Jan 31, 2021

மணிக்குறள் - 31. நிலையாமை நெறிநில்

என்றும் பதினா(று) எனவியங் காதுடலம்
சென்று விடுமிளமை தேய்ந்து                          301

வளர்சிதை மாற்றம் வழிவழியாய் வந்து
தளர்ந்து விடுவ(து) உடல்                                    302

மெய்யென்பார் மெய்யென் றிராதே மெதுவாகப்
பொய்யாகிப் போவ(து) உடல்                          303

உடல்நலம் இல்லாயின் உள்ளபொருள் எல்லாம்
கடந்தேகும் சேரும் கடன்                                   304

பொன்னும் பொருளும் புதைப்பினும் நில்லாது
மன்னுமெனல் மண்ணாகிப் போம்               305

பொருள்தேடி ஓடிப் புதைப்பாரே வாழ்வை
இருள்தேடற்(கு) ஈடாம் இது                               306

ஏழ்வண்டிச் செல்வம் இருந்தாலும் நில்லாது
பாழ்வந்து போகுமே பார்                                   307

நேற்றிருந்த வாறு நிலைக்காத திவ்வுலகு
மாற்றமே மாறாத ஒன்று                                    308

நிலம்நீர் வளிதீ நெடுவிசும் பைந்துங்
கலந்தியக்கும் வாழ்விது காண்                      309

நிலையாமை யொன்றே நிலையான தென்றும்
நிலையறிந்(து) ஆணவம் நீக்கு                       310

No comments:

Post a Comment