Jan 31, 2021

மணிக்குறள் - 31. நிலையாமை நெறிநில்

என்றும் பதினா(று) எனவியங் காதுடலம்
சென்று விடுமிளமை தேய்ந்து                          301

வளர்சிதை மாற்றம் வழிவழியாய் வந்து
தளர்ந்து விடுவ(து) உடல்                                    302

மெய்யென்பார் மெய்யென் றிராதே மெதுவாகப்
பொய்யாகிப் போவ(து) உடல்                          303

உடல்நலம் இல்லாயின் உள்ளபொருள் எல்லாம்
கடந்தேகும் சேரும் கடன்                                   304

பொன்னும் பொருளும் புதைப்பினும் நில்லாது
மன்னுமெனல் மண்ணாகிப் போம்               305

பொருள்தேடி ஓடிப் புதைப்பாரே வாழ்வை
இருள்தேடற்(கு) ஈடாம் இது                               306

ஏழ்வண்டிச் செல்வம் இருந்தாலும் நில்லாது
பாழ்வந்து போகுமே பார்                                   307

நேற்றிருந்த வாறு நிலைக்காத திவ்வுலகு
மாற்றமே மாறாத ஒன்று                                    308

நிலம்நீர் வளிதீ நெடுவிசும் பைந்துங்
கலந்தியக்கும் வாழ்விது காண்                      309

நிலையாமை யொன்றே நிலையான தென்றும்
நிலையறிந்(து) ஆணவம் நீக்கு                       310

Jan 24, 2021

மணிக்குறள் - 30. பொருடனைப் போற்று

பொருளின்றி வாழ்வில்லை பூவுலகில் ஈட்டும்
அருமை உணர்தல் அறிவு                                       291

பொழுதுகள் யாவும் பொருளீட்டும் எண்ணத்
தழுந்திக் கரையும் அமைவு                                   292

வாணாள் திரும்பாது வாழும்போ தேதேடு
காணாது துன்பம் கதவு                                            293

கொடுக்குமா தெய்வங்கொல் கூரையைப் பிய்த்து
விடுத்துக் கனவை விரட்டு                                      294

அறவழி நின்றாய்ந் தரும்பொருள் ஈட்டக்
குறைவின்றி வாழ்வாய் குளிர்ந்து                      295

ஆக்கல் அழித்தல் அரிதெளிது போக்கை
அறிதல் அரிதி னரிது                                                296

உள்ளுங் கனவுகள் ஒன்றி நிறைவேற
உள்ளம் பொருளினால் உண்டு                            297

கைப்பொருள் நீங்கின் கடிதினில் வாராதே
மெய்ப்பொருள் என்பதே மெய்                            298

மனமிருந் தால்வழி வந்தமை தற்போல்
பணமிருந் தாலுண்டு பார்                                      299

பொருடனைப் போற்றப் புதுவழி யாக்கும்
இருடனைப் போக்கும் இரித்து                             300

Jan 21, 2021

தென்மாதி மங்கலம்

ஆதி படைவீ(டு) அதைவிட்டு மாறிப் படையெடுத்தார்
மாதியம் மங்கல மாமலை தேடி மகிழ்வுடனே
ஆதி மொழியாம் அருந்தமிழ் நன்னன் நவிரமலை
மீதினில் மாவிளக்(கு) ஏற்றுவார் கார்த்திகை நாளினிலே

Jan 17, 2021

மணிக்குறள் - 29. நூல் பல கல்

நூல்பல கற்று நுவல்வது நன்றாகும்
ஆல்போல் தழைக்கும் அறிவு                    281

அறிவு விருந்தை அகத்திற் களித்துச்
செறிவாக்க நூல்பல கல்                              282

காணாத வெல்லாம் கருத்தில் புகுந்தொளிர
வாணாள் முழுதும் படி                                  283

வழிவந்த செல்வமும் வாணாளும் போகும்
அழிவின்றிக் காக்கும் அறிவு                     284

கரையில்லா நூலைக் கரைத்துக் குடிக்க
வரையில்லா இன்பம் வரும்                      285

பலப்பலவாய்ப் பாரில் பளபளக்கும் நூல்கள்
சிலச்சிலவே வாழ்வினில் சேர்ப்பு          286

எழுக எழுந்தொருநூல் எண்ணத்தில் சேர்க்க
விழைகவெந் நாளும் சிறப்பு                    287

எட்டாத் தொலைவெலாம் எட்டுதற் கெந்நாளும்
தொட்டுப்பார் நூல்களைத் தோய்ந்து  288

கண்முன்னே நூல்களைக் காணு மிடத்தில்வை
எண்ணங்கள் எல்லாம் நிறைவு               289

புத்தகம் பெற்றுப் புதுமை படைத்தற்குப்
புத்தகத்தை வித்தகமாய்ப் பூட்டு           290

Jan 13, 2021

தைத்திரு நாளே

தைத்திரு நாளே உள்ளத் துவகை

தைத்திரு நாளே வளமும் நலமும்

தைத்திரு நாளே பொங்கல் இன்பம்

தைத்திரு நாளே தமிழர் நாளே

கவிஞர் பொன். இனியன் - படைப்புச் செம்மல் விருது

குறளுரைபல குடைந்தாய்ந்துரை
மறவாளரை மறவாதிருந்து
இனிதாயொரு வாழ்த்துரைக்கிறேன்
இனிக்க
வாழ்க வாழ்க பல்லாண்டு
வையம் போற்ற வாழ்க வாழ்கவே!

புத்தாண்டே வருக வருக

 பைந்தமிழ்ச் செம்மல்

தமிழகழ்வன் சுப்பிரமணி


அழகிய தமிழுக்(கு) ஆண்டுமுறை

    ஐயன் வள்ளு வன்போற்றி

வழங்குதல் கண்டு வரவேற்போம்

    வருக வருக புத்தாண்டே


இன்பம் பொங்கும் புத்தாண்டோ

    இரண்டா யிரத்தைம் பத்திரண்டு

முன்னோர் போற்றி வாழ்த்துவமே

    முறைமை போற்றி வாழ்த்துவமே


பழகு செய்யுள் அக்காலப்

    பழமை போற்று! பொங்கட்டும்

வழங்கு செய்யுள் இக்காலப்

    புதுமை சாற்று! பொங்கட்டும்


பொங்க லோடு புத்தாண்டு

    போற்றிப் பாடி வாழ்த்துவமே

எங்கும் செய்யுள் நிறையட்டும்

    இன்பப் பொங்கல் பொங்கட்டும்

Jan 10, 2021

மணிக்குறள் - 28. விருந்தோம்பல் விரும்பு

இல்லம் அடைந்தாரை இன்முகத் தோடழைத்து
நல்ல விருந்து படை                                          271

மலர்ந்த முகத்தொடு வாவென் றழைத்து
நலமறிதல் நல்ல விருந்து                               272

உப்பிலாக் கூழும் உறவுக் கமிழ்தமாம்
தப்பாமல் வந்தோரைத் தாங்கு                   273

மலர்முகம் இன்சொல் மகிழுணா மூன்றும்
கலந்ததே நல்விருந்து காண்                        274

விருந்தோம்பி வாழ்வார்தம் வீட்டில் நிறையும்
பெருஞ்செல்வம் ஊறும் கிணறு                 275

செல்வமும் செல்வமெனச் சேரிடம் மாறினும்
நல்விருந்து போற்ற வரும்                             276

பசியென்று வந்தார்க்குப் பண்பாடு போற்றிப்
புசியென் றளித்தல் புகழ்                              277

விருந்தோம்ப உள்ளம் விழைந்தார் இருக்க
இருந்தோம்பும் இவ்வுலகம் ஈந்து              278

விருந்து படைக்க விழைந்த உளத்துப்
பொருந்துங் குணத்துப் பொலிவு               279

சுரும்புக்குச் செம்மலர் செந்தேன் படைக்கும்
விருந்தொக்க ஓம்பல் விழை                       280

Jan 6, 2021

அன்பே!

கட்டளைக் கலித்துறை

அன்பே! அரவணைத் தாக்குஞ் செயலுக் கடிப்படையே!
இன்பே! கருத்துடன் என்றன் உளத்தை உணர்ந்தவளே!
முன்பே முழித்து முனைவாய் செயல்கள் முழுமதியே!
என்பேன் மகிழ்வேன் இவையென் கனவாய் இயல்வனவே!

Jan 3, 2021

ஆசானுக்குப் படையல் - வீர சேகரன்

நேரிசை வெண்பா

உளத்தாற்றல் கொண்ட உயர்மணியாய்ப் பாட்டின்
வளத்தால் மகிழ்விக்க வாய்த்தார் - களைப்பின்றி
ஆஅர்ந்(து) அறமுரைத்(து) ஆக்குவிக்கும் அந்நலத்தால்
வீஇர சேகரர்க்கு வாழ்த்து.

மணிக்குறள் - 27. நன்றி மறவேல்

நேரத் துதவிய நேரிய நெஞ்சினை
ஆரத் தழுவி அணை                                            261

துன்ப நிலைமாறத் தூணாய் இருந்தவரை
என்றும் நினைத்தல் இனிது                             262

தங்க மனத்தினர்க்குச் சாற்றுக பாமாலை
பொங்கும் உளத்தால் புகழ்ந்து                       263

நன்று புரிதற்கு நல்ல மனம்வேண்டும்
நன்றி யறிதலே நட்பு                                            264

நன்றி யுடைமை நலனாம் இலாமையோ
கொன்று விடுதற் கிணை                                  265

தடைகள் அகற்றித் தடமாக்கும் உள்ளம்
கடவுளாம் காண்பாய் கனிந்து                        266

முன்னேற்றம் காண முதலாக நின்றாரைப்
பொன்னாகப் போற்றிப் பொலி                      267

நன்றொன்றிச் செய்தாரை நன்றி யுடனினைதல்
நன்றென்று சொல்வோம் நயந்து                  268

இன்றி யமையா இயலறி வாசிரியர்
நன்றி மறவோமே நாம்                                       269

அறிவு புகட்டி அருவழி காட்டிச்
செறிந்தார்க்கு நன்றி நவில்                             270