Jul 27, 2009

பேராசை பெருநட்டம்

பள்ளி நாட்களில் நான் கேட்ட சிறுவர்களுக்கான கதைகளில் இதுவும் ஒன்று. இந்தக் கதையைப் பாடலாக்கிப் பார்க்க வேண்டும் என்பது என் ஆசை. அதன் விளைவுதான் இது.


எலும்புத் துண்டைக் கண்டதாம்
      எண்ணம் கொண்ட நாயுமே
எலும்பைக் கவ்வி வாயிலே
      வைத்துக் கொண்டு சென்றதாம்

ஆற்றுப் பக்கம் சென்றுமே
      அதன்அ ருகிலே நின்றுமே
ஆற்று நீரில் கண்டதே
      அதுதன் உருவம் தன்னையே!

'தன்னைப் போன்று ஆற்றிலே
      தனியாய் ஒன்று உள்ளதே'
என்று நினைத்த நாயுமே
      எண்ணி மகிழ்ச்சி கொண்டதே!

பிம்ப நாயின் வாயிலே
      உள்ள எலும்புத் துண்டையே
கவ்வ நினைத்த நாயுமே
      வாயைத் திறந்து பார்த்ததே!
                                         - தமிழகழ்வன்

Jul 20, 2009

தாவரம்

தளிர்த்து வளரும் தாவரம் - மழைத்
துளியால் பலதரு மேவரம்

களித்து நடனம் ஆடிடும் - வகைக்
கனியை உயிர்கட் கீந்திடும்

குளிர்ச்சி நிழலைத் தந்திடும் - அடுப்புக்
குச்சியாய்ப் பயன்தர வெந்திடும்

புளிப்பு இனிப்புச் சுவையாக - வகைப்
பலவி ருப்பினுங் கவையாக

அளிக்கும் பயன்கள் பலவாகும் - அதில்
மாந்தர் அறிந்தது சிலவாகும்


தாவரம் பேசுவதாக
அழித்தி டாதீர் எங்களை - மிகு
அன்பாய்க் கேட்கிறோம் உங்களை

அசுத்தக் காற்றை எடுத்துமே - மிக
சுத்தக் காற்றைக் கொடுத்துமே

பலநன் மைகள் செய்கிறோம் - இங்கு
உங்கள் அருளால் உய்கிறோம்

என்று கேட்க வைத்துவிட்டீர் - நாங்கள்
எனினும் உங்கட் கருள்செய்வோம்
                                        - தமிழகழ்வன்

Jul 8, 2009

தலைவனும் மலரும்

ஒருமுறை என்னுடைய ஆசிரியர் திரு அன்பரசு அவர்கள், 'பெண்களை மலர்களோடு ஒப்பிட்டு வருணித்தல் போல ஆடவன் ஒருவனை மலர்களோடு ஒப்பிட்டு வருணிக்க முடியுமா?' எனக் கேட்டார். அப்போது எழுதிய செய்யுள்...

நிலைமண்டில ஆசிரியப்பா


தலைவா! உன்னைத் 'தாமரை' என்பேன்
தாவித் தாவித் தனித்தன்மை தேடுதலால்
இறைவா! நீதான் 'பாரி ஜாதம்'
இன்முகத் துடனே எனக்குனை ஈந்ததனால்
கார்மலை என்னும் 'குறிஞ்சிப்' புலமே
கவின்தமிழ்க் கந்தனை உள்ளுறை வித்தனையே!

பொருள்:
தாமரை -தா + மரை - தாவுகின்ற மான்
பாரி ஜாதம் = பாரி வள்ளலின் இனத்தைச் சேர்ந்தவன்
குறிஞ்சிப் புலம் = குறிஞ்சி மலர்களைத் தன்னகத்தே கொண்ட மலைப்பகுதி


'செய்யும் ஒவ்வொரு செயலிலும் தனித்தன்மையைத் தேடுவதால் துள்ளுகின்ற உள்ளம் படைத்த மானைப் போன்றவனே! இன்முகத்துடன் எனக்கு உன்னையே தந்ததனால் நீ பாரி வள்ளலின் இனத்தைச் சேர்ந்தவன். 'குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் உறையும் இடம்' என்பதற்கேற்ப, உன் உள்ளம் எனும் உறுதி கொண்ட குறிஞ்சிப் புலத்தில் கந்தனை வைத்துப் போற்றுகின்றாயே!' எனத் தலைவி தலைவனின் இயல்புகளைக் கூறிப் புகழ்கிறாள்.
 

Jun 28, 2009

செங்கால் நாராய்!

நேரிசை ஆசிரியப்பா

செங்கால் நாராய்! செங்கால் நாராய்!
செங்காந் தண்ணுதல் தண்நெஞ் சங்கொள
எங்கோ வில்மன மெய்த வம்பாய்
எண்ணங்க ளோடி என்றும் தேடக்
கண்ணில் காணாக் கன்னியைக் காணா
தென்றும் வருந்தும் இளமட நெஞ்சம்
பொன்றும் வரையில் உணராது
சென்றிடு மோநீ சொல்வாய் நாராய்!


பொருள்: சிவந்த கால்களையுடைய நாரையே! செங்காந்தள் பூவைப் போன்ற நெற்றியைக் கொண்டவளை என் குளிர்ந்த நெஞ்சமானது கொள்ள, என் 'மனம்' என்னும் வில் எய்த 'எண்ணம்' என்னும் அம்பு, இலக்கை அடையாது இன்னும் தேடிக் கொண்டிருக்கிறது. அதனால் வருந்தும் என் இள மட நெஞ்சம் இறக்கும் வரையில் என்னவளை உணராது சென்றிடுமோ? சொல்வாயாக!

Jun 15, 2009

தோண்டும் புதையல்

தோண்டும் புதையல் அறிவாகும்
தோண்டத் தோண்டச் செறிவாகும்                      1

வேண்டும் வேண்டும் எனக்கேட்கும்
மீண்டும் மீண்டும் மனப்பாட்டு                               2

வேண்டும் இடத்தில் ஏற்றுவிக்கும்
விலையில் மகிழ்வைத் தோற்றுவிக்கும்          3

சிந்தையை ஒருமை செய்திடுவாய்
சீர்மைச் சீர்தனை எய்திடுவாய்                               4

நெஞ்சில் எண்ணம் நிலைக்கட்டும்
நேரிய பெருமை நிலைக்கெட்டும்                         5
                                      - தமிழகழ்வன்

Jun 6, 2009

பிள்ளையாரும் பிள்ளைகளும்

நிலைமண்டில ஆசிரியப்பா

சிறுகல் எடுத்துச் சிறுவர் இருவர்
உறுமுட் புதரில் ஓணானைப் பார்த்து
வீசினர் அதுபுதர் உள்ளே காய்ந்த
மாசில் குண்டு மணிக்கொடி மீதே
படவே மணிகள் 'படபட' வென்றே
விடவே சிறுவர் அதனை எடுத்துப்
"பிள்ளை யார்க்குப் பிழைதனைச் செய்த
கள்ளஓ ணானைக் கண்டே அடித்தோம்
கண்டாயா பிள்ளை யாரவர் தம்முடைக்
கண்களை நமக்குப் பரிசாய்த் தந்தார்"
என்றே எண்ணி இன்பங்கொண் டனரே!
                                            - தமிழகழ்வன்.