Aug 14, 2020

பைந்தமிழ்த் தொண்டர் தெய்வத்திரு அருள்வேந்தன் பாவைச்செல்வி


திருவண்ணாமலைத் தமிழ்ச்சங்கத்தை நிறுவியவரும் அதன் தலைவரும் திருவண்ணாமலை டேனிஷ்மிஷன் மேனிலைப் பள்ளியின் முன்னாள் மூத்த தமிழாசிரியரும் பைந்தமிழ்ச்சோலை இலக்கியப் பேரவை - திருவண்ணாமலைக் கிளையின் நெறியாளரும் ஆகிய ஐயா அருள்வேந்தன் பாவைச்செல்வி அவர்கள் 2020 ஆகத்துத் திங்கள் இரண்டாம் நாள் இறைவனடி சேர்ந்தார். அவருடைய ஆன்மா இறைநிழலில் இளைப்பாற இறைவனை இறைஞ்சுகிறோம். அவருடைய நினைவை ஏந்தும் விதமாக அவரைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

அருள்வேந்தன் பாவைச்செல்வி அவர்கள் 1959ஆம் ஆண்டு பிறந்தார். அவருடைய பெற்றோர் சாமுவேல் - அன்னம்மாள் அவர்கள். அவருடைய சொந்த ஊர் திருமுதுகுன்றம் என்னும் விருத்தாசலம். ஜான்சன் எனும் இயற்பெயர் கொண்ட அவர் தமிழ்மீது கொண்ட தீராத காதலால் இராசசேகர் என மாற்றிக் கொண்டார். பின்னர் அதுவும் தமிழில்லை என்றறிந்து அருள்வேந்தன் என மாற்றிக் கொண்ட தனித்தமிழ்ப்பற்றுடையவர் அவர்.

விருத்தாசலம் ஆண்கள் மேனிலைப்பள்ளியில் படித்தபோதே மேடை நாடகங்களில் விரும்பி நடித்துப் புகழ் பெற்றார். மிக அழகாகப் பாடுவார். அரசை எதிர்த்து எதுவும் பேசிவிட முடியாத அவசர நிலை அறிவிக்கப்பட்ட அந்த இக்கட்டான சூழலிலும் கபிலர் நாடகத்தில் நடித்தபோது "சோதனைமேல் சோதனை போதுமடா தமிழா" எனக் கம்பீரமாக மேடையில் பாடியவர்.

விருத்தாசலம் திரு கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரியிலும் தருமை ஆதீனத் தமிழ்க் கல்லூரியிலும் பயின்ற அவர் முதுகலைத்தமிழ்ப் பட்டமும் ஆய்வியல் நிறைஞர் பட்டமும் (M.A., M.Phil) பெற்றவர். இவருக்குத் தமிழுணர்வை - அறிவை ஊட்டிய ஆசிரியர்கள் புலவர் கண்ணப்பனார், புலவர். பரசுராமனார், திரு. வீர.தர்மராசனார் முதலியோர். கல்லூரியில் கவின் கலை மன்றத் தலைவராகப் பொறுப்பேற்று முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ. விசுவநாதன், கவிஞர் வைரமுத்து, கவிஞர் நா.காமராசன் போன்ற தமிழ் ஆளுமைகளைக் கல்லூரிக்கு அழைத்து வந்து உரையாற்றச் செய்தார்.

அவர் தனது பெயருடன் இணையரின் பெயரையும் இணைத்து அருள்வேந்தன் பாவைச்செல்வி என எப்போதும் அவருடன் இணைந்து வலம் வருபவர். அவருடைய துணைவியார் திருமதி இதயாள் பாவைச்செல்வி அவர்கள். அவரும் பள்ளி ஆசிரியரே. அவர்களிடம் பயின்ற மாணவ மாணவியரையே தம் மக்களாய்க் கருதி மகனே, மகளே என அழைத்து அன்பு செலுத்திய பெருந்தகைமை உடைய இணையினர் அவர்கள்.

கள்ளம் கபடமில்லாது உள்ளத்தில் பட்டதை ஒளிவு மறைவின்றித் தெள்ளத்தெளிவாக எடுத்துரைக்கும் திண்ணிய நெஞ்சினர் அவர். எந்நேரமும் தமிழ்ச்சிந்தனை ஊற்றெடுக்கும் எண்ணம் உடையவர். சிறந்த தமிழ்ப்பற்றாளர்; சமய நல்லிணக்கம் போற்றியவர்; சமூகச் சிந்தனை யாளர். பெரியாரின் பகுத்தறிவு சிந்தனைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டு, இளமையிலிருந்தே மானுட அக்கறையோடு தன் பயணத்தைத் தொடங்கியவர்; திராவிட இயக்கப் பற்றாளர். பள்ளி மாணவ மாணவியருக்கு ஆர்வத்தைத் தூண்டும் வகையில் இன்முகத்தோடு பாடம் நடத்தும் சிறந்த ஆசிரியர். அன்பு நிறைந்த தமிழறிஞர். அழகு நிறைந்த செந்தமிழ்ப் பாட்டுக்காரர். ஏற்றத்தாழ்வு காணாத கனிவு மொழி பேசும் அற்புதப் பண்புக்காரர்.

அவர் 1999ஆம் ஆண்டு சொல்லாய்வறிஞர் ப.அருளியார் அவர்களின் முன்னிலையில் திருவண்ணாமலைத் தமிழ்ச்சங்கத்தைத் தொடங்கினார். தலைவராக இருபது ஆண்டுகளுக்கும் மேலாகச் சங்கத்தைக் கட்டிக் காத்தார். பல்வேறு இலக்கியக் கூடல்களை நிகழ்த்தி வெற்றி கண்ட தூய தமிழ்த்தொண்டர் அவர். மறைந்த தமிழறிஞர்களை இன்றைய இளைஞர்கள் அறிந்துகொள்ள, அவர்களின் வழித் தோன்றல்களை அழைத்து வேர்கள் எனும் சிறப்பு நிகழ்சியைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பாக நடத்தி வந்தார். பலரால் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பாகத் ‘தமிழாய்ந்த தமிழ்மகன் - கலைஞர்’, ‘மொழிஞாயிறு பாவாணர்’ முதலிய நுல்களை வெளியிட்ட பெருமை இவரைச் சாரும்.

தமிழும் தேசிய இயக்கங்களும், தமிழும் திராவிட இயக்கங்களும், தமிழும் தமிழ்த்தேசிய இயக்கங்களும், தமிழும் பொதுவுடைமை இயக்கங்களும் எனப்பலவாறாக ஆயும் நோக்கோடு செயல்பட்டவர். அதற்கேற்பத் தமிழகத்தின் பெருந்தலைவர்கள் இலக்கியச் செல்வர் குமரிஅனந்தன், தா.பாண்டியன், நாஞ்சில் சம்பத், மருத்துவர் இராமதாசு, வைகோ, திருமாவளவன், சீமான், பெ.மணியரசன், ஆளூர் ஷாநவாஸ், கோவி. இலெனின், மணவை முசுதபா, கொளத்தூர் மணி, முகில்வண்ணன், சீனி.சம்பத், முதலிய மிகச்சிறந்த ஆளுமைகளையும் முனைவர். மா. நன்னன், முனைவர் மறைமலை இலக்குவனார், முனைவர் மு.இளங்கோவன், ஆய்வறிஞர் ம.சோ.விக்டர், கவிஞர் வாலிதாசன், கவிஞர் அறிவுமதி, காசிஆனந்தன் முதலிய தமிழறிஞர்களையும் சிறப்பு விருந்தினராகத் திருவண்ணாமலை மண்ணுக்கு அழைத்து வந்து பல்வேறு நிகழ்ச்சிகளைத் தந்து தமிழ்வளர்த்த ஐயா அவர்களின் சேவை நெஞ்சார்ந்த பாராட்டுதலுக்குரியது. அதனால் தமிழ் இலக்கிய உலகில் தனக்கென்று தனித்த அடையாளத்தைப் பதித்தவர்.

திரு அலிமுகமது, பழ கருப்பையா, ஜெகத்கஸ்பர் முதலிய பல்சமயச் சான்றோர்கள் கலந்துகொண்ட பல்வேறு சமய நல்லிணக்கப் பெருவிழாக்களை நடத்திக் காட்டிச் சமய நல்லிணக்க நாயகராகவும் திகழ்ந்தார். திருவண்ணாமலைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பாக 200 நிகழ்வுகளுக்கு மேல் நடத்திக் காட்டிய பெருமைக்குரியவர் அவர். பல்வேறு நூல்களைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பாக வெளியிட்டுப் பெருமைப்படுத்தினார். திருவண்ணாமலையின் இலக்கிய வரலாற்றில் நீங்காத இடத்தைப் பிடித்த தன்னலமற்ற தமிழ்த்தொண்டர்.

உலகத் தொல்காப்பிய மன்றத் திருவண்ணா மலைக் கிளையின் ஒருங்கிணைப்பாளராகப் பேருதவி செய்தவர். 2018ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பைந்தமிழ்ச்சோலையின் திருவண்ணாமலைக் கிளையின் நெறியாளராக இருந்து அரும்பணியாற்றினார். திருவண்ணா மலை, ஆரணி, தேவிகாபுரம், ஆவணியாபுரம், பள்ளிகொண்டாப்பட்டு எனத் திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு ஊர்களில் நடைபெற்ற பைந்தமிழ்ச் சோலையின் ஒவ்வொரு இலக்கியக் கூடலிலும் தொடர்ந்து பங்கேற்று ஊக்கமும் ஆக்கமும் தந்து வளர்ச்சிக்கு உறுதுணையாய் இருந்தார். இவ்வாறு தமிழ்ச்சங்கம் மட்டுமன்றித் திருவண்ணாமலையில் பல்வேறு தமிழிலக்கிய அமைப்புகள் உருவாகி வளரத் தளராத ஊக்கமும் ஆக்கமும் தந்து சிறப்புச் செய்தவர்.

இளைஞர்களை நல்வழிப்படுத்தித் தமிழ்மீது காதல் கொள்ளச் செய்தார். பல கவிஞர்கள் உருவாகக் காரணமாக இருந்தார். ‘ஊக்குவிப்பார் ஊக்குவித்தால் ஊக்குவிற்பான் தேக்குவிற்பான்’ எனும் பொன்மொழிக்கிணக்க, எப்போதும் மாறாத புன்னகையோடும், வாஞ்சையோடும், தமிழோடும் தோழமையோடும் அரவணைத்துச் சென்றவர். இளைஞர்களை, மாணவர்களை இனம், மொழி குறித்துச் சிந்திக்க வைத்தவர்; செயல்படத் தூண்டியவர். ஒரு தமிழ்ச்சங்கம் எவ்வாறு நடைபெற வேண்டும் என்பதற்கு முன்னுதாரண மாக நின்று நடத்திக் காட்டியவர். ஆடம்பரமோ, ஆரவாரமோ இல்லாமல் செயலில் வேகம் காட்டியவர். விளம்பரத்தையோ வெற்றுக் கூச்சலையோ ஒரு நாளும் விரும்பாதவர். மிகக்கடும் உடல் உபாதைகளுக்கு இடையேயும் தமிழ் மீது அவர் கொண்டிருந்த பற்றும், அதற்கு அவர் ஆற்றிய சேவைகளும் அளப்பரியன.

மதம் கடந்த மாமனிதர் அவர்.
“இறைவனிடம் கையேந்துங்கள் - அவன்
இல்லை என்று சொல்லுவதில்லை”
என இசைமுரசு நாகூர் அனிபாவின் குரலில் உச்ச தொனியில் ஓங்கிக் குரலெடுத்துப் பாடுவார்.

“நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்றீயில்
படமாடக் கோயில் பகவற்கு அதாமே – திருமூலர்”

“இறையரசு உங்களுக்குள்ளேயே இருக்கிறது –இயேசு” 

என எச்சமயக் கருத்துகளையும் ஒப்பிட்டு மெச்சுபவர். கிறித்துவராக இருந்தாலும் திருவண்ணாமலை அறுபத்து மூவர் ஆய்வு மையம் சார்பில் திங்கள் தோறும் அண்ணாமலையார் திருக்கோயில் கோபுர வாயில் முன்பு நடைபெறும் ஆன்மீகச் சொற்பொழிவில் கலந்து கொண்டு தூய தமிழில் அழகிய ஆன்மீகச் சொற்பொழிவு ஆற்றுவார்.

செந்தமிழன் சீமான் அவர்களால் பாராட்டப்பட்டுத் தமிழ்நெறிக்காவலர் எனும் விருது பெற்றார். பைந்தமிழ்த் தொண்டாற்றிவரும் மூத்த தமிழறிஞருக்கு வழங்கப்படும் பைந்தமிழ்ச் சோலையின் பைந்தமிழ்க்குவை விருது பெற்றார். மேலும் வீறுகவி முடியரசனார் விருது, கவிச்சுடர், பைந்தமிழ்ச்சீர் பரவுவார் விருது, பைந்தமிழ்த் தொண்டர் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளுக்குச் சொந்தக்காரர்.

கிறித்துவத் தமிழ்த்தொண்டராயினும் சமய நல்லிணக்கம் போற்றிய அவரது நல்லுடல் மனிதநேயமிக்க தமுமுக தோழர்களால் கிறித்துவ முறைப்படி அடக்கம் செய்யப்பட்டது. யாருக்கும் கிடைக்காத இப்படியான வழியனுப்பல் அவரது நல்லுயிர்க்குக் கிடைத்தது நாட்டின் சமய நல்லிணக்க ஒருமைப்பாட்டைப் பறைசாற்றுகிறது. அவருடைய பொன்னுடல் மறைந்தாலும் புகழுடல் மறையாது. தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை எனும் மொழிக்கேற்பக் காலத்தால் அவருடைய புகழ் நின்று நிலைக்கும்.

No comments:

Post a Comment