Jan 10, 2021

மணிக்குறள் - 28. விருந்தோம்பல் விரும்பு

இல்லம் அடைந்தாரை இன்முகத் தோடழைத்து
நல்ல விருந்து படை                                          271

மலர்ந்த முகத்தொடு வாவென் றழைத்து
நலமறிதல் நல்ல விருந்து                               272

உப்பிலாக் கூழும் உறவுக் கமிழ்தமாம்
தப்பாமல் வந்தோரைத் தாங்கு                   273

மலர்முகம் இன்சொல் மகிழுணா மூன்றும்
கலந்ததே நல்விருந்து காண்                        274

விருந்தோம்பி வாழ்வார்தம் வீட்டில் நிறையும்
பெருஞ்செல்வம் ஊறும் கிணறு                 275

செல்வமும் செல்வமெனச் சேரிடம் மாறினும்
நல்விருந்து போற்ற வரும்                             276

பசியென்று வந்தார்க்குப் பண்பாடு போற்றிப்
புசியென் றளித்தல் புகழ்                              277

விருந்தோம்ப உள்ளம் விழைந்தார் இருக்க
இருந்தோம்பும் இவ்வுலகம் ஈந்து              278

விருந்து படைக்க விழைந்த உளத்துப்
பொருந்துங் குணத்துப் பொலிவு               279

சுரும்புக்குச் செம்மலர் செந்தேன் படைக்கும்
விருந்தொக்க ஓம்பல் விழை                       280

No comments:

Post a Comment