Dec 27, 2020

மணிக்குறள் - 26. பணத்தாசை விடு

செல்வம் நிலையாமை தேர்ந்தொழுகி வாழுதல்
பல்வகை இன்பம் தரும்                                  251

என்றும் முடிவிலா(து) இன்னுமின்னும் வேண்டுமெனும்
பொன்றுந் துணையும் புதைத்து                252

நன்றும் நலனிலவும் சீர்தூக்கிப் பாராமல்
என்றும் இழிவு தரும்                                        253

படுகுழியில் தள்ளும் பணத்தாசை வேண்டா
விடுத்து நலவழி வேண்டு                              254

வாழ்வை வளமாக்கும் என்பது போல்காட்டித்
தாழ்வுக்குத் தானாம் துணை                      255

ஒன்றா உறவுகள் ஓயாக் குழப்பங்கள்
நின்றாடும் உள்ள நிலை                                256

பொருள்சேர்க்கப் பாடுபடல் நன்றாம் பொருளோ
இருள்சேர்த்(து) ஒதுங்கி விடும்                    257

அறமறந்(து) ஆக்கும் அருஞ்செல்வம் நன்மை
அறமறந்(து) ஆக்கும் அழிவு                         258

ஒருநொடியில் போமந்த ஒன்றாத செல்வம்
வருந்துவதே வாழ்வின் பயன்                     259

பணத்தாசை விட்டொழிக்கப் பார்வை தெளிந்து
குணம்நாடும் இன்பம் கொடுத்து             260

Dec 20, 2020

மணிக்குறள் - 25. மதுவை மற

மயக்கும் மதுவை மறப்பாய் உறுதி
பயக்கும் மனத்தைப் படைத்து                      241

மானம் பறக்க மயங்கியென் சாதித்தாய்?
ஈனப் பிறவி இது                                                   242

நல்லுலகம் காண்பமென எண்ணி நரகமெனும்
கொல்லுலகம் காண்பாய் கொடிது             243

கல்லீரல் கெட்டுக் கடைவழிக்குக் கானாட்டும்
கல்லீர முங்காணாக் காடு                               244

தடுமாறி யுள்ளம் தடமாறச் செய்யும்
கொடுமாரி கொல்லுங் குடி                             245

சாலையும் சாக்கடையும் சந்தும் புரண்டுறங்குங்
காலையும் மாறாக் கலை                                246

மயக்கம் கலக்கம் மனத்தில் குழப்பம்
பயக்கும் அரியவாம் பண்பு                            247

இரவா பகலா இடியா மழையா
அரவா கொடியா அரிது                                     248

குளிரா வெயிலா குளமா கரையா
களிப்பா இலையே கலி                                      249

மதுவிரும்பித் தன்குடும்ப மானத்தைப் போக்க
மதுவிரும்பித் தானழிக்கும் மாண்பு            250

Dec 15, 2020

பைந்தமிழ்ச்செம்மல் திருவாளர் பே.வள்ளிமுத்து அவர்கள்



புதுக்கவி நாயகராம் - இவர்
புதுப்புதுக் கவிதையின் தாயகமாம்
மதுதரும் போதையைப்போல் - மனம்
மயக்கிடும் சிலேடையில் ஓங்கிடுவார்!
சீரொடு யாப்பறிந்தே - தனிச்
சீருடன் பாக்களை யாத்திடுவார்

என மரபு மாமணி பாவலர் மா.வரதராசனார் அவர்களால் பாராட்டப்பட்டவர், மிகச்சிறந்த மரபு பாவலர், புதுக்கவிதைப் புயல், சிலேடைச் சிங்கம், இயற்கையை வியந்து வியந்து பாடும் இன்னிசைக் கவிஞர் பைந்தமிழ்ச்செம்மல் திருவாளர் பே.வள்ளிமுத்து அவர்கள்.

அவர் தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் ஒன்றியம் கரடிகுளம் என்னும் ஊரில் 1982-ஆம் ஆண்டு பிறந்தார். முத்தாகத் தமிழ் பாடும் இவரைப் பெற்றோர் பேச்சிமுத்து – ராமுத்தாய் அவர்கள் மட்டுமன்று; இந்நாட்டு மக்களுந்தான்.

கல்வியின் மீது தீராத காதல் கொண்ட அவர் முதுகலைத் தமிழ் (M.A.), இளநிலைக் கல்வியியல் (B.Ed.), ஆய்வியல் நிறைஞர் (M.Phil) ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார். அவர் பள்ளியில் மாணவர்களுக்குத் தமிழைக் கற்பித்து இளைய சமுதாயத்தைத் தமிழ் எழுச்சியோடு வீறுகொண்டு எழச் செய்யும் தமிழாசிரியர் (எடப்பாடி ஒன்றியம் -சேலம் மாவட்டம்) ஆவார்.

தமிழ்ப்பணி: அவர் 13 வயதில் கவிதை இயற்றத் தொடங்கினார். பைந்தமிழ்ச்சோலை முகநூல் குழுமத்தில் பாவலர் மா.வரதராசனாரிடம் முறையாக யாப்பிலக்கணம் பயின்று மரபு கவிதை எழுதி வருகின்றார். பைந்தமிழ்ச் சோலையின் உறுப்பினராகவும், அதன் எண்பேராயத்தில் உறுப்பினராகவும், மரபு பாக்களைப் பயிற்று விக்கும் துணையாசிரியருள் ஒருவராகவும், தமிழ்க்குதிரின் துணையாசிரியராகவும் பொறுப்பேற்றுப் பல்வேறு தமிழ்ப் பணிகளை ஆற்றி வருகிறார்.

சிலேடைக் கவிஞரான அவருக்குப் பாவலர் மா.வரதராசனார் இயற்றிய சிலேடைக் கவிதை:

வள்ளியைச் சேர்த்ததால் வண்டமிழ் தேர்தலால்
தெள்ளிய சோலை திரிதலால் - உள்ள
முருகுதமிழ்ப் பாவி லுறைதலால் ஒன்றும்
முருகனும் வள்ளிமுத்து வும்!

இயற்கை இயம்பி: அவர் எப்போதும் கற்பனை ஓடையில் கவித்துவம் நிறைந்த மீன்களைப் பிடித்துக் கொண்டிருப்பவர். மண்மீன்களைச் சுவைப்பது மட்டுமன்றி விண்மீன்களையும் ஒரு கை பார்ப்பவர். காட்டருவிகளோடு கொஞ்சிக் குலவிக் கொண்டிருப்பவர். வயல்வெளிகளிலும், பூஞ்சோலைகளிலும் சுற்றித் திரியும் அவருக்கு முகிலும் மகிழ்மதியும் சொந்தப் பிள்ளைகள். இத்தகு இயற்கைக் கவிஞரின் இலக்கியப் படைப்புகளாவன:

 இரட்டுற மொழிதல் நூறு (சிலேடை வெண்பாக்கள்) என்ற இவரின் முதல் நூல் மதுரை உலகத் தமிழ்ச்சங்கத்தால் அரங்கேற்றம் செய்யப்பட்டது. இந்நூலைச் சிறந்த நூலாகத் தேர்வுசெய்து ஈரோடு தமிழ்ச் சங்கம் மூன்றாம் பரிசு வழங்கியது.

மேலும் அவர்,
 வள்ளிமுத்து கவித்துவம் 100
 காக்கைவிடு தூது
 இயற்கைப் பாவை
 பட்டாம்பூச்சி (சிறுவர் பாடல்)
ஆகிய நூல்களை இயற்றியுள்ளார். இவை அச்சில் உள்ளன. இவற்றோடு அணியில் ஆயிரம் என்ற நூலைத் தொடராக எழுதிவருகிறார்.

அவருடைய கவித்துவத்திற்கு ஒரு சான்று:

வாய்க்கால் வழிந்தோடும் நீர்வரப்பில் செந்தட்டான்
பூக்கால் மிதித்தருகம் புல்வளைக்கும் -நோக்குங்கால்
வில்வளைந்து நீர்கிழித்து மெல்லிசை தோற்றுவிக்க
நெல்வயலும் ஆடும் நெளிந்து...!

புரட்சிப் புயல்: ‘உலகம் சமநிலை பெற வேண்டும்; உயர்வு தாழ்விலா நிலை வேண்டும்’ என்னுமாறு உயரிய சமூகச் சீர்திருத்தக் கருத்துகளை நெஞ்சமெல்லாம் நிறைத்துக் கொஞ்சு தமிழில் உலகமெல்லாம் கொண்டு சேர்ப்பவர். இவரது பாடல்களில் புரட்சிக் கருத்துகள் வெடிக்கும். புரட்டுக் கதைகள் மடியும். காலத்திற்கேற்ற சிந்தனையைத் தூண்டும் கருக்கொண்ட கவிஞர் அவர். ஆம்.. அதற்கொரு சான்று:

சாதியென்னும் சாக்கடையில் பன்றிகளாய்ப் புரளுகின்ற
சாத்திரத்தை உடைக்கவேண்டும் எழுக..!
ஆதியிலே வந்துநின்ற கேடுகெட்ட மூடத்தனம்
அத்தனையும் தொலைக்கவேண்டும் திமிர்க..!
பாதியிலே புகுந்தெழுந்து பாவையரின் அறிவொடுக்கும்
பெண்ணடிமை ஒழியவேண்டும் வருக..!
நீதியொன்றால் நாட்டிலெங்கும் சமத்துவமே நிலைக்கவேண்டும்
நீயதற்குப் புரட்சிக்கவி தருக...!

பட்டங்களும் விருதுகளும்: அவர்
• பைந்தமிழ்ச்செம்மல்
• நற்றமிழாசான்
• சந்தக்கவிமணி
• விரைகவி வேந்தர்
• பைந்தமிழ்ச்சுடர்
• ஆசுகவி எனப் பல பட்டங்களைப் பைந்தமிழ்ச்சோலையில் பெற்றுள்ளார். மேலும்
• சிலேடைச் செம்மல் (ஈரோடு தமிழ்ச்சங்கம்)
• கவியொளி (ஈரோடு தமிழ்ச்சங்கம்)
• கவி காளமேகம் (உலகப் பாவலர் தமிழன்னைத் தமிழ்ப்பேரவை)
• வீறுகவி முடியரசனார் விருது
முதலிய பட்டங்களையும் விருதுகளையும் பெற்றுள்ளார்.

தொடர்ந்து மரபு கவிதையின் பல்வேறு யாப்பிலக்கியங்களையும் படைத்து வருகின்றார். இத்தகைய தமிழறிஞர் வாழுங் காலத்தில் யாமும் பிறப்பெடுத்தோம் என்பதை எண்ணும்போது உள்ளம் களிகொள்கிறது. அன்னாருக்கு என்னுடைய வணக்கங்களைத் தெரிவித்து மகிழ்கிறேன்.

Dec 13, 2020

மணிக்குறள் - 24. புதுத்தொழில் கொணர்க

மண்ணில் தொழில்கள் மலரும் வழிகளை
எண்ணி இதயத்(து) இருத்து                                231

புவிவாழ வேண்டும் புதிய தொழில்கள்
கவியாரம் சூட்டிக் கருது                                      232

இயற்கை குலையாத இன்றொழில்கள் வேண்டும்
முயற்சி முதலாம் முனை                                     233

மக்கள் தொகைப்பெருக்க வாழ்வினை மேம்படுத்தப்
பக்கத் துணையாம் தொழில்                            234

வேலையிலாத் திண்டாட்டம் வேண்டுமோ? மாற்றியதை
வேலையிலே கொண்டாட்டம் வேண்டு        235

துறைதோறும் நுட்பத்தைத் தோண்டியெடுத்(து) ஆள்க
குறைகளையக் கொள்க குறி                            236

புத்துணர்(வு) ஈயும். புதுத்தொழில் வேட்டலில்
ஒத்துணர்ந்(து) ஓங்குவோம் வா                      237

கணினியின் கைகளில் காலம் கனிந்த(து)
அணிந்தா யிரம்படை ஆழ்ந்து                        238

வறுமை நிலையொழிந்து வாழ்க்கை உயரக்
குறுகும் மனத்தைக் குடை                                239

நாளும் புதுத்தொழில் நாட்டு நலம்பயக்க
ஆளும் நெறியை அறி                                         240

Dec 6, 2020

மணிக்குறள் - 23. வரதட்சணை வேண்டாதே

சீர்கொண்டு வாவென்று சீர்குலைப்ப(து) ஐயகோ
போர்த்தும் புலித்தோல் பசு                           221

துணைநம்பி வந்தவளைத் துன்பத்தில் தள்ளிப்
பணம்நம்பிப் பாழாக்கல் பாழ்                    222

சீதனம் வேண்டுமெனத் தீங்கிழைத்துக் கொல்கின்றார்
வேதனை யன்றோ விடை                              223

வாழவந் தாளை வதைத்தல் முறையாமோ?
தாழத் துணிந்தாய் தணி                               224

மங்கையராய்த் தோன்றுதற்கு மாதவம் செய்தவரை
அங்கையில் தாங்குவோன் ஆண்              225

பொருள்வேண்டி வாழாதீர் புன்னகை போதும்
இருள்நீக்கி வாழ்க இணைந்து                   226

மணக்கொடை வேண்டா மனக்கொடை போதும்
பணத்துக்கு வேண்டாவே போர்                227

தட்சணை வேண்டித் தரங்குறைத்துக் கொள்ளாதே
நட்பென வாகி நட                                            228

பழக்கமெனப் பேசும் பழங்கதைகள் வேண்டா
வழங்கும் வரைமுறை மாற்று                    229

சீர்வரிசை கேட்டுச் சிரிப்பழித்து வாழாதீர்
சீர்வரிசைச் சான்றோரைச் சேர்               230

Dec 4, 2020

கவி தைக்கத் தேவை

கவிதைக்குத் தேவை கற்பனை
கருத்தினில் நிற்கச் சொற்பனை
கவிதைக்கத் தேவை கட்டுக்
குலையாத யாப்புத் திட்டு

Nov 29, 2020

மணிக்குறள் - 22. எல்லை மறவரை ஏத்து

வீட்டை மறந்து வினையொன்றே மேற்கொண்டு
நாட்டுக்(கு) உழைப்பார் நயந்து                       211

குடும்பம் குழந்தை குழாஅம் மறந்தும்
கடும்பாலை நிற்பார் களித்து                           212

கருவென்று கொள்வாரே காத்தல் நமக்காய்ச்
செருவென்று சேர்ப்பார் நலம்                           213

துன்பத்தை இன்பென்பார் தூணாகத் தாங்குவார்
என்புருக்கும் அக்குளிரும் ஏற்று                       214

எல்லையில் இல்லையெனில் எல்லாம் அழிந்தொழிந்(து)
இல்லாமல் போவோமே இன்று                          215

எயில்காத்தல் போலவே எல்லையைக் காக்கத்
துயில்காணாத் தோள்களைப் போற்று          216

அதிரப் பொருதழிப்பார் ஆற்றலைப் போற்று
சதியையே சாகடிப்பார் சாற்று                         217

எல்லாய் இயங்குவார் எண்ணத்தில் நிற்பதுவோ
எல்லையைக் காத்தலொன்றே எண்               218

நாட்டுப்பற்(று) ஒன்றே நினைவினிற் கொள்வாரைப்
பாட்டினிற் கொண்டு பரவு                                  219

பொல்லாப் பகையழித்துப் பொன்வாழ்(வு) அளிக்கின்ற
எல்லை மறவரை ஏத்து                                          220

Nov 22, 2020

மணிக்குறள் - 21. குறிக்கோள் கொள்க

குறிக்கோளைக் கொண்டு குறையை அகற்று
வறிஞனாய் வாழாதே! வாழ்!                              201

நாளும் நமது குறிக்கோளைக் கைக்கொள்ளக்
கோளும் அயரும் கொடுத்து                               202

கொள்கை யிலாதவன் கொள்கை யெதுவெனின்
கொள்கை இழக்கும் குறை                                 203

நோக்கம் இலாதவன் நோவான்றன் கையிலே
ஆக்கம் இலாஅ(து) அழித்து                                204

மறத்தலும் உள்ளம் விடுத்தலும் மாண்போ?
துறவி யெனக்கொள் தவம்                                 205

அச்சாணி யாவ(து) அகத்துறை கோளேயாம்
பொச்சாஅ வாமை புகழ்                                      206

குறுங்கோள் நெடுங்கோள் குறைவிலா வாழ்வுக்(கு)
உறுங்கோள் உணர்தல் உயர்வு                       207

திட்டம் இடற்குத் தெளிவான கோள்வேண்டும்
எட்டாக் கனியாவ தேது?                                     208

காலம் அறிந்து கடமை உணர்ந்தாற்றின்
ஞாலம் நினது வழி                                                  209

ஞாலத்தைக் கொள்ளும் நயனறிந்து கோள்கொண்டு
காலத்தோ(டு) ஆற்றிக் களி                                210

Nov 15, 2020

பைந்தமிழ்ச்செம்மல் தமிழகழ்வன் சுப்பிரமணி


‘அகடவிதமது’ என்னும் கவிதைத் தொகுப்பின் மூலம் தனது முதல்நூலின் தலைப்பினாலே அனைவரையும் திக்குமுக்காடச் செய்த இளங்கவி தமிழகழ்வன். சொல்லாற்றலில் வல்லாற்றல் கூட்டும் சுந்தரக் கவிஞரான தமிழகழ்வன் இருபத்தோராம் நூற்றாண்டில் மரபு கவிதையின் அத்தனை வடிவங்களிலும் புகுந்து விளையாடும் ஆற்றல் மிக்கவர். இற்றைத்திங்கள் தமிழ்குதிரின் கதாநாயகனாக வருகிறார். வாருங்கள் அவரைப் பற்றி அறிந்து கொள்வோம்..

தீபங்கள் போற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் 1987ஆம் ஆண்டு சேகர் – பூமாதேவி இணையோரின் தவப்புதல்வனாகத் தோன்றியவர் சுப்பிரமணி. தமிழ்மீதுள்ள காதலால் தமிழகழ்வன் என்னும் புனைபெயரைக் கொண்டார்.

பள்ளிப் பருவத்திலே பாடப் பகுதியாக யாப்பிலக்கணம் இடம்பெறாத வகுப்பிலும் தனக்குக் தமிழ் கற்பித்த ஆசிரியர்கள் மூட்டிய ஆர்வத்தீயால் யாப்பிலக்கணம் கற்றுத்தான் பாட்டெழுத வேண்டும் என முயன்று மரபு கவிதைகளை மட்டுமே கைக்கொண்டு வளர்ந்தார்.

பைந்தமிழ்ச் சோலையின் ஆசான் மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் அவர்களிடமும் பைந்தமிழ்ச் செம்மல் கவினப்பன், பைந்தமிழ்ச் செம்மல் முனைவர் அர.விவேகானந்தன் ஆகியோரிடமும் தமிழ் இலக்கணங்களைக் கற்று முறையாக மரபு கவிதைகளை எழுதி வருகிறார். ‘புலம் மிக்கவரைப் புலமை தெரிதல்’ என்பதற்கேற்பப் பைந்தமிழ்ச் சோலையின்மீதும் பாவலர் மா.வரதராசனார் மீதும் அளவில்லாப் பற்றுடையவர்.

பொறியியல் பட்டம் பெற்று மென்பொறியாளராய்த் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றி னாலும் அகவல் பாடும் ஆற்றலில் அறிந்து கொள்ளலாம் அன்னாரின் தமிழ்ப்பற்றை. ஆர்வத்துடன் செய்யும் செயலுக்கு எத்தனை தடைகள் வந்தாலும் அவை தடக்கற்களாக மாறிவிடும் என்பதுபோல, பள்ளிப்படிப்போடு தமிழைக் கற்றல் நின்றுவிடக் கூடாது என, இளநிலைத் தமிழிலக்கியமும் பயின்றுள்ளார்.

கதை, கவிதை, கட்டுரையென இலக்கியத் துறையின் அத்தனை வடிவங்களிலும் வலம் வரும் இளைஞரான தமிழகழ்வன் அவர்கள் பைந்தமிழ்ச் சோலையின் மின்னிதழான தமிழ்க்குதிர் இதழின் முக்கிய ஆசிரியராவும் பணியாற்றுகிறார்.

வாள்வீச்சென ஒளிவிசும் மிகச்சிறந்த பாவகைகளைப் படைக்கும் இவர் கவியரங்க மேடைகளிலும் அறிமுகமாகி அலங்கரிக்கின்றார். அதோடு மட்டுமல்லாமல் மதுரைத் தமிழிலக்கிய மின்தொகுப்புத் திட்டத்தில் (Project Madurai) தன்னார்வலனாக இணைந்து உதவியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

என்கடன் பணிசெய்து கிப்பதே என்ற சான்றோர் வாக்கிற்கிணங்க ஓய்வு கிடைக்கும்போதெல்லாம் ஓடோடித் தமிழ்பணியாற்றுமிவர் பைந்தமிழ்ச் சோலையின் உறுப்பினராகவும், எண்பேராயத்தில் உறுப்பினராகவும், பயிற்றுவிக்கும் துணை யாசிரியர்களுள் ஒருவராகவும், பைந்தமிழ்ச் சோலை – திருவண்ணாமலைக் கிளையின் துணைத்தலைவராகவும் பொறுப்பேற்றுள்ளார் அவ்வியக்கத்தின் மூலமாகக் குழந்தைகளுக்கு இலக்கண முறைப்படியான தமிழ்ப்பெயர்களைப் பரிந்துரைத்தல், செய்யுளிலும், உரைகளிலும் இலக்கணப் பிழைகளைக் களைந்து உதவுதல், யாப்பிலக்கண வகுப்பெடுத்தல் எனத் தமிழ்த்தொண்டு செய்கிறார்.

படிப்பவன் அறிவைப் பெறுகிறான்; படிப்பின் வழியாகப் படைப்பவனே அதில் முழுமையடை கிறான். ஆம் இக்கவிஞரும்

· தமிழர்தம் காலக் கணிதம் எங்கே போனது?
· வடசொற் கிளவி வடவெழுத்து ஒரீஇ…
· தமிழில் பெயர் வைப்பது எப்படி?
· தமிழாதங்கம்
· ஆத்தீகமும் நாத்தீகமும்
· திருமுருகாற்றுப்படை – உரையாடல்
போன்ற தரமான கட்டுரைகளை எழுதிச் சான்றோர் பலராலும் பாராட்டைப் பெற்றுள்ளார். அதோடு மட்டுமல்லாமல் சிறுகதையிலும் கோலோச்சும் இவர்

· அமிழ்தினும் ஆற்ற இனிதே,
· அன்புத்தொல்லை
· நீரில் உறங்கும் நிறைபிணி தீர்க்கும் (வாழ்க்கைக் கதை)
· காந்தி ஆசிரியரின் வகுப்பில் (வாழ்க்கைக் கதை)
போன்ற கதைளையும் எழுதியுள்ளார்.

· புதுமைப் பொங்கல் பொங்குக
· எல்லோரும் கொண்டாடுவோம்
· கலையாத கனவுகள்
· என்னை எழுதச் சொன்னது வானே!
· தமிழெங்கள் வளமிக்க உளமுற்ற தீ
· என்ன தவம் செய்தேன்
· ஏருக்குச் சீர் செய்வோம்
· போற்றப்பட வேண்டியது தாய்மை
· விழுதைத் தேடும் வேர்கள்ஔ
· சமூக முன்னேற்றத்திற்கு வேண்டியது - தொழில் வளர்ச்சி
· வானம் தொடலாம் வா
என்னும் தலைப்புகளில் தமிழகத்தின் பல ஊர்களிலும் கவியரங்க மேடையில் பங்காற்றுகிறார். மேலும் பல கவியரங்கங்களில் தலைவராகவும் பொறுப்பேற்றுள்ளார்.

பைந்தமிழ்ச்செம்மல், நற்றமிழாசான், சந்தக் கவிமணி, ஆசுகவி, விரைகவிவாணர், பைந்தமிழ்க் குருத்து, பைந்தமிழ்க்கதிர், வீறுகவியரசர் முடியரசன் விருது, கவியொளி போன்ற பட்டங்களையும் விருதுகளையும் பெற்று ஆற்றல் மிக்க எழுத்தாளராக வலம்வரும் தமிழகழ்வன் சுப்பிரமணி அவர்களுக்கு ஆனந்தி என்ற மனைவியும், தமிழ்க்குமரன், கதிர்வேலன் என்ற இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

பூமலர் தேடிப் புகுந்து நறுந்தேனுண்ணும் வண்டைப்போல் தமிழ்த்தேன் உண்டு யாவருக்கும் வழங்கும் தமிழகழ்வன் சுப்பிரமணி அவர்கள் எல்லா வளமும் பெற்றுத் தமிழன்னையின் புகழைத் தரணியெங்கும் கொண்டு செல்லும் ஒப்பற்ற பணிசெய்ய நாமும் உவகையுடன் வாழ்த்துவோம்.
பைந்தமிழ்ச் செம்மல் வள்ளிமுத்து

மணிக்குறள் - 20. செவிச்செல்வம் சேர்

நல்லவை கேட்க நயம்பெருகும் நல்வழியில்
வெல்லவைக்கும் கேள்வி விரும்பு                    191

ஆய்ந்தறியக் காண்கின்ற ஐயமெல்லாம் நீங்கிவிடும்
தோய்ந்தறிக கேள்வி தொடர்ந்து                     192

ஆசான்சொல் கேட்டறியும் ஆர்வம் உடைத்தாயின்
வீசாதோ தென்றல் வியந்து                                 193

கல்லா தவருக்கும் கேள்வியே மேலறிவாம்
அல்லா தனநீக்கும் ஆறு                                        194

நல்லார்சொல் கேட்டல் நனியினி(து) அல்லார்சொல்
கேளாமை யாண்டும் இனிது                              195

செவிவழியே சேர்க்கின்ற செல்வம் உளமார்ந்(து)
அவியாய் இனிக்கும் அறி                                     196

கேள்வி முயல்வதால் கேடறுத்(து) உய்விக்கும்
கோள்வினையும் கோடும் குலைந்து               197

ஊதிப் பெரிதாக்கும் ஊர்வம்பு வேண்டாது
காதினைக் காத்தல் கடன்                                     198

அறிவுறூஉஞ் செஞ்செவி ஆக்கத்திற்(கு) ஆக்கம்
செறிவுறூஉந் தோறும் செழிப்பு                         199

கவிவழிச் சேர்ந்த கலைகட்கும் ஆக்கம்
செவிவழிச் செய்தியாய்ச் சேர்ந்து                    200

Nov 8, 2020

மணிக்குறள் - 19. அகத்தை ஆள்

சொற்றோன்றி நிற்கச் சுரங்கமாய் வாய்த்திருக்கும்
வற்றா வரமாம் அகம்                                181

வரமென வாய்த்த வயங்ககத்தைக் காத்தல்
தரமாக்கும் நற்புகழ் தந்து                      182

அகந்தோன்றும் ஆக்கம் அகிலத்தை ஏற்றத்
தகவாகும் தன்மை யுணர்                      183

அகத்தினை ஆளவிட ஆக்கம் அழியும்
அகத்தினை ஆள்க அறிந்து                   184

அறிவின் துணையால் அகத்தை நிறுத்திச்
செறிவாய்ந் தறிதல் சிறப்பு                   185

அகத்திலே அன்பிருக்க ஆக்கமெலாம் இன்பம்
முகத்திலே தோன்றும் பொலிவு          186

அகத்திணைக்கும் ஆற்றும் புறத்திணைக்கும் ஆதி
அகத்தினை ஆள்கநல் ஆறு                  187

மனம்போன போக்கிலே போனால் மனித
இனமழிந்(து) இல்லாது போம்             188

நெஞ்சை நிலைநிறுத்தி நேர்வன தேர்ந்தாய்ந்து
நஞ்சை அகற்று நலம்                              189

உள்ளத்தின் ஆற்றலை ஓர்ந்தறிக எந்நாளும்
அள்ளக் குறையா அமிழ்து                    190

Nov 1, 2020

மணிக்குறள் - 18. சுற்றுச்சூழல் காப்போம்

சுற்றுப் புறச்சூழல் தூய்மையாய் வைத்திருத்தல்
தொற்றுநோய் இல்லா நலம்                     171

சூழலின் தூய்மையைக் காத்தலே யாவர்க்கும்
பாழில்லா வாழ்வு தரும்                               172

மண்ணையும் விண்ணையும் மாசுகள் இல்லாது
கண்ணெனக் காத்தல் கடன்                      173

தொழில்கள் தொலைநோக்குப் பார்வையொடு வேண்டும்
கழிவுமே லாண்மையும் கொண்டு           174

கழிவை முறையாய்க் கழித்தல் உலகை
அழிவினின்று காக்கும் அறம்                     175

இயற்கையைக் காவாக்கால் இல்லைநம் வாழ்க்கை
புயற்கையால் பூவுலகு பாழ்                       176

இயற்கை யுணர்க இயைந்து புரிக
செயற்கை சிறப்புத் தரும்                           177

சூழலைக் காப்பது சூழலைத் தேர்ந்தொப்ப
வாழலே ஆக்கும் வளம்                                178

நிலம்நீர் வளிதீ நெடுவிசும் பைந்தின்
நலத்தினை நாடு நலம்                                 179

சூழலைக் காக்கும் தொலைநோக்குப் பார்வையே
வாழற்(கு) உறுதி வழி                                    180

Oct 25, 2020

மணிக்குறள் - 17. முதியோர் இல்லம்

முதியோரைக் காவாதான் மூடன் முறையாய்
மதித்து நடத்தல் மதி                                  161

பெற்றோரைக் காக்காத பேதையோ பேருலகம்
சுற்றினும் இல்லை சுகம்                           162

மாற்றில்லம் காட்டி மதியாத பிள்ளைக்குக்
கூற்றில்லம் தேடி வரும்                            163

மெத்தப் படித்தாலும் மேன்மை யடைந்திலன்
பெற்ற மனந்தவிக்கும் போது                164

தனிக்குடும்பம் வேண்டித் தனிமைப் படுத்தின்
தனிமைப் படுவாய் தளர்ந்து                 165

பெற்றோரைக் காவாதான் பிள்ளையும் அவ்வழியே
பெற்றோரைக் காவாது போம்               166

ஆண்டாண்டு வாழ்ந்திருந்(து) ஆனந்தம் காண்வயதில்
வேண்டுமோ வேறில்லம் சொல்            167

மீண்டும் மழலை மனத்திற்கு மாறுவோர்க்கு
வேண்டும் அரவணைப்(பு) அன்பு          168

மூத்தோரின் பட்டறிவு முன்னேற்றம் தந்துதவும்
காத்தோரே வாழ்வார் களித்து                169

மூத்தோரின் வாழ்வியல் முத்தான வாழ்வியலாம்
காத்தோம்பிக் கொள்க கனி                     170

Oct 18, 2020

மணிக்குறள் - 16. அரசியலார்

நேர்மையைக் கைக்கொண்டு நேர்வன நேர்நிறுத்துங்
கூர்மை அறிவுடையான் கோன்                         151

சீர்தூக்கிப் பார்த்துச் சிறப்புடைய வாழ்வமைக்க
ஊர்தூக்கி வாழ்த்தும் உணர்                               152

பொல்லா தனசெய்யும் போக்கற்றோன் மன்னனாய்
நில்லான் நிலத்தில் நிலைத்து.                           153

பொதுநலம் போற்றாது பொய்ம்மை பரப்பி
மதுநலன் காப்போ மறை?                                   154

ஆக்கா(து) அழிக்கும் அறிவிலான் ஆட்சியோ
தீக்கிரை யாக்கும் தெளி                                       155

அரசியலார் ஆயின் அரசியலார் ஏனோ
அரசியல் ஆற்றவரு வார்?                                     156

பிழைத்துப் பிழைப்பின் பெரும்பழி சேரும்
பிழையற்(று) அரசியல் பேண்                             157

முறைதவறி வென்று முறையியற்றும் ஆறு
கறையன்றி வேறென்ன காண்                            158

சட்டத்தை மீறித் தனிச்சட்டம் செய்வார்தம்
கொட்டம் அடக்கக் குதி                                          159

போலியாய் வாழ்ந்து பொறுப்பற்றுப் போகாமல்
வேலியாய் வாழ்பவன் வேந்து                             160

Oct 17, 2020

அரங்கேற்றம் - அறம்பொருள் இன்பம் (மும்மணிமாலை)

வெண்பா: அறம் - பைந்தமிழ்ச்செம்மல் தமிழகழ்வன்
கலிவிருத்தம்: பொருள் - பைந்தமிழ்ச்செம்மல் வள்ளிமுத்து
ஆசிரிய விருத்தம்: இன்பம் - பைந்தமிழ்ச்செம்மல் சியாமளா இராசசேகர்

இறை வணக்கம்

எல்லாம் இயக்கும் இயனிலைப் பேரொளியே
எல்லை யிலாத இயற்றமிழிற் - சொல்லெடுத்துப்
பாட வருள்வாய் மணிமாலை மூவர்க்குப்
பாட மருள்வாய் பயந்து

நூல்

அன்பின் வழிய(து) உயிர்நிலை ஆதலின்
அன்பே சிவமென்(று) அறைந்தனர் - அன்போ(டு)
உறவின னாகி உயிர்களைப் பேண
அறத்தினன் என்னப் படும் 1

படுகுழி பகைவரே செய்தாலும் இன்னும்
கொடுஞ்செயல் தினம்பல குவித்தாலும் இன்னல்
கெடுதிகள் இடையிடை மிகுத்தாலும் செல்வப்
படைமிகின் எதிரிகள் தூள்தூளா வாரே..! 2

ஏரகத் தானைப் போற்றி எண்ணிலாப் பாக்கள் பாடிச்
சீரகத் தோடு வேண்டச் சிந்தையில் மலரு மின்பம் !
வாரண முகத்தான் தம்பி மாமயி லேறி வந்து
மாரியாய்ப் பொழியு மன்பால் மட்டிலா இன்பம் தானே !! 3

தானே உரியன் தனக்கே எலாமென்று
வானே தனதாய் வளைத்தாலும் - மானே!
கடைவழிச் செல்கையில் கையிலொன்றும் இல்லை
உடையன ஈதல் உயர்வு 4

உயர்வான நல்லறங்கள் உண்டாக வேண்டின்
அயர்வகற்றிச் செல்வத்தை ஆக்குவித்தல் வேண்டும்
பயிர்வளமும் பொன்வளமும் பல்திறத்து வளமும்
உயிர்வளத்தைச் செய்வதனால் உயர்வென்றும் பொருளே...! 5

பொருளுடன் பொன்னை வீட்டில் பூட்டியே வைத்தி ருப்பின்
வரும்பயன் ஒன்று மில்லை வறுமையால் வாடு வோருக்(கு )
அருங்குணத் தோடே அன்பாய் அளவிலாச் செல்வம் தன்னை
விருப்புடன் பகிர்ந்த ளித்தால் விளையுமே கோடி யின்பம் !! 6

இன்பம் பொருளால் இயலும் பொருளினை
என்செய்தல் என்ப(து) அறமாகும் - என்னையெனின்
அந்த அறத்தினூஉங்(கு) ஆக்கமும் இல்லையே
எந்தப் பொருளுரைப்பீர் இன்று? 7

இன்றுமுதல் அன்றுவரை இவ்வுலகில் செல்வம்
ஒன்றிருந்தால் சுற்றுமுற்றும் சொந்தம்வரும் இன்றேல்
பெண்டாட்டி கைவிடுவள் பிள்ளைகளும் நீங்கத்
திண்டாட்டாம் பலவுண்டாம் தீமைகளும் உண்டே 8

உண்டதும் உறங்கி டாமல் உளத்தினை உறுதி செய்ய
ஒண்டமிழ் நூல்ப டித்தால் ஒளியினால் இருளும் நீங்கிப்
பண்படும் அகத்தி லென்றும் பாங்குடன் பெருகும் இன்பம்
தண்டமிழ் இலக்கி யங்கள் தருவது மின்ப மன்றோ? 9

அன்றுரைத்தார் ஐயன் அறமே முதற்கொண்டு
நின்றுரைத்தார் ஔவை அறம்செய்ய - என்றும்
அறமில்லா வாழ்வஃ(து) அரைவாழ்வே யாகுந்
திறமில்லா வாழ்வு மது 10

துன்பம் விலக்குவதும் சுற்றம் மிகுத்துவதும்
இன்பம் பெருக்குவதும் ஏற்றம் கொடுப்பதுவும்
என்ன வென்றாய்ந்தால் எல்லாம் பணமன்றோ..!
உண்மை..! பொருளின்றி உலகம் இயங்காதே...! 11

தேன்மலர்ச் சோலை வாசம் சிந்தையை மகிழச் செய்யும் !
வான்மழை போடும் தாளம் மனத்தினை இதமாய்க் கொய்யும் !
மீன்களும் விழிசி மிட்டி வெண்மதி யாளைச் சீண்டும் !
வான்தரும் இன்பம் நம்மை வண்ணமாய்ப் பாட வைக்கும் !! 12

வைத்திருக்கும் செல்வத்தால் வாய்ப்பதில்லை நிம்மதி
மொய்த்திருக்கும் சுற்றமெலாம் பொய்யாக - மெய்யுணர
இன்பம் அதிலில்லை ஈயும் வகையறிந்(து)
அன்போ(டு) ஒழுகுதல் ஆறு 13

ஆறும் எட்டுமாய் அடுக்கடுக்காய்ப் பணமிருந்தால்
சோறும் கறிகளும் சுவையோடு பசிநீக்கும்
ஊறு தரும்பசி உடலகன்றால் வேறென்ன
நூறு சிந்தனை நுட்பமாக மலருமன்றோ...! 14

ஓங்கியே விண்ணை முட்டும் உறைபனி மலைகள் கண்டால்
தூங்குதோ வென்ற வெண்ணம் துள்ளலாய் மனத்தில் தோன்றும்!
பாங்குடன் கவிபி றக்கும் பைந்தமிழ் அதில்சி றக்கும்!
தேங்கிய இன்ப மெல்லாம் தேடியே வந்து சேரும்!! 15

சேர்க்கும் பொருள்தானாய்ச் செல்லும் அறிவீரே
ஆர்க்கின்ற எண்ணமெலாம் ஆடிவிடும் - நேர்மைக்
குணத்தால் மனமோ குளிரும் அதனைப்
பணத்தால் படைத்தல் அரிது 16

அரிதினும் அரிதெலாம் அடுப்படி வந்துநிற்கும்
பெரிதினும் பெரிதெனப் பெரும்பணம் நீகுவித்தால்
அருளதும் அன்பதும் அழியாநற் புகழெல்லாம்
பொருளதன் பின்புலம் அணியணியாய்ப் பொருந்திநிற்கும் 17

நின்றுநி லைக்கும் வாய்மை நிமிர்வுடன் வாழ வைக்கும் !
துன்பமே சூழ்ந்த போதும் துடைத்திடும் கையாய் நீளும் !
நன்றிதை யறிந்து கொண்டால் நன்மைகள் தாமே சேரும் !
இன்பமும் தேடி வந்தே இறுக்கமாய் அணைத்துக் கொள்ளும் ! 18

கொள்கையில் நிற்கும் குறைவில் தவத்தொடு
உள்ளு வனவும் மொழிவனவும் - தெள்ளிய
நீராய்ப் பயனீயும் நீர்மையுள வாழ்வினுக்(கு)
யாரோ இணைகூறு வீர் 19

வீரனெனக் கூறுவோரும் வெல்கவியைப் பாடுவோரும்
காரிருளின் வெண்ணிலவாய்க் காட்சிதந்து பொலியவேண்டின்
தோரணையாய்ப் பல்பொருளும் தொகைதொகையாய்ப் பணவளமும்
சீருடனே செய்துவைத்தால் சிறப்பொளிரும் உண்மைதானே..! 20

உண்மையாய்ச் சொல்வ தாயின் உயரிய எண்ணத் தோடு
வண்மையாய் மூத்தோர்ப் பேணி வாழ்த்தினை வரமாய்ப் பெற்று
மண்ணுள நாள்வ ரையில் மதிப்புடன் நடத்தி வந்தால்
கொண்டலாய்ப் பொழியும் அன்பில் கூடுமே இன்பம் வாழ்வில் !! 21

வாழ்நாளோ கொஞ்சம் வகையிலாச் செய்தொழிந்து
தாழ்வது நன்றோ தனையிழந்து? - பாழ்படா
உள்ளந் தனைக்கட்டி ஊர்போற்ற வாழ்கவே
வள்ளண்மை வாழ்வின் புகழ் 22

புகழ்வளம் கூடும் பொன்பொருள் கூடின்
இகல்பகை நீங்கும் இடர்பல ஓடும்
மகிழ்வுதுஞ் சேரும் மனநிலை நாளும்
அகலொளி ஆகும் அன்பதும் மிகுமே..! 23

அன்பது மிகுந்த உள்ளம் ஆலய மாகு மன்றோ?
பொன்னொளி பெருக்கெ டுக்கப் பொற்புடன் இறையே வாழும்
தன்னையே அறியும் ஞானம் தன்மையாய்த் தானே வாய்க்கும் !
உன்னத நிலையில் ஆங்கே ஒப்பிலா இன்பம் தோன்றும்! 24

தோன்றா எழுவாயாய்த் தொக்கும் அறமென்று
தான்றோன்றி யாய்த்திரிதல் தக்கதன்று - தோன்றா(து)
இருந்தும் பயனதுவே இவ்வாழ்வுக்(கு) ஏற்றம்
தருவதும் அஃதே தகுந்து 25

தகுந்ததைத் தகுந்தவர்க்குத் தகுந்தபடித் தருதற்குத்
தகுதியைத் தருவதெல்லாம் தகுந்ததெது தகுபொருளே
தகுதியைத் தரணியிலே தரமுயத்தும் தனிப்பொருளைத்
தகுதியாய்த் தனித்தாய்ந்து தக்கவர்க்குத் தளைத்தோதே! 26

ஓதுக நல்ல வற்றை ஊற்றென அறிவு மூறும்!
தீதறக் காக்கும் அஃதே சீருடன் வாழ வைக்கும்!
பேதைமை நீக்கி விட்டுப் பெருமகிழ் வெய்தச் செய்யும்!
ஆதலின் கற்றல் இன்பம் அகத்திலே பதிய வைப்பீர் !! 27

வைப்பீர்க்கும் நீர்போல் வயங்கும் அருளுடைமை
மெய்ப்பித்து மேன்மைகொள் நெஞ்சமே - பொய்ப்பித்துப்
பீடித்துத் துன்பப் பிறப்பாவ(து) ஐயகோ
வேடிக்கை வேண்டா விதிர்ப்பு 28

புன்னகை அதரத்தில் பூக்க வேண்டுமா
நன்னலம் உடலெங்கும் நாட்ட வேண்டுமா
பொன்பொருள் செல்வத்தைக் போற்றி மிகுத்திடு
இன்னிலம் உன்தாளில் ஏங்கிக் கிடக்குமே...! 29

கிடப்பதே இன்ப மென்று கிஞ்சித்து மெண்ண வேண்டா !
நடப்பவை ஈச னாலே நம்பிடு பெருகும் இன்பம் !
கடைவழிக் கருள்பு ரிந்து கனிவுடன் துணையி ருப்பான்
முடிவிலா முதலைப் போற்றி முழுதுமாய்ச் செய்வாய் அன்பே !! 30

நூற்பயன்

ஆவலாய் அரங்கி லேற்ற அறம்பொருள் இன்பம் என்று
மூவரும் ஒன்றி ணைந்து மும்மணி மாலை செய்தோம்!
பாவலர் சோலை தன்னில் பைந்தமிழ் மணக்கும் மாலை!
நாவினால் பாடி நீவிர் நற்பயன் எட்டு வீரே!!

Oct 11, 2020

மணிக்குறள் - 15. ஐம்பொறி அடக்கு

அளவினில் மிஞ்சின் அமிழ்தமும் நஞ்சாம்
களவின்றி ஐம்பொறியைக் கா.                           141

தொற்றுகின்ற நுண்மிகளைத் தூர விலக்கிவைத்துப்
பற்றுகின்ற ஐம்பொறியைக் கா                         142

உடலின் நலனே உளத்தின் நலனாம்
உடலினை ஓம்பல் உயர்வு                                       143

நல்லன பேசுகின்ற நாவுடை வாயினால்
பொல்லா தனவிலகும் போற்று                             144

வாய்சொல்லில் உண்மை வளம்வாழ அவ்வகத்து
வாய்ச்சொல்லை வாய்மையென் பார்              145

பார்ப்பதால் பற்றும் பயனில யாவையும்
ஆர்ப்பதால் நெஞ்சுக்(கு) அழிவு                            146

கண்களால் கைதுசெய் கைப்பேசி நம்முடைய
கண்களைக் கைது செயும்.                                      147

மூக்கைத் துளைக்கும் முடிவிலாப் பண்டத்தால்
நாக்கைத் துளைக்க நலிவு                                       148

நல்லன கேட்டலே நல்வழிக்குப் பாதையாம்
அல்லன நீக்கல் அறிவு                                                149

மெய்வாய்கண் மூக்குசெவி மேன்மை யுணர்ந்தறிந்து
பொய்வாயில் வீழாது போற்று                               150

Oct 4, 2020

மணிக்குறள் - 14. பெரியோரைப் போற்று

கண்டறிந்த சக்கரத்தைக் கண்டறிவேன் என்னாது
பண்டறிந்தோர் பாட்டினைப் போற்று                     131

புத்தறி வுக்குப் பொலிவூட்டல் சான்றோரின்
பட்டறி வென்றே அறி                                                        132

காலமெலாம் கண்டறிந்து காட்டும் வழித்துணை
மேலவராம் சான்றோரைப் போற்று                           133

பெரியோரைப் போற்றிப் பெருமையுள பாடம்
அறியும் அறிவே அறிவு                                                      134

பொல்லாச் சுரத்தும் பொலிவுற நல்லோர்
அறிவுரை நற்றுணை யாம்.                                             135

இற்றைப் புரட்சியால் இவ்வுலகோ? இல்லையில்லை
எற்றைக்கும் ஏற்பட்ட(து) ஏற்று.                                     136

வாரி வழங்கி வளங்குவித்தல் வாய்த்தலுக்(கு)
ஆரியங்கி ஆக்குவித் தார்?                                               137

ஆதி முதற்கொண்(டு) அகழ்ந்தார் வழியெலாம்
வேதி மரபணுவின் வேர்                                                      138

நன்மையன்றித் தீமையில்லை நாளும் நலம்பயக்கும்
பொன்மொழியர் சான்றோரைப் போற்று                  139

ஈன்று புறந்தந்தும் இன்னாவி கொண்டுழைத்தும்
சான்றுக்கே சான்றானார் சார்                                          140

Sep 30, 2020

வானம் தொடலாம் வா - கவியரங்கம்

பாவலர் மா.வரதராசனார் வணக்கம்

மாரி பொழிந்ததிரு மாவரதர் தாள்போற்றி
மாரி யெனப்பொழிய வேண்டுகிறேன் - ஊரில்
கவிஞன் எனவுலவக் காரணனாய் ஆயுங்
குவிநீண்மாங் காட்டுக் குயில்

முனைவர் அர.விவேகானந்தனார் வணக்கம்

அரங்கம் அதிர அருங்கவி செய்யும்
அரங்கவிவே கானந்தர் ஆற்றல் - வரமாம்
உரம்போற்றி வானத்(து) உயரந் தொடுவேன்
வரம்பாற்றிக் காக்க வரைந்து

பைந்தமிழ்ச் சோலையின் பெருமை

வானுயர்ந்த சோலையிலே நான்நடந்த பாதையெலாம்
தேனுகரும் வண்டாகத் தேடியதால் - நானுயர்ந்தேன்
பைந்தமிழை நன்குணர்ந்தேன் பாடிக் களித்திருப்பேன்
செய்தமிழைச் செவ்வனே தேர்ந்து

வானம் தொடலாம் வா

வானம் தொடலாம்வா வாவென்(று) எனையழைத்தீர்
நானும் தொடலாமே என்றிருந்தேன் - வானம்
தொடத்தான் முடியுமோ? தொட்டுப்பார் என்று
நடத்தான் வருவோம் நயந்து                                           1

வண்ணங்கொள் வெண்ணிலவே வான(ம்)விட்டு வாராயோ?
விண்ணிலே பாதையில்லை வீணனாய்க் - கண்ணிருண்டு
போவேனோ? காலம் பொதித்திருக்கும் உண்மையெலாம்
தேர்வேனே தேர்வேந்தன் நான்                                       2

முடிவில்லை வானோடு முந்தி முயல
முடிவில்லை தேட முயன்றான் - அடிவில்லை
தேடி அகழ்ந்தான் திறம்போற்று நம்பிக்கை
நாடிச் செயலே நலம்                                                            3

அகரம் அழியாச் சிகரம் வரதன்
தகரத் தமிழேஎ தங்கம் - பகர
இனிய தமிழின் இலக்கணங் கற்று
நனியுயர்வோம் வானம் நயந்து                                      4

வானமகள் நாண வழிதேடிச் செல்கின்ற
ஞானம் பிறந்துள்ள நற்காலம் - போன
பொழுதெலாம் நன்றென்று போற்றியுளங் கட்டி
விழுதெனத் தாங்கல் விடிவு                                               5

கேளடி கண்மணி கேள்வி முயல்வதால்
தாளடி வீழ்தல் தவிர்ப்பதே - கோளறு
மாவழியாம் உள்ளத்து வல்லமை பெற்றுயர்வாய்
போவழி இன்பம் பொதிந்து                                               6

மனந்திறந்து கூஉம் மணிக்குயிலாய்த் தோன்றிக்
கனவை நனவாக்கிக் காட்டு - மனமே
வழிச்செலுத்தி ஆக்கம் வகையாய்ப் படைக்கும்
விழிசெலுத்தி வேண்டியன வெல்                                    7

ஆயிர மாயிரம் அவ்வானம் தானீயும்
வாயிலில் வாய்ப்புகள் வந்திறங்கும் - போயிறங்கிச்
செய்தொழிலைச் செவ்வனே செய்க செயல்வீர!
மெய்யாகும் வாழ்க்கை விழைந்து                                  8

போகும் வழியறிந்து போகிறேன் மேலேயென்(று)
ஏகும் நிலையினை எட்டுக - தோகை
விரிமா மயில்போல் விசும்பை அறிக
உரியன ஏற்க உழைத்து                                                        9

காட்டுக் குயிலின் கனிந்த மனத்துளே
பாட்டுக்குப் பஞ்சமுண்டோ பாட்டுக்கு? - நாட்டுந்
திறமெலாம் பைந்தமிழ் தீட்டிய ஆறே
அறம்பொருள் இன்பம் அறிந்து.                                      10

Sep 27, 2020

மணிக்குறள் - 13. ஆளுமை ஓங்குக

ஆளுமை என்ப(து) அரசர்க்கு மட்டுமன்று
தோளுளான் யார்க்கும் உரிது                              121

நின்று நிலைப்படுத்தி நீடுவாழ் வாழ்வுதரல்
நன்றுடை யாளன் நயம்                                           122

கடமை தவறாக் கனிவுடைய னாகி
மடமை அகற்றுவான் மாண்பு                              123

செய்யுந் தொழிலாண்மை செய்திறத்து நிற்குமந்தச்
செய்யுளத்துப் பண்பாட்டைச் சேர்                    124

மெய்வழியில் பேர்நிறுத்தி மேன்மை யுறுவதுவே
செய்யுந் தவமாம் செழித்து                                  125

ஆளும் முறைமை அறிந்து பயன்விளைக்கும்
ஆளுமையைத் தேர்தல் அறிவு                            126

எண்ணத்துத் தோன்றிய ஏற்ற முறுவழியை
எண்ணற்றோர் எண்ணத்துச் சேர்                      127

ஆக்கல் எளிதே அதனை அழியாது
காக்கலே ஆளுமைக்குக் காட்டு                          128

விடாஅ முயற்சியால் வெல்லும் வழியறிவாய்
தொடாஅ(து) அயர்தல் தொலை                           129

ஆளுமை ஓங்குக ஆற்றலால் செந்தமிழ்
ஆளுமை ஓங்குக ஆண்டு                                         130

Sep 20, 2020

மணிக்குறள் - 12. மந்தி இந்தி மாய்க

இந்தி மொழியானை இந்தி மொழியென்று
வந்து திணிப்பதா வாழ்வு?                        111

இந்தியைப் பேசுவோன் இந்தியன் என்றுறுத்தி
மந்தியாய் வந்திறங்கும் பார்                   112

குரங்கினைப் போலே குறுக்கு வழியில்
அரங்கேறப் பார்க்கும் அது                        113

இந்தியன் என்றினியும் எண்ணல் பெருந்தவ(று)
இந்தியன் என்ப(து) இழுக்கு                      114

இந்தியேன்? மந்தியாய் இந்தியை ஏந்தியேன்?
சந்தியில் நிற்கவோ? சாடு                         115

ஆளும் எவருக்கும் அன்பில்லை பண்பில்லை
நீளும்வா லொன்றே உளது                        116
 
இனங்கள் பலவிங்(கு) இதையறி யாத
வனத்துக் குரங்கு வகை                             117

பரந்த மனமில்லான் பாராள வந்தால்
வரமில்லை கேடு வரும்                              118

வேற்றுமையில் ஒற்றுமை வேரறுந்து போனதே
ஆற்றல் அரிதே அகம்                                   119

எழுவாய் தமிழா எழுவாய் தமிழா
விழுங்குகின்ற வாயை விழுங்கு             120

Sep 13, 2020

மணிக்குறள் - 11. தீண்டாமை ஒழிக

தீண்டா தொழுகல் ஒழுக்கமெனச் சொல்லுதல்
வேண்டாமை வேண்டும் நிலத்து                                101

திட்டமிட்டுத் தீண்டாமைத் தீக்கொள்கை ஏற்படுத்தி
வட்டமிட்டு வாட்டுவதோ மாண்பு?                            102

உள்ளம் உடைமை உயர்விழிவு பாராமை
கள்ளம் பிறிதென்று காண்                                            103

பாவம் பெருங்குற்றம் பாரில் மனிதமின்மை
தேவையிலாத் தீநோயே தீய்                                        104

யாவரும் கேளிரென யாவரும் நோக்கும்நாள்
நோவறு நாளாம் நுவல்                                                    105

எல்லாம் தொழிலே இழிவில்லை என்றுணர்க
எல்லார்க்கும் வானம் இனிது                                        106

அறிவுடைமை என்பதி யாதெனின் நெஞ்சச்
செறிவுடைமை நேயத்துக் கண்                                   107

படும்பா(டு) அறியாத பாழ்மக்கள் நெஞ்சம்
கொடும்பாவம் செய்துள்ள கூடு                                  108

மதமினம் சாதி மொழிநிறம் என்று
விதவிதமாய்க் கொல்லும் விலங்கு                            109

விலக்கல் கொடிது விளக்கல் கடமை
மலர்ச்சி மனிதன் மனத்து                                              110

Sep 6, 2020

மணிக்குறள் - 10. மங்கி எரியும் நோய்

உருத்தெரி யாமல் உருத்தெரி யாமல்
கருத்தழிப்பாய் காணாமல் போ                                91

இனிவேண்டா ஆட்டம் இனிவேண்டா ஆட்டம்
மனித இனந்தழைக்க மங்கு                                        92

மங்கி எரிகின்றாய் வாழும் வழியின்றிப்
பொங்கி எரியும் புவி                                                        93

நோயினும் நோயச்சம் நோகவைத்துக் கொல்லுமெனும்
வாயின் வகைப்பட்டாய் வாடு                                    94

உடல்முழுதும் மூடி உயிர்வளியை நாட
அடாதன செய்தாய் அழி                                                95

வீட்டுக் கடங்கானும் வீட்டுக்குள் தானடங்க
நாட்டுங் கொடிய கொடி                                                  96

படாதன பட்டுலகம் பாழாக லாமா?
விடாஅ திருப்பதென் வீம்பு?                                            97

நாட்டு மருந்து நலமாக்கல் தானறிந்தும்
ஆட்டும் சனியாம் அரசு                                                    98

இன்னுமிருக் கின்றாயா? இல்லாமல் போனாயா?
என்றும் புரியாப் புதிர்                                                        99

ஆள்வது நோயா பணமா அறியேனே
மீள்வது போல்நடிப் பா?                                                    100

Sep 5, 2020

காந்தி ஆசிரியரின் வகுப்பில்


“வாழ்க்கையில் மிகவும் தேவையான மூன்று பூக்கள் சிரிப்பூ, படிப்பூ, சேமிப்பூ” என்று தொடங்குவார் என் ஆசிரியர் காந்தி அவர்கள். பள்ளியில் மட்டுமன்று. பள்ளிப் படிப்பை முடித்து நான் வேலைக்குச் செல்லும் இக்காலத்திலும் எங்கு அவரைச் சந்திக்க நேர்ந்தாலும் அவர் இம்மூன்று பூக்களை வலியுறுத்துவது வழக்கம்.

ஆசிரியர்கள் அறிவுரை வழங்குவது மாணவர்களுக்குப் பிடிக்குமா? எத்தனை மாணவர்களுக்குப் பிடிக்கும் என்று தெரியவில்லை. ஆனால் அறிவுரை எனக்கு அமுத மழையாகத் தெரிந்தது அவரால்தான். எட்டாம் வகுப்பில் எனக்கு வகுப்பாசிரியர். ஆங்கில ஆசிரியர். காலாண்டுத் தேர்வுக்கு முந்தைய முதல் பருவத் தேர்வில் எனக்கு 100/100 மதிப்பெண்கள் வழங்கினார். இன்னும் சொல்லப் போனால் அத்தேர்வில் எல்லாப் பாடங்களிலும் 100/100 வழங்கப்பட்டது. 500/500 என்று எழுதப்பட்ட தர அட்டையை (Rank Card) என்னைப் பெற்றோரிடம் காட்டும்போது அவர்கள் என்ன நினைத்தார்கள் என்று எனக்கு இதுவரையிலும் தெரியாது. ஆனால் நான் பெற்றதெலாம் ஊக்கம். ஊக்கம். ஊக்கம். அத்தகைய ஊக்கம் தரும் உயர்ந்தோர் என் ஆசிரியர்கள்.

“இந்த மாணவனுடைய விடைத்தாளைத் திருத்தும்போது பூதக் கண்ணாடியை வைத்துப் பார்த்தேன். ஆனால் ஒரு பிழையும் காண முடியவில்லை” என்று அவர் வகுப்பறையில் அன்று கூறும்போது எனக்கு எப்படி இருந்திருக்கும் என்று எண்ணிப் பாருங்கள். அதை இன்றும் மறவாமல் அவர் சொல்கிறார் என்பது எனக்கு இன்னும் வியப்பாக இருக்கிறது.

அவரிடம் ஒரே ஆண்டுதான் பயின்றேன். அந்த ஓராண்டில் நடந்த சில சுவையான நிகழ்வுகளை இனிக் காண்போம்.

அவர் பள்ளிக்கு வரும்போது ஓர் ஏழெட்டு நூல்களைக் கையில் கொண்டு வருவார். ஓய்வான நேரங்களிலெல்லாம் ஏதேனும் ஒரு புத்தகத்தை வாசித்துக் கொண்டிருப்பார். படிக்கும் பழக்கமே அவருக்கு மிகவும் விருப்பமானது. அவருடைய் வீட்டில் ஒரு நூலகமே வைத்திருக்கிறார் என்று கேள்விப்பட்டேன். ஒருநாள் அவருடைய வீட்டுக்குச் சென்று அவர் வைத்திருக்கும் புத்தக மாளிகையைக் கண்டு வியந்துநின்றேன். வாழ்க்கை முன்னேற்ற நூல்கள் சிலவற்றை என்னிடம் கொடுத்தார். அந்த நூல்களைப் படித்த எனக்கு அத்துணைக் கருத்துகளும் ஆனந்தக் கூத்தாகக் காட்சியளித்தன. ஒரு நூலில் ‘இந்த நூலைப் படித்து விமர்சனம் எழுதுவோர்க்குப் புத்தகப் பரிசு உண்டு’ என்று எழுதப்பட்டிருந்தது. எனக்கு அந்த நூலிலிருந்த கருத்துகள் மிகவும் பிடித்திருந்ததால் விமர்சனம் எழுதலாம் என எண்ணினேன். எப்படி எழுதுவது என்று தெரியாது. முயன்றேன். ஒரு நோட்டுப் புத்தகத்தில் விமர்சனங்களை எழுதி எழுதித் திருத்தினேன். கடைசியாக ஓர் இரண்டு பக்க அளவுக்கு எழுத முடிந்தது. ஓர் உள்நாட்டு அஞ்சல் உறையை வாங்கிக் கருத்துகளை எழுதி என் பள்ளி முகவரியை என் முகவரியாகப் போட்டுப் பதிப்பகத்திற்கு அனுப்பினேன். இதை நான் யாரிடமும் சொல்லவுமில்லை. நூல்கள் வந்தால் பார்ப்போம் என்றிருந்தேன். சிலநாளில் ஒரு கடிதத்தோடு 5 புத்தகங்கள் அஞ்சலில் வந்தன. எனக்குப் பெருவியப்பாகிப் போய்விட்டது. இச்செய்தியை அறிந்து ஆசிரியர்கள் பாராட்டினார்கள்.

என்னுடன் பயின்ற மாணவர்கள் சும்மா விடுவார்களா? எந்தப் புத்தகம் அது? என்ன விமர்சனம் எழுதினாய்? என்று கேட்டு என்னிடமிருந்த கருத்துகளை அவரவர் விருப்பப்பட்ட அளவுக்கு மாற்றி மாற்றி எழுதிக்கொண்டே இருந்தார்கள். கிட்டத்தட்ட ஒரு மாதக் காலம் அஞ்சல் அலுவலக ஊழியர் என் பள்ளிக்கு வந்துகொண்டே இருந்தார். அந்தப் பேறுபெற்ற பதிப்பகம் நர்மதா பதிப்பகம்.

வருத்தவளை வேயரசர் மாமுடியின் மேலாம்
வருத்த வளையாத மூங்கில் - தரித்திரமாய்
வேழம்பர் கைப்பட்டு மேதினியெல் லாந்திரிந்து
தாழுமவர் தம்அடிக்கீழ்த் தான்

பள்ளி 9 மணி வழிபாட்டுக் கூடலுக்குப் பிறகே தொடங்கும் என்றாலும் எங்கள் காந்தி ஆசிரியர் 8 மணிக்கே வரச் சொல்லுவார். சிறு தேர்வு வைத்துவிட்டு மீதம் இருக்கும் கொஞ்ச நேரத்தில் ஏதாவது இலக்கியப் பாடல்களை மாணவர்களுக்குக் கற்பிப்பார். படிப்பு மட்டுமன்று. நல்லொழுக்கமும் வேண்டும் என்று அவற்றைக் கற்பிப்பார். மேலே குறிப்பிட்ட ‘வருத்தவளை’ எனத் தொடங்கும் பாடல் அவரால் கற்பிக்கப்பட்டு என்னால் மறக்க முடியாத பாடலாகும். ஆனால் அவர் ஆங்கில ஆசிரியர்.

மற்ற ஆசிரியர்களுக்கெல்லாம் தமது பாடத்தையே கற்பிக்க நேரம் போதாமல் திணரும்போது இவருக்கு நேர மேலாண்மை கைவந்த கலை. ஆங்கிலப் பாடங்களை எளிதில் புரியும்படி நடத்தி இலக்கணப் பகுதியை இனிக்க இனிக்க நடத்தி எத்தனை முறை முடிகிறதோ அத்தனை முறையும் அவற்றைத் திருப்பித் திருப்பி நடத்தி நன்கு நினைவில் கொள்ள வழிவகுப்பார். அவர் பாடங்களைத் திரும்பத் திரும்ப எத்தனை முறை நடத்தினாலும் எனக்குச் சலிப்பு ஏற்பட்டதில்லை.

எட்டாம் வகுப்பு 'ஆ' பிரிவு ஆகிய அடுத்த வகுப்புக்கு அவர் கணக்குப் பாடம் எடுப்பார். கணக்குப் பாடம் நடத்தும் அவரது முறையை வேறு எந்தக் கணித ஆசிரியரிடமும் பார்த்ததில்லை. அதில் என்ன சிறப்பு என்றால் எடுத்துக் காட்டுக் கணக்குகளையும் சில பயிற்சிக் கணக்குகளையும் போட்டுக் காட்டிவிட்டு மற்ற பயிற்சிக் கணக்குகளைப் போடச் சொல்வதுவரை சரிதான். அதற்குப் பிறகுதான் சோதனையே. புத்தகத்தில் இல்லாத, புத்தகத்தை எழுதிய ஆசிரியர்கள்கூட எண்ணிப் பார்த்திராத, ஆனால் பயிற்சிக்குத் தொடர்புடைய கணக்குகளை வீட்டுப்பாடமாகக் கொடுப்பார். நல்ல வேளை. அவர் நமக்குக் கணக்குப் பாடம் எடுக்கவில்லை என்று மகிழ்ச்சிதான் .

அரும்பு மீசை முளைப்பதுபோல் அரும்பு கவிதைகள் முளைத்த காலம் அது. ஒருநாள் நாலைந்து சிறிய கவிதைகளை எழுதிக்கொண்டு பள்ளிக்குச் சென்றேன். அவர் பாடம் நடத்தி முடித்த பிறகு என்னுடைய கவிதைத்தாளை அவரிடம் காண்பித்தேன். அவற்றையெல்லாம் படித்துவிட்டு அவற்றை மாணவர்களுக்கும் எடுத்துச்சொல்லிப் பாராட்டினார்.

இதன்மூலம் ஒரு கவிதைப் போட்டிக்கான வாய்ப்பு வந்தபோது அவ்வாய்ப்பை எனக்கே அளித்தார். வேறொரு பள்ளியில் நடைபெற்ற அந்தக் கவிதைப் போட்டியில் கவிதையை வாசிக்கச் செல்லும் போது போட்டி நடுவர் புதுக்கவிதையா? மரபு கவிதையா? என்றார். இரண்டுக்கும் என்ன வேறுபாடு என்றறியாத நான் புதுக்கவிதை என்றேன். கவிதையை வாசித்துவிட்டு வந்த பின்னர் அந்த நடுவர் சொன்னார் அது மரபு கவிதை என்று. இப்படி வேறுபாடு தெரியாமலேயே அப்போட்டியில் பரிசும் வாங்கினேன்.

மற்றொரு முறை இளம் மாணவர்களுக்கான அறிவியல் நிகழ்ச்சியில் (YSSP - Young Student Scientist Programme) கலந்துகொள்ளும் வாய்ப்பையும் வகுப்பாசிரியர் என்ற முறையில் அவரே எனக்கு வழங்கினார். இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்தவர் அவர்.

அவர் வழக்கமாகக் கொண்டுவரும் ஏழெட்டுப் புத்தகங்களில் உறுதியாக ஒரு திருக்குறள் புத்தகமோ, அதன் உரையோ, அதுசார்ந்த கதைகளோ, விரிவான விளக்கங்களோ இருக்கும். எது எப்படியோ... திருக்குறளை மட்டும் தேடித்தேடிப் படித்தார். எம் பள்ளியில் சென்ற ஆண்டு நடத்திய பைந்தமிழ்ச்சோலை இலக்கியப் பேரவை திருவண்ணாமலைக் கிளையின் இலக்கியக் கூடலில் திருக்குறளில் கணிதவியல் எனும் தலைப்பில் சிறப்புரை வழங்கினார். அதில் நீத்தார் பெருமைக்கும் சுழியத்துக்கும் (0) அருமையான தொடர்பை எடுத்துரைத்தது என்னைக் கவர்ந்தது. அவரிடம் பேசும்போதெல்லாம் திருக்குறள் வெளிப்படும். இவ்வாறு காலம் முழுவதும் திருக்குறளோடு வாழ்ந்து வருகிறார். இப்போதுங்கூட வழியில் எங்குக் கண்டாலும் அவருடைய அன்பான அறிவுரையை அறவுரையைக் கேட்காமல் செல்வதில்லை.

Aug 30, 2020

மணிக்குறள் - 9. மனிதம்

அன்பால் இயங்கும் அகிலம் அலாதவழி
வன்பால் வதையும் உயிர்                        81

அரசகன்(று) ஆசை அழித்துலகுக்(கு) அன்பு
முரசறைந்தான் புத்தன் வழி                  82

அன்னை தெரசா அகிலத்தை வென்றதோ
அன்பெனும் ஆயுதத் தால்                        83

தீச்செயல் ஆவது தீண்டாமை; வேண்டாமை
மாச்செயல் மண்ணுக்(கு) இனிது         84

பொருள்சேர்த்துத் துய்க்காமல் போதற்குத் தாமீந்(து)
அருளாளன் ஆதல் இனிது                        85

ஈவ(து) எதனை எனவறிந் தேசெய்க
ஆவ(து) அதன்வழி யால்                            86

அருளுள்ளம் வேண்டும் அதுமனிதம் என்றும்
பொருளுள்ளம் வேறில்லை போற்று    87

மனிதம் மறந்தாற்றும் மாச்செயல் மாண்பன்(று)
இனிச்செய்வ(து) ஓர்ந்து தெளி               88

வேண்டும் இடத்துதவி வேண்டாமல் செய்தலே
யாண்டும் இனிமை தரும்                         89

அன்பும் கருணையும் ஆர்ந்த ஒருவனே
என்றும் மனிதனென ஏத்து                        90

Aug 23, 2020

மணிக்குறள் - 8. வீழும்போதெல்லாம் வீறுகொண்டேயெழு

வீழும்போ தெல்லாஅம் வீறுகொண் டேயெழு
பாழுனக் கில்லை பதி                            71

தேய்ந்தழிந்தும் தேடி யுலகறியும் தேனிலா
ஆய்ந்தறிந்(து) ஆற்றல் அறிவு            72

இயலாமை தோல்வியன்(று) இன்னும் ஒருநாள்
முயலாமை தோல்வி முயல்                 73

மலரா ததனை முகர்பவர் யாரோ
மலர்ந்த உழைப்பு மது                           74

படிப்போ தொழிலோ படுத்தும்பாழ் போக்கி
அடுத்து வருவதை ஆள்                         75

தவறி விழுந்தும் தளரா(து) அடுத்துக்
கவலை கொளாது முயல்                      76

நாடோறும் சாணேறும் நான்கு விரற்கிழியும்
வாடாதே ஓணான் முயன்று                77

முப்பத் திரண்டு முழமுள முட்பனையைத்
தப்பாம லேறுந் தவழ்ந்து                     78

விடாஅ முயற்சியொடு வெற்றியை நோக்கத்
தொடாஅ தனவும் தொடும்                 79

தளரா வளர்தெங்கே தானீயும் இன்னீர்
தளரா முயற்சி தவம்                              80

Aug 16, 2020

மணிக்குறள் - 7. அலைப்பேசி

அலையாளும் பாரில் அவையாவும் கையில்
அலைப்பேசி யாய்நின்ற தே                         61

மின்னணுவின் ஆட்சி; மிகையில்லை; கைப்பேசி
எண்ணமுரை வேகத் தியன்று                      62

தகவல் தொடர்பினைத் தாங்கிப் பயன்செய்(து)
அகவும் அலைப்பேசி ஆம்                               63

தகவல் தொடர்பில் தகுந்தவோர் ஏற்றம்
அகவும் அலைப்பேசி யால்                             64

கருவிகள் யாவும் கணக்கின்றித் தந்து
விரைவாய்ச் சுழற்றும் உலகு                         65

உரிய பயன்கொண்(டு) உயரத் துணையாம்
செறிந்த செயலிகள் கொண்டு                      66

அழைப்புக்(கு) உதவ அலைப்பேசி வந்து
பிழைப்பே அதுவா னது                                     67

கைவிரல் கொண்டுணர்ந்து காட்டும் விழைந்தன
மெய்விரலாய் மாறிய தின்று                         68

அமர்ந்த இடத்திருந்தே ஆங்காங்கு நேர்வ(து)
அமர்த்தி உணர்த்தும் அது                               69

தனிமை இனியில்லை தான்விழைந்த யாவும்
நுனிவிரல் காட்டும் இனி                                  70

Aug 14, 2020

பைந்தமிழ்த் தொண்டர் தெய்வத்திரு அருள்வேந்தன் பாவைச்செல்வி


திருவண்ணாமலைத் தமிழ்ச்சங்கத்தை நிறுவியவரும் அதன் தலைவரும் திருவண்ணாமலை டேனிஷ்மிஷன் மேனிலைப் பள்ளியின் முன்னாள் மூத்த தமிழாசிரியரும் பைந்தமிழ்ச்சோலை இலக்கியப் பேரவை - திருவண்ணாமலைக் கிளையின் நெறியாளரும் ஆகிய ஐயா அருள்வேந்தன் பாவைச்செல்வி அவர்கள் 2020 ஆகத்துத் திங்கள் இரண்டாம் நாள் இறைவனடி சேர்ந்தார். அவருடைய ஆன்மா இறைநிழலில் இளைப்பாற இறைவனை இறைஞ்சுகிறோம். அவருடைய நினைவை ஏந்தும் விதமாக அவரைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

அருள்வேந்தன் பாவைச்செல்வி அவர்கள் 1959ஆம் ஆண்டு பிறந்தார். அவருடைய பெற்றோர் சாமுவேல் - அன்னம்மாள் அவர்கள். அவருடைய சொந்த ஊர் திருமுதுகுன்றம் என்னும் விருத்தாசலம். ஜான்சன் எனும் இயற்பெயர் கொண்ட அவர் தமிழ்மீது கொண்ட தீராத காதலால் இராசசேகர் என மாற்றிக் கொண்டார். பின்னர் அதுவும் தமிழில்லை என்றறிந்து அருள்வேந்தன் என மாற்றிக் கொண்ட தனித்தமிழ்ப்பற்றுடையவர் அவர்.

விருத்தாசலம் ஆண்கள் மேனிலைப்பள்ளியில் படித்தபோதே மேடை நாடகங்களில் விரும்பி நடித்துப் புகழ் பெற்றார். மிக அழகாகப் பாடுவார். அரசை எதிர்த்து எதுவும் பேசிவிட முடியாத அவசர நிலை அறிவிக்கப்பட்ட அந்த இக்கட்டான சூழலிலும் கபிலர் நாடகத்தில் நடித்தபோது "சோதனைமேல் சோதனை போதுமடா தமிழா" எனக் கம்பீரமாக மேடையில் பாடியவர்.

விருத்தாசலம் திரு கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரியிலும் தருமை ஆதீனத் தமிழ்க் கல்லூரியிலும் பயின்ற அவர் முதுகலைத்தமிழ்ப் பட்டமும் ஆய்வியல் நிறைஞர் பட்டமும் (M.A., M.Phil) பெற்றவர். இவருக்குத் தமிழுணர்வை - அறிவை ஊட்டிய ஆசிரியர்கள் புலவர் கண்ணப்பனார், புலவர். பரசுராமனார், திரு. வீர.தர்மராசனார் முதலியோர். கல்லூரியில் கவின் கலை மன்றத் தலைவராகப் பொறுப்பேற்று முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ. விசுவநாதன், கவிஞர் வைரமுத்து, கவிஞர் நா.காமராசன் போன்ற தமிழ் ஆளுமைகளைக் கல்லூரிக்கு அழைத்து வந்து உரையாற்றச் செய்தார்.

அவர் தனது பெயருடன் இணையரின் பெயரையும் இணைத்து அருள்வேந்தன் பாவைச்செல்வி என எப்போதும் அவருடன் இணைந்து வலம் வருபவர். அவருடைய துணைவியார் திருமதி இதயாள் பாவைச்செல்வி அவர்கள். அவரும் பள்ளி ஆசிரியரே. அவர்களிடம் பயின்ற மாணவ மாணவியரையே தம் மக்களாய்க் கருதி மகனே, மகளே என அழைத்து அன்பு செலுத்திய பெருந்தகைமை உடைய இணையினர் அவர்கள்.

கள்ளம் கபடமில்லாது உள்ளத்தில் பட்டதை ஒளிவு மறைவின்றித் தெள்ளத்தெளிவாக எடுத்துரைக்கும் திண்ணிய நெஞ்சினர் அவர். எந்நேரமும் தமிழ்ச்சிந்தனை ஊற்றெடுக்கும் எண்ணம் உடையவர். சிறந்த தமிழ்ப்பற்றாளர்; சமய நல்லிணக்கம் போற்றியவர்; சமூகச் சிந்தனை யாளர். பெரியாரின் பகுத்தறிவு சிந்தனைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டு, இளமையிலிருந்தே மானுட அக்கறையோடு தன் பயணத்தைத் தொடங்கியவர்; திராவிட இயக்கப் பற்றாளர். பள்ளி மாணவ மாணவியருக்கு ஆர்வத்தைத் தூண்டும் வகையில் இன்முகத்தோடு பாடம் நடத்தும் சிறந்த ஆசிரியர். அன்பு நிறைந்த தமிழறிஞர். அழகு நிறைந்த செந்தமிழ்ப் பாட்டுக்காரர். ஏற்றத்தாழ்வு காணாத கனிவு மொழி பேசும் அற்புதப் பண்புக்காரர்.

அவர் 1999ஆம் ஆண்டு சொல்லாய்வறிஞர் ப.அருளியார் அவர்களின் முன்னிலையில் திருவண்ணாமலைத் தமிழ்ச்சங்கத்தைத் தொடங்கினார். தலைவராக இருபது ஆண்டுகளுக்கும் மேலாகச் சங்கத்தைக் கட்டிக் காத்தார். பல்வேறு இலக்கியக் கூடல்களை நிகழ்த்தி வெற்றி கண்ட தூய தமிழ்த்தொண்டர் அவர். மறைந்த தமிழறிஞர்களை இன்றைய இளைஞர்கள் அறிந்துகொள்ள, அவர்களின் வழித் தோன்றல்களை அழைத்து வேர்கள் எனும் சிறப்பு நிகழ்சியைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பாக நடத்தி வந்தார். பலரால் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பாகத் ‘தமிழாய்ந்த தமிழ்மகன் - கலைஞர்’, ‘மொழிஞாயிறு பாவாணர்’ முதலிய நுல்களை வெளியிட்ட பெருமை இவரைச் சாரும்.

தமிழும் தேசிய இயக்கங்களும், தமிழும் திராவிட இயக்கங்களும், தமிழும் தமிழ்த்தேசிய இயக்கங்களும், தமிழும் பொதுவுடைமை இயக்கங்களும் எனப்பலவாறாக ஆயும் நோக்கோடு செயல்பட்டவர். அதற்கேற்பத் தமிழகத்தின் பெருந்தலைவர்கள் இலக்கியச் செல்வர் குமரிஅனந்தன், தா.பாண்டியன், நாஞ்சில் சம்பத், மருத்துவர் இராமதாசு, வைகோ, திருமாவளவன், சீமான், பெ.மணியரசன், ஆளூர் ஷாநவாஸ், கோவி. இலெனின், மணவை முசுதபா, கொளத்தூர் மணி, முகில்வண்ணன், சீனி.சம்பத், முதலிய மிகச்சிறந்த ஆளுமைகளையும் முனைவர். மா. நன்னன், முனைவர் மறைமலை இலக்குவனார், முனைவர் மு.இளங்கோவன், ஆய்வறிஞர் ம.சோ.விக்டர், கவிஞர் வாலிதாசன், கவிஞர் அறிவுமதி, காசிஆனந்தன் முதலிய தமிழறிஞர்களையும் சிறப்பு விருந்தினராகத் திருவண்ணாமலை மண்ணுக்கு அழைத்து வந்து பல்வேறு நிகழ்ச்சிகளைத் தந்து தமிழ்வளர்த்த ஐயா அவர்களின் சேவை நெஞ்சார்ந்த பாராட்டுதலுக்குரியது. அதனால் தமிழ் இலக்கிய உலகில் தனக்கென்று தனித்த அடையாளத்தைப் பதித்தவர்.

திரு அலிமுகமது, பழ கருப்பையா, ஜெகத்கஸ்பர் முதலிய பல்சமயச் சான்றோர்கள் கலந்துகொண்ட பல்வேறு சமய நல்லிணக்கப் பெருவிழாக்களை நடத்திக் காட்டிச் சமய நல்லிணக்க நாயகராகவும் திகழ்ந்தார். திருவண்ணாமலைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பாக 200 நிகழ்வுகளுக்கு மேல் நடத்திக் காட்டிய பெருமைக்குரியவர் அவர். பல்வேறு நூல்களைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பாக வெளியிட்டுப் பெருமைப்படுத்தினார். திருவண்ணாமலையின் இலக்கிய வரலாற்றில் நீங்காத இடத்தைப் பிடித்த தன்னலமற்ற தமிழ்த்தொண்டர்.

உலகத் தொல்காப்பிய மன்றத் திருவண்ணா மலைக் கிளையின் ஒருங்கிணைப்பாளராகப் பேருதவி செய்தவர். 2018ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பைந்தமிழ்ச்சோலையின் திருவண்ணாமலைக் கிளையின் நெறியாளராக இருந்து அரும்பணியாற்றினார். திருவண்ணா மலை, ஆரணி, தேவிகாபுரம், ஆவணியாபுரம், பள்ளிகொண்டாப்பட்டு எனத் திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு ஊர்களில் நடைபெற்ற பைந்தமிழ்ச் சோலையின் ஒவ்வொரு இலக்கியக் கூடலிலும் தொடர்ந்து பங்கேற்று ஊக்கமும் ஆக்கமும் தந்து வளர்ச்சிக்கு உறுதுணையாய் இருந்தார். இவ்வாறு தமிழ்ச்சங்கம் மட்டுமன்றித் திருவண்ணாமலையில் பல்வேறு தமிழிலக்கிய அமைப்புகள் உருவாகி வளரத் தளராத ஊக்கமும் ஆக்கமும் தந்து சிறப்புச் செய்தவர்.

இளைஞர்களை நல்வழிப்படுத்தித் தமிழ்மீது காதல் கொள்ளச் செய்தார். பல கவிஞர்கள் உருவாகக் காரணமாக இருந்தார். ‘ஊக்குவிப்பார் ஊக்குவித்தால் ஊக்குவிற்பான் தேக்குவிற்பான்’ எனும் பொன்மொழிக்கிணக்க, எப்போதும் மாறாத புன்னகையோடும், வாஞ்சையோடும், தமிழோடும் தோழமையோடும் அரவணைத்துச் சென்றவர். இளைஞர்களை, மாணவர்களை இனம், மொழி குறித்துச் சிந்திக்க வைத்தவர்; செயல்படத் தூண்டியவர். ஒரு தமிழ்ச்சங்கம் எவ்வாறு நடைபெற வேண்டும் என்பதற்கு முன்னுதாரண மாக நின்று நடத்திக் காட்டியவர். ஆடம்பரமோ, ஆரவாரமோ இல்லாமல் செயலில் வேகம் காட்டியவர். விளம்பரத்தையோ வெற்றுக் கூச்சலையோ ஒரு நாளும் விரும்பாதவர். மிகக்கடும் உடல் உபாதைகளுக்கு இடையேயும் தமிழ் மீது அவர் கொண்டிருந்த பற்றும், அதற்கு அவர் ஆற்றிய சேவைகளும் அளப்பரியன.

மதம் கடந்த மாமனிதர் அவர்.
“இறைவனிடம் கையேந்துங்கள் - அவன்
இல்லை என்று சொல்லுவதில்லை”
என இசைமுரசு நாகூர் அனிபாவின் குரலில் உச்ச தொனியில் ஓங்கிக் குரலெடுத்துப் பாடுவார்.

“நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்றீயில்
படமாடக் கோயில் பகவற்கு அதாமே – திருமூலர்”

“இறையரசு உங்களுக்குள்ளேயே இருக்கிறது –இயேசு” 

என எச்சமயக் கருத்துகளையும் ஒப்பிட்டு மெச்சுபவர். கிறித்துவராக இருந்தாலும் திருவண்ணாமலை அறுபத்து மூவர் ஆய்வு மையம் சார்பில் திங்கள் தோறும் அண்ணாமலையார் திருக்கோயில் கோபுர வாயில் முன்பு நடைபெறும் ஆன்மீகச் சொற்பொழிவில் கலந்து கொண்டு தூய தமிழில் அழகிய ஆன்மீகச் சொற்பொழிவு ஆற்றுவார்.

செந்தமிழன் சீமான் அவர்களால் பாராட்டப்பட்டுத் தமிழ்நெறிக்காவலர் எனும் விருது பெற்றார். பைந்தமிழ்த் தொண்டாற்றிவரும் மூத்த தமிழறிஞருக்கு வழங்கப்படும் பைந்தமிழ்ச் சோலையின் பைந்தமிழ்க்குவை விருது பெற்றார். மேலும் வீறுகவி முடியரசனார் விருது, கவிச்சுடர், பைந்தமிழ்ச்சீர் பரவுவார் விருது, பைந்தமிழ்த் தொண்டர் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளுக்குச் சொந்தக்காரர்.

கிறித்துவத் தமிழ்த்தொண்டராயினும் சமய நல்லிணக்கம் போற்றிய அவரது நல்லுடல் மனிதநேயமிக்க தமுமுக தோழர்களால் கிறித்துவ முறைப்படி அடக்கம் செய்யப்பட்டது. யாருக்கும் கிடைக்காத இப்படியான வழியனுப்பல் அவரது நல்லுயிர்க்குக் கிடைத்தது நாட்டின் சமய நல்லிணக்க ஒருமைப்பாட்டைப் பறைசாற்றுகிறது. அவருடைய பொன்னுடல் மறைந்தாலும் புகழுடல் மறையாது. தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை எனும் மொழிக்கேற்பக் காலத்தால் அவருடைய புகழ் நின்று நிலைக்கும்.

Aug 9, 2020

மணிக்குறள் - 6. நூலகம்

நூலகம் நாடி நுவல்வ(து) அறிவோம்கண்
போலது நல்வழிக்குச் சான்று                            51

நல்லநல்ல நூல்நாடி நாமுயர வேண்டும்கேள்
கல்வியே கண்ணாகும் காண்                           52

காண்டற்(கு) அரிய கணக்கின்றிக் காட்டிநீ
வேண்டத் தரும்நூ லகம்                                      53

பண்பட்ட வாழ்க்கைக்குப் பாதை அமைக்கும்உன்
எண்ணந் தொடநூ லகம்                                     54

எண்ணடங்கா நூல்களை எண்ணி மகிழ்வதற்(கு)
உன்னடங்காச் சிந்தை உலை                          55

புத்தகம் பெற்றுப் புதுவாழ்(வு) அமைத்தற்குப்
புத்தகம் வேண்டும் புரி                                        56

புத்தக மேதை புகலுஞ்சொல் கேட்டால்நீ
வித்தக மேதையா வாய்                                       57

கருமையெனும் வாழ்வைக் களிப்புடைத்தாய் மாற்றும்
பெருமை உடையது நூல்                                     58

நூஉல் நுவல்வது நுண்ணிதாயப் பேரறி(வு)
ஆஅல் அதுபோல் அகன்று                                  59

ஆக்கலும் காத்தலும் ஆழ்ந்தறியும் ஆற்றினுக்(கு)
ஊக்கம் தருவது நூல்                                             60

Aug 8, 2020

தமிழாதங்கம்

1. தமிழா! அது தங்கம்

அன்னைத் தமிழே! அமிழ்தத் தமிழே!
உன்னை அன்றி ஒன்றும் அறியேன்!

எனக்குள்ளே இருக்கும் எல்லா ஆதங்கங்களையும் கொட்டித் தீர்த்தால்தான் மனம் அமைதியுறும். எனக்குள்ளே இருக்கும் - வளர்ந்துகொண்டே இருக்கும் தமிழ்மீதுள்ள தனிப்பெரு விருப்பத்தால், அந்த ஊற்றுப் பெருக்கால் ஏற்படும் ஆதங்கம்.

தமிழா? அது தங்கம்...
தமிழா! அது தங்கம்...
தமிழ்! ஆ! தங்கம்.
தமிழ் ஆதங்கம்!

இங்குச் சொன்னவையெல்லாம் இணை என்னத் தகும். ஆனால் தமிழுக்கிணை தமிழேதான். தமிழே தேன் என்று சொல்லவும் தேவையில்லை.

தமிழைத் தம்+உள்+அமிழ்(து) என்றும், தமிழ்தமிழ்தமிழ் என்று தொடரச் சொல்லும்போதும் அஃது அமிழ்து ஆகிறது என்றெல்லாம் கேள்வியறிவு. உண்மை, கேள்வியறிவால் உள்ளத்தே மகிழ்வை யுண்டாக்குகிறது. இல்லாமலா உரைப்பார்கள் எல்லாத் தமிழறிஞரும்?

தமிழ்க்கவிஞன் என்று சொல்லிக் கொள்வதைவிடத் தமிழறிஞன், தமிழறிவன் என்று சொல்லினும் குறையாகாது. குறையாகக் கொள்ளவே முடியாது. தமிழ் என்று தெரிந்தபின் உயர்வும் தாழ்வும், உயர்ந்தும் தாழ்ந்தும் தம்மருகில் இருக்காது பறந்தோடும், அகழ்ந்தோடும். சிறுதுளி பருகினும், பெரு வெள்ளமாய்ப் பருவுள்ளமாய் மாற்றுவது தமிழ்.

தமிழ் - தம் உள் அமிழ்
அமிழ்து மட்டுமல்ல. அமிழ்ந்து ஆழ்ந்தும் அகழ்ந்தும் பேரிடம் உள்ளத்தில் கொள்ளை கொள்வது; பேரிடரை உள்ளத்தினின்று உதிர்ந்தோடச் செய்வது.

2. தமிழ் எழுச்சி

“தமிழாற் பயனில்லை; தமிழும் வீண்; தமிழால் நீயும் வீண்” என்று என் செவியேற அறிவுறுத்துகிறான் என் நண்பன்; என் இனிய நண்பன்; என் முன்னேற்றத்தில் அக்கறை உள்ளவன். ஆயினும் அவனுடைய அறிவுரைகளைப் படிகளாக்கி, அதன்மீது நடக்கச் செய்கிறது என்றமிழ்.

இப்போது தமிழே தன் ஆழத்தை யானறியச் செய்ய எனக்கு வழிகாட்டிச் செல்கிறது. அறிந்த தமிழ் அணுவளவே. ஆயினும் அதனுள் ஏழ்கடலைக் காட்டுகிறேன் என்கிறது என்றமிழ். ஆம். அந்தத் தமிழ் எனக்குப் புதிய எண்ணங்களைக் கொடுக்கிறது. அது என்னைச் சாதிக்கச் சொல்லவில்லை. செயலாற்றச் சொல்கிறது. ஆனால் அது சொல்லும் செயலை ஆற்றினால், சாதனையாகக் கருதப்படும். சொல்லின் செய்வனாய் என்னை மாறச் சொல்கிறது. இங்குச் சொல்லிச் செய்தல், சொன்னதைச் செய்யும் வழிமுறைகள், வாய்க்கால்கள், நீரோடிச் செழிக்க வைக்கும் வயல்வெளிகள் (செய் + உள். அதுதான்) எல்லாவற்றிற்கும் கோடிட்டுக் காட்டி யிருக்கிறது. இஃதன்றோ சொல்லின் பெருமை.

சொல், செயல்வடிவம் பெறும்விதம் செயலுக்கு மட்டுமே தெரிய வேண்டும்; சொல்லுக்கும் அச்செயல்முறையின் முதலும், முடிவும், முழுமையும் உணரற்கரிதாயிருக்க வேண்டும் எனச் செயலுக்கு இலக்கணம் சொல்கிறது சொல். இஃதன்றோ இனிமை. எல்லாவற்றையும் எவ்விதமேனும் விருப்பப்படியாற்று. ஆனால் சொல்லின் நோக்கம் என்னவோ, அஃது அங்கு நிறைவேறி இருக்க வேண்டும். சரி செயல்படுவோம். கட்டளை கிட்டிவிட்டது சொல்லிடமிருந்து. ஆமாம்... அந்தச் சொல்லின் நோக்கமென்ன? அதையும் அச்சொல் இங்கு வெளிப்படுத்தவில்லை.

3. புணர்ச்சியை மதிக்காத புதுக்கவிதைகள்

ஒவ்வொருமுறை திரையிசைப் பாடல்களைக் கேட்கும்போதும், இசைக்கு மயங்குவதைவிட, அந்தப் பாடலின் வரிகளைக் கருத்தில் கொள்வதே என் எண்ணம். அதனால் ஏற்படும் மன உளைச்சலுக்கு அளவே இல்லை. இவையெல்லாம் பாடல்களா? கவிதைகளா? என்ற எண்ணமே என்னைத் துன்பத்தில் ஆழ்த்துகிறது. இந்தப் புதுக்கவிதைகளுக்கும், திரையிசைப் பாடல்களுக்கும் தமிழ் என்ற பெருமைமிக்க மொழிமீது கொஞ்சம்கூட அக்கறை இல்லை. அவை உரைநடைவழிச் செல்வதே மறுக்க முடியாத உண்மை. என்னதான் எதுகை, மோனை, இயைபுகளையெல்லாம் ஆங்காங்கே புகுத்தினாலும் குற்றமுடையதாகவே அவை படைக்கப்படுகின்றன. மிக முக்கியமான குற்றம் என்னவென்றால் புணர்ச்சிப் பிழையே. புணர்ச்சி என்றதும் வல்லினம் மிகும் இடங்கள், மிகா இடங்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொள்வது மட்டுமே என்றால் அதுவும் தவறு. ‘உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்’ முதலிய புணர்ச்சி விதிகளை மதிக்காமல் எழுதும் கவிஞர்களே இன்றைய புதுக்கவிதை செய்யும் கவிஞர்களும் திரையிசைப் பாடல் எழுதும் கவிஞர்களும்.

எளிமையாய் வேண்டும், இசைக்கு ஏற்ப இனிமையாய் வேண்டும் என்று பாடுபடுபவர்கள் எவ்வளவு சொல்லாட்சி, நயம் கொண்டு எழுதினாலும் அவர்கள் உரைநடையை நோக்கியே செல்கின்றனர் என்பதை மறுக்க முடியாது. அவற்றைக் கவிதைகள், பாடல்கள் என்ற அட்டவணையில் சேர்ப்பதற்கு அவர்கள் நாண வேண்டும். உரைநடையின் வளர்ச்சியும் புணர்ச்சி விதிகளை மதிக்காமல்தான் நடந்திருக்கிறது. இன்னும் சொல்லப் போனால், சிந்துவகைப் பாடல்களும் அத்தகைய விதிகளைத் தளர்த்திவிட்டே வளர்ந்து வருகின்றன.

4. பிழைகள் ஏனோ?

என்ன சொல்வது? நெஞ்சு பொறுக்கவில்லை.

தற்காலத் தமிழர்கள் தமிழைச் சரியாக எழுதப் பழகாத அவல நிலையை என்னவென்று சொல்வது?

தொலைக்காட்சிச் செய்திகள், அறிவிப்புச் செய்திகள், பதாகைகள், விளம்பரப் பலகைகள் என எங்குப் பார்த்தாலும், சொற்களுக்கு இடையில் தேவைப்படும் வல்லின ஒற்று எழுத்துகளை விட்டுவிட்டு எழுதுவதே வாடிக்கையாய்ப் போய்விட்டது தற்காலத் தமிழர்களுக்கு. அவர்கள் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்?

சொற்றொடர் என்பது ஒரு குடும்பம் போன்றது. அதன் ஒவ்வொரு சொல்லும் குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினர் எனலாம். குடும்ப உறவுகள் வலுப்பட, அன்பு, பாசம் போன்றவை இணைப்புப் பாலமாக விளங்குகின்றன. தேவையான இடங்களில் வல்லின ஒற்றுகளை இணைத்து எழுதுவது, குடும்பத்தின் உறவுச் சங்கிலியை வலுப்படுத்துதல் போன்றதாகும். வல்லின ஒற்றுகளை விடுத்து எழுதுவது, குடும்ப உறவுகளில் அன்பு காணாமல் போவதைப் போன்றதாகும். அத்தகைய மனநிலையில் தமிழர்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்பதைத் தற்காலத் தமிழர்களின் எழுத்தே உறுதிப்படுத்துகிறதோ?

அதுபோக,

 லகர, ளகர, ழகரப் பிழைகள்
 னகர, ணகர, நகரப் பிழைகள்
 ரகர, றகரப் பிழைகள் என,

எழுதும் சொற்களில் சரியான எழுத்துகளைப் பயன்படுத்தத் தெரியாமல் திணறும் நிலைமை ஏனோ? நல்ல உரைநடை நூல்களைப் படிக்கும் பழக்கம் ஏற்பட்டால், இத்தகைய தவறுகளைத் தவிர்க்கலாம்.

இன்னும் ஒருபடி பின்னேறிய தற்காலத் தமிழர்கள், தமிழ் எழுத்துருக்களைப் பயன்படுத்தித் தமிழை எழுதாமல் இலத்தீன் எழுத்துருவில், அதாவது, ஆங்கில எழுத்துருவில் எழுதும் வழக்கத்தைத் திணிக்கிறார்கள். இவர்கள் தமிழ் எழுத்துகளைக் கல்லாதவர்களா? தமிழில் எழுதுவது பழைமை என எண்ணுபவர்களா? இலத்தீன் எழுத்துருவில் எழுதுவதே எளிது எனக் கருதுபவர்களா? தமிழில் எழுதினால் பிழைகள் மிகும் என அஞ்சுபவர்களா? எந்தக் குறையாய் இருந்தாலும் சரிசெய்து, தமிழ் எழுத்துருவிலேயே தமிழை எழுதப் பழக வேண்டும். தமிழ் வாழ்க!

5. வடமொழிப் பெயர்கள் ஏன்?

எப்படியெல்லாமோ ஆராய்ந்து அலசி, எப்படியோ ஒரு சமற்கிருதப் பெயரைத் தம் குழந்தைக்குத் திணிக்கும் தமிழர்களே! ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் தமிழ்நாட்டில் பிறந்திருக்கத் தேவையே இல்லை. தமிழ்ப்பற்று என்பது இல்லாமல், தமிழ்ப்பெயரை உங்களால் வைக்கவும் முடியாது. அப்படியிருக்கத் தமிழ்ப்பெயரையும் கொஞ்சம் சொல்லுங்கள் என்று என்னிடம் வந்து கேட்டு, என்னைத் துன்பத்திற்கு ஆளாக்காதீர். உங்களுக்குத் தமிழ்ப்பற்று இருந்தால், நீங்கள் யாரிடமும் பெயர்கேட்டு மெனக்கெட வேண்டியதில்லை. நீங்களே தமிழ்ப்பெயரை வைப்பீர்கள்.

நாம் ஆளும் சொற்கள் தமிழ்ச்சொற்களா, வட சொற்களா? என்று தெளிய, தமிழ்ச் சொற்பிறப்பாராய்ச்சி, செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி ஆகிய நூல்களை நோக்கலாம். தமிழுக்கும், வடமொழிக்கும் வேர்ச்சொல் ஒன்றாயினும் அவை எவ்விதிகளின்படித் திரிந்தன என்பதைப் பற்றிய விளக்கங்கள் ஒரு தெளிவைத் தரும். தமிழ்ச் சொற்களாய் உருப்பெற்று வடமொழிக்குச் சென்றனவா? அல்லது வடமொழிச் சொற்கள் தமிழுக்கு வந்தனவா? என்ற ஐயத்திற்கும் விடைகிடைக்கும். தமிழ்ச் சொற்பிறப்பாராய்ச்சி என்ற நூல், அதன் பேரகர முதலிக்கு ஒரு முன்னுரையைப் போல் செயல்பட்டு, விளக்கங்களைக் கொடுப்பதால், அந்நூலை முதலில் படிக்கலாம்.

• மொழி முதல், இடை, கடை எழுத்துகளைப் பற்றிய அறிவு வேண்டும்.
• மயங்கொலிப் பிழைகளைத் தவிர்க்க வேண்டும்.
• தேவையற்ற ஏகாரங்களைத் தூக்கிப் போட வேண்டும்
• மூச்சுக்கு முப்பது முறை உம்மை சேர்த்து எழுதுவதைத் தவிர்க்க வேண்டும்.
• மூச்சுக்கு முப்பது முறை வந்திட்டால் போயிட்டால் சென்றிட்டால் வந்திடு போயிடு சென்றிடு என இடு வாந்தி எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.
• என்ன வகை ஏகாரம், என்ன வகை உம்மை எனும் கருத்து வேண்டும்
• வேற்றுமை விரி, தொகை பற்றிய அறிவு வேண்டும்
• அளபெடைகளைப் பயன்படுத்துவது பற்றிய அறிவு வேண்டும்
• ஐகாரக் குறுக்கம் எங்கு எப்படி வேலை செய்யும் என்று புரிந்துகொள்ள வேண்டும்
• புணர்ச்சிகள் - குறிப்பாகக் குற்றியலுகரப் புணர்ச்சி, வல்லினம் மிகும் மிகா இடங்கள் பற்றிய தெளிவான அறிவு வேண்டும்.
• உவமைகளையும் பிற அணிகளையும் எப்படி எப்படிப் பயன்படுத்தலாம் எனச் சிந்திக்க வேண்டும்.
• பழைய இலக்கியங்களை அடிக்கடி புரட்டிப் பார்க்க வேண்டும்.
• சொல்ல வந்த கருத்தைச் சரியாகத்தான் சொல்கிறோமா எனும் கருத்து வேண்டும்.
• இவற்றோடும் இன்ன பிறவற்றோடும் யாக்கும் இலக்கணம் கற்க வேண்டும்.
• இவ்வாறு தொடர்ச்சியான கற்றல் இல்லையென்றால் மரபு கவிதை எழுதுவதைத் தவிர்க்க வேண்டும்.
• இவை அறியாமல் புரியாமல் தெரியாமல் மரபு கவிதை எழுதி எழுதிப் பட்டங்கள் குவிப்பதைவிடச் சும்மா இருப்பதே மேல்.
• புதுக்கவிதை வகைகளை எழுத மேற்சொன்ன எவை பற்றியும் கவலை கொள்ளாதிருத்தல் வேண்டும். ஆமாம். அப்பத்தான் தமிழ் வாழும்.