Nov 20, 2021

திருமுருகாற்றுப்படை - பகுதி - 1

புலவர்: வணங்குகிறேன் நக்கீரரே!

நக்கீரர்: வருக புலவரே! வணங்குகிறேன். நலந்தானே!

புலவர்: உடலம் நலமாயிருக்க உள்ளம் நலமாயிருக்க வேண்டுமன்றோ? உடலமும் உள்ளமும் நலமாய் இருந்தால்தானே நலம் என்று பொருள். அந்த உளநலத்தை அளிக்க வல்ல அருளாளனாகிய உம்மையே நாடி வந்தோம்.

நக்கீரர்: புலவரே! புகழ்ந்தது போதும். அந்த உளநலத்தை அளிக்க வல்லவன் யான் அல்லன். பேரொளி வடிவமாய் விளங்கும் எம்பெருமானே!

புலவர்: ஆம்… நக்கீரரே! அப்பெருமான் உமது வழியே எனக்கு அதை அருள்வான் என்று நம்புகிறேன். அதனால் அவ்வருளை அளிப்பவர் நீர்தாமே!

நக்கீரர்: புலவரே! போதும் போதும்! நீர் என்ன கேட்க வருகிறீர் என்பது எனக்குப் புரிகிறது. வாருங்கள் கடற்கரைக்குச் செல்வோம்.

புலவர்: கடற்கரையில் காலாற நடந்து செல்வது எவ்வளவு மகிழ்ச்சியைக் கூட்டுகிறது. சிந்தனை செம்மைப்படச் செவியினிக்கச் சேதி சொல்லும் ஐயனே!

நக்கீரர்: அதோ! குணகடலில் தோன்றிக் கதிர் வீசிக் கொண்டிருக்கும் அந்தக் கதிரவனைப் பாரீர்.

புலவர்: ஆம்.. அக்கதிரோன் இவ்வுலகத்து உயிர்கள் மகிழ்வதற்காகவே தோன்றி வலம் வருகின்றானே!

நக்கீரர்: ஆம்.. அந்த அழகிய காட்சியைப் பாரீர்! அவன் தன்னுடைய பேரொளியை இடைவிடாது வழங்கி இவ்வுலகத்தை இருளிலிருந்து மீட்டுக் கொண்டிருக்கின்றான்.

புலவர்: அது மட்டுமா? “எழுக! இவ்வுலகம் இனி உம் கையில்!” என்று நம்மை எழுப்புபவன் அவன்.

நக்கீரர்: இடைவிடாது உழைக்கச் சொல்லி நம்மை ஊக்குவிப்பவனும் அவனே!

புலவர்: அவனை யாவரும் புகழ வேறு கரணியம் வேண்டுமோ?

நக்கீரர்: அத்தகைய பேரொளி வடிவாய் விளங்கி, இடைவிடாது அருள்புரிந்து இவ்வுலகைக் காப்பவன் எம்பெருமான் முருகக் கடவுள்.

புலவர்: அடடா… என் மனக்கண்ணில் அவன் தோன்றும் செந்நிறக் காட்சி கண்டு மெய்ம்மறந்து போகிறேன். செந்நிறம் பொருந்தியவனாதனால் அவன் ‘சேயோன்’ எனப் பட்டானோ?

நக்கீரர்: சரியாகச் சொன்னீர்! செம்மை சேரச் சேரக் கருமை விலகுந்தானே. அகத்தில் அறிவு பெருகப் பெருக அறியாமை விலகுந்தானே.

புலவர்: ஆம். அடடா... அதைத்தான் காண்கிறேன். அக்கதிரவன் ஒளிபடக் கொஞ்சங் கொஞ்சமாய் இருள் விலகுவதுபோல என் மனத்துள் முருகனைச் சிந்திக்க என் அகத்திருளாகிய ஆணவம் அழிகிறது. ஆம்… அவன் எனக்குப் பேரின்பம் நல்குகிறான்.

நக்கீரர்: புலவரே! மற்றொரு காட்சியையும் கண்டீரா? கடலின் பசுமையும் கதிரின் செம்மையும் எப்படி நமக்குப் புலப்படுகிறதோ அவ்வாறே முருகனைக் கண்குளிரக் காணும் நமக்கு மயிலின் பசுமையும் அவனுடைய திருமேனிச் செம்மையும் விளங்குகின்றன அல்லவா?

புலவர்: அடடா! என்னே அருமையான காட்சி!

நக்கீரர்: தனக்குவமை இல்லாதான் முருகன். பிறகு ஏன் இவ்வாறு உவமையாக்கிக் கூறுகின்றேன்? புரிகிறதா உமக்கு?

புலவர்: புரிகிறது நக்கீரரே! இது புரியாமலா யானும் புலவனாகி விட்டேன்? வெறுமனே 'ஒளி வடிவானவன் முருகன்' என்று நீர் சொன்னாலும், என் மனக்கண்ணில் 'ஒளி எப்படி இருக்கும்' என்று நான் கற்பனை செய்துதானே ஆக வேண்டும். அப்போதுதானே அது விளங்கும். அதைத்தானே தாங்களும் விளக்கியுள்ளீர். அறிவேன் அறிவேன்.

நக்கீரர்: நன்று நன்று. உலக உயிர்களை மகிழச் செய்யப் பேரொளி வடிவந் தாங்கி இடைவிடாது ஒளிவீசிக் கொண்டிருப்பவன் சிவந்த திருமேனியன் முருகன்.

புலவர்: தங்களுடைய மொழியைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம். என் உள்ளம் இனிக்கிறது.
(தொடரும்)

Nov 15, 2021

ஆற்று வளம்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

வாய்பாடு (விளம், மா, விளம், மா, விளம், காய்)

மலையிடைப் பிறந்து மழைதர வளர்ந்து வழித்தடம் அமைத்தோடிச்
சிலபல கிளைகள் சேர்ந்தெனை யூக்கச் செருக்கொடு குதித்தெழுந்து
கலைபல கற்றுக் கலகல வென்று கலித்துவந்(து) எழில்கூட்டி
நிலைபல கடந்து நித்திலந் தேடி நெடுங்கடல் புணர்வேனே
                                              - தமிழகழ்வன் 

Nov 7, 2021

தமிழ்த்தாய்

அறுசீர் விருத்தம்

நெய்யவென் நெஞ்சில் நின்று
  நேர்வன எடுத்துக் கூறிச்
செய்யுதற் கின்பம் என்று
  செய்கையிற் புரிய வைத்துச்
செய்யுளால் இன்பந் தந்த
  செந்தமிழ்த் தாயைப் போற்றிக்
கையினைக் கூப்பு வேனே
  கண்களும் பனிக்கு மாறே

Oct 31, 2021

மழையே!

ஆசிரியத் தாழிசை

வாளும் வில்லும் வானவிற் கிணையோ?
மீளும் இயற்கை மேதினி செழிக்க
நாளும் பொழிக நல்ல மழையே!

முகந்த நீரினை முழுக்கரு வாக்கிப்
புகத்தந் தாற்றில் பொங்கும் வெள்ளம்
அகத்தில் மகிழ்வே ஆருயிர் மழையே!

மின்னும் பொன்னாய் விண்விளை யாட
இன்னும் எதுவோ இங்கு வேண்டும்
மன்னுக மழையே மன்னுக மழையே!
                                  - தமிழகழ்வன்.

Oct 16, 2021

நல்லாரா? பொல்லாரா?

சொல்லால் நடங்காட்டிச் சோகக் கதைநாட்டிப்
பொல்லாங்கு செய்வார்க்குப் போயுதவி செய்யாதீர்
நல்லார் எனவெண்ணி நம்பிக்கை கொண்டாரைப்
புல்லார் எனவெண்ணும் பொய்யர் மிகுந்துள்ளார்

Oct 5, 2021

உள்ளத் தனையது உயர்வு

தமிழ்வாழ்த்து

அள்ளக் குறையா அமிழ்த சுரபியாய்
உள்ளுதொறும் ஊறும் மணற்கிணறாய்த் - தெள்ளுதமிழ்த்
தாயே! விளங்கும் தனிச்சிறப் புற்றனை!
நீயே மகிழ்ச்சிக்கு நெய்

அவையடக்கம்

ஆசான் வரத ராசரை வணங்கினேன்
பேசாக் குழந்தை பேச விழைந்து
வீசா நின்ற விதைச்சொல் லுடையேம்
ஏசா தெம்மை ஏற்பீர் நன்றே

கவியரங்கின் நோக்கம்
நேரிசை ஆசிரியப்பா

அக்கினிச் சிறகுகள் ஆக்கி வைத்த
அன்பு மிகுந்த அறிவிய லாளர்
அன்னை நாட்டின் அரும்பெருந் தலைவர்
அப்துல் கலாஅம் ஐயா அவர்தம்
பிறந்த நாளை நினைவு கூர்ந்து                                 5
நிகழ்த்தப் பெறூஉம் நெடுநேரத் தொடராம்
பன்னாட்டுச் சாதனைச் சங்கமம் ஆகிய
இந்த நிகழ்வில் இனிதாய் இணைந்து
இந்தக் கவிதை அரங்கைத் தொடங்குவாம்
உள்ளத்து அனையது உயர்வெனக் கூறிய            10
வள்ளுவப் பெருந்தகை வாக்கை
உள்ளு வோமே உயர்வடை வோமே

தொடக்கக் கவிதை
நிலை மண்டில ஆசிரியப்பா

உள்ளத் தனையது உயர்வா கும்மே
உள்ளம் என்றால் என்னை? ஊக்கம்
வெள்ளம் வந்து மேலும் மேலும்
பள்ளம் நோக்கிப் பாய்தல் போலே
உள்ளத் தனையது உயர்வா கும்மே               5
உள்ளம் வேண்டும் உலையா முயற்சிக்கு
உள்ளம் வேண்டும் உடைய தொழிலுக்கு
உள்ளம் வேண்டும் உண்ணு தற்கும்
உள்ளம் இலையோ ஒன்றும் இல்லை
ஊக்கத் தளவே ஆக்கத் தளவாம்                     10
ஊக்கத் தளவே உலகம் உய்யும்
ஊக்கத் தளவே உண்மை விளங்கும்
ஊக்கம் இன்மை இன்மை வகுக்கும்
உள்ளத் தனையது உயர்வெனப் பாட
உள்ளத் துவகை யோடு மன்றம்                         15
ஏறி வந்தோம் ஏற்றம் உரைக்கப்
பதின்மர் இங்கே பங்கேற் கின்றோம்
உள்ளம் என்னும் ஊக்கம் பற்றிச்
சொல்லில் சுவைபடச் சொல்ல விழைந்தோம்
நல்ல கருத்தை நாடிக் கேட்டு                             20
வெல்லும் உலகை உருவாக் குவமே

1. வள்ளி முத்தே வருக வருகவே
முத்துக் கவிதை சொத்துக் குவிகை
பட்டுச் சிவிகை பாட்டுக் குவிதை
நட்டுக் காத்து நல்ல மரமாய்ச்
சொட்டுந் தேனாய்ச் சோலைக் குயிலே
வள்ளி முத்தே வருக வருகவே

சொல்லில் சொல்ல வியலாக் கருத்தும்
மெல்ல உருக்கி மெருகு தீட்டி
அள்ளித் தந்தீர் அருமை அருமை
வள்ளிமுத் தாரே வாழ்கபல் லாண்டே!

2. பால சுப்பிரமணியன் ஐயா
புதுவைத் தமிழ்ச்சங் கத்தின் செயலர்
புதுவது படைக்கும் புகழ்மிகு ஏணி
மதுவுக்குப் புதுவை என்பதை மாற்றி
மதுக்கவி தைக்குப் புதுவை என்று
மற்று மொருவர் வாய்ம லர்ந்தார்
பால சுப்பிரமணியன் ஐயா வருக
பாலன்ன நற்கவி படைத்துத் தருக

பாட்டுக்கு இங்கே போட்டியா என்ன?
காட்டுக் காட்டென்று காட்டி விட்டார்
அப்பப்பா
கட்டுக் கட்டாய்க் கவிதை மூட்டை
பட்டுத் தெறிக்குது பாரீர் பாரீர்
பால சுப்பிர மணியன் ஐயா
ஆல மரம்போல் ஆயிரங் கவிதை
மேலும் மேலும் தந்து தாங்குவீர்
வாழ்க வாழ்க வளமொடு வாழ்க

3. சதீஸ்குமார்
அருந்தமிழ் ஆற்றலை அகத்தில் புகுத்திப்
பெருமை கொள்ளப் பேரவா வோடு
புதுமை புகுத்த பிறந்த புயலே
மதுர மாயொரு கவிதை தருக
வருக வருக சதீஸ்குமார் வருக

தனித்திறங்கொள் சதீஸ்குமார் வாழ்க வாழ்க
சரஞ்சரமாய் அவர்தொடுத்த கவிதை வாழ்க
சாதனையைச் சடுதியிலே புரிந்தார் வாழ்க
தாதவிழ்பூ மலர்தல்போல் வாழ்க வாழ்க

4. பரமநாதன் ஐயா
இணுவில் என்னும் எழிலூர் பெற்ற
இனிய கவிஞர் பரம நாதரே!
முத்து முத்தாய்ப் பாடும் பைந்தமிழ்ச்
சொத்துக் குவையே! சோர்வுகள் நீக்கும்
முத்துப் ‘பரல்கள்’பட்டுத் தெறிக்கும்
வித்தகம் விளைக்கும் வீறுகொள் கவிஞரே!
வருக வருக அருங்கவி தருக

அழகாக ஒருகவிதை ஆக்கித் தந்தீர்
அதுவரமே என்கின்றேன் ஆகா ஆகா
மழைஇரண்டு வரமாக வாய்த்த தின்று
மகிழ்ச்சியிலே திளைக்கின்றோம் வாழ்க வாழ்க
வழங்குவதில் பெருங்குடமாய் வாய்த்தீர் வாழ்க
வாக்கினிலே இனியதையே வைத்தீர் வாழ்க
பழம்பெருமை மறவாத பண்பர் வாழ்க
பரமநாதன் ஐயாவே வாழ்க வாழ்க

5. விஜயலட்சுமி
உள்ளத் தனையது உயர்வே என்பதைத்
தெள்ளத் தெளிவாய்த் தேர்ந்த வாழ்வால்
அள்ளித் தருக அரங்கம் வருக
வெள்ளி மின்னல் உள்ளம் கொண்ட
விஜய லட்சுமி அம்மா வருக

சென்ற இடமெல்லாம் வெற்றி வெற்றி
சேர்ந்து வருமே செம்மை தருமே
அருங்கவி ஆக்கி அகிலம் தந்தீர்
பெருமை யோடு வாழ்க வாழ்க

6. கண்ணன்
இளைய சமுதாயம் இனிது வாழக்
களைவார் துன்பம் கவிதைக் கட்டால்
கண்ணின் மணியாய்க் கருத்துக் கொண்ட
கண்ணன் ஐயா வருக வருக
கனிச்சுவை தனிச்சுவை யாகத் தருக

இடிமுழக்கம் இதுவன்றோ எழுச்சிக் கவியே
இன்னும்யாம் கேட்பதற்கும் ஆவல் கொண்டோம்
படிமுறைமை நேரத்தைப் பார்த்துப் பார்த்து
பாயுமுளம் தேற்றியிருக் கின்றோம் ஐயா
விடியட்டும் உம்மாலே உள்ளம் வைத்து
விதைப்போமே ஊக்கத்தால் வீழ்ந்தி டாதே
நெடிதுபுகழ் நீர்பெற்று வாழ்க வாழ்க
நேயமுள பெருங்கவியே வாழ்க வாழ்க

7. அழகர் சாமி
பழகு தமிழின் செம்மையினைப்
பார்த்துப் பார்த்து நுண்ணறிந்தே
அழகு கவிதை படைப்பவரே
ஆற்றல் மிக்க பெரும்புலவர்
பழக இனியர் பண்பாளர்
பாக்கள் பாட வாருமையா
அழகர் சாமி அரங்கினிலே
அகிலம் போற்றும் அருங்கவியே

நன்றாய் நெய்த கவிதந்தீர்
நலமே விளைக்கும் கவிதந்தீர்
பொன்றாப் புகழொடு வாழியவே
பொங்கும் மகிழ்வொடு வாழியவே

8. ஷேக் அப்துல்லாஹ் அ
இறைமை இதயக் கோயிலில் இருத்தி
முறைமை தவறா முதுநல் லறிஞர்
நிறைமனம் கொண்ட நித்திலக் கவிஞர்
சிறுமை மனத்தார் சிறைவிட் டெழவே
ஷேக் அப்துல்லா
ஐயா வருக அருங்கவி தருக

உள்ளத் துணர்வை அடுக்கிக் காட்டிக்
கள்ளம் அகற்றிக் கனியாய் வாழ்வு
கொள்ளச் செய்தி சொன்னார் அன்னார்
வெள்ளம் போலே மகிழ்வொடு வாழ்க

9. விஜயகுமார் ஜனார்த்தனன்
கன்னி முயற்சியாய்க் களம்புகு காளையாம்
இன்னல் நீக்கியோர் இனிமையுள வாழ்வுக்குச்
சின்ன கவிஞனெனத் தேற்றி அவைவந்தார்
பென்னம் பெரிதான கவிதை தருவாரே
விஜயகுமார் ஜனார்த்தனன் அவர்களே வருக
வியக்கும் செந்தமிழ்க் கவிதை தருக

உள்ளத்தில் தோன்றுகின்ற எண்ணங் கட்கு
உருவத்தைத் தந்துவக்கும் நிலைக்குச் செய்தார்
உள்ளத்தின் ஊக்கத்தை உணர்ந்து கொள்ள
உண்மையினைத் தெரிந்துரைத்தார் வாழ்க வாழ்க

நிறைவு கவிதை
ஊக்குங் கவிதைகள் உளம்நிறை வுறவே
கேட்டோம் தெளிவோம் கேள்விக ளாலே
இயலாச் செயலென ஏதும் இல்லை
முயலாச் செயலால் முழுதும் வீணே
செயலாக் குவமே செம்மை சேரவே                       5
வெள்ளத்து அனைய மலர்நீட்டம் என்றார்
வள்ளுவப் பெருந்தகை வாழ்வில் ஊக்கத்து
அளவோ உயர உயர அவர்தம்
உயர்வும் மிகுமென உயர்ந்த கருத்தைத்
தெள்ளிதின் உரைத்த தெய்வம் அன்றோ           10
ஊக்கு விப்பார் ஊக்கு வித்தால்
ஊக்கு விற்பான் தேக்கு விற்பான்
என்பார் பெரியோர் எத்துணை உண்மை
உள்ளம் இலாதவர் எய்தார் செல்வம்
உள்ளுஞ் செயலை உறுதியாய்ச் செய்ய              15
விளங்கா திருந்ததும் பிடிபடும் அதனை
ஆய்ந்து நோக்கி அகம்சேர்ப் போமே
ஐயா அப்துல் கலாஅம் அவர்தம்
மெய்வழி நின்று மேன்மை யுறுவோம்
உய்வழி செய்வோம் உலகின் புறவே                       20

Oct 4, 2021

மலையன்ன துன்ப வகைத்து

நலந்தானா உள்ளம் நகைமுகத்தாள் கேட்க
நலமே எனநா நவிலும் உளமோ
மலையன்ன துன்ப வகைத்து

Oct 3, 2021

தேங்காஅ நின்ற நினைவு

ஏங்காநின் றாளுமவன் எப்போது காண்பனெனத்
தாங்காஅ உள்ளத்துச் சாரத் தவிப்பவட்குள்
தேங்காஅ நின்ற நினைவு

தூங்கா விழியிரண்டில் தூணாவான் நெஞ்சுறைத்து
நீங்கா மொழிதன்னால் நீர்மையிலாச் சொல்பிதற்றித்
தேங்காஅ நின்ற நினைவு

ஆங்கா வலனென்(று) அகமுரைத்துத் தான்நீங்கத்
தேங்காதல் சொல்மொழிந்து தேடிவரு வன்பொருள்
தேங்காஅ நின்ற நினைவு

Sep 30, 2021

கதிர்வேலன் தமிழகழ்வன் - பிறந்தநாள் வாழ்த்து

கதிர்வேலா செங்கதிர் வேலா
பொங்கும் கதிர்வேலா

ஆனந்தி பாலா அகழ்வன் தோளா
அந்தமிழ்க் கதிர்வேலா

சிந்தையினிக்கச் சிரிப்புக் காட்டும்
சின்ன கதிர்வேலா

தத்திநடை போட்டுப் போட்டுத்
தாவி ஏறும் பாலா

பின்னாலே கையைக் கட்டிப்
பிடித்தது கேட்கும் வேலா

கிள்ளைப் பிள்ளாய்
கிண்கிணி யாட்டச்
செல்லப் பிள்ளாய் நீயே

தாளம் போட ஆட்டம் போடும்
தங்க நட பாலா

Sep 5, 2021

அரசு


"பள்ளி தொடங்கி ஒரு மாதம் ஆச்சு... நல்லா படிக்காத பையனை எங்கேயும் சேர்த்துக்கொள்ளவில்லை என்று இங்க சேர்க்க வந்திருக்கீங்களா?" என்று கேட்டார் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர். திருவண்ணாமலை மாவட்டம் சின்னகாங்கியனுரில் அமைந்துள்ள ‘திரு.க.குப்புசாமி நினைவு உயர்நிலைப் பள்ளி’ அது.

"இல்லைங்க ஐயா... நாங்க நகரத்தைவிட்டு இந்த ஊருக்கு வந்திருக்கோம். அந்த முடிவு எடுக்குறதுல கொஞ்ச நாள் கடந்துபோச்சு. அதனாலத்தான் சீக்கிரம் வந்து சேர்க்க முடியல" என்று கூறினர் என் அப்பாவும் சித்தப்பாவும்.

திருவண்ணாமலை நகராட்சிக்கு உட்பட்ட கீழ்நாத்தூரில் உள்ள ‘நகராட்சி நடுநிலைப் பள்ளி’யில் (தற்போது உயர்நிலைப்பள்ளி) நான் ஐந்தாம் வகுப்புப் படித்து முடித்தேன். விடுமுறை முடிந்து என் நண்பர்கள் ஆறாம் வகுப்பில் சேர்ந்துகொண்டிருந்தார்கள். நான்மட்டும் பள்ளியில் சேரவில்லை. ‘நல்ல வேளையாக ஐந்தாம் வகுப்போடு படிப்பு முடிந்துவிட்டது. இனிப் படிக்கத் தேவையில்லை. பள்ளிக்கூடம் போகத் தேவையில்லை’ என்று மகிழ்ச்சியாய் எண்ணிக் கொண்டிருந்த எனக்கு, அவ்வளவு நாள் ஏன் பள்ளியில் சேரவில்லை என்பது அப்போதுதான் புரிந்தது. ‘அடடா.. மாட்டிக்கொண்டோமே’ என்று நடுங்கினேன்.

ஆறாம் வகுப்புச் சேர வந்திருந்த அப்போது, "இந்தா… இந்தச் செய்தித்தாளைக் கொஞ்சம் படித்துக் காட்டு" என்று என்னிடம் கொடுத்தார் தலைமை ஆசிரியர். நான் அந்த ஆங்கிலச் செய்தித்தாளை வாங்கிக் கொஞ்சம் எழுத்துக்கூட்டிப் படித்துக் காட்டினேன். நேஷனல் (National) என்பதை நேடியனல் என்று படிக்கும் அளவில்தான் நான் அன்று இருந்தேன். ஆனாலும் பள்ளியில் அனுமதிக்கப் பட்டேன். அந்தத் தலைமை ஆசிரியர் என்னைப் பார்த்து நல்லா படிக்காத பையன் என்று கூறிவிட்டாரே என்று மனத்துக்குள் ஒரு குத்தல் இருந்தது.

முதலாம் வகுப்பில் நான் எத்தனையாவது தரம் (Rank) என்று நினைவிலில்லை. இரண்டாம் வகுப்பில் முதல்தரம் பெற்றேன். மூன்றாம் நான்காம் ஐந்தாம் வகுப்பு என முன்னேறும்போது என் தரத்தின் எண்ணும் கூடிக்கொண்டே போனது. ஐந்தாம் வகுப்பில் நான் நான்காம் தரம். இப்போது எப்படிப் படிக்கப் போகின்றேன் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்ற நிலை.

என்னை ஒருவரும் குறைசொல்லல் எனக்குப் பிடிக்காது என்பதால் படிக்கத் தொடங்கினேன். நகரத்தில் இருந்தவரை விளையாட்டுப் பிள்ளையாக இருந்த எனக்கு, இந்த ஊருக்கு வந்த பின் சூழல் மாறத் தொடங்கியது. புதிய ஊர்; நண்பர்கள் இல்லை; விளையாடும் வாய்ப்புக் குறைவு; படிப்பதற்கென்றே அமைந்த நல்ல சூழலாக அதனை ஏற்றுக் கொண்டேன். ஆறாம் வகுப்பில் சேர்ந்த நாள்முதல் நன்றாகப் படித்துவந்தேன். அந்த உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்புவரை அனைத்துத் தேர்வுகளிலும் நான் முதல் மதிப்பெண்ணே பெற்றுவந்தேன்.

வகுப்பில் முதல் மாணவன் என்பதால் அடிக்கடி தலைமை ஆசிரியர் கண்ணில்பட்டேன். அவர் எனக்கு வாய்ப்புகளைத் தந்தபோதெல்லாம் அவற்றைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டேன். எட்டாம் வகுப்பு முடிக்கும்போது வந்த YSSP (இளம் மாணவர்களுக்கான அறிவியல் நிகழ்ச்சி - Young Student Scientist Programme) வாய்ப்பு, கவிதைப் போட்டிக்கு என்னைத் தேர்ந்தெடுத்து அனுப்பியது, ஒன்பதாம் வகுப்பில் பள்ளியளவில் நடந்த போட்டித் தேர்வில் பரிசு பெற்றது, பத்தாம் வகுப்பில் பள்ளியில் அதுவரை யாரும் எடுக்காத மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்தமை என்று இந்தப் பட்டியல் நீளும்.

பத்தாம் வகுப்பில் தலைமை ஆசிரியரே அறிவியல் பாட ஆசிரியராய் வந்தார். அவர் பாடம் நடத்தத் தொடங்கிய நாள்முதல் எனக்குள் கிளர்ச்சி. அவர் பாடம் நடத்தும் அமைப்பைப் பார்த்துக், கல்லூரியில் படிக்கும் மாணவர்களின் அறிவு முதிர்ச்சியில் இருந்தால்தான் அவரது பாடம் புரியும் என்று பலநாள்கள் எண்ணியிருக்கிறேன். என்னுடைய மனத்து ஓட்டம், உள்வாங்கிக் கொள்ளும் திறன் அவ்வளவு குறைவு. அப்படி இருந்தும் எப்படி நான் முதல் மாணவன் என்றால் நாள்தோறும் நடத்தும் பாடங்களைத் தவறாமல் படிப்பதும் வீட்டுப் பாடங்களைச் சரியாகச் செய்யும் பயிற்சியுமே ஆகும்.

ஒருமுறை அவர் பாடம் நடத்திக்கொண்டிருக்கும்போது ‘கால்சியம் கார்பனேட்டு’ பற்றிச் சொல்ல வந்தார். மாணவர்களைப் பார்த்துத் திடீரென்று, "அங்க போங்க, அங்க கொட்டி வச்சிருப்பாங்க, அதுதான் அது" என்றார். 'எங்க போகணும், என்ன கொட்டி வச்சிருப்பாங்க' என்று புரியாமல் முழித்துக் கொண்டிருந்தேன். அவ்வளவு அறிவு எனக்கு.

பாடத்தில் இருவகையான மாணவருக்கு மட்டுமே ஐயம் ஏற்படாது என்று அவர் அடிக்கடி சொல்லக் கேட்டதுண்டு. ஒன்றுமே படிக்காத, பின்தொடராத மாணவன் ஒருவகை. நன்றாகப் படிக்கும் மாணவன் இன்னொருவகை. நீங்கள் எந்த வகை என்று முடிவு செய்துகொள்ளுங்கள் என்பார். ஐயமே இருந்தாலும் கேட்பதற்குத் துணிவில்லாத அஞ்சும்வகை நான்.

பாடத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு வரியையும் வினாவாக்கி அதற்கு விடைகாண முயலுங்கள் என்பார். அவர் சொன்னதை அப்படியே செய்துவந்தேன். ஒருநாள் என்னுடைய எழுதுபுத்தகத்தை வாங்கிப் பார்த்து மகிழ்ந்தார். மற்ற மாணவருக்கும் அதை எடுத்துக் காட்டினார். அதுதான் சொல்லின் செய்வனாக என்னை நான் உணர்ந்த சமயம்.

"நாளை சிறுதேர்வு. படித்துவிட்டு வாங்க" என்பார். “பாடத்தில் எந்தப் பகுதியில் தேர்வு?” என்று கேட்டால் எல்லாவற்றையுந்தான் படிக்க வேண்டும் என்பார். படித்துவிட்டு வருவோம். ஆனால் அவர் விடுமுறையில் சென்றிருப்பார். அடுத்த நாள் பள்ளிக்கு வந்து பாடம் நடத்துவார். அப்பாடா.. அவர் தேர்வைப் பற்றி மறந்துவிட்டார் என்று எண்ணி மகிழ்வோம். திடீரென்று ஒருநாள், “எல்லாரும் தாளை எடுத்துக் கொண்டு வெளியே வாங்க” என்பார். போச்சுடா… அவர் தேர்வை மறக்கவில்லையா என்று அச்சத்துடனே எழுதுவோம். வினாக்களை எல்லாப் பகுதிகளிலிருந்தும் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கேட்டுவைப்பார். பள்ளி முடிய அரை மணி நேரமே இருந்தாலும் அவர்கொடுத்த வினாக்களுக்கான விடைகளை எழுதி முடிக்க இரண்டு மணி நேரம் ஆகும். அவ்வளவு வினாக்களைக் கொடுத்துவிட்டுப் போவார். இதற்காகவே அவர் தேர்வு என்று சொல்லிவிட்டால் போதும். நாள்தோறும் ஒருமுறை புத்தகத்தையே திருப்பிப் பார்த்துவிட்டு வருவோம். தற்போது மாணவர்கள் கைப்பேசியை ஒருகையில் வைத்துப் பார்த்துக்கொண்டே தட்டிலுள்ள சாப்பாட்டைப் பார்க்காமல் மற்றொரு கையிலெடுத்துச் சாப்பிடுவதைப் போல, அப்போது என்னுடைய ஒரு கையில் புத்தகமும் மற்றொரு கையில் சாப்பாடும் இருக்கும். மனப்போராட்டம், நேர மேலாண்மை இவற்றிலெல்லாம் ஒரே விளையாட்டுத்தான் அப்போது. பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் அறிவியலில் நூற்றுக்கு நூறு பெற்றேன்.

ஒருநாள் பள்ளியில் தரப்படும் மதிய உணவை எத்தனை மாணவர்கள் வாங்கிச் சாப்பிடுகிறார்கள் என்பதைக் கணக்கெடுக்கச் சொன்னார். நான் நினைத்திருந்தால் எத்தனை மாணவர்கள் என்பதை எளிதாக எண்ணிச் சொல்லியிருக்கலாம். உணவு வாங்கும் வரிசையில் நின்ற ஒவ்வொருவரின் பெயரையும் வகுப்பையும் கேட்டு எழுதிக் கொண்டிருந்தேன். நான் அவரிடம் எப்படிக் கணக்கெடுக்க வேண்டும் என்று எளிதாகக் கேட்டிருக்கலாம். அதற்குத் தயங்கி, ‘அவர் புள்ளிவிவரமெல்லாம் கேட்டுவிட்டால் என்ன செய்வது?’ என்று எண்ணி அப்படிக் கணக்கிட்டேன். அப்போதுதான் என் தமிழாசிரியர் அடிக்கடி கூறும் '… பசிநோக்கார் கண்டுஞ்சார் … கருமமே கண்ணாயினார்' என்பதன் பொருள் எனக்குப் புரிந்தது. அன்றைய மதிய உணவை உண்ணாமலே அந்த வேலையைச் செய்துகொண்டிருந்தேன்.

சில நேரங்களில் அவர் எதைப் பற்றிப் பேசுகிறார் என்பது புரியாமலே கேட்டுக்கொண்டிருப்பேன். ஒருமுறை "இன்று மாலை பள்ளியில் வந்து உட்கார்ந்திரு. அவர் வருவார். அவரிடம் சொல்லிவிடு" என்று சொன்னார். யார் வருவார், அவரிடம் என்ன சொல்ல வேண்டும் என்பதைக்கூடக் கேட்காமல் தலையாட்டிவிட்டு வந்து உட்கார்ந்து படித்துக்கொண்டிருந்தேன். மாலை 6 மணிக்குமேல் பள்ளியின் பாதுகாவலர் வந்தார். "என்ன பா, இன்னும் இங்கேயே இருக்க?" என்று கேட்டார். தலைமை ஆசிரியர்தாம் வந்து உட்காரச் சொன்னார். உங்களிடம் சொல்லச் சொன்னார்" என்றேன். "அப்படியா பா, சரிப்பா" என்று சொல்லிவிட்டு மின்விளக்கைப் போட்டுவிட்டு அவரும் சென்றார். வடிவேலு நகைச்சுவைக் காட்சிபோல, இன்றுவரை அது எனக்குப் புரியாத புதிராகவே இருக்கிறது.

அவர் பள்ளியிலிருக்கும்போது அடிக்கடி அவ்வூரிலுள்ள சிலர் வந்து பேசிவிட்டுப் போவார்கள். அவர்கள் பேச்சிலிருந்து அவர்கள் விவசாயிகள் என்பதைப் புரிந்துகொண்டாம். அவர் அந்த விவசாயிகளுக்குத் தகுந்த ஆலோசனைகள் கூறும் விவசாயியும் ஆவார். எப்போதும் செயற்கை உரங்கள் போடாமல் இயற்கையாகவே விவசாயம் செய்யவேண்டும் என்பது பற்றியும் சொல்லியிருக்கிறார். சென்ற ஆண்டு (2020 சனவரி) ஆசிரியர்-மாணவர் கூடல்விழாவிற்கு அவர் வந்திருந்தபோது ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட, சுமார் 6 மாதங்களாக எரிந்துகொண்டிருந்த, காட்டுத்தீயைப் பற்றிப் பேசிக் கவலைப்பட்டார். இயற்கையை நேசிக்கும் இனிய மனிதர் அவர்.

"அண்ணா, உங்களைத் தலைமை ஆசிரியர் கூட்டிட்டு வரச்சொன்னார்" என்று ஒரு மாணவன் என் வீட்டிற்கு வந்து சொன்னான். நான் பள்ளிக்குச் சென்றேன். பன்னிரண்டாம் வகுப்பை முடித்திருந்த அந்தச் சமயத்தில் "மேற்கொண்டு என்ன படிக்கப் போகிறாய்?" என்று கேட்டார். பொறியியல் அல்லது செவிலியர் பயிற்சிக்குப் படிக்கப் போவதாகச் சொன்னேன். இரண்டுக்கும் விண்ணப்பம் வாங்க உதவினார். மேலும் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வுக்கு அவரே என்னைச் சென்னைக்கு அழைத்துச் சென்றார். கல்லூரியையும், துறையையும் அவரே தேர்ந்தெடுத்துக் கொடுத்தார். பின்னர் கல்லூரிக்கும் அழைத்துச் சென்று கல்விக் கட்டணம் பற்றிக் கேட்டறிந்து வங்கியில் கல்விக் கடனுக்கும் ஏற்பாடு செய்து அவரே கடனுக்கு உறுதியளித்துக் கையொப்பம் இட்டார். நான் கல்லூரியில் படிக்கும்போது கடினமாய் உணர்ந்த சமயங்களிலெல்லாம் எனக்காகப் படிக்கிறேன் என்பதை மறந்து என் தலைமை ஆசிரியர் என்மீது வைத்த நம்பிக்கைக்காகவே படிக்கிறேன் என மனத்திற்கொண்டு படித்து முடித்து நல்ல முறையில் தேர்ச்சி பெற்றேன்.

அவ்வப்போது என்னைப் பற்றிக் கேட்டறிந்து எந்த வகையிலெல்லாம் உதவ முடியுமோ அந்த வகையிலெல்லாம் உதவி செய்திருக்கிறார். அவர்தான் உயர்திரு அர.சுப்பிரமணியன் அவர்கள். அவர்தன் கையொப்பத்தில் அரசு என்ற முதல் மூன்றெழுத்தைப் பார்க்கும்போதெல்லாம் அவருடைய ஆளுமையை எண்ணி எண்ணி மகிழ்வேன். ஒரு மாணவன் பள்ளியைவிட்டுச் சென்றாலும் அவனைப் பற்றிக் கேட்டு அவனை முன்னேற்றிப் பார்ப்பதில் பெருமகிழ்வு கொள்பவர். இந்த நன்னாளில் அவரை எண்ணிப் பார்த்துப் பெருமகிழ்வெய்துகிறேன்.
                                            - தமிழகழ்வன் சுப்பிரமணி

Aug 24, 2021

அரங்கேற்றம் - ஐந்தணிப் பாட்டு (அலங்காரப்பஞ்சகம்) - ஐம்புலனைந்தணி - பகுதி 10

வெண்பா
நேரில் நிகழ்வதைக் கண்ணுற் றவரையே
சாருமாம் நீதிமன்றம் தக்கதாய் - ஓருவீர்
எப்புலன் தன்னிலும் என்னையே சால்பென்பீர்
இப்பொழு தாயினும் ஏற்று (91)

கட்டளைக் கலித்துறை
ஏற்ற பணியை இடையே யிலாமல் இயற்றிடுவேன்
ஊற்றம் உடைய உடலை ஒருவா றியக்கிடுவேன்
சீற்றம் படைத்திடும் தும்மலில் நாற்புலன் சீர்நடுங்கும்
ஆற்றல், இயக்கல், அதிர்த்தலில் நானோர் அரசெனவே (92)

அகவல்
அரசும் ஆண்டியும் அவனவன் வாயின்
முரசம் சொல்லும் முறைமை யாலே
வாய்தவங் கொள்ள வாய்த்தவை வெல்லும்
நோய்தவங் கொள்ளும் நொய்ந்த சொல்லால்
வாய்மையும் தூய்மையும் வழியாய்
வாய்கொள வாழ்வு வான்புகழ் பெறுமே (93)

விருத்தம்
பெற்றவர் தங்கள் பிள்ளைகள் எல்லாம்
  பெருமையு றுவதை மெச்சுதற்போல்
மற்றநற் புலன்காள் மழலையில் நீங்கள்
  வழங்கிடும் மொழியில் மகிழ்கின்றேன்!
குற்றமொன் றோரேன்! குறையெதுங் காணேன்!
  குழந்தைகள் கொள்ளும் சீரெல்லாம்
உற்றிடு மென்னை யெனவுணர்ந் தேனே!
  உயர்வினி லிறும்பூ தெய்துகிறேன்! (94)

வண்ண விருத்தம்
தனதன தனந்த தனதானா
  தனதன தனந்த தனதானா

உயர்வினில் மயங்கு முளமாவேன்
  ஒலியொடு விளங்கு பொறியாவேன்
தயவொடு புரிந்த பணியாலே
  தமிழொடு நனைந்த வரமாவேன்
பயனுற விளைந்த இசையாலே
  பசிதனை மறந்த தவமானேன்
அயர்வற நினைந்து நாடோறும்
  அமுதினை வழங்க யிணைவேனே! (95)

வெண்பா
ஏற்றுக்கொள் கின்றேன் எனைப்போல் பிறபுலனும்
மாற்றுக் குறையா வகையென்றே - சாற்றுங்கால்
எல்லாப் புலனும் இறைவன் கொடுத்ததே
எல்லாம் மதிப்புடைத் தே (96)

கட்டளைக் கலித்துறை
தேவன் படைத்தான் தெளிவு கொடுத்தான் திறன்கொடுத்தான்
ஆவல் அமைத்தான் அடக்கும் வழிகளும் ஆங்குரைத்தான்
மூவல் தவிர்த்தொரு முக்தியைச் சேர்க்க முடிந்தமட்டும்
தாவல் அறுப்போம் சமமெனச் சேர்வோம் தரமுணர்ந்தே (97)

அகவல்
உணர்வி லோங்கி உடலும் உளமும்
புணரும் வாழ்வே பொன்வாழ் வாகும்
புலன்கள் யாவும் புணர்ந்த உணர்வால்
நலங்காண் உயிரே நனியினிது வாழும்
ஒவ்வொரு புலனும் ஒன்றிய திறனால்
செவ்வை யாகச் செய்பணி
இவ்வுல கேத்தும் இன்பமே இன்பமே (98l

விருத்தம்
இன்பத் திற்கே ஐம்புலனும்!
  இன்பந் தானே இவ்வியற்கை!
இன்பத் திற்கே இப்புவியும்!
  இன்பத் தேட்டம் இயல்பாகும்!
இன்பஞ் சிறிதில் ஏறிடுவோம்!
  இன்பம் பெரிதை எண்ணிடுவோம்!
இன்பே எங்கள் ஐவரையும்
  இணைக்கும் தமிழின் இன்னொருபேர்! (99)

வண்ண விருத்தம்
தனனா தந்தனன தந்தா
 தனனா தந்தனன தந்தா
  தனனா தந்தனன தந்தா தனதானா

இணைவோ மைம்பொறிக ளொன்றாய்
 மகிழ்வா யன்பொடுக லந்தே
  எவரோ டும்பகைமை யின்றே உறவானோம்

இறையோ னின்கருணை யொன்றால்
 வளமா கும்பணியும் நன்றே
  இனியே துந்தடைகள் வந்தா லுடனோடும்

துணிவாய் நம்கடமை யொன்றே
 பெரிதாய் நெஞ்சுறுதி கொண்டே
  தொடர்வோ மின்ப(ம்)வரு மென்றே நகையோடே

துணையா குந்தமிழ்வி ருந்தால்
 மனமோ பண்புடனெ ழுந்தே
  சுகரா கந்தனில்மி தந்தே களிகூர

அணியா யொன்றிணைய நம்போ
 லினியோ ரிங்கெவரு முண்டோ
  அழகாய் நம்பணியில் நன்றே விளையாதோ

அடடா நம்பெருமை கண்டே
 அதனா லின்பமது கொண்டே
  அமுதூ றுங்கவியை யின்றே வனைவாரே

உணவே கொஞ்சுதமி ழென்றே
 நினைவால் நம்பும்நமை வென்றே
  உயிரோ யெங்குசெலு மென்றே புரியீரோ

உணர்வா லிங்கிதைய றிந்தே
 செவியான் மன்றினிலு வந்தே
  ஒலியால் நன்றியினை யின்றே பொழிவேனே ! (100)

Aug 23, 2021

அரங்கேற்றம் - ஐந்தணிப் பாட்டு (அலங்காரப்பஞ்சகம்) - ஐம்புலனைந்தணி - பகுதி 9

வெண்பா
போகுந் துயரிறையின் பொன்னடி போற்றுகையில்
ஆகும் திருவெல்லாம் அஃதறிவோம் - வாகாய்
விழியிரண் டுண்டாயின் வேத முதல்வன்
எழிலதும் கண்டுய்வோம் ஈண்டு (81)

கட்டளைக் கலித்துறை
ஈண்டொரு தெய்வத் திணையடி சேர்ந்தால் இறுகிடும்கண்
வேண்டிய தெல்லாம் விளம்பி விளம்பி வியந்திடும்வாய்
தூண்டிய வேர்வைத் துளியில் உடல்விழத் துள்ளும்செவி
ஆண்டிடும் தூப அமைதியில் ஆழ்தல் எனதுழைப்பே (82)

அகவல்
உழைப்பிரிந் துடன்சேர் நட்புப் போலத்
தழைத்த வாயின் தடங்கண் டோர்ந்து
சேரத் துன்பம் தேடி வாரா
என்னெனின் என்ன இல்லெனின் இல்லெனத்
தன்னள விருத்தும் தனிவாய்
பொன்னெனப் போற்றும் பொருள வாமே (83)

விருத்தம்
பொருளென்னுஞ் செல்வமது போனாற் கூடப்
  பொருட்டாகக் கொள்ளாமல் மீள்வார் உண்டே!
இருளென்னும் நோயதனில் மெய்தான் வீழ்ந்தால்
  இடர்ப்பாடு தான்கடத்தல் எளிதா காதே!
அருளென்னும் நெறிச்செல்வம் அதுபோ னாலோ
  அத்தனையும் போனதுதான்! மீட்பே இல்லை!
கருமாலின் கருணையினை மெய்யாய்ப் போற்றிக்
  கடைத்தேறல் நங்கடனே மெய்யாற் போற்றி! (84)

வண்ண விருத்தம்
தனத்தான தனன தனதானா
  தனத்தான தனன தனதானா

கடைத்தேறும் வழியை உணர்வீரே
  களிப்பான விசையில் நனைவீரே
மிடுக்கான செவியை அறியீரோ
  விலக்காம லுணர முயல்வீரே
குடத்தோடு திறமை யொளியாமல்
  குணத்தோடு வளர விடுவீரே
படித்தாலு மறிய முடியாத
  படைத்தோனின் புகழை நினைவீரே! (85)

வெண்பா
நினைவினில் நிற்கும் கடந்தகால் ஓட்டம்
அனைத்தும் விழிகண்டால் அன்றோ - கனவெனினும்
காண்பதே இன்பமாம் கண்களின் சீர்பாட
வேண்டுமோ இன்னும் விரிப்பு (86)

கட்டளைக் கலித்துறை
விரித்துரை பேசிடும் வள்ளுவம் மூக்கின் விணையதனை
விருந்தின ரோடும் விளைகிற காதல் வியப்பினொடும்
பொருத்திடும் இன்னும் புகழுள தாமோ புவியுயிர்க்கு
மருந்தெனத் தன்னால் வளர்வதும் என்றன் மகத்துவமே (87)

அகவல்
மகத்துவம் அறிவாய் மன்னுஞ் செறிவாய்
அகத்துவக் கின்ற ஆற்றலும் கொள்ளும்
வாய்தான் காது வரையில் நீளப்
பேய்தான் என்று பெருமையும் உரைப்பார்
இடம்பொருள் ஏவல் இனிது பார்த்து
நடம்புரி வாயே நன்றாய்
வாழும் வாழும் வகையறி வீரே (88)

விருத்தம்
வகையாய்ப் பெருமை பலபேசும்
  மற்ற புலன்காள்! நீங்களெலாம்
வகையாஞ் செய்கை ஒன்றிரண்டே
  வழங்கு கின்றீர்! மெய்யெனிலோ
தகையும் கைகால் தோல்நரம்பு
  தழைக்கும் இதயம் நீரகங்கள்
வகையாய்ப் பற்ப லுறுப்புகட்செய்
  வகைபல செயலும் என்னுடைத்தே! (89)

வண்ண விருத்தம்
தனந்த தானா தனதானா
  தனந்த தானா தனதானா

உடைந்து போவேன் செவிடானால்
  உறைந்து நோவேன் புரியாமல்
குடைந்த தாலே பழுதானேன்
  குமைந்து நானே தனியானேன்
முடிந்து போனா லொலியேது
  முடங்க லாமோ வெனநானே
தொடர்ந்து கேளா நிலைமாறத் 
  தொடங்கு வேனே பணிநேரே! (90)

Aug 22, 2021

அரங்கேற்றம் - ஐந்தணிப் பாட்டு (அலங்காரப்பஞ்சகம்) - ஐம்புலனைந்தணி - பகுதி 8

வெண்பா
ஓடும் விழிப்பாவை ஒன்றதே வீழ்த்தாதோ
மாடு பிடிக்கும் மறவரை - ஆடும்
விழியழகில் வீழ்ந்தார் பலமன்னர் என்றே
மொழியாதோ முன்படைத்த நூல் (71)

கட்டளைக் கலித்துறை
நூலை அளக்கும் நெறியெனச் சான்றோர் நுவன்றிடுவார்
ஆளை அளக்கும் அருஞ்செயல் நானதை ஆற்றிடுவேன்
மேலில் மணக்கும் வியர்வையும் நாற்றமும் மேலறிந்து
நாளை அளக்கும் நயம்நான் படைப்பேன் நலம்நிறைத்தே (72)

அகவல்
நிறைவுறு நெஞ்சம் நெறிப்பட நிறுத்திக்
குறைவயி றுண்டு குடலைக் காக்கத்
தலைப்பட எண்ணின் தன்வாய் நாப்பல்
அலைபடல் நிறுத்தி ஆக்கிய சோற்றைப்
பகுத்துண்டு வாழ்தல் பண்பாம்
தொகுத்துண்டு வாழின் தீராப் பிணியே (73)

விருத்தம்
பிணியெப் புலன்றா னுற்றாலும்
  பேச்சில் கேட்பார் மெய்நோவா?
அணியெப் புலன்றா னுற்றாலும்
  அழைப்ப ததனை மெய்யழகே!
கணையை நோதல் தவறென்றும்
  கைவில் தனைச்சொல் வீரென்றும்
மணியாம் மொழியு முள்ளதுவே!
  மற்றவை கணையாம்! மெய்வில்லே! (74)

வண்ண விருத்தம்
தத்தன தனதன தனதானா
  தத்தன தனதன தனதானா

மற்றவர் பணியினை விடமேலாய்
  மட்டற உயர்பணி புரிவேனே
உற்றவ ருடனொலி வடிவாக
  ஒப்புர வொடுதரு செவியானே!
நற்றமி ழமுதினை நிதம்நாடும்
  நற்றவ முனிவரின் அருளாலே
பெற்றவ னிறைவனை மறவேனே
  பித்தென இசையினில் மலர்வேனே! (75)

வெண்பா
மலர்கின்ற கண்ணின்றி வஞ்சியெழில் எங்ஙன்
புலப்படும் ஆங்குப் புகல்வீர் - அலர்கின்ற
தாமரை யன்னமுகம் கண்டு திளைக்கையில்
ஏமம் பெருகல் இயல்பு (76)

கட்டளைக் கலித்துறை
இயல்பில் மகளிர் இழைகூந் தலதில் இருக்குமணம்
வியப்பாய் எழவே விரிஞன் புரிவிளை யாடலதில்
நயமாய் எழுவினா நானிலா தங்கு நடக்குமதோ?
மயலால் எழுந்து வளர்வினா என்றன் மகிழ்ச்சியதே (77)

அகவல்
மகிழும் வாழ்வாம் மனத்திற் காதலால்
நெகிழ்ந்த நேரம் மனைவியை வஞ்சப்
புகழ்ச்சியாய் ஒருசொல் புகன்றால் போதும்
வாயைக் கொடுத்து வாங்கிக் கட்டும்
மாயைப் பிடியில் மாட்டும்
நேய மன்றோ நீள்வாய்க் கொழுப்பே (78)

விருத்தம்
கொழுப்பைச் சேர்த்தால் கொழுத்திடுவேன்!
  குறியாய் நடந்தால் இளைத்திடுவேன்!
தொழுதற் காகப் பணிந்திடுவேன்!
  துடிப்பாய் விளையாட் டாடிடுவேன்!
விழுதாய்த் தொடருஞ் சந்ததியும்!
  மெய்களின் காத லதனாலே!
அழலேன் வீணே பிறபுலன்காள்?
  அண்ணன் சிறப்பில் பங்குறுவீர்! (79)

வண்ண விருத்தம்
தனத்தா தந்தன தாத்தனா
  தனத்தா தந்தன தாத்தனா

சிறப்பா யென்பணி யாற்றுவேன்
  சிரித்தே பண்பொடு போற்றுவேன்
குறட்பா வன்புட னூட்டுவேன்
  குறிப்பால் வென்றுளம் நாட்டுவேன்
அறத்தோ டின்பமும் மீட்டுவேன்
  அடுக்கா யின்சுவை கூட்டுவேன்
வெறுக்கு மன்பரை யாற்றுவேன் 
  விருப்பு டன்துயர் போக்குவேன்! (80)

Aug 21, 2021

அரங்கேற்றம் - ஐந்தணிப் பாட்டு (அலங்காரப்பஞ்சகம்) - ஐம்புலனைந்தணி - பகுதி 7

வெண்பா
மகிழுமோ உள்ளம் மணமொலியூண் பட்டென்(று)
அகன்ற விழியிலையேல் ஆங்குப் - பகிர்கின்ற
காட்சியை ஒட்டிக் களிப்பும் மிகுமன்றோ
மாட்சி வளக்கண்ணுக் கே (61)

கட்டளைக் கலித்துறை
கேட்பதும் பார்ப்பதும் கேடா யிருப்பினும் கீழுடல்மேல்
ஆட்படும் காற்றில் அழுக்கே இருப்பினும் ஆங்கவைதான்
நாட்பட நாட்பட நம்முள் பழகிடும் நானெனக்கோர்
ஊற்றமி லாவிடம் உற்றில் நகர்வேன் உதவியிதே (62)

அகவல்
உதவி வேண்டி ஒருவன் வந்தான்
சிதைக்கும் பசிப்பிணி தீர்க்க நாடிப்
பசிக்கிற தென்றன் பசியைப் போக்கப்
புசிக்க வென்னுள தென்றான் வாயால்
வாய்க்கா தவனின் வாயோ உரைத்தது
வாய்தா னுளது வந்தவனோ
நோய்தாக் காலே நொறுங்கி னானே (63)

விருத்தம்
நோய்தாக் காலும் பிறப்பினிலும்
  நொய்மை நல்கும் விபத்தினிலும்
போய்ச்சேர்ந் தாலோ பிறபுலன்கள்
  புழுவாய்த் துடிப்பார் வாடிடுவார்!
வாய்ப்பை எணிப்பின் மனந்தேறி
  வாழ்வார் மாற்றுத் திறனோடே!
போய்ச்சேர்ந் தாலோ பொன்னுடம்பு!
  போச்சுது! மாண்டார்! மீட்புண்டோ? (64)

வண்ண விருத்தம்
தந்தா தனத்தன தானதனா
  தந்தா தனத்தன தானதனா

உண்டோ எனக்கிணை மேனியிலே
  ஒன்றா யுழைப்பவர் வாழ்வினிலே
பண்பா யுயர்த்திட வேமுனைவேன்
  பந்தா யுருட்டிட வேநினையேன்
கண்டார் வருத்திய போதினிலும்
  கந்தா வெனப்புகழ் பாடிடுவேன்
நன்றா யிசைப்பவர் ரோடுறவாய்
  நன்றே வளத்துட னேயுறைவேன்! (65)

வெண்பா
வேண்டா தவரோ விருப்புக் குரியரோ
ஈண்டொரு பார்வை எடுத்துரைக்கும் - யாண்டும்
ஒருசொலு மின்றி உணர்த்தும் குறிப்பால்
புருவ முயர்த்தி விழி (66)

கட்டளைக் கலித்துறை
விழிக்கோர் உடைவின் விளியிலை ஆயினும் மூக்குடைந்தால்
பழிக்கோர் அடியெனப் பாரில் மனிதர் பதறிடுவார்
மொழிக்கோர் உளறல் செவிக்கோர் இடறல் திகழுடல
இழுக்கோர் அழிவாம் இழைவதென் மேலே இகழ்மணமே (67)

அகவல்
மணக்கும் மணக்கும் வாய்ம ணக்கும்
பிணக்கும் சுணக்கும் பிரிந்து வறக்கும்
செந்தமிழ்க் கதிரலை வேலனைச் சீரலைச்
செந்தூர்க் காரனைச் சேர்ந்தே
அந்தமில் ஆனந்தத் திருப்புகழ் பாடவே (68)

விருத்தம்
வேயாம் மெய்யென்னில் விதமாய் நவதுளைகள்
ஆய ரிளங்கோபன் அவன்கைக் குழலெனவே
மாயை யகன்றாங்கே மற்றோர் பிறப்பின்றித்
தோயு மிசையதனிற் றுலங்கித் திளைப்பேனே! (69)

வண்ண விருத்தம்
தனத்தா தய்யன தாத்தானா
  தனத்தா தய்யன தாத்தானா

திளைப்பேன் நல்லன கேட்டால்யான்
  திகைப்பே னல்லன கேட்டாலே
களைப்பால் மெல்லின நாற்றாவேன்
  கணக்காய் வல்லின ஊற்றாவேன்
வளைத்தே யள்ளிடு காற்றோடே
  மலைத்தே னுள்ளமு மீர்ப்பாலே
முளைத்தேன் செவ்விய பாட்டோடே
  முடிப்பேன் மெய்யதன் வீட்டோடே (70)

Aug 20, 2021

அரங்கேற்றம் - ஐந்தணிப் பாட்டு (அலங்காரப்பஞ்சகம்) - ஐம்புலனைந்தணி - பகுதி 6

வெண்பா
போற்றலாம் மற்ற புலன்களையும் என்றாலும்
ஆற்றலில் மிக்கவர் யாமென்றே - ஏற்பீர்
இறையைத் தொழுபவர் இன்னருள் பார்வை
குறைவின்றிக் கோருவதைக் கொண்டு (51)

கட்டளைக் கலித்துறை
கொண்டுள கோபக் குறிப்பை உணர்த்திடக் கூறுவதென்?
அண்டிட வேண்டா அவருக்கு மூக்கில் அனல்கொதிக்கும்
மண்டிடும் கோபி யெனும்பத மன்றோ? வளர்சினமும்
பண்டுள வீரம் படைத்தவன் தந்த பலம்,புகழே (52)

அகவல்
புகழைப் புகலும் புலனாம் வாய்த்தமை
அகழ்ந்த சொல்லால் அளந்து சொல்வேன்
முனையும் எந்நா முயற்சிப் பிறப்பால்
வனையும் சொல்லே வாய்க்கும்
படியே ஒலிக்கும் படைப்புக் குரியனே (53)

விருத்தம்
படைப்புக் கிறைவன் பண்ணிய தென்னுரு!
விடையி லமர்வான் வீட்டுவ தென்னுரு!
நடையி லுயர்மால் நாட்டுவ தென்னுயிர்!
விடைவே றுண்டோ? வெல்புலன் மெய்யதே! (54)

வண்ண விருத்தம்
தய்யா தனன தனதனனா
  தய்யா தனன தனதனனா

மெய்யா மிறைவன் மலரடியை
  மெய்யா யுருகி வழிபடவே
செய்வே னமுத இசையுடனே
  செல்வே னொலியின் வடிவினிலே
பொய்யா துவர மருள்பவனால்
  பொல்லா தமன நிறைவுறுவேன்
மெய்யோ டுழலு மினியவனாய்
  வெல்வே னுலகு செவியெனும்நான்! (55)

வெண்பா
நாணமோ நல்லறச் சீற்றமோ நெஞ்செழும்
மாணமோ வல்ல கருணையோ - வீணதாய்ச்
சொல்லெடுக்க வேண்டா துணையாய் விழிகளே
நல்லமுறை காட்டும் நடித்து! (56)

கட்டளைக் கலித்துறை
நடித்திடும் கண்கள் நலமிலாப் பொய்வாய் நயந்துரைக்கும்
நொடிந்திடும் மேனி நெறியிலாக் காதுகள் நோக்கிழக்கும்
துடித்திடும் நல்லிறை தோதாய் வளர தொடர்ந்திருந்தே
அடிப்பினும் பொய்யாம் அழுக்கறி யாநான் அரியவனே (57)

அகவல்
அரியவன் யானே அறிய உரைப்பேன்
அரிசியை உண்ணும் அருஞ்சொல் பேசும்
வழியா கும்மே வாயென் றாலே
விழியா செவியா மெய்யா கும்மா
மூக்கா கும்மா முனைந்தும்
தாக்கா தீரும் கணைச்சொல் லாலே (58)

விருத்தம்
சொல்லுக்கு வேராகும் மொழியே கண்டீர்!
  சொற்கொள்ளுஞ் சிறப்பெல்லாம் மொழியைச் சேரும்!
நல்லானொன் றீகின்றா னென்றா லந்த
  நல்லமனம் வாழ்த்திடுவோம்! கரத்தை அன்றே!
சொல்லுவதைக் கேளுங்கள்! அதுபோற் றானே
  சொல்லுகின்ற பிறபுலனின் சிறப்பெல் லாமும்
எல்லாமுஞ் சேர்ந்திருக்கும் மெய்யைச் சேரும்!
  ஏதுபுகல் மெய்யில்லை என்றால் இங்கே? (59)

வண்ண விருத்தம்
தந்தா தனதன தனதனன
  தந்தா தனதன தனதனன

இங்கே கவிமழை பொழிகிறது
  இன்றோ புயலென விரிகிறது
அங்கே வருபவ ரெவரெனினும்
  அன்பா லுளமது நனைகிறது
செங்கோ லொடுதமி ழுலகமதில்
  செண்டாய் மணமது நிறைகிறது
இங்கே செவியென தொலிபரவ
  எங்கோ வொருமனம் மகிழ்கிறது! (60)

Aug 19, 2021

அரங்கேற்றம் - ஐந்தணிப் பாட்டு (அலங்காரப்பஞ்சகம்) - ஐம்புலனைந்தணி - பகுதி 5

வெண்பா
அறிவீர் உலகினில் அன்பதனைக் காட்டப்
பொறியாம் விழியினைப் போலென்(று) - அறிவிப்பார்
கண்மணி என்றே களித்துரைப் பாரென்னில்
விண்வரை செல்லுமெம் பீடு (41)

கட்டளைக் கலித்துறை
பீடுடை என்றனைப் பேணிடும் செய்கை பெரியதன்று
நாடுள வெப்ப நிலைமை அறிந்து நலம்புனைந்து
மூடிய தேகம் முழுதும் குளிர்ச்சியை முன்படைப்பேன்
ஈடென மற்றோர் இருத்தல் பொதுப்பெயர் அவ்வளவே (42)

அகவல்
அவ்வள வெவ்வள வாகும்? எனக்குச்
செவ்வள வறியாச் செய்கை யுறவால்
துன்பமே மிஞ்சும் துணையாய்
இன்பமாய் மாற்றலை இனியான் பகர்வேன் (43)

விருத்தம்
பகரும் வாயெல்லாம் பாடட்டும் மெய்புகழே!
நுகரும் நாசியெலாம் நுகரட்டும் மெய்மணமே!
அகன்ற விழிசெவிகள் அருந்தட்டும் மெய்யேற்றம்!
இகத்தில் இவைதானே இன்பமிங்குப் புலன்கட்கே! (44)

வண்ண விருத்தம்
தனதான தய்யன தானனனா
  தனதான தய்யன தானனனா

புலனாக மெய்யொடு கூடிடுவேன்
  பொலிவான மெய்வழி யேவிழைவேன்
தலையாய செல்வமும் நானெனவே
  சரியாக வள்ளுவம் பேசியதே
கலையாத கல்வியும் நாடிவரும்
  கனிவாக நல்வழி கூறிவிடும்
நிலையாத இல்லற வாழ்வினிலே
  நிறைவோடு நல்லற மேபுரிவேன்! (45)

வெண்பா
அறம்புரி வோரை அகமகிழ் வோடு
புறக்கணால் கண்டு புகழ்வர் - திறம்படக்
கண்ணிலையேல் ஆங்குக் களிப்பில் சிறுகுறையே
எண்ணினால் ஏற்கலாமெஞ் சீர் (46)

கட்டளைக் கலித்துறை
சீர்பெறும் மாலை நறுமணம் பெற்றால் சிலிர்ப்பதுவும்
போர்பெறும் ரத்த புலால்மணம் உற்றால் புளிப்பதுவும்
நேர்பெறும் என்றன் நிறையாற் றலில்தான் நினைவெனும்மா
ஊர்பெற் குற்ற உதவிகள் என்றன் உடைமைகளே (47)

அகவல்
உடைமை எதுவோ உண்மை வாய்மை
கடைமை நீக்கிக் கடமை போற்றிச்
செயற்கருஞ் செயற்குச் சொல்லாய்ப்
பயத்தல் யான்செய் பயனா கும்மே (48)

விருத்தம்
பயனிங் கென்னாற் பலவாங் கண்டீர்
  பாரீர் செய்யும் வினையெல்லாம்
பயனாய் நிறையப் பலவாஞ் செயலும்
  பண்ணு மென்றன் கரங்களதே!
பயணம் செல்லும் பாத மெனதே!
  பயனும் பலநூ றதிலுண்டாம்!
வியக்கும் படியாய் விந்தை களெல்லாம்
  விளைந்த தென்னாற் றானன்றோ? (49)

வண்ண விருத்தம்
தன்னா தானா தாத்தந்தா
  தன்னா தானா தாத்தந்தா

என்னால் தானே கேட்கின்றீர்
  என்னால் தானே பேச்சென்றீர்
நன்னா ளோடே பூக்கின்றீர்
  நம்மோ டேதான் மூச்சென்றீர்
முன்னா லேபா ராட்டென்றால்
  முன்னே றாதோ சாற்றுங்கள்
சொன்னே னேதோ சொற்கொண்டு
  சும்மா யானே போற்றுங்கள்! (50)

Aug 18, 2021

அரங்கேற்றம் - ஐந்தணிப் பாட்டு (அலங்காரப்பஞ்சகம்) - ஐம்புலனைந்தணி - பகுதி 4

வெண்பா
புரியும் செயல்யாவும் பூவிழி இன்றிப்
புரிதலும் செம்மையாய்ப் போகா - அரிய
விழியிரண் டின்றி விரைந்து பணியில்
எழிலாய் இயங்குவதெவ் வாறு (31)

கட்டளைக் கலித்துறை
உடுப்பது மேனி, விழிப்பவை கண்கள், உலகினர்சொல்
மடுப்பது காது மடமட என்றே விழுங்கிடும்வாய்
சொடுக்கிடும் மூளை நடத்திட நால்வர் சொலுமறிவை
முடிப்பதும் வாழ விடுப்பதும் நானென் மூச்செனவே! (32)

அகவல்
மூச்சுப் பிடிக்க மொடமொடக் குடித்துப்
பேச்சுக் குழறிப் பிறவி மறக்கச்
சாக்கடை சந்து தெருக்கள்
போக்கிடந் தெரியாது புரளவைப் பேனே (33)

விருத்தம்
புரளப் பஞ்சுப் பொதிகட்டில்
  புரக்க வாசச் சவுக்காரம்!
திரண்டு கொழிக்கப் பலபயிற்சி!
  தேடி யணியும் நல்லாடை!
மிரட்டும் நோய்கட் கெதிராக
  மேனி முழுதுஞ் சோதனைகள்!
உருளும் புவிவாழ் மாந்தரெனக்
  குவந்தே செய்யும் பணிகளிதே! (34)

வண்ண விருத்தம்
தனதன தந்தந் தனதானா
  தனதன தந்தந் தனதானா

பணிகளி லென்றுங் குறைவேது
  பகலிர வென்றுங் கிடையாது
இணையொடு நெஞ்சங் கனிவாக
  இறைதொழ வன்புந் துணையாக
குணநலன் விஞ்சுந் தமிழாலே
  குருவரு ளென்றுந் துணைதானே
அணிகளு மின்பந் தருமோசொல்
  அழகிசை சிந்துஞ் செவிதானே! 35

வெண்பா
தானே இயங்கும் தரத்தோ டிமைகொண்
டேனோ இறைவன் எமைப்படைத்தான் - ஏனென்னில்
எந்தம் சிறப்பினை இவ்வுலகம் உய்த்துணர
இந்தக்காப் பெந்தமக் காம் (36)

கட்டளைக் கலித்துறை
காம்பெனக் காணும் கடிமலர் உண்டதில் கண்வழுக்கும்
சோம்பலில் மேனியும் தூங்கையில் காதும் தொடர்பிழக்கும்
ஓம்பிடும் மூச்ச தொருநொடி ஓய்ந்தால் உயிர்வருமோ?
வேம்புணும் வாயுமென் வேலையைப் பார்க்க முயன்றிடுமே (37)

அகவல்
முயற்சி இன்றி மூன்று வேளையும்
அயர்ச்சி இன்றி அள்ளி யுண்ணப்
பயிற்சி வேண்டுமோ பாரீர்
வயிற்றின் ஆணைக்கும் வணங்கா தவனே (38)

விருத்தம்
வணக்கம் பலவுண் டென்றாலும்
  மடங்கித் தரையில் நான்வீழ
வணங்கும் வணங்கே தலைவணங்காம்!
  மற்றீ தெதனா லென்பீரேல்
வணக்கம் பெறுவார் திருமுன்னர்
  வணங்கும் என்னைச் சரணமெனப்
பிணக்கம் இன்றித் தருவதனால்!
  பெருமை சேர்க்கும் என்பணிவே! (39)

வண்ண விருத்தம்
தான தனன தனதான
  தான தனன தனதான

வேத வொலியில் மகிழ்வோடு
  மேவி யுலவு புலனாவேன்
நாத வடிவி லிறையோனை
  நாடு மடிய ரொடுவாழ்வேன்
பாதை யறியு முணர்வோடே
  பாயு மெனது மனமேதான்
காத ணிகளி னசைவோடே
  காத லுறவை யறிவேனே (40)

Aug 17, 2021

அரங்கேற்றம் - ஐந்தணிப் பாட்டு (அலங்காரப்பஞ்சகம்) - ஐம்புலனைந்தணி - பகுதி 3

வெண்பா
சிறப்பாய் உலகில் தெரிவனவும் செம்மை
அறவே அகன்ற பொருளும் - திறந்த
விழிகளாம் எம்மால் விளங்கக் கடவீர்
மொழியவும் வேண்டுமோ மொய்ம்பு (21)

கட்டளைக் கலித்துறை
மொய்ம்புறு பாட்டின் முயற்சியி லும்வாழ் முகங்களில்நான்
நம்பக மாயொரு நல்லிடம் சேர்வதே நல்லிசையாம்
வம்பெனச் சற்றெனை மேல்படைத் தால்குரல் வண்டினம்போல்
ஞம்மென நம்மென வந்திடும் பாட்டும் எனதருளே (22)

அகவல்
அருளைத் தேடி அகங்கடந் தோர்க்கும்
பொருளைத் தேடிப் புலம்பு வோர்க்கும்
நலந்தரு வதுவோ நாவின்
மலர்ச்சி யன்றோ மறுமொழி இலவே (23)

விருத்தம்
இலையிற் றழையிற் தொடங்கியதாம்
  இன்னும் பலவாய் வளர்ந்ததுவாம்!
கலையாய்ப் பலவா மாடையினாற்
  கவனங் கவர்வா ரெனைப்பேணி!
நிலையா தென்றே சொல்வாரும்
  நித்தம் நீர்கொண் டெனையாட்டித்
தலையாங் கடனாய்த் தாங்குவதால்
  தவிர்ப்பார்ச் சேருந் தீயனவே (24)

வண்ண விருத்தம்
தானன தாத்தத் தனதனா
  தானன தாத்தத் தனதனா

தீயன கேட்கத் துணிகிலேன்
  தீவினை போக்கத் தொழுகிறேன்
வாயொடு மூக்கைப் புரிகிலேன்
  மாவிழி நோக்கிற் கலைகிலேன்
காயமும் வாட்டப் பணிகிறேன்
  காதென தாட்டத் துழல்கிறேன்
மாயனின் பாட்டிற் குளிர்கிறேன்
  மாலனை யீர்க்கத் தொடர்வனே! (25)

வெண்பா
தொடர்வனென் சீரினைத் தொல்லையங் காலத்(து)
அடர்வனத் தாதி இருந்தோர் - தொடர்புக்(கு)
ஒருமொழி இன்றி உருவரைந்தார் நெஞ்சில்
இருந்ததைக் காட்டக்கண் ஏற்று (26)

கட்டளைக் கலித்துறை
ஏற்ற மெனில்விண் நோக்கி இருக்கும் எழல்மறந்த
தூற்றெனில் கீழே துவளல்! எனக்கித் தொடர்முரணாம்
ஆற்றலைக் கூட்டி யடித்தரை நோக்கியே யான்வளர்வேன்
தோற்ற அழகென் துணையால் ஈடு சொலலெளிதோ? (27)

அகவல்
எளிதோ வாழ்க்கை ஏற்றமுந் தாழ்வும்
அளிப்பதில் என்பங்(கு) அளப்பரி தாகும்
வாய்ப்பும் பெறுவேன் வாய்ப்புண்
காய்ப்பும் பெறுவேன் கணக்கில காண்கவே (28)

விருத்தம்
காண்போர்க்குக் களிதருதல் கண்கவரும் தோற்றம்!
  கவின்நாசி நுகர்ந்திடவே கமகமசவ் வாது!
ஆண்வாய்க்கும் பெண்வாய்க்கும் அன்றாடம் பேச்சு!
  அவரவரின் வடிவழகே எனவழக்கம் ஆச்சு!
தீண்டிநிதஞ் செவிநிறைக்கும் செய்திகளிற் பாதி
  திருவென்றால் உடல்பற்றித் தேர்வதுதான் மீதி!
மாண்புடனே மெய்போற்றல் வழமையெனக் கொண்டார்!
  மனநலனும் பிறநலனும் வாய்த்தவராய் நின்றார்! (29)

வண்ண விருத்தம்
தந்தான தனந்தான தனதனனா
  தந்தான தனந்தான தனதனனா

நின்றாலும் நடந்தாலும் பணிதொடர்வேன்
  நெஞ்சோடு கலந்தாடி யொலிதருவேன்
குன்றாக உயர்ந்தாலும் இசைதனையே
  கொண்டாடி மகிழ்ந்தாட வழிவிடுவேன்
ஒன்றாக இணைந்தாடு விழிகளொடே
  ஒன்றாக அலுங்காம லுடன்வருவேன்
என்றாலும் நெருங்காது கடமையினை
  எந்நேர மிருந்தாலு முடன்புரிவேன்! (30)

Aug 16, 2021

அரங்கேற்றம் - ஐந்தணிப் பாட்டு (அலங்காரப்பஞ்சகம்) - ஐம்புலனைந்தணி - பகுதி 2

வெண்பா
வல்லான் எனைப்போல் வளவுலகில் யாருமிலை
எல்லாப் பொருளின் இயல்பையும் - வல்லதாய்க்
காட்டும் விழியென்னைக் கல்விக்(கு) உவமைசொலி
ஏட்டிலிடும் வள்ளுவம் இங்கு (11)

கட்டளைக் கலித்துறை
குறையுள தேகக் குறிப்பை உணர்த்தக் குழைந்திடுவேன்
நிறைவழி வாழ்ந்திட நிச்சய மூச்சை நிகழ்த்திடுவேன்
மறைபுகழ் யோக பிராணா யாம வழிக்குதவி
சிறப்புறு மென்போல் செயல்பட வல்லவர் செப்புமினே (12)

அகவல்
செப்புவீர் எதனால் செவ்வா யாலே
உப்பும் புளிப்பும் உள்ள பிறவும்
உணர வைப்ப(து) உறுவாய்
கணக்காய்க் கதுவாய் மெதுவாய் அரைக்குமே (13)

விருத்தம்
மேனிநான் பேச வந்தேன்!
மெய்யேதான் பேச வந்தேன்!
நானிலம் போற்றும் கண்வாய்
நாசியும் செவியும் வாழும்
மேனியின் பகுதி யன்றோ?
மெய்யின்றித் தனியே உண்டோ?
ஏனினும் வாதம் ஐயா!
எனக்கிணை யாருண் டிங்கே! (14)

வண்ண விருத்தம்
கேள்விக் குறியின் வடிவாவேன்
கேள்விக் குரிய புலனாவேன்
வேள்விக் கடலி னிசையோடே
வேர்விட் டொழுகு மொலியாவேன்
நீள்வட் டமொடு செவியானும்
நேர்வெற் றியதன் விளைவாக
தோள்முட் டியசை யணிபோலும்
தோல்விக் குவிடை தருவேனே (15)

வெண்பா
தருவேன் தளிர்மகிழ்வும் மனத்திற்கு நாளும்
உருக்காட்டி மேலுமும் உள்ளத்(து) - இருக்கின்ற
துன்பத்தை நீரூற்றித் தோன்றச்செய் வேனன்றோ
என்பங்கிங் கெப்போதும் உண்டு (16)

கட்டளைக் கலித்துறை
உண்டெனக் குள்ளே உருசிறு ரோம உயர்படைகள்
கண்டவை உள்ளே கடவா வணமவை காத்திருக்கும்
கொண்டுள வாழ்வின் குறியாய்க் கசட்டின் குணம்துலக்கி
அண்டுதல் நீக்கும் அறிவினில் யாருளர் ஈடெனக்கே (17)

அகவல்
எனக்கா இந்த ஊன்பொதி அடிசில்
நினைத்த போதே நீரூறும் வாயில்
உள்ளம் உள்ளிய உணவைக்
கள்ள மின்றிக் களித்துண் பேனே (18)

விருத்தம்
உண்ணுஞ் சோறும் உவக்கும்பற் காட்சிகளைக்
கண்ணின் வழியும் காதருந்தும் தேனிசையும்
நுண்ணி நாசி நுகரும்பல் நல்மணமும்
எண்ணிப் பார்த்தால் ஏகுமின்ப மெனக்காமே! (19)

வண்ண விருத்தம்
தந்த தனந்த தனத்தானா
தந்த தனந்த தனத்தானா

இன்ப விருந்து படைப்பேனே
என்று முணர்ந்த தளிப்பேனே
வென்று நிமிர்ந்து களிப்பேனே
விந்தை யறிந்து வியப்பேனே
அன்பி லொளிர்ந்து மிடுக்காக
ஐந்து புலன்க ளடுக்கோடே
நின்று விரிந்த உறுப்பாவேன் 
நெஞ்சம் மலர்ந்து சிறப்போடே! (20)

Aug 15, 2021

அரங்கேற்றம் - ஐந்தணிப் பாட்டு (அலங்காரப்பஞ்சகம்) - ஐம்புலனைந்தணி - பகுதி 1

ஆக்கம்:

● வாழ்த்து, அவையடக்கம், நூற்பயன் : பைந்தமிழரசு மரபுமாமணி பாவலர் மா. வரதராசன்
● வெண்பா (கண்) - மன்னை வெங்கடேசன்
● கட்டளைக் கலித்துறை (நாசி) - விவேக்பாரதி
● அகவல் (வாய்) - தமிழகழ்வன் சுப்பிரமணி
● விருத்தம் (மெய்) - சுந்தர ராஜன்
● வண்ணம் (செவி) - சியாமளா ராஜசேகர்

***
காப்பு

தூரிகை யாலேயித் தூய வுலகாளும்
காரிகையே வுன்றன்றாள் காப்பாகச் - சீரிதெனச்
செப்புமணி ஐந்து செழுநற் பனுவலைத்
தப்பின்றிச் செய்வாய் தடம்.

அவையடக்கம்

மைத்தடத்தில் காலொற்ற மாசில் பனுவலென
வைத்திழுத்த சுண்டெலிபோல் வந்துற்றோம் - மெய்த்தடத்தில்
நிற்கும் அவையீர் நெடுங்கான லிப்பனுவல்
கற்கும்வழி என்பீர் கனிந்து!

நூல்!
ஐம்புலனைந்தணி

வெண்பா
பூமலி தோட்டமும் பொங்கு மியற்கையும்
யாமன்றோ காட்ட வகங்குளிரும் - தீமையைக்
காட்டி மனத்தில் கனலூட்டும் கண்கள்யாம்
ஏட்டிலும் இல்லையெமக் கீடு (1)

கட்டளைக் கலித்துறை
ஈடென உண்டோ இலங்கும் மணங்கள் இருப்பறிந்து
காடெனச் சேறெனக் கார்மழை மண்ணெனக் காற்றெனுமோர்
ஊடகம் சேர்க்கும் உணர்வுகள் சொல்லி, உயிரியங்கும்
வீடகம் வாழ வினைசெயும் மூக்கின் வியப்பினுக்கே! (2)

அகவல்
வியந்து வாயைப் பிளந்து நோக்கிப்
பயந்தன எண்ணிப் பாரே பேசும்
சொல்லால் உண்மை பொய்ம்மை
நல்லாண் மைக்கு நான்கா ரணனே (3)

விருத்தம்
நானென தென்றே எண்ணம்
நானிலம் வாழ்வோர்க் குண்டாம்!
நானென தென்ப தென்னே?
நாடினால் மெய்யே தோன்றும்!
நானென தென்ப தான்மா!
நவில்வதோ ஞான மார்க்கம்!
நானென தென்று பாரோர்
நவில்வதோ வென்னைத் தானே! (4)

வண்ண விருத்தம்
தன்னத் தானா தனதந்தா

என்னைத் தானே செவியென்றீர்
என்னைக் கேளா தவருண்டோ?
கன்னத் தோடே உறவென்றேன்
கன்னற் பாவால் மகிழ்கின்றேன்
வன்னத் தோடா லொளிர்கின்றேன்
வண்ணத் தோடே வனைகின்றேன்!
உன்னிப் போடே உணர்கின்றேன்
உன்மத் தோனா யொலிதந்தே! (5)

வெண்பா
தேனோ தினையோ சுவைக்கப் பணம்வேண்டும்
ஆனால் அகன்றிருக்கும் எம்மூலம் - தேனாய்
இனிக்கும் இயற்கையைக் காணல் எளிதாம்
எனைத்தும் பணச்செல(வு) இல் (6)

கட்டளைக் கலித்துறை
செலவிலை ஆயினும் சேர்க்கும் இணையச் செழும்பரப்பில்
உலகவர் பார்த்திடும் ஒவ்வொன் றினுக்கு மொருவிலையாம்!
பலகணி நின்றுநம் பக்கத்து வீட்டார் படையுணவைத்
தொலைவில் நுகரத் தொடும்விலை இல்லை! துணையெனதே! (7)

அகவல்
துணையாய் வருமே தொழுது பாட
அணைக்கும் அந்த அருஞ்சொல் லமிழ்தம்
பிறக்கும் வாயாய்ப் பெருமை
சிறக்கும் படியென் சீரிய வாழ்வே (8)

விருத்தம்
வாழு வாழ்வதும் வாழ்வெனச் சொல்வதும்
வாழு மெய்யிவன் வாழ்ந்திடு மட்டுமே!
சூழு மேதுயர் சூடெனில் நீங்கிட!
ஏழு கூவிலும் என்னிணை யில்லையே! (9)

வண்ண விருத்தம்
தன்னன தானன தய்யானா

என்னிணை யாருளர் சொல்வீரே
எண்ணினும் வேறிலை மெய்யீதே!
இன்மொழி பேசமு யல்வீரே
என்னுரை யாயிது கொள்வீரே
பொன்மொழி யேதமிழ் நல்லோரே
புன்னகை யோடுப யில்வீரே!
சொன்னது காதென நுள்ளாதீர்
சின்னவ னோயிலை வல்லோனே! (10)

Aug 2, 2021

வாய்

உண்பதற் குலகில் ஒராயிரம் உண்டு
கண்படும் எவையும் கருதி உண்பேன்
ஆசை தீரா அகத்துக் காகத்
தோசை நூறு தூர்ப்பேன் வயிற்றில்
கடுநோய்க் கெல்லாம் காரணம்
படுவாய் தானே பண்பிலன் யானே
வாய்ப்ப வெல்லாம் வாங்கி யுண்பேன்
வாய்ப்ப வெல்லாம் வகையாய் உரைப்பேன்
வாய்ப்புண் ணுக்கும் வாய்ப்புக்கும்
வாய்ப்ப தாமென் வாழ்க்கை யாமே

Jul 18, 2021

உள்ளமும் வளர்ச்சியும்

தமிழகழ்வன் சுப்பிரமணி

காப்பு
அப்பனே! அந்தமிழ் ஆர்வல! ஆக்குகின்ற
இப்பனுவல் ஏதும் இடருறாமல் - செப்பமாய்ச்
செய்ய வலனென்று சேதி உரைத்தலுக்(கு)
உய்யும் உயர்விதி கூறு

அவையடக்கம்
என்செய எண்ணியான் என்செய்கின் றேனோஒ
புன்செயல் எல்லாம் பொறுத்தருள்வீர் - நன்செயும்
புன்செயும் இந்தப் புவிமீதில் உண்டேமன்
இன்செயல் என்றேயேற் பீர்

நூல்
உலகம் உவப்ப உழலச் செயுமவ் வுயர்ந்தவனைப்
பலரும் புகழும் பகலவன் தன்னைப் பணிந்தமுதக்
கலவை எனவே கலந்த உயிர்களைக் காத்தருளும்
நிலவுல கத்தை நினைத்தியான் பொங்கி மகிழ்பவனே! 1

மகிழ்ச்சி நிறைந்து மனத்தினில் ஓங்கி வளர்வதற்கே
பகிர்ந்து பலவுயிர் ஓம்பிக் கருத்தொடு வாழ்குவமே
அகிலந் தனிலே அதுவே முறைமை அழிப்பதற்கே
திகிலைப் பரப்பும் திகைசெயல் எல்லாம் திருத்துவமே 2

திருந்தித் தெளிந்து திகழ்சொல் லுரைத்துத் திருத்துகவே
வருந்தி வகையாய் வடிவமைப் பாயே வளர்நலமும்
பொருந்திப் பெரிதுவக் கின்ற பெருமை யடைந்துலகில்
இருந்ததற் கான இனிய புகழை இயம்புதற்கே 3

இயம்புக சொற்கள் இனிமை தரவே இகழ்ச்சியெலாம்
நயம்புக மாறும் நலமே அருளுமிந் நானிலத்தில்
பயந்த பெருவெளிப் பாதை முழுதும் பயன்படற்கே
வியந்தளக் கின்ற விருப்பம் உடைத்தாய் ஒளிர்தரவே 4

ஒளிர்தரும் ஒண்மீன் உடனுழல் கோள்கள் ஒருவிதியால்
தெளிவுற வோங்கித் திகைக்க வைப்ப தறிகுவையோ
ஒளியும் இருளும் உளவே இலவே ஒருங்கிணைந்து
மிளிருமொன் றோடு சுழியம் எனவே வெளிப்படுமே 5

வெளிப்பா டுடைமை உளத்துக்கண் ணோடும் விளைவுகளைத்
தெளிவாய் எடுத்துத் திளைக்கச் செயுமத் திருவினையால்
ஒளிப்பா டுடைமையின் உண்மையும் இன்மையும் ஒருங்குவைத்துக்
களிப்பைத் தருவதன் காரணம் ஓர்க கருதிவைத்தே 6

வைத்த பெருவிதி மாபெருஞ் சட்டம் வகைவகையாய்ப்
பொய்த்து விடாது புலிபசுத் தோல்போர்த்த அக்கதையாய்
மெய்த்து விடாது வெள்ளறி வோடு விளங்குவதால்
உய்க்கும் வழியமைத் தோங்கி வளர்க்க உயிர்களையே 7

உயிர்களை நாடி உதவிகள் தேடி ஒருங்கிணைத்துப்
பயிர்களைப் போலே பதமாய்த் திருத்திப் பழக்குகின்ற
உயிர்த்தலை வன்றனை ஓர்ந்திவண் டேர்க ஒருவழியே
துயர்துடைக் கின்ற துணைவன் அவனே சுடர்விளக்கே 8

விளக்கொன்று வேண்டும் விடியல் நமக்கு விளக்குதற்கே
உளமிருந் தால்தான் உயர்வுக் கொருவாய் உருப்படுமே
களங்காண் ஒருவன் கருதிய யாவும் களமழிக்கா(து)
உளங்கொ ளொருவனாய் ஓங்கி வளர உயர்த்துகவே 9

உயர்த்துக உன்கை உலகமும் உன்கை ஒருவிதிசெய்
செயற்கையால் சேரழி வுக்கோர் முடிவைச் செயல்படுத்தி
இயற்கை யுடனே இயயைந்தநல் வாழ்வை இறையருள்வான்
உயர்வோ உழைப்பால் உணர்வாய் உணர்வாய் உலகினிலே 10

நூற்பயன்
உள்ளத் துறையும் உடைசிந் தனையெலாம்
வெள்ளத் திருத்தி வெளிக்கொணரப் - பள்ளங்
கடந்தேறும் நல்ல கனிவாழ்வு பெற்றுத்
தடமமைப்பீர் தாங்குதர ணிக்கு.

பைந்தமிழ்ச் சோலை - ஆசுகவிச் சுழல் 02

அமர்வு02 - சிற்றிலக்கியம்

தலைப்பு: நற்றமிழ் நான்மணிமாலை

காப்பு
நல்ல தமிழ்பற்றி நான்மணி மாலையிட
வல்லானே! வாழ்த்தி வணங்குவோம் - சொல்லால்
சுடச்சுடப் பாவியற்றத் தூணா யிருந்தே
தடங்கலின்றிப் பேரருள் தா!

அவையடக்கம்
ஆசு கவிச்சுழலாம் அந்தச்சூ றாவளியில்
பேசுதற்கு வந்தோம் பெருந்தகையீர் - தூசாம்யாம்
எங்கள் குறைபொறுப்பீர் ஏந்தலீர் பைந்தமிழாள்
செங்குரவீர் வாழ்க சிறந்து

1. தங்க மணியாரம் தமிழ்மீது சூட்டப்
பொங்குளத் தோடு பொதியில் வருகவே

2. கெழீஇய இன்பம் கேள்கா தளிக்கச்
செழீஇய உள்ளமொடு ஜெனிஅசோக் வருகவே

3. வடம்பிடித்துத் தமிழ்த்தேரை வழிநடத்திச் செல்ல
நடராசன் ஐயா நாடி வருகவே

4. நயாஅத் தோடு நற்பா நல்க
நியாஅஸ் மரைக்காயர் நேயமொடு வருகவே

நூற்பயன்
நன்மதி நாட்டம் நலமொடு தானீயும்
பொன்மதி யாந்தமிழ்ப் பேரிசைக்க - இன்பம்
பெருகிநல் வாழ்வளிக்கும் பேறு பலபெற்(று)
இருமையும் வாழ்வீர் இயைந்து.

Jul 17, 2021

அண்ணாமலையானே!

வான்கொண்ட கதிரவனும் வடிவழகு மதிநிலவும்
தான்கொண்ட இருகண்ணாய்த் தண்ணுதலில் ஒருகண்ணாய்
மீன்விழியாள் இடப்பாகம் மீதுறையும் மலையானே
நான்முகனும் திருமாலும் நயந்துணரா மலையானே

Jul 14, 2021

பண்ணால் அகமாற்றுவேன்

என்னதான் செய்வதிங்கே? ஏதுசெய் தாலுந்தான்
தன்னிறை வென்றொன்று தான்கொளா - மின்னலாய்
எண்ணங்கள் மாற்றி எடுத்ததெலாம் வேண்டுமெனில்
வண்ணங்கொள் வாழ்வா? வதை                                  1

வதைபடு நெஞ்சினன் வன்சொல்லைக் கேளா(து)
உதைபடு நாளா உழன்று - கதைமாறுங்
கானத்து வாசமாய்க் காட்டி நடப்பனோ
ஈனத்(து) இழிபிறப்பா யான்?                                            2

யான்செய்த பாவமென்ன யாமத்தும் துஞ்சாது
வான்கொள் நிலவோடு வாட்டத்தைத் - தான்பகிர்வேன்
தேனாம் இனியவளே தேனீயாய்க் கொட்டியதால்
ஊனடங்கிப் போனேன் உழன்று                                     3

உழன்றுழன்(று) ஓடாய் உடைந்தழும் உள்ளம் 
பழங்கதைகள் எல்லாஅம் பாழாய் - முழம்போட
வெற்றுக்கை வீசி வெறுக்கை வெறுத்தேனோ
பற்றுக்கோ(டு) இல்லாப் படி                                             4

படித்த படியான் படியான் எனையும் 
அடியன் எனவாக்கல் ஆமோ? - முடியா 
அடியா முழுதுண ராதார் அடைவேன் 
அடியை அறியா தவன்                                                         5

தவந்தாங்கி வாழ்ந்தேன் தனக்கு நிகரில்
எவரும் எனவிருந்தேன் இன்றும் - அவந்தாங்
ககமாய் நிகரிலேன் ஆனேனை இன்னும்
இகமாந் தழைக்கும் இனி?                                                 6

இனியொன்று செய்வேன் எனவென்று நன்றாய்
நனிமகிழச் சூழ்ச்சி நலமே - பனிக்கின்ற
கண்ணாள் படும்பார்வை காணாது நொந்தேனா
பண்ணால் அகமாற்று வேன்.                                          7

மாற்றுவேன் என்று மனமாறிச் சென்றறிந்தேன்
மாற்றங்கள் எல்லாம் மறையுமே - கூற்றமே
மாற்றரிய மாவிசையாம் மண்ணுயிர்க் கெல்லாஅம்
போற்றியுயிர்ப் பாக்கல் பொலிவு                                 8

பொலிவுடைய நெஞ்சிலும் போற்றுத லின்றி 
நலிவடையும் எண்ணம் நடத்தும் - வலிய
விதியின்பால் நாளை விழாஅது காப்பாய்
மதியின்பம் சேர்க்கும் வழி           9

வழியறி யாது வகைதெரி யாது
சுழியினின்(று) ஒன்று துலங்கத் - தொழில்நடத்திச்
செல்லவொரு தூண்டுகோல் தேடுக வெல்லும்வாய் 
இல்லையென்ப(து) இல்லையே என்       10










Jun 23, 2021

தந்தையே

சிறந்தன யாவும் சிந்தையில் எண்ணிச்
சிறகடிக்க வைத்துச் செழுமையை ஊட்டும்
திறமுடை யப்பனே! தெய்வம் போலவே
அறம்பொருள் நல்கி அகிலம் ஆனாய்!
உலகம் அறியா உணர்வுடை யவன்நான்
உன்னை விடவும் உயர்ந்து வளர
உலகம் உணர்த்தி உலகம் ஆனாய்!

Jun 13, 2021

மணிக்குறள் - 50. முப்பாலைப் போற்று

அருந்தமிழ் சொன்ன இலக்கணங் கட்குப்
பொருந்துநற் காட்டாங் குறள்                                 491

வாழ்க்கை முறையை வளமாய் நிறுத்தலான்
தாழ்வைத் தடுக்கும் மருந்து                                    492

நிலைதவறிப் போனாரை நின்றுதடுத் தாண்டு
மலையாக்கும் மாண்பை உடைத்து                     493

குறளடி யாலே குவலயம் ஆண்ட
அறம்பொருள் இன்பம் அது                                      494

ஒருபொருண்மேற் பத்தடுக்கி ஒவ்வொன்றும் முத்தாய்ப்
பொருள்பொதிந் தாக்கினார் போற்று                 495

எக்காலத் திற்கும் இனிதாய்ப் பொருந்துவழி
அக்காலத் தேவகுத்தார் ஆண்டு                             496

காலங் கருதி இடத்தாற் செயச்சொல்லிப்
பாலம் அமைத்தார் படிக்கு                                       497

ஐயனே! ஆற்றல் அளிக்கும் திருக்குறளை
உய்யவே தந்தாய் உலகு                                             498

துணைநின்று தாங்கும் சுடர்விளக்கின் கோலாய்
இணைத்தாய் இனியமுப் பால்                               499

சொல்லாக் கருத்துண்டோ? சொல்லிற் சுடரேற்றி
வெல்லக் கொடுத்தாய் விருந்து                              500

Jun 7, 2021

ஆறு முகனே வரந்தருமே!

ஆறு முகனே கொடுநுண்மி
  ஆட்டம் அறுப்பாய் அகத்துக்குத்
தேறுதல் தருவாய் தெருளகற்றித்
  தெளிந்து வினையை ஊக்குவிப்பாய்
மாறுதல் வேண்டும் மாயையிலே
  மாட்டித் தவிக்கும் மக்கட்கு
வீறு கொண்டு விளையாட
  வெற்றிக் கொடியோய் வரந்தருமே!

Jun 6, 2021

மணிக்குறள் - 49. வணிகத்தமிழ் வளர்ப்போம்

எண்ணம் சிறக்க எழிற்றாய் மொழிக்கல்வி
வண்ணம் பலவாக்கத் தேர்                              481

தமிழ்வழிக் கல்வி தகுவழி ஆற்றும்
அமிழ்தாய் இனிக்கும் அறிவு                          482

கல்வி யிலாது வணிகம் சிறக்காது
நல்வித் ததற்குத் தமிழ்                                       483

முத்தமி ழோடு முனைந்து வணிகமெனும்
அத்தமிழை ஆக்குவோம் ஆய்ந்து                 484

அறிவியலை ஆக்குக அந்தமிழில் சிந்தை
செறிவாய் வளரும் சிறந்து                                485

நிறுவனம் எல்லாம் நிலைகொள வேண்டும்
உறுதல் தமிழ்வழி என்று                                    486

அலுவல் மொழியாய் அருந்தமிழ் ஆக்கு
நிலைநன் னிறுவனம் நின்று                           487

கலைகள் அறிவியல் காலக் கணினி
நிலைகொள் தமிழில் நிறுத்து                         488

விண்ணொளிர் சோதிட வித்தைத் தமிழ்வழிக்
கண்ணொளியாய்க் கூட்டக் கனி                  489

மென்பொருள் வன்பொருள் மேதினி காண்கின்ற
நுண்பொருள் நந்தமிழில் நூல்                         490

May 30, 2021

மணிக்குறள் - 48. கூற்றங் கண்டு குலையாதே

உடலோம்ப நாளும் உயிரச்சம் இல்லாத்
திடவாழ்வு வாழ்வோம் திளைத்து                471

சரிவிகித மாயுணவு சார்ந்திருக்குங் காலை
வருங்காலன் கண்டஞ்சல் இல்                       472

உணவும் உடலின் இயக்கமும் ஓர்ந்தாய்ந்(து)
இணைப்போம் இயல்பு வழி                            473

உடம்பின்றி ஏதுமிலை உற்ற உயிர்க்கஃ(து)
இடமாதல் கண்டு தெளி                                    474

உடலியக்கம் ஊணுறக்கம் உற்றுணரல் நான்கும்
கடனாகக் காக்கும் கனிந்து                            475

இன்றுணர்ந்தார் நாளை இலையெனும் உண்மையை
நின்றுணர்ந்தார்க் கில்லை துயர்                 476

கொடுங்கூற்றம் என்று குலையா திருப்பாய்
தொடுமொருநாள் அஃதென்று உணர்        477

நம்பிக்கை யாலே நலம்வாழ்வோம் நம்பாமல்
ஏதும் நடப்ப திலை                                              478

உளஞ்சார்ந்த செய்தியால் உண்டாம் விளைவே
உளந்தெளிவோம் ஊக்க மொடு                  479

உடைமை எதுவெனின் உள்ள நலனே
உடைமை யதுவோ உடற்கு                             480

May 23, 2021

மணிக்குறள் - 47. அருவி அழகில் ஆழ்

அருவுதல் என்னும் அருந்தொழி லாலே
அருவியெனப் பட்டாள் அவள்                     461

நீருக்கு வீழ்ச்சியோ நீர்வீழ்ச்சி என்னாது
பேருண்மைப் பேர்கொண்டு போற்று     462

அடடாவோ என்னே அழகாய் அருவி
நடம்போட்(டு) ஒழுகலைப் பார்                  463

உள்ளம் செலுத்தி உயர்ந்த மலைமீது
கொள்ளையிடும் பேரழகைப் பார்           464

ஓங்குமலை மீதிருந்(து) ஓடிவரும் பாடிவரும்
ஆங்குநடம் ஆடிவரும் ஆர்ந்து                    465

மலைக்காட் டருவியின் மாமகிழ்வைப் பாங்காய்
உளங்காட்டக் காட்டும் உயிர்ப்பு              466

அருவி வருநீர் அகவொழுக்(கு) ஆய்ந்து
கருதக் கிடைக்கும் கரு                                  467

காண்டற்குப் பேரின்பம் காணாது போமுன்றன்
நீண்ட துயரமும் நீர்த்து                                  468

அருவி அழகை அகந்தோய்ந்து காண
இருமையும் துன்பம் இரிப்பு                        469

ஆற்றலும் ஆற்றலும் ஆறும் ஒழுக்கமும்
போற்றிக் கொளக்கிடைக்கும் பொன்    470

May 16, 2021

முருகாதலம் - காரிகை - பகுதி 3

பைந்தமிழ்ச் செம்மல் 
தமிழகழ்வன் சுப்பிரமணி 

தலையெழுத் தாவதென் றாலெழுத்  தாவதென் றானீன்றதாங்
கலையெழுத் தாவதென் காலெழுத் தாவதென் கானீன்றதாம்
நிலையெழுத் தாவதென் நீளெழுத் தாவதென் நீயென்னுடைத்
தலையெழும் அல்லலைத் தாளிடு மல்லலைத் தாருமையே                                 21

தருகென்று வேண்டித் தமிழ்பாடி னேனைத் தரமுயர்த்தி
முருகா தலமென் முனைப்பை யளிப்பாய் முழுமுதலே
உருகா உயிரும் உலகினில் உண்டோ உனையகலேன்
பொருந்து மறிவால் புரிவன தந்தழி பொய்ம்மையையே                                      22

பொய்யா யுலகில் பொழுதினைப் போக்கும் பொருளெனவோ?
செய்யத் தகாதன செய்யத் துணிவார் செயல்களெலாம்
ஐயோ கொடுமை அறமிலச் செய்கை அழிதலுக்கே
ஐயா அருள்வேலா! ஆறுத லீவாய் அகத்தினுக்கே                                              23

அகத்திற் பொருந்திணை அத்தும்பை ஆகலான் ஆறுறுத்திப்
பகலவ னாலே பனிபடும் பாடாய்ப் பணித்துறுமா
அகலாத் துயரெலாம் ஆட்டங் கொளச்செய் அருந்தமிழா!
துகளாய்த் தொடங்கி முயல்வான் துணையெனச் சூழ்ச்சியில                          24

சூழ்ந்தியான் செய்யத் துணிந்தன யாவும் துயர்விலக்கும்
ஆழ்ந்தியான் செய்ய அகத்தில் மகிழ்வால் அமைதியுளன்
தாழ்ந்துவ ணங்கித் தலைமேல் திருவடி தாங்குவனே
ஆழ்ந்தார்ந் திருக்கும் அடியர்தம் ஆர்வத் தருவிளக்கே                                          25

விளக்காய் விளங்கி வியனுல கெல்லாம் ஒளியருளும்
அளக்க வியலாப் பெரும்புகழ் கொண்ட அருந்தமிழைப்
பிளக்கும் வகையாய்ப் பிணக்குறு வார்தம் பிழைகளினை
உளங்களைந் தோட்டுக ஓரா நிலையவர் ஊழ்வினையே                                    26

ஊழ்வினை யாவும் உமதருட் பார்வை ஒளிபடவே
வாழ்வினை மேன்மை வழியிற் செலுத்தும் வளத்துடனே
ஆழ்வினை தன்னில் அகம்பொருந் தட்டும் அதுமகிழ்வு
பாழ்வினை யாற்றாப் பணிவுடை  நெஞ்சம் படைத்தருள்வாய்                         27

படைவீட் டெழுந்து பகைதீர்த் தருளும் பகலவனே!
தடைவீட் டிருந்து தடுத்தாண் டருள்க தமிழமுதம்
உடைவீட் டினிலே உவகை பெருக உமதடியார்
அடைவீட் டெழுக அவருளங் கொள்வதென் ஆழ்வதுவே!                                       28 

ஆழ்ந்தொரு செய்கை அகத்தில்  நிறைத்தியான் ஆற்றுதற்காய்ச்
சூழ்ந்து முனைவேன் சுடர்நெடு வேலோய்! துணையிருந்து
வீழ்ந்து விடச்செய் வினையெலாம் போக்குக மீப்பயனாய்
வாழ்ந்து மறைந்தார் வழிநிலை ஆய்ந்தெழ வாழ்த்துகவே                  29

வாழ்த்துக ஊக்குக வாய்மலர்ந் தென்னை வருவழியில்
தாழ்த்தும் உளமொடு தாக்கும் கருத்துறை தன்னலத்தார்
ஆழ்த்துமச் சூழ்வலை ஆயன வெல்லாம் அறுத்தெறிந்தவ்
வீழ்த்தும் நிலைகளை யான்கடந்  தேறும் விளைவருளே!        30                                                                 

------ நிறைவுற்றது-----

மணிக்குறள் - 46. மருத்துவச் சேவை

நோய்கண்டு நோயின் முதல்கண்(டு) அவையிரண்டும்
காய்வழி காண்பாரே காப்பு                          451

வருமுன்னர்க் காக்கும் வழிசொல்லும் வந்தும்
அருங்காப் பளிக்கும் மருந்து                        452

கொடுநுண்மி யாளக் குறையாத ஊக்கக்
கடுந்தவம் செய்வாரைக் காண்                   453

உடலாய்ந்து கூறி உறுநோயை நீக்கும்
கொடையாளர் தெய்வமே கொள்               454

எதிர்பாராத் தீநேர்ச்சிக்(கு) ஏற்பன செய்யும்
மதியாரைப் போற்றி மதி                               455

மருந்தும் கருவியும் மாறாத நுட்பம்
பொருந்தச்செய் வார்தம்மைப் போற்று 456

உற்றார் உழைச்சென்(று) உரிய மருந்தளிக்கும்
நற்றாய்க் கடனே கடன்                                 457

பதறி வருவார் பதற்றம் தணிக்கும்
இதமுளார் வாழ்வே இனிது                          458

விரைவூர்தி ஓட்டி உயிர்காக்கும் தோழப்
பெருந்தகை யாரை நினை                          459

ஆருயிர் காக்கும் அரும்பணி யார்தமக்(கு)
ஆரும் இணையில்லை ஆம்                        460

May 9, 2021

மணிக்குறள் - 45. வணிகமில்லாக் கல்வி

அடிப்படைக் கல்விக்கே ஆயிரமாய்க் கேட்பார்
அடிமடியில் கைவைப்பார் ஆண்டு              441

களர்நிலம் போக்குமக் கல்வி பொதுமை
உளதவ் வுரிமை உனக்கு                                   442
 
உலகச் சமநிலைக்(கு) ஒன்றும் படிப்பு
நிலைவரம் நீக்கு பணம்                                    443

நாட்டின் நிலையறிந்து நாணயம் வேண்டாது
கூட்டுக கல்வித் தரம்                                          444

கல்வித் தரமுயர்த்தக் காணா வழிசெய்வார்
சில்லறையால் சீர்குலைந்து போம்             445

கல்விக்குச் செல்வம் கணப்போதும் ஈடில்லை
சொல்லித் தெரிதலோ? சொல்                      446

முன்னேற்றம் காண்டற்கு முட்டாய் நிலைத்திருந்து
பின்னேற்றும் பேதைப் பணம்                      447

வளர்ந்தமையின் கல்வி வணிகமே நோக்காய்
வளர்ந்தமையல் இன்றுநல் வாழ்வு            448

வணிகமென வைக்காதீர் வாழ்வுரிமை யென்று
துணிந்துரைப்பீர் நேர்மை துணை            449

வணிகமாய் மாறாத வான்புகழ் கல்வி
துணிந்து பெறுதலே தூண்                             450

May 2, 2021

மணிக்குறள் - 44. தமிழ்நாடு தமிழருக்கே

மொழியாய்ப் பிரிந்தநா ளன்றே உரிமை
மொழியாருக் கென்றே மொழி                             431

ஒரேநா(டு) ஒரேமொழி யென்றுகொண் டாடல்
அரே!தர மின்றஃ(து) அழுக்கு                                 432

மொழிகாக்க வேண்டும் முதலான தேவை
அழிவில்லா வாழ்வுரிமை யே                                433

தன்னிலத்து வாழ்வுரிமை காக்கா(து) அயலானை
இந்நிலத்(து) ஆளவிடல் ஏன்?                                  434

தன்னிறைவு கொண்டுதான் தான்வழங்கல் வேண்டுமெனல்
பொன்னென் மொழியன்றோ? போற்று            435

தன்மக்கள் வாழ்வொழித்துத் தானளிப்பான் மற்றவர்க்கு
மன்னவனோ? மாற்றான் மகன்                            436

தமிழ்நாட்(டு) உரிமை தமிழர்க்(கு) உரித்தே
தமிழ்நாட்(டு) உரிமை தமிழ்க்கு                           437

தமிழ்நாட்ட வேண்டாது தானடிமை யாகல்
தமிழ்நாடும் வேண்டாது காண்                             438

அயலார்க் களித்தல் அயல்மொழி நாட்டல்
செயலார்க்கு? நில்லாதே! செல்!                           439

காவாதான் காவல் கடுந்துன்பம் உண்டாக்கும்
தாவாதான் கொண்டு தடு                                        440

Apr 25, 2021

மணிக்குறள் - 43. கீழ்மையகற்று

பொய்யுங் களவும் பொறாமையும் காமமும்
எய்யா நிலைக்கும் இடன்                                     421                              

எதுவோ எதுவோ எதுவு மிழைக்கும்?
மதுவே மதுவே யது                                                  422

குணங்குன்றி நிற்கக் குறையாற்றும் நெஞ்சு
குணங்குன்றக் குன்றலுங் குன்று                      423

ஒழுக்கம் இலாத ஒருசெயலும் ஒன்றா(து)
இழுக்கத்(து) இருத்தி விடும்                                 424

கீழ்மைக் குணமெலாம் கேடுறச் செய்தலான்
வீழ்வதற்கு வாழ்வாம் விதி                                   425

கோடியாய் நிற்கக் கொடிகட்டி யாண்டாலும்
கோடுளத்துக் கீழ்மை கொடிது                          426

வாழ்வுக் கணியாய் வகையா யமைந்தாலும்
தாழ்வுக் கிழுக்கும் தவறு                                      427

பிறன்பொருள் வௌவீஇப் பேராக்கங் கொள்ளல்
அறனன்(று) அழிவினுக்(கு) ஆறு                        428

வாழ்முறை யல்லன வாழ்வளித்தல் போலாகிப்
பாழ்முறைக்(கு) ஆக்கும் படி                               429

கீழ்மைக் குணமகற்றிக் கொள்க அருளுள்ளம்
வாழ்வாங்கு வாழும் வழி                                       430

Apr 23, 2021

முருகாதலம் - காரிகை - பகுதி 2

பைந்தமிழ்ச் செம்மல் 

தமிழகழ்வன் சுப்பிரமணி


வழிபடும் ஆர்வலர் வாழ்வுக்(கு) அணியென வாய்ப்பவனே!

விழிபட வேண்டி விருப்பொடு நின்றேன் விளைப்பவனே!

அழிபடல் இன்றி அகிலத்தார் உள்ளத்(து) அடியிருந்து 

செழிபட வேண்டும் இயற்கைவே ளாண்மை சிறந்துலகே!             11


சிறந்து விளங்கவென் சிந்தனைக் குன்றன் றிருவருளைத்

திறந்து விடுக சிறுதுளி யேனும் செவியுணரும்

வறந்திரு காலம் வரந்தந் தருளும் வடிவழகா!

திறந்தந் தருள்க செயலறி யேனிச் சிறியவனே!             12


சிறுபரு வத்திருந் தென்னுடைச் சிந்தை செதுக்கிவழி

உறுபரு வத்தே உடையன வாக்கி ஒளிர்பவனே!

உறுசெயல் யாவும் உயருளச் சூழ்ச்சியில் ஓங்குதலுக்(கு)

அறுமுக வேலா! அருள்தரும் வேளா! அருமணியே!             13


மணிமா மயிலினில் மாவுல கெல்லாம் வலம்வரவே

கிணிகிணி கிண்கிணி யென்றொலி கேட்டுக் கிளர்ந்தெழுவேன்

அணிமொழி யாளின் அகத்தைக் களவுசெய் ஆருயிர!

கணிநீ யெனவழி காட்டிக் கனிதலின் கள்ளமிலேன்             14


கள்ள மிலாது கரும்பாய் இனிக்கக் கடத்தியுமிவ்

வுள்ளம் படும்பா(டு) உணர்வு படும்பா(டு) உணர்ந்தனையோ

கொள்கை முரணால் கொளாது நடக்கும் குடிமையினைத்

தெள்ளிய பாதையில் தேற்றி அருளுக தென்னவனே             15


தென்மொழி யானே திறலுடை யானே திருக்குமர!

இன்மொழி யாலுனை ஏத்தி மகிழ இருள்விலக்கும்

நன்மொழி யானே நலம்வேண் டினனே நயந்தியைந்த

பின்மொழி வேறு பிறக்குமோ நாவில் பெருமையனே             16


பெருங்குழப் பத்தைப் பெயர்த்து விழச்செய் பெருந்திறனை

அருளுக வேந்தே அருவி யெனுநின் னருள்விழியால்

பெருந்திர ளாகப் பெருந்திற லோடு பிணக்குடையார்

வருவது கண்டவர் தோள்கள் வருந்தப் பொருதவனே!             17


பொருப்பினைக் காக்கும் பொறுப்புடை யோனாய்ப் பொருந்தியகம்

விருப்புற் றமர்ந்து வினைதீர்த் தருளி விளைவளிக்கும்

ஒருதனிச் செம்மல் உயர்தமிழ்ச் செல்வன் உளங்கனிந்த

அருந்தவச் சேயோன் அமர்க்களம் வென்றான் அமரருக்கே      18


அமர முனிவர்தம் அல்லல் அகற்றி அவனியிலே

தமராய் வருவாரைத் தாங்கி அருளுந் தமிழவனே!

உமது கழனாடி ஊக்கந் தனைத்தேடி ஓடிவந்தேன்

எமது வழக்கை எடுத்தருள் வாயே எழிலவனே!             19


எழீஇ லெனுஞ்சொற்(கு) இலக்கண மாய இறையவனே

பொழீஇ லமர்ந்தாயைப் போற்றிக்கொண் டோடி வருபவர்தம்

இழீஇ நிலைமாற்றி இன்பெ னமுதூட்டி ஏற்றவரைத்

தழீஇக் கொளுந்தேவே! தாம்நினைப் பாரோ தலையெழுத்தே! 20

(தொடரும்)

Apr 18, 2021

பைந்தமிழ்ச்செம்மல் 'ஆதிகவி' சாமி.சுரேஷ் அவர்கள்


கவிஞன் என்பவன் யாவன்? கவிதை என்பது யாது? எனும் வினாக்களை எப்போதும் நெஞ்சில் இருத்தித் தம் கவிதைகளை இணைவைத்துப் பார்க்க இயலாத மிக்க சொல்லாட்சியோடும், பசுமரத்து ஆணி போலப் பதிய வைக்கும் பொருளாழத் தோடும் கட்டுவதில் பெருவிருப்பம் கொண்ட கவிஞர்களுள் இவரும் ஒருவர். ஆதிகவி எனும் பெயருக்குப் பொருத்தமானவர்.

மின்னார் சிவனாரின் மென்றமிழின் வாணாளாய்ச்
சின்னவனே வாழ்வாய் சிறந்தோங்கி - நண்ணாரும்
சொல்லோடு வாழ்த்தட்டும் தூய நறுங்கவியே
பல்லாண்டு வாழ்க பணைத்து.!

என மரபு மாமணி பாவலர் மா.வரதராசனார் அவர்களால் பாராட்டப்பட்டவர் உயர்திருவாளர் சாமி.சுரேஷ் அவர்கள்.

அவர் விழுப்புரத்தில் 1978-ஆம் ஆண்டு பிறந்தார். அவருடைய பெற்றோர் ந.சாமிக்கண்ணு - இராணி அவர்கள். அவருடன் பிறந்தோர் இரு தங்கைகள், ஒரு தம்பி ஆவர்.

அவர் தொழிற்கல்வியும் முதுகலை வரலாறும் படித்தவர். நடுவணரசின் பாதுகாப்புத் துறையின்கீழ் இயங்கும் ஆவடி திண்ணூர்தி தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார்.

அவருடைய துணைவியார் திருமதி மஞ்சு அவர்கள். இவர்களுக்கு இரு ஆண் பிள்ளைகள். மூத்தவன் சு.நதின் ஆதித்யா. இளையோன் சு.கவின் கிருஷ்ணா. திருக்குறள் பயிற்சியிலும் சிலம்பாட்டக் கலையிலும் சிறந்து விளங்கும் பிள்ளைகளின் பெயரிலிருந்தே ஆதிகவி எனும் புனைபெயருக்கு உரியவரானார்.

ஒரு முறை பைந்தமிழ்ச் சோலையின் சிந்துபாடுக பயிற்சியில் இவர் இயற்றிய

“பன்னிரு கைகள்கொண் டே - இங்குப்
பற்பல தெய்வத்தின் சிற்பமுண் டாம்
என்னிரு கைகளைத் தான் - நான்
எப்போதும் போற்றுவேன் தப்பில்லை காண்”

என்னும் கவிதையைக் கண்ட பாவலர் மா.வரதராசன் அவர்கள் மெய்சிலிர்த்துப் பின்வருமாறு பாராட்டினார்.

“பொறிதட்டும் ஒரு கவிதை; உசுப்பிவிடும் வீச்சு; கிளர்ச்சியைச் சொடுக்கும் புரட்சி; ஏனோ தாராபாரதி ஒரு நொடி மூளையில் பளிச்சிட்டார்.

வெறுங்கை என்பது மூடத்தனம் - உன்
விரல்கள் பத்தும் மூலதனம்

என்ற தாராபாரதியின் வரிகளை நினைவூட்டியது இந்தக் கவிதை”

ஆம். இவரது கவிதைகள் மின்னல் கீற்றைப்போல் பளிச்சிடும். இசையோடு பாடல்களைப் பாடுவார். இவரது கவிதைகள் உள்ளத்தில் எப்போதும் ஒலித்துக் கொண்டே இருக்கும் வல்லமை உடையன. இதோ என்னுள் ஒலித்துக் கொண்டிருக்கும் அந்த வரிகள்.

வானத்தி ருச்சுடர் முன்னே - மண்ணில்
வந்ததி ருத்தமிழ்ப் பெண்ணே - உன்னின்
வளமானவள் நிலமீதினில்
இலையேபுகழ் நனிமேவிய
வனப்பே - உயிர் - கனப்பே

தெளிவான அரசியல் பார்வையும் உண்மையும் பொய்ம்மையும் கலந்த ஊடகத்துறையினூடே உண்மையைத் தேடித் தொடரும் ஒரு தொலைநோக்குப் பார்வையும் உடையவர். இவரது பாடல்கள் சமுதாயத்திற்குத் தொண்டாற்றும் தொடர்முயற்சியன.

காட்டில்வாழு மிருகமெலாம்
காவலனாய் வந்து-நம்
கழுத்தறுத்துக் கொன்று-உடல்
காயவைத்துத் தின்று-அடக்
காவலாளி நானென்கும்
கனைத்தபடி நின்று

ஓட்டைவிற்றுத் தின்றதுதான்
உலகமகாக் கேடு - பின்
உருப்படுமா நாடு - நாம்
உணராவரை பேடு - பலர்
ஓலமிட்டும் உறங்குவதே
ஒண்டமிழர் பீடு

இவரது பாடல்கள் உள்ளெழுச்சி ஊட்டுபவை. செயல்படத் தூண்டுபவை. இதோ ஒரு சான்று:

உன்போல வேறாரும் இல்லை-நீயும்
ஒப்பிட்டுப் பார்த்தாலே ஓயாது தொல்லை
மின்மினி பூச்சிக்கு ஈடா-அந்த
விண்ணிலா சூரியன் நேரில்லை போடா.

‘உண்மைக் கவிஞர் உண்டோ?’ எனும் தலைப்பிலான இவரது எண்ணங்கள், கவிஞர்கள் தம்மையே ஆராய்ந்து பார்த்துக் கொள்ளத் தக்கதாகச் செவியறிவுறூஉவாக இடித்துரைப்பன.

ஈனக் கவலைகள் இறக்கி வைத்து
மானக் கவிஞ னென்பா ரிங்கே
ஈயச் சொல்லில் பொன்முலா மிட்டு
மாயச் சொல்லென் றுரைப்பா ருண்டு
கிழட்டுச் சொல்லில் உவமை கோத்து
முழக்குங் கவிஞர் முக்கா லிங்கே
காமப் புலம்பலைக் கவிதை யென்று
தேமச் சீரில் குழைப்பவ ருண்டு
கள்ளைக் குடித்துப் பெருத்த தொந்திபோல்
வெள்ளைக் காகித வெற்றுப் புலம்பலை
அள்ளக் குறைவிலா வட்சய மென்று
கள்ளச் சிரிப்புடன் கதைப்பவ ருண்டு
தொந்திப் பெரியவர் தோழமை யெண்ணி
சந்தி சிரிக்கிற சந்தங்கள் பாடும்
எந்த வறிவு மில்லாப் பேதையர்
இந்த மண்ணிடை எண்ணில வுண்டு
சாலை வழிகிற செந்நீர் தள்ளி
மாலை நிலவுக்கு மாலைக ளுண்டு
வட்டித் தொழிலுக்கு வந்தவர் போலும்
புட்டிப் பொருளுடன் பொருந்துவ ருண்டே
ஆளுங் காலைக் கழுவிக் குடித்து
நாளுங் கவிதைகள் நெய்பவ ருண்டு
சாதிச் சங்கத்தின் தாதிகள் வந்து
நீதிக் கவிதை நீட்டுவ துண்டு
பொய்யை மட்டுமே பொருளெனக் கொண்டு
மெய்யை விற்பவர் மெத்த வுண்டே
உண்மை மட்டும் உரைக்கும்
திண்மைக் கவிஞர் தரணியி லுண்டோ?

சிறப்பாகக் கவி புனைதலோடு சிறுகதைகளும் எழுதி வருகிறார். இவருடைய ‘முகிலில்லா வானம்’, ‘மொழியின் இடைவெளி’, ‘தீதும் நன்றும்’ ஆகிய சிறுகதைகள் தமிழ்க்குதிரில் வெளிவந்துள்ளன. கடந்த ஆறாண்டுகளுக்கும் மேலாகச் சிற்றிதழ்களில் அரசியல், இலக்கியம் சார்ந்த கட்டுரைகளைப் பல்வேறு புனைபெயர்களில் எழுதி வருகிறார்.

மேலும், தமிழருவி மணியன் அவர்களின் காந்திய மக்கள் இயக்கத்தின் திருவள்ளூர் மாவட்டச் செயலாளராகத் தொண்டாற்றி வருகிறார். தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பல்வேறு களப்போராட்டங்களில் முனைப்புடன் பங்கு பெற்று வருகிறார். சமூக நீதிக்கான போராட்டங்களில் கருத்து வேறுபாடு பார்க்காமல் மற்ற இயக்கங்களிலும் கலந்து கொள்கிறார். அரசியலில் காந்தியும் ஆன்மீகத்தில் ஓஷோவும் இரு கண்கள் என்னும் கருத்துடையவர் இவர். "நீ விரும்பும் மாற்றம் முதலில் உன்னிலிருந்தே தொடங்க வேண்டும்" என்னும் மகாத்மா காந்தியடிகளின் மேற்கோள் இவருக்கு மிகவும் பிடித்த ஒன்றாகும்.

தொழிற்சங்கப் பணியோடு ஆவடி திண்ணூர்தித் தொழிலக முத்தமிழ் மன்றத்தின் மேனாள் இணைச் செயலாளராகவும் செயல்பட்டு வந்தார். பைந்தமிழ்ச்சோலையோடு இணைந்து பயணிக்கும் அவர் கடந்த இரண்டாண்டுகளாகப் பைந்தமிழ்ச் சோலையில் பயிற்றுநராகவும் செயல்பட்டு வருகிறார்.

இவர் பெற்றுள்ள பட்டங்கள்:

• கவியருவி (தடாகம் இலக்கிய வட்டம், இலங்கை)
• பைந்தமிழ்ப்பாமணி (பைந்தமிழ்ச்சோலை)
• பைந்தமிழ்ச்செம்மல் (பைந்தமிழ்ச்சோலை)
• விரைகவிவாணர் (பைந்தமிழ்ச்சோலை)
• ஆசுகவி (பைந்தமிழ்ச்சோலை)
• காரைக்குடி வீறுகவியரசர் முடியரசனார் விருது,
• ஈரோடு தமிழ்ச்சங்க விருது- கவியொளி
• வானவில் பண்பாட்டு மையம் நடத்திய 2020ஆம் ஆண்டிற்கான உலகளாவிய கவிதைப் போட்டியில் (சுமார் 700 கவிஞர்களில்) முதற்பரிசு.
• பைந்தமிழ்ச்சோலை இலக்கியப் பேரவை - திருவண்ணாமலைக் கிளை நடத்திய ஆண்டுவிழாச் சிறப்பு மரபு கவிதைப் போட்டியில் முதற்பரிசு.

இவர் தனது முதல் நூலான ‘தலைநிமிர்காலம்’ எனும் நூலை மார்ச்சு 21, 2021 அன்று வெளியிட்டார். இந்நூலை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் திரு.புகழேந்தி தங்கராஜ் அவர்கள் வெளியிட முதல் பிரதியை மதிப்பிற்குரிய நண்பர் திரு.அரங்கன் அவர்கள் பெற்றுக்கொண்டார். நிகழ்வில் மரபு மாமணி பாவலர் வரதராசன் அவர்களும் காயிதே மில்லத் கல்லூரி தமிழ்ப் பேராசிரியர் திரு.ஹாஜா கனி அவர்களும் காந்திய மக்கள் இயக்க மாநிலப் பொருளாளர் திரு.பா.குமரய்யா அவர்களும், ஆவடி தமிழ்ச்சைவப் பேரவைத் தலைவர் திருமதி கலையரசி நடராசன் அவர்களும் ஆவடி எழில் இலக்கியப் பேரவைத் தலைவர் திரு.எழில்.சோம.பொன்னுசாமி உள்ளிட்ட தமிழ்ச் சான்றோர் பெருமக்களும் கலந்துகொண்டனர்.

'நண்பர் சாமி சுரேஷ், பாவேந்தர் பாரதிதாசன் பாசறை தந்த சிந்தனைகளால் செதுக்கப்பட்டவர் என்பதை அவருடைய பல்வேறு கவிதைகள் ஒளிவுமறைவின்றி வெளிப்படுத்துகின்றன, தமிழ் வளர்த்தெடுத்த பாவினங்கள் அனைத்தையும் இவர் அற்புதமாகக் கையாண்டிருப்பதில் வியப்பு மேலிடுகிறது' என்று தமிழருவி மணியன் அவர்கள் வாழ்த்துகிறார்.

பேச்சில் சுவைகூட்டி இனிக்க இனிக்கப் பேசும் பேராண்மை கொண்டவரான தமிழறிஞர் பைந்தமிழ்ச்செம்மல் “ஆதிகவி” சாமி.சுரேஷ் அவர்களுக்கு என்னுடைய வணக்கங்களைத் தெரிவித்து மகிழ்கிறேன். அவர் எல்லா வளமும் நலமும் பெற்றுத் தமிழன்னையின் புகழைத் தரணியெங்கும் கொண்டு செல்லும் ஒப்பற்ற பணிசெய்ய உவகையுடன் வாழ்த்துவோம்.

நீதியொளிர் செங்கோலைக் கையில் தாங்கி
   நெறிசொல்லி ஆள்கின்ற மன்ன னாக
மேதினியை மேன்மைமிகப் படைக்க வேண்டி
   வெல்கின்ற ஆற்றலொடு வெல்லம் போன்ற
சேதிசொல்லிச் செம்மைசெயும் எழுது கோலைத்
   தன்கையில் தாங்கியவர் நயமாய்ப் பாடும்
ஆதிகவி சாமிசுரே(சு) ஐயா வாழ்க!
   அவையதிரும் கவிசொல்லும் அனலே வாழ்க!
                                                - தமிழகழ்வன் சுப்பிரமணி