Apr 18, 2021

மணிக்குறள் - 42. ஆற்றுவளமே சோற்றுவளம்

உயர்மலையில் ஊற்றாய் உருக்கொண்(டு) அருவிப்
பெயர்விளங்கிச் சீர்நிறுத்தும் நீர்                      411

ஓடும் வழியில் உயர்செல்வம் தேடிக்கொண்(டு)
ஆடும் அரவமொ(டு) ஆங்கு                                 412

ஆறமைத்துச் செல்லும் அழகிய பண்பினால்
ஆறெனவே ஆனாள் அவள்                                  413

ஆற்றின் அருநீரால் ஆயது நாகரிக
மாற்றம் மனிதனின் வாழ்வு                                414

ஆற்றுநீ ரில்லையேல் ஆகுமோ மாமருதம்?
வேற்றுமை யின்றி விரும்பு                                  415

இயற்கையின் சீர்நிலைக்(கு) இன்றி யமையா
முயற்சி யுடையாள் அவள்                                   416

ஆற்றுவளங் காத்தல் அழிவில்லா வாழ்வீயும்
சோற்று வளத்திற்குத் தூண்                                417

ஆறின்றிச் சோறில்லை ஆக்கங்கள் ஏதுமிலை
ஊறின்றிக் காத்தல் உறவு                                   418

பல்வகைத் தாவரம் பல்லாண்டு வாழ்ந்திருக்கும்
நல்வரம் ஈயும் நமக்கு                                            419

ஆற்றுநீர் தேக்கி அணைத்துப் பயன்கொள்வோம்
போற்றுவோம் பொன்னி புணர்ந்து                420

No comments:

Post a Comment