Aug 8, 2020

தமிழாதங்கம்

1. தமிழா! அது தங்கம்

அன்னைத் தமிழே! அமிழ்தத் தமிழே!
உன்னை அன்றி ஒன்றும் அறியேன்!

எனக்குள்ளே இருக்கும் எல்லா ஆதங்கங்களையும் கொட்டித் தீர்த்தால்தான் மனம் அமைதியுறும். எனக்குள்ளே இருக்கும் - வளர்ந்துகொண்டே இருக்கும் தமிழ்மீதுள்ள தனிப்பெரு விருப்பத்தால், அந்த ஊற்றுப் பெருக்கால் ஏற்படும் ஆதங்கம்.

தமிழா? அது தங்கம்...
தமிழா! அது தங்கம்...
தமிழ்! ஆ! தங்கம்.
தமிழ் ஆதங்கம்!

இங்குச் சொன்னவையெல்லாம் இணை என்னத் தகும். ஆனால் தமிழுக்கிணை தமிழேதான். தமிழே தேன் என்று சொல்லவும் தேவையில்லை.

தமிழைத் தம்+உள்+அமிழ்(து) என்றும், தமிழ்தமிழ்தமிழ் என்று தொடரச் சொல்லும்போதும் அஃது அமிழ்து ஆகிறது என்றெல்லாம் கேள்வியறிவு. உண்மை, கேள்வியறிவால் உள்ளத்தே மகிழ்வை யுண்டாக்குகிறது. இல்லாமலா உரைப்பார்கள் எல்லாத் தமிழறிஞரும்?

தமிழ்க்கவிஞன் என்று சொல்லிக் கொள்வதைவிடத் தமிழறிஞன், தமிழறிவன் என்று சொல்லினும் குறையாகாது. குறையாகக் கொள்ளவே முடியாது. தமிழ் என்று தெரிந்தபின் உயர்வும் தாழ்வும், உயர்ந்தும் தாழ்ந்தும் தம்மருகில் இருக்காது பறந்தோடும், அகழ்ந்தோடும். சிறுதுளி பருகினும், பெரு வெள்ளமாய்ப் பருவுள்ளமாய் மாற்றுவது தமிழ்.

தமிழ் - தம் உள் அமிழ்
அமிழ்து மட்டுமல்ல. அமிழ்ந்து ஆழ்ந்தும் அகழ்ந்தும் பேரிடம் உள்ளத்தில் கொள்ளை கொள்வது; பேரிடரை உள்ளத்தினின்று உதிர்ந்தோடச் செய்வது.

2. தமிழ் எழுச்சி

“தமிழாற் பயனில்லை; தமிழும் வீண்; தமிழால் நீயும் வீண்” என்று என் செவியேற அறிவுறுத்துகிறான் என் நண்பன்; என் இனிய நண்பன்; என் முன்னேற்றத்தில் அக்கறை உள்ளவன். ஆயினும் அவனுடைய அறிவுரைகளைப் படிகளாக்கி, அதன்மீது நடக்கச் செய்கிறது என்றமிழ்.

இப்போது தமிழே தன் ஆழத்தை யானறியச் செய்ய எனக்கு வழிகாட்டிச் செல்கிறது. அறிந்த தமிழ் அணுவளவே. ஆயினும் அதனுள் ஏழ்கடலைக் காட்டுகிறேன் என்கிறது என்றமிழ். ஆம். அந்தத் தமிழ் எனக்குப் புதிய எண்ணங்களைக் கொடுக்கிறது. அது என்னைச் சாதிக்கச் சொல்லவில்லை. செயலாற்றச் சொல்கிறது. ஆனால் அது சொல்லும் செயலை ஆற்றினால், சாதனையாகக் கருதப்படும். சொல்லின் செய்வனாய் என்னை மாறச் சொல்கிறது. இங்குச் சொல்லிச் செய்தல், சொன்னதைச் செய்யும் வழிமுறைகள், வாய்க்கால்கள், நீரோடிச் செழிக்க வைக்கும் வயல்வெளிகள் (செய் + உள். அதுதான்) எல்லாவற்றிற்கும் கோடிட்டுக் காட்டி யிருக்கிறது. இஃதன்றோ சொல்லின் பெருமை.

சொல், செயல்வடிவம் பெறும்விதம் செயலுக்கு மட்டுமே தெரிய வேண்டும்; சொல்லுக்கும் அச்செயல்முறையின் முதலும், முடிவும், முழுமையும் உணரற்கரிதாயிருக்க வேண்டும் எனச் செயலுக்கு இலக்கணம் சொல்கிறது சொல். இஃதன்றோ இனிமை. எல்லாவற்றையும் எவ்விதமேனும் விருப்பப்படியாற்று. ஆனால் சொல்லின் நோக்கம் என்னவோ, அஃது அங்கு நிறைவேறி இருக்க வேண்டும். சரி செயல்படுவோம். கட்டளை கிட்டிவிட்டது சொல்லிடமிருந்து. ஆமாம்... அந்தச் சொல்லின் நோக்கமென்ன? அதையும் அச்சொல் இங்கு வெளிப்படுத்தவில்லை.

3. புணர்ச்சியை மதிக்காத புதுக்கவிதைகள்

ஒவ்வொருமுறை திரையிசைப் பாடல்களைக் கேட்கும்போதும், இசைக்கு மயங்குவதைவிட, அந்தப் பாடலின் வரிகளைக் கருத்தில் கொள்வதே என் எண்ணம். அதனால் ஏற்படும் மன உளைச்சலுக்கு அளவே இல்லை. இவையெல்லாம் பாடல்களா? கவிதைகளா? என்ற எண்ணமே என்னைத் துன்பத்தில் ஆழ்த்துகிறது. இந்தப் புதுக்கவிதைகளுக்கும், திரையிசைப் பாடல்களுக்கும் தமிழ் என்ற பெருமைமிக்க மொழிமீது கொஞ்சம்கூட அக்கறை இல்லை. அவை உரைநடைவழிச் செல்வதே மறுக்க முடியாத உண்மை. என்னதான் எதுகை, மோனை, இயைபுகளையெல்லாம் ஆங்காங்கே புகுத்தினாலும் குற்றமுடையதாகவே அவை படைக்கப்படுகின்றன. மிக முக்கியமான குற்றம் என்னவென்றால் புணர்ச்சிப் பிழையே. புணர்ச்சி என்றதும் வல்லினம் மிகும் இடங்கள், மிகா இடங்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொள்வது மட்டுமே என்றால் அதுவும் தவறு. ‘உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்’ முதலிய புணர்ச்சி விதிகளை மதிக்காமல் எழுதும் கவிஞர்களே இன்றைய புதுக்கவிதை செய்யும் கவிஞர்களும் திரையிசைப் பாடல் எழுதும் கவிஞர்களும்.

எளிமையாய் வேண்டும், இசைக்கு ஏற்ப இனிமையாய் வேண்டும் என்று பாடுபடுபவர்கள் எவ்வளவு சொல்லாட்சி, நயம் கொண்டு எழுதினாலும் அவர்கள் உரைநடையை நோக்கியே செல்கின்றனர் என்பதை மறுக்க முடியாது. அவற்றைக் கவிதைகள், பாடல்கள் என்ற அட்டவணையில் சேர்ப்பதற்கு அவர்கள் நாண வேண்டும். உரைநடையின் வளர்ச்சியும் புணர்ச்சி விதிகளை மதிக்காமல்தான் நடந்திருக்கிறது. இன்னும் சொல்லப் போனால், சிந்துவகைப் பாடல்களும் அத்தகைய விதிகளைத் தளர்த்திவிட்டே வளர்ந்து வருகின்றன.

4. பிழைகள் ஏனோ?

என்ன சொல்வது? நெஞ்சு பொறுக்கவில்லை.

தற்காலத் தமிழர்கள் தமிழைச் சரியாக எழுதப் பழகாத அவல நிலையை என்னவென்று சொல்வது?

தொலைக்காட்சிச் செய்திகள், அறிவிப்புச் செய்திகள், பதாகைகள், விளம்பரப் பலகைகள் என எங்குப் பார்த்தாலும், சொற்களுக்கு இடையில் தேவைப்படும் வல்லின ஒற்று எழுத்துகளை விட்டுவிட்டு எழுதுவதே வாடிக்கையாய்ப் போய்விட்டது தற்காலத் தமிழர்களுக்கு. அவர்கள் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்?

சொற்றொடர் என்பது ஒரு குடும்பம் போன்றது. அதன் ஒவ்வொரு சொல்லும் குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினர் எனலாம். குடும்ப உறவுகள் வலுப்பட, அன்பு, பாசம் போன்றவை இணைப்புப் பாலமாக விளங்குகின்றன. தேவையான இடங்களில் வல்லின ஒற்றுகளை இணைத்து எழுதுவது, குடும்பத்தின் உறவுச் சங்கிலியை வலுப்படுத்துதல் போன்றதாகும். வல்லின ஒற்றுகளை விடுத்து எழுதுவது, குடும்ப உறவுகளில் அன்பு காணாமல் போவதைப் போன்றதாகும். அத்தகைய மனநிலையில் தமிழர்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்பதைத் தற்காலத் தமிழர்களின் எழுத்தே உறுதிப்படுத்துகிறதோ?

அதுபோக,

 லகர, ளகர, ழகரப் பிழைகள்
 னகர, ணகர, நகரப் பிழைகள்
 ரகர, றகரப் பிழைகள் என,

எழுதும் சொற்களில் சரியான எழுத்துகளைப் பயன்படுத்தத் தெரியாமல் திணறும் நிலைமை ஏனோ? நல்ல உரைநடை நூல்களைப் படிக்கும் பழக்கம் ஏற்பட்டால், இத்தகைய தவறுகளைத் தவிர்க்கலாம்.

இன்னும் ஒருபடி பின்னேறிய தற்காலத் தமிழர்கள், தமிழ் எழுத்துருக்களைப் பயன்படுத்தித் தமிழை எழுதாமல் இலத்தீன் எழுத்துருவில், அதாவது, ஆங்கில எழுத்துருவில் எழுதும் வழக்கத்தைத் திணிக்கிறார்கள். இவர்கள் தமிழ் எழுத்துகளைக் கல்லாதவர்களா? தமிழில் எழுதுவது பழைமை என எண்ணுபவர்களா? இலத்தீன் எழுத்துருவில் எழுதுவதே எளிது எனக் கருதுபவர்களா? தமிழில் எழுதினால் பிழைகள் மிகும் என அஞ்சுபவர்களா? எந்தக் குறையாய் இருந்தாலும் சரிசெய்து, தமிழ் எழுத்துருவிலேயே தமிழை எழுதப் பழக வேண்டும். தமிழ் வாழ்க!

5. வடமொழிப் பெயர்கள் ஏன்?

எப்படியெல்லாமோ ஆராய்ந்து அலசி, எப்படியோ ஒரு சமற்கிருதப் பெயரைத் தம் குழந்தைக்குத் திணிக்கும் தமிழர்களே! ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் தமிழ்நாட்டில் பிறந்திருக்கத் தேவையே இல்லை. தமிழ்ப்பற்று என்பது இல்லாமல், தமிழ்ப்பெயரை உங்களால் வைக்கவும் முடியாது. அப்படியிருக்கத் தமிழ்ப்பெயரையும் கொஞ்சம் சொல்லுங்கள் என்று என்னிடம் வந்து கேட்டு, என்னைத் துன்பத்திற்கு ஆளாக்காதீர். உங்களுக்குத் தமிழ்ப்பற்று இருந்தால், நீங்கள் யாரிடமும் பெயர்கேட்டு மெனக்கெட வேண்டியதில்லை. நீங்களே தமிழ்ப்பெயரை வைப்பீர்கள்.

நாம் ஆளும் சொற்கள் தமிழ்ச்சொற்களா, வட சொற்களா? என்று தெளிய, தமிழ்ச் சொற்பிறப்பாராய்ச்சி, செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி ஆகிய நூல்களை நோக்கலாம். தமிழுக்கும், வடமொழிக்கும் வேர்ச்சொல் ஒன்றாயினும் அவை எவ்விதிகளின்படித் திரிந்தன என்பதைப் பற்றிய விளக்கங்கள் ஒரு தெளிவைத் தரும். தமிழ்ச் சொற்களாய் உருப்பெற்று வடமொழிக்குச் சென்றனவா? அல்லது வடமொழிச் சொற்கள் தமிழுக்கு வந்தனவா? என்ற ஐயத்திற்கும் விடைகிடைக்கும். தமிழ்ச் சொற்பிறப்பாராய்ச்சி என்ற நூல், அதன் பேரகர முதலிக்கு ஒரு முன்னுரையைப் போல் செயல்பட்டு, விளக்கங்களைக் கொடுப்பதால், அந்நூலை முதலில் படிக்கலாம்.

• மொழி முதல், இடை, கடை எழுத்துகளைப் பற்றிய அறிவு வேண்டும்.
• மயங்கொலிப் பிழைகளைத் தவிர்க்க வேண்டும்.
• தேவையற்ற ஏகாரங்களைத் தூக்கிப் போட வேண்டும்
• மூச்சுக்கு முப்பது முறை உம்மை சேர்த்து எழுதுவதைத் தவிர்க்க வேண்டும்.
• மூச்சுக்கு முப்பது முறை வந்திட்டால் போயிட்டால் சென்றிட்டால் வந்திடு போயிடு சென்றிடு என இடு வாந்தி எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.
• என்ன வகை ஏகாரம், என்ன வகை உம்மை எனும் கருத்து வேண்டும்
• வேற்றுமை விரி, தொகை பற்றிய அறிவு வேண்டும்
• அளபெடைகளைப் பயன்படுத்துவது பற்றிய அறிவு வேண்டும்
• ஐகாரக் குறுக்கம் எங்கு எப்படி வேலை செய்யும் என்று புரிந்துகொள்ள வேண்டும்
• புணர்ச்சிகள் - குறிப்பாகக் குற்றியலுகரப் புணர்ச்சி, வல்லினம் மிகும் மிகா இடங்கள் பற்றிய தெளிவான அறிவு வேண்டும்.
• உவமைகளையும் பிற அணிகளையும் எப்படி எப்படிப் பயன்படுத்தலாம் எனச் சிந்திக்க வேண்டும்.
• பழைய இலக்கியங்களை அடிக்கடி புரட்டிப் பார்க்க வேண்டும்.
• சொல்ல வந்த கருத்தைச் சரியாகத்தான் சொல்கிறோமா எனும் கருத்து வேண்டும்.
• இவற்றோடும் இன்ன பிறவற்றோடும் யாக்கும் இலக்கணம் கற்க வேண்டும்.
• இவ்வாறு தொடர்ச்சியான கற்றல் இல்லையென்றால் மரபு கவிதை எழுதுவதைத் தவிர்க்க வேண்டும்.
• இவை அறியாமல் புரியாமல் தெரியாமல் மரபு கவிதை எழுதி எழுதிப் பட்டங்கள் குவிப்பதைவிடச் சும்மா இருப்பதே மேல்.
• புதுக்கவிதை வகைகளை எழுத மேற்சொன்ன எவை பற்றியும் கவலை கொள்ளாதிருத்தல் வேண்டும். ஆமாம். அப்பத்தான் தமிழ் வாழும்.

No comments:

Post a Comment