ந்தெடுக்கலாம். எழிலி (இகர இறுதி); ஆதிரை, மேகலை (ஐகார இறுதி) என்பன போல.

3. 27 விண்மீன்களுக்கும் வரையறுக்கப் பட்டுள்ள தமிழ் எழுத்துகள்

தொல்காப்பியமும், நன்னூலும் எடுத்துச் சொன்ன, வடசொற்களைத் தமிழ்ப்படுத்தும் விதிகளுக்கு உட்பட்டுச் ‘சோதிட கிரக சிந்தாமணி’ என்னும் நூல் பல சொற்களைத் தமிழ்ப்படுத்தி நமக்கு வழங்கி இருக்கிறது. சோதிடத்தில் ஒவ்வொரு விண்மீன் கூட்டத்திற்கும் நந்நான்கு எழுத்துகளைக் கொடுத்து, மொழிமுதலாக வைத்துக்கொள்வது வழக்கம். அவற்றில் வடவெழுத்துகளும் கலந்திருப்பதனால், தமிழ் எழுத்துகளை மட்டுமே கொண்ட பட்டியலை இந்நூல் பரிந்துரைக்கிறது. சோதிட முறைப்படித்தான் பெயர்வைக்க வேண்டுமென்று எண்ணுவோர் இந்தப் பட்டியலைக் கருத்தில் கொள்ளலாம்.

கார்த்திகை
அ, ஆ, இ, ஈ
உரோகிணி
வ, வா, வி, வீ
மிருகசீரிடம்
வெ, வே, வை, வௌ
திருவாதிரை
கு, கூ
புனர்பூசம்
கெ, கே, கை
பூசம்
கொ, கோ, கௌ
ஆயிலியம்
மெ, மே, மை
மகம்
ம, மா, மி, மீ, மு, மூ
பூரம்
மொ, மோ, மௌ
உத்திரம்
ப, பா, பி, பீ
அத்தம்
பு, பூ
சித்திரை
பெ, பே, பை, பொ, போ, பௌ
சுவாதி
த, தா
விசாகம்
தி, தீ, து, தூ, தெ, தே, தை
அனுடம்
ந, நா, நி, நீ, நு, நூ
கேட்டை
நெ, நே, நை
மூலம்
யு, யூ
பூராடம்
உ, ஊ, எ, ஏ, ஐ
உத்திராடம்
ஒ, ஓ, ஔ
திருவோணம்
க, கா, கி, கீ
அவிட்டம்
ஞ, ஞா, ஞி
சதயம்
தொ, தோ, தௌ
பூரட்டாதி
நொ, நோ, நௌ
உத்திரட்டாதி
யா
இரேவதி
ச, சா, சி, சீ
அச்சுவினி
சி, சூ, செ, சே, சை
பரணி
சொ, சோ, சௌ

Jul 22, 2019

பைந்தமிழ்க் குருத்து

என்னதவம் செய்தேனி யானிங்கே மேன்மைமிகு
பொன்னான பைந்தமிழக் குருத்துக்குத் தகுதிபெற
அன்னையென விளங்குகிறாள் அந்தமிழாள் வணங்குகிறேன்
மன்னவரே மாவரத மாமுனியே வணங்குகிறேன்

பொன்னாய் ஒளிரும் பசுமை நிறைந்து வளர்ந்தெழிலே
மின்னாய் அமிழ்தே மெருகே றியதன் கருவினையே
உன்னால் வளர்ந்தேன் ஒளிர்ந்தேன் மிளிர்ந்தேன் உனதருளே
இன்னும் பலரின் இயல்கவிப் பேற்றை வளர்த்திடவே

Jul 15, 2019

விதியாலே உழலாதீர் (தரவு கொச்சகக் கலிப்பா)

விடியாது நாளென்று விதியாலே உழலாதீர்
முடியாத போராலே முடிவாக நாம்சொல்வோம்
படியாகும் துயர்யாவும்; பதராகும் படையாவும்
அடியாது தமிழன்றோ? அதன்வழியே நடப்போமே!

வடசொற் கிளவி வடவெழுத்து ஒரீஇ – 5

பைந்தமிழ்ச்செம்மல்
தமிழகழ்வன் சுப்பிரமணி

தமிழ்ப்பற்றுடையோரே! வணக்கம்!

வடசொற்கள் தமிழில் வந்து அமையும்போது எவ்வாறெல்லாம் திரியும் என்பதைப் பற்றிப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். தொடர்ச்சியாக, இன்னும் சில விதிகளை மனத்திற் கொள்வோம்.

  •  தமிழில் 'ர'கர, 'ல'கரம் மொழிமுதலில் வராது என்பதனால், 'ர'கர முதல் வடசொற்கள் தமிழில் அ, இ, உ என்ற எழுத்துகளை முதலாகப் பெறும். 'ல'கர முதல் வடசொற்கள் தமிழில் இ, உ என்ற எழுத்துகளை முதலாகப் பெறும்.
நன்னூல்:
ரவ்விற்கு அம்முதல் ஆமுக் குறிலும்
லவ்விற்கு இம்முதல் இரண்டும்
… மொழிமுதல்
ஆகிமுன் வருமே.

குறிப்பு:
௧. கீழ்க்காணும் எடுத்துக்காட்டுகளில், சில தமிழ்ச் சொற்களும், வடசொற்களைப் போல் ரகர முதலோடு திரிக்கப்பட்டிருக்கலாம்.
௨. வடசொற்கள் மட்டுமின்றிப் பிறமொழிச் சொற்களையும் இந்த விதிப்படி ஆளலாம்.

Raktha - அரத்தம், இரத்தம்
Rathana – இரத்தினம்
Ramba - அரம்பை
Ramya - அரமியம்
Rahasya - இரகசியம்
Rakshashaa - இராக்கதன்
Radha - இராதை
Ram - இராமன்
Ramayana - இராமாயணம்
Ravana - இராவணன்
Raj – இராசன்
Revathi - இரேவதி
Roman - உரோமம்

Lagna - இலக்கினம்
Laksha - இலக்கம், இலட்சம்
Lakshana - இலட்சணம்
Lakshman - இலக்குவன்
Lakshmi - இலக்குமி
Lanka - இலங்கை
Laddu - இலட்டு
Latin - இலத்தீன்
Laya - இலயம்
Lalitha - இலலிதை
Lavanga - இலவங்கம்
Laada - இலாடம்
Laaba - இலாபம்
Laavanya - இலாவண்யம்
Ligitha - இலிகிதம்
Linga - இலிங்கம்
Leela - இலீலை
Loga - உலகம்
Loba - உலோபன்
Loha - உலோகம்
  • தொல்காப்பியர் காலத்தில், ‘ய’கர வரிசையில் யா என்னும் நெடில் ஒன்றே மொழிமுதலாகும். மற்ற பதினொன்றும் மொழிமுதலாகா.
தொல்காப்பியம்:
ஆவோடு அல்லது யகரம் முதலாது.

யா, யாண்டு, யாணர், யாத்தல், யாப்பு, யாம், யார், யாழ், யாறு, யான், யானை…

நன்னூலார் காலத்தில், யகர வரிசையில் ய, யா, யு, யூ, யோ, யௌ என்னும் ஆறும் மொழிமுதலாகும். யி, யீ, யெ, யே, யை, யொ ஆகிய ஆறும் மொழிமுதலாகா.

நன்னூல்: அஆ உஊ ஓஔ யம்முதல்.

நன்னூலின்படி, வடசொற்களைத் தமிழ்ப்படுத்தும் போது, யகர வரிசையை முதலெழுத்தாகக் கொண்ட சொற்களுக்கு, இகரம் மொழிமுதலாக வரும்.

நன்னூல்: யவ்விற்கு இய்யும் மொழிமுதல் ஆகிமுன் வருமே.

Yaksha – இயட்சன், இயக்கன்
Yasodha – இயசோதை
Yandhra – இயந்திரம்
Yama – இயமன்
Yamaga – இயமகம்
Yesu (Jesus) – இயேசு (பிறமொழிச்சொல்)
  • ஆனாலும் பல வடசொற்கள் இகரம் சேர்க்கப்படாமலும் வழங்கப்படுகின்றன.
Yaaga – யாகம்
Yathriga – யாத்திரிகன்
Yadhava – யாதவன்
Yuga – யுகம்
Yukthi – யுத்தி
Yudha – யுத்தம்
Yuva – யுவன்
Yuvaraja - யுவராசன்
Yoga – யோகம்
  • யகரம் அகரமாகவும், எகரமாகவும் திரிக்கப்படுவதும் உண்டு.
Yasodha – அசோதை
Yandhra – எந்திரம்
Yama – எமன்
Yajamana – எசமான்
  • வடமொழியில் ‘மெய்யை அடுத்து யகரமோ, ரகரமோ, லகரமோ’ இணைந்து ஓரெழுத்தாய் (கூட்டெழுத்து) அமையுமாயின், தமிழில் வழங்கும்பொருட்டு, இகரம் தோன்றும்.
நன்னூல்:
இணைந்தியல் காலை யரலக்கு இகரமும்

௧. மெய்யை அடுத்துவரும் யகரம்

‘த்யா’க – தியாகம்
வா’க்ய’ - வாக்கியம்
பா’க்ய’ – பாக்கியம்
ச’த்ய’ – சத்தியம்
நி’த்ய’ - நித்தியம்
வா’த்ய’ – வாத்தியம்
ஆர்ய – ஆரிய
ரம்ய – அரமியம்

௨. மெய்யை அடுத்துவரும் ரகரம்

‘க்ர’ம – கிரமம்
வ’க்ர’ம் – வக்கிரம்
வ’ச்ர’ – வச்சிரம்
ச’த்ர’ – சத்திரம்
சு’க்ர’ன் – சுக்கிரன்
மந்’த்ர’ – மந்திரம்
யந்’த்ர’ – யந்திரம்
தந்’த்ர’ – தந்திரம்
காய’த்ரி’ – காயத்திரி

௩. மெய்யை அடுத்துவரும் லகரம்

‘க்லே’ச - கிலேசம்
சு’க்ல’ம் – சுக்கிலம்

மேற்கண்ட எடுத்துக்காட்டுகளில் சிலவிடங்களில்

௧. ஒற்று இரட்டிக்க, இரண்டாம் ஒற்றோடு இகரம் சேர்ந்து உயிர்மெய் ஆனது. இங்கே ஒற்று இரட்டித்தது மெய்ம்மயக்க இலக்கணப்படி.

௨. ஒற்று இரட்டிக்காமல், ஓரொற்றாகவே அமைய இகரம் சேர்ந்து உயிர்மெய் ஆனது.

௩. வடமொழியில் ‘மொழிமுதல் தனிமெய்’ அமைந்தால், தமிழில் உயிரோடு ஒன்றி உயிர்மெய்யாக வழங்குகிறது.

தொல்காப்பியம் :
பன்னீ ருயிரும் மொழிமுத லாகும்

உயிர்மெய் யல்லன மொழிமுத லாகா

என்னும் நூற்பாக்களினின்று நாம் அறிய வேண்டியது: தனித்த மெய்யெழுத்துகள் தமிழில் மொழிமுதலில் வாரா.

  • ரகர ஒற்றும், ழகர ஒற்றும் தனிக்குறில் எழுத்தை அடுத்து வாரா. அவற்றை உகரத்தோடு சேர்த்து எழுதலாம்
நன்னூல்:
1. ரழத் தனிக்குறில் அணையா.
2. ரவ்வழி யுவ்வும்.

கர்நாடகா - கருநாடு, கருநாடகம்
கர்மா - கருமம்
கர்ணன் - கருணன், கன்னன்
தர்மம் - தருமம்
தர்பூசணி - தருபூசணி
மெர்சல் - மெரிசல், மெருசல்
கர்த்தர் - கருத்தர்
அர்த்தம் - அருத்தம்
துர்லபம் - துருலபம்
வர்த்தமானம் - வருத்தமானம்
வர்ணம் - வருணம், வண்ணம்
நர்த்தனம் – நருத்தனம்

என இவற்றையெல்லாம் தமிழின் ஒலிநயத்தைக் காக்கும் பொருட்டுத் திருத்தி எழுத வேண்டும்.
  • வடமொழியில் ‘மெய்யை அடுத்து மகரமோ, வகரமோ’ இணைந்து ஓரெழுத்தாய் (கூட்டெழுத்து) அமையுமாயின், தமிழில் வழங்கும்பொருட்டு, உகரம் தோன்றும்.
பத்மம் - பதுமம்
பக்வம் - பக்குவம்
  • வடமொழியில் ‘மெய்யை அடுத்து நகரம், இணைந்து ஓரெழுத்தாய் (கூட்டெழுத்து) அமையுமாயின், தமிழில் வழங்கும்பொருட்டு, அகரம் தோன்றும்.
ரத்ந - அரதனம்
  • இன்னும், வடமொழியிலிருந்து தமிழுக்கு வரும் ஆண்பாற் பெயர்களை னகர ஒற்றை ஈறாகக் கொண்டு எழுதுவோம்.
தொல்காப்பியம்:
னஃகான் ஒற்றே ஆடூஉ அறிசொல்

Ram - இராம்–இராமன்
Yama – இயம - இயமன்
Rakshashaa – இராக்கத - இராக்கதன்
Raj – இராசன்
Loba – உலோப – உலோபன்

இவ்வாறு தமிழுக்கு வரும் வடசொற்களைத் தமிழின் ஒலிப்பியல்பு மாறாமல் மாற்றிப் பயன்படுத்துவோம். முடிந்தவரை வடசொற்களின் பயன்பாட்டைக் குறைப்போம். தமிழைக் காப்போம்.

Jun 17, 2019

சங்க காலக் காதலும் எங்கள் காலக் காதலும் - கவியரங்கம்

கவியரங்கத் தலைமை 
தமிழகழ்வன் சுப்பிரமணி

தமிழ்த்தாய் வேண்டல்

தெங்கிள நீராய்த் தித்தித் திருக்கும் 
    தண்ணிய செம்மொழியே
திங்களாய்ப் பாரில் தண்மை யொளியைத் 
    திகழ்ந்திடச் செய்பவளே
அங்கைக ளெடுக்குஞ் செயல்கள் விளங்க 
    அருள்மழை தான்பொழிவாய்
பொங்குநல் லுள்ளம் போகும் வழியின் 
    பொருளெனத் தான்வருவாய்!

முனைவர் அர. விவேகானந்தனார் வாழ்த்து

பைந்தமிழ்ச் சோலை பொலிவாய் நாளும் 
   பல்வகை வளம்பரப்பச்
செய்தமி ழாலே சிந்தை மகிழத் 
   தீங்கனி தாமீய
உய்வழி காட்டும் உயர்ந்த நெறியால் 
   உளங்கவர் உத்தமராம்
மெய்வழி விவேகா னந்தர் வாழ்க 
   மேவிய புகழோடே!

அவையடக்கம்

தேமொழி பாடத் தேடி வந்தேன் 
   தேர்வில் தூங்கிவிழும்
ஆமொழுங் கில்லா அறியா தவனாய் 
   அவையை நாடிவந்தேன்
தூமொழி யாக விளங்க வேண்டித் 
    தோய்ந்த சொல்லாலே
யாமொழி வேனோ? குற்றம் பொறுப்பீர் 
    யாதென் றெனக்குரைப்பீர்!

தொடக்கக் கவிதை

எங்கும் இயற்கை வளங்கொஞ்ச 
   எதிலும் இயற்கை மணம்வீசப்
பொங்கும் உளத்தால் தான்மகிழ்ந்து 
   புதுமை புகுத்தி அறிவியலும்
அங்கங் கேதான் புதைத்துவைத்தார் 
   அழகிய தமிழால் அவையியற்றி
எங்கும் தமிழைத் தான்பரப்பி 
   இனிமை யோடு வாழ்ந்திருந்தார்

சங்க காலத் தமிழர்கள் 
   சார்ந்த இயற்கை தனைப்போற்றிப்
பங்கு பிரித்தார் நிலமைந்தா
ம்
  பழகிய பூவைத் திணையென்றார்
அங்கங் கேகாண் பொருட்களினை 
   அழகாய் அவற்றுக்(கு) அடுக்கிவைத்தார்
இங்ங னந்தான் இயற்கையினோ(டு) 
   இயைந்த வாழ்வு வாழ்ந்தாரே

குறிஞ்சி என்றார் புணர்ந்திருந்தார் 
   கூட்ட மாக நிரைமேய்க்கும்
குறியாம் முல்லை காத்திருந்தார் 
   குலத்தாள் குடியி ருக்கையிலே
நெறியி லாது திரிந்தவனால் 
   நெருடும் ஊடல் மருதந்தான்
அறிவீர் இரங்கல் நெய்தலிலே 
   அவலம் பிரிதல் பாலையிலே

எங்கள் காலம் இணையத்தில் 
   எளிதாய்க் காதல் வளர்க்கிறதே
இங்கே எண்ணும் வேகத்தில் 
   எடுத்துச் சொல்ல முடிகிறதே
மங்காக் காதல் காலத்தால் 
   மாற்றம் கொண்ட வையெண்ணி
இங்கே உரைக்க ஈரிருவர் 
   எழுந்தார் அவர்சொல் கேட்போமே

1. ஜெய்சங்கர் ஐயா

செம்மொழித் தாயைப் போற்றித் 
   தென்னகப் பெருமை யாவும்
மும்மழை போலே வந்து 
   முகிழ்த்திரு சொல்லால் பெய்து
செம்மையாய்த் தமிழைப் பாடும் 
   ஜெய்சங்கர் ஐயா வருக
இம்மையில் இன்பம் கூட்டும் 
   இன்கவி தருக தருக

பெருமை தமிழ்க்குத் தேடியளி 
   பெரிய ஆசா னாய்த்திகழும்
திருவா ளர்க்கு வாழ்த்துரைப்பேன் 
   திறமை யாவும் தான்திரட்டி
அருமை யான நடையினிலே 
   அழகாய்க் கவிதை தான்செய்தார்
இருமை யுலகும் இவர்புகழை 
   எண்ணி வியக்கும் வாழியவே!

2. இரேவதி முருகதாசு ஐயா

படைக்கும் கவிதை ஒவ்வொன்றும் 
   பச்சை மரத்துப் பட்டாணி
தடைக்கல் தகர்த்துத் தடமாகத் 
   தாங்கும் சொற்கள் தேர்வாழ்க்கை
இடைஞ்சல் எதுவும் நெருங்கிடுமா? 
   இரேவதி முருக தாசையா
மடையைத் திறக்க வாருங்கள் 
   வாய்பார்த் திருப்போம் ஆசையா

அடடா அடடா இதுகவிதை 
   அறியா தவர்க்கும் இதுபுரியும்
தொடடா எல்லை என்றுள்ளம் 
   தொட்டுப் பார்க்கும் செங்கவிதை
அடையான் வீட்டுப் பேற்றின்பம் 
   அடைவான் அழகாய்க் கவிதந்தீர்
மடையைத் திறந்த சொற்களுக்கு 
   மகுடம் சூட்டி வாழ்த்துவமே

3. அமலா அம்மா

தமிழால்தான் தழைப்போம் என்று 
   தகுமாற்றை எடுத்துக் காட்டும்
தமிழ்த்தேனீ! தமிழே மூச்சாய்த் 
   தாங்குதலை எண்ணி எண்ணி
அமிழ்தனைய கவிதை செய்யும் 
   அமலாம்மா வருக வருக
குமிழுடைத்துக் குவல யத்துக் 
   கொடுப்பீரே கவிதை முத்தே

முத்துக் கவிதை நயத்தோடு 
   முகிழ்ந்த கவிதை பன்மடங்கு
சத்துக் கவிதை சரித்திரத்தைச் 
   சாற்றும் கவிதை தமிழுள்ளச்
சொத்துக் கவிதை சுகமளிக்கும் 
   சொக்க வைக்கும் கவிதையிது
வித்துக் கவிதை தனைத்தந்தீர் 
   வியந்தே உலகம் வாழ்த்திடுமே

4. மோகன் ஐயா
எண்ணத் தெழுந்த முத்துகளை 
   எளிய தமிழில் ஏற்றிவைத்துப்
பண்ணுக் கேற்பப் பெய்ததற்குப் 
   பட்டங் கட்டிப் பார்ப்பதுடன்
வண்ணம் தந்து வடிவமைத்து 
   வனப்புக் கொஞ்சத் தருவாரே
அண்ணல் மோகனத் தமிழ்நெஞ்சர் 
   ஐயா வருக கவிதருக

மின்னும் கவிதை மோகனத்தால் 
   மிரட்டும் கவிதை சொல்நயத்தால்
கன்னல் கவிதை கருத்துகளைக் 
   கருவாய்த் தாங்கும் கனிக்கவிதை
பொன்னும் பொருளும் ஈடாகாப் 
   போற்றற் குரிய நற்கவவிதை
இன்னல் நீக்கும் கவிதந்தீர் 
    இனிமை யோடு வாழியவே!

முடிவு கவிதை
காலை மாலையென் றறியாது 
   காதல் மொழியினில் உளகாள்வர்
சோலை போலவர் மனமகிழ்ந்து 
   சொக்கிக் காதலிப் பார்பாரீர்
காலம் மாறியும் மாறாத 
   காதல் மொழியினைக் கேளுங்கள்
கோலம் மாறியும் மாறாது 
   கொள்ளும் காதலைப் பாருங்கள்

சார்த லுக்காய்க் காத்திருப்பார் 
   சங்க காலக் காதலர்கள்
ஊரென் சொல்லும் உறவுகளும் 
   உரைப்ப தென்னை எனநினைக்கும்
பேரறி யேனே என்பாளே 
   பேதை யவனுக் காயேங்கி
ஊரறி யாமல் உடனேகி 
   ஒன்றி வாழ்வார் காதலரே

கடிதினில் காதல் வந்திடுமே 
   கருதி யவனை யுளங்கொள்வாள்
அடிசுடும் பாதம் அதுகாணாது 
   அவனோடு ஏகினள் அவளெங்கே
அடிசுட நடந்து தாயேங்கி 
   அவளைத் தேடிச் செல்வாளே
மடிச்சுமந் தாளின் மனக்கலக்கம் 
   மயக்கும் துயரம் தனைத்தருமே

காதல் நிகழும் களமெண்ணிக் 
   கணக்காய் வாழ்ந்தார் அக்காலம்
ஏதம் இல்லாக் காதலுக்காய் 
   ஏங்கி நிற்பார் எக்காலும்
காதங் காத மாய்ப்போகும் 
   கணக்கும் உள்ள(து) எக்காலும்
காதல் மட்டும் மாறாதே 
   காலம் மாறிப் போனாலும்

Jun 15, 2019

வடசொற் கிளவி வடவெழுத்து ஒரீஇ… – 4

பைந்தமிழ்ச்செம்மல்
தமிழகழ்வன் சுப்பிரமணி

தமிழ்ப்பற்றுடையோரே! வணக்கம்!

இக்கட்டுரையின் முந்தைய பகுதிகளில் மொழி முதலில் அமையும் எழுத்துகள், மொழியிடையில் அமையும் மெய்யெழுத்துகள் (மெய்ம்மயக்கம்), மொழியீற்றில் அமையும் எழுத்துகள் பற்றிப் பார்த்தோம். இவற்றால் ஒருவாறு சொற்கள் தமிழில் எவ்வாறு அமையும் என்பதையும் எவையெல்லாம் பிழையாகும் என்பதையும் அறிந்தோம்.

இப்பகுதியில் வடசொற்கள் தமிழில் வந்து அமையும் போது எவ்வாறெல்லாம் திரியும் என்பதைப் பற்றிப் பார்ப்போம்.

வடசொற்கள் தமிழில் எப்போது வரும்? வடமொழிக் காப்பியங்களைத் தமிழுக்குப் பெயர்க்கும்போது அம்மொழிப் பெயர்களைத் தமிழில் எழுத, வடசொல்லாக்கம் உதவும். மக்களின் அன்றாட வாழ்க்கையில் இக்காப்பியங்களின் தாக்கம் ஏற்படும்போது அவற்றைத் தமிழ்ப்படுத்திச் சரியாகப் பயன்படுத்த வேண்டும். அப்படி இல்லாவிட்டால் அவற்றைப் பயன்படுத்தாமல் இருப்பது தமிழுக்குப் பெருந்தொண்டாகும்.

எடுத்துக்காட்டாக, இராமாயணம், மகாபாரதம் முதலிய காப்பியங்கள் தமிழில் பெயர்க்கப்பட்ட போது அவற்றை இயற்றிய புலவர்கள் தமிழெழுத்து ஒலிகளுக்கு ஏற்றவாறு சொற்களை அமைத்துத் தந்தனர். ஆனால், பிற்காலத்தில் வடசொற்களின் தாக்கம் தமிழில் நிறைந்துவிட்டது. அது தவறு என்று உணராதவர்களாலும், சமற்கிருதம் படித்த சிலர் அதைத் தேவபாடை என்று கதை கட்டி விட்டதாலும், மக்களின் பயன்பாட்டில் எளிதாக அச்சொற்கள் புகுந்துவிட்டன. அதுவும் வடசொற்களை எழுதுவதற் கென்றே சில எழுத்துகளை உட்புகுத்தும் செயல்களும் நடந்தேறின. ஆனாலும் நந்தமிழ் இலக்கணம் அவற்றை நீக்கித் தமிழைக் கட்டிக்காக்கப் பெரிதும் உதவுகிறது.

வடசொற் கிளவி வடவெழுத்து ஒரீஇ
எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே
என்றார் தொல்காப்பியர். அஃதாவது, செய்யுட்சொல் நான்கனுள் வடசொல்லாகி வரும் சொற்களாவன சமற்கிருத மொழிக்குரிய எழுத்தொலிகளை நீக்கித் தமிழெழுத்திற்குரிய ஒலியோடு புணர்ந்து அமையும் சொற்களாகும்.

நன்னூலார் இன்னும் ஒருபடி மேலே போய் அந்நூற்பாவை விரித்து எந்தெந்த வடவெழுத்துகளை எந்தெந்தத் தமிழெழுத்துகளாக மாற்றலாம் என்று ஒரு பட்டியலே போட்டுவிட்டார். அவர்வழி நின்று இவ்வடசொல்லாக்கத்தைக் கற்போம்.

நன்னூலார் காலத்தில் ஆரிய மொழியில் 16 உயிரெழுத்துகள், 37 மெய்யெழுத்துகள் என மொத்தம் 53 எழுத்துகள் உண்டு. தமிழுக்கும் ஆரியத்துக்கும் பொதுவான ஒலிப்பு உடைய எழுத்துகள் தமிழ் எழுத்துருவிலும், ஆரியத்துக்கு மட்டுமே அமைந்த ஒலிப்புடைய எழுத்துகள் இலத்தீன் எழுத்துருவிலும் கீழே குறிக்கப் பெற்றுள்ளன.

உயிரெழுத்துகள்
1
2
3
4
5
6
7
(r/ru)
8
(r/ruu)
9
Lu
10
luu
11
12
13
14
15
Am
16
ah



மெய்யெழுத்துகள்
1

1
2
kha
3
ga
4
gha
5
2

6
7
chha
8
ja
9
jha
10
3

11
12
tta
13
da
14
dda
15
4

16
17
ttha
18
dha
19
ddha
20
5

21
22
pha
23
ba
24
bha
25
6

26
27
28
29
30
sa
7

31
Sha
32
ssa
33
ha
34
35
Ksha
8

36
shka
37
Shpa





உயிரெழுத்துகளில் தமிழுக்கு உரியவையல்லாத எழுத்துகள் ஆறும் தமிழ் ஒலிப்பிற்கு ஏற்பத் திரிந்து வழங்கப் பெறும்.

அவற்றுள் ஏழாம் உயிரெழுத்து இகரமாகவும் இருவாகவும் திரியும்.

rshabam – இடபம்,
mrgam - மிருகம்.

மெய்யெழுத்துகளில் தமிழுக்கு உரியவை யல்லாத 22 எழுத்துகளும் தமிழ் ஒலிப்பிற்கு ஏற்பத் திரிந்து வழங்கப்பெறும்.

முதல் வரிசையில் இடைநின்ற மூன்று எழுத்துகள், அஃதாவது 2, 3, 4 ஆகிய எழுத்துகள் முதலாம் எழுத்தாகத் திரியும்.

Sakhi – சகி
Naaga – நாகம்
Moha - மோகம்

இது போன்றே 2, 3, 4, 5-ஆம் வரிசைகளில் அமைந்த எழுத்துகள் திரியும்.

சலவாதி, விசயம் சருச்சரை
பீடம், சடம், கூடம்
தலம், தினம், தரை
பலம், பந்தம், பாரம்

அவற்றுள் எட்டாம் மெய்யெழுத்து மொழியிடையில் யகரமாகவும் திரியும்.

Pankajam - பங்கயம்.

முப்பதாம் மெய்யெழுத்து, மொழி முதலில் சகரமாகவும் இடையில் சகரமாகவும் யகரமாகவும் திரியும்.

Sankaran - சங்கரன்,
Pasam - பாசம்,
Desam - தேயம்.

முப்பத்தொன்றாம் மெய்யெழுத்து, மொழி முதலில் சகரமாகவும் இடையிலும் கடையிலும் டகரமாகவும் திரியும்.

Shanmuga - சண்முகன்,
Visham - விடம்,
Bashai - பாடை

முப்பத்திரண்டாம் மெய்யெழுத்து, மொழி முதலில் சகரமாகவும் இடையில் சகரமாகவும் தகரமாகவும் திரியும்.

Ssabha - சபை
Vassam - வாசம்,
Maassam - மாதம்.

முப்பத்து மூன்றாம் மெய்யெழுத்து, மொழி முதலில் அகரமாகவும் இடையிலும் கடையிலும் கரமாகவும் திரியும்.

Haran - அரன்,
Moha - மோகம்,
Mahi - மகி

முப்பத்தைந்தாம் மெய் இரண்டு ககரமாகத் திரியும்.

Paksha - பக்கம்.
Ksheera - கீரம்.

முப்பத்து மூன்றாம் மெய் மொழிக்கு முதலில் அகரமாகத் திரியும் என்றல் பொருந்தாது; கெடும் என்றலே பொருந்தும், அரன், ஆடகம், இமம், ஏரம்பன், ஓமம், ஒளத்திரி என வரும். இவைகளிலே h எனும் மெய் கெட, அம் மெய் மேல் ஏறி நின்ற உயிர் நிற்றல் காண்க.

வடசொற்களைத் தமிழ்ப்படுத்தும்போது ஆகார ஈற்றுச் சொற்களை ஐகார ஈற்றுச் சொற்களாக மாற்றிக்கொள்ள வேண்டும்.

நன்னூல்: ஆஈறு ஐயும்.

அகல்யா - அகலிகை
அம்பா - அம்பை
அம்பாலிகா - அம்பாலிகை
அம்பிகா - அம்பிகை
ஆருத்ரா - ஆதிரை
ஊர்மிளா - ஊர்மிளை
குணமாலா - குணமாலை
கோசலா - கோசலை
சபா - சபை
சீதா - சீதை
சுபத்ரா - சுபத்திரை
சுமித்ரா - சுமித்திரை
சூர்ப்பனகா - சூர்ப்பனகை
தாடகா - தாடகை
தேவசேனா - தேவசேனை
ப்ரியா - பிரியை
மாலா - மாலை
மிதிலா - மிதிலை
மேனகா - மேனகை
யசோதா - யசோதை
ரம்பா - அரம்பை
ராதா - இராதை
லங்கா - இலங்கை
விசயா – விசயை

வடசொற்களைத் தமிழ்ப்படுத்தும்போது, ஈகார ஈற்றுச் சொற்களை இகர ஈற்றுச் சொற்களாக மாற்றிக்கொள்ள வேண்டும்.

நன்னூல் : ஈஈறு இகரமும்.

மாதுரீ - மாதுரி
மாலதீ - மாலதி
த்ரௌபதீ - திரௌபதி
தில்லீ - தில்லி
பாஞ்சாலீ - பாஞ்சாலி
மைதிலீ - மைதிலி

(தொடரும்)