Apr 23, 2021

முருகாதலம் - காரிகை - பகுதி 2

பைந்தமிழ்ச் செம்மல் 

தமிழகழ்வன் சுப்பிரமணி


வழிபடும் ஆர்வலர் வாழ்வுக்(கு) அணியென வாய்ப்பவனே!

விழிபட வேண்டி விருப்பொடு நின்றேன் விளைப்பவனே!

அழிபடல் இன்றி அகிலத்தார் உள்ளத்(து) அடியிருந்து 

செழிபட வேண்டும் இயற்கைவே ளாண்மை சிறந்துலகே!             11


சிறந்து விளங்கவென் சிந்தனைக் குன்றன் றிருவருளைத்

திறந்து விடுக சிறுதுளி யேனும் செவியுணரும்

வறந்திரு காலம் வரந்தந் தருளும் வடிவழகா!

திறந்தந் தருள்க செயலறி யேனிச் சிறியவனே!             12


சிறுபரு வத்திருந் தென்னுடைச் சிந்தை செதுக்கிவழி

உறுபரு வத்தே உடையன வாக்கி ஒளிர்பவனே!

உறுசெயல் யாவும் உயருளச் சூழ்ச்சியில் ஓங்குதலுக்(கு)

அறுமுக வேலா! அருள்தரும் வேளா! அருமணியே!             13


மணிமா மயிலினில் மாவுல கெல்லாம் வலம்வரவே

கிணிகிணி கிண்கிணி யென்றொலி கேட்டுக் கிளர்ந்தெழுவேன்

அணிமொழி யாளின் அகத்தைக் களவுசெய் ஆருயிர!

கணிநீ யெனவழி காட்டிக் கனிதலின் கள்ளமிலேன்             14


கள்ள மிலாது கரும்பாய் இனிக்கக் கடத்தியுமிவ்

வுள்ளம் படும்பா(டு) உணர்வு படும்பா(டு) உணர்ந்தனையோ

கொள்கை முரணால் கொளாது நடக்கும் குடிமையினைத்

தெள்ளிய பாதையில் தேற்றி அருளுக தென்னவனே             15


தென்மொழி யானே திறலுடை யானே திருக்குமர!

இன்மொழி யாலுனை ஏத்தி மகிழ இருள்விலக்கும்

நன்மொழி யானே நலம்வேண் டினனே நயந்தியைந்த

பின்மொழி வேறு பிறக்குமோ நாவில் பெருமையனே             16


பெருங்குழப் பத்தைப் பெயர்த்து விழச்செய் பெருந்திறனை

அருளுக வேந்தே அருவி யெனுநின் னருள்விழியால்

பெருந்திர ளாகப் பெருந்திற லோடு பிணக்குடையார்

வருவது கண்டவர் தோள்கள் வருந்தப் பொருதவனே!             17


பொருப்பினைக் காக்கும் பொறுப்புடை யோனாய்ப் பொருந்தியகம்

விருப்புற் றமர்ந்து வினைதீர்த் தருளி விளைவளிக்கும்

ஒருதனிச் செம்மல் உயர்தமிழ்ச் செல்வன் உளங்கனிந்த

அருந்தவச் சேயோன் அமர்க்களம் வென்றான் அமரருக்கே      18


அமர முனிவர்தம் அல்லல் அகற்றி அவனியிலே

தமராய் வருவாரைத் தாங்கி அருளுந் தமிழவனே!

உமது கழனாடி ஊக்கந் தனைத்தேடி ஓடிவந்தேன்

எமது வழக்கை எடுத்தருள் வாயே எழிலவனே!             19


எழீஇ லெனுஞ்சொற்(கு) இலக்கண மாய இறையவனே

பொழீஇ லமர்ந்தாயைப் போற்றிக்கொண் டோடி வருபவர்தம்

இழீஇ நிலைமாற்றி இன்பெ னமுதூட்டி ஏற்றவரைத்

தழீஇக் கொளுந்தேவே! தாம்நினைப் பாரோ தலையெழுத்தே! 20

(தொடரும்)

No comments:

Post a Comment