Feb 27, 2022

திருமுருகாற்றுப்படை- பகுதி - 9

புலவர்: எப்படியெல்லாம் முருகப் பெருமானைப் பாடி வணங்கலாம்?

நக்கீரர்: எங்கெல்லாம் திருமுருகப் பெருமானைக் காணும் நற்பேறு பெறுகிறாயோ அங்கெல்லாம், முகம் மலர்ந்து திருமுருகப்பெருமானை விரும்பி நோக்கி, வாயால் வாழ்த்திக் கைகளைத் தலைமீது குவித்து வணங்கி அவர்தம் திருவடிகளில் தலை பொருந்தும்படி விழுந்து வணங்கிப் போற்றிப் பாடுவாயாக!
எவ்வாறெல்லாம் வாழ்த்தலாம் என்றால்,
ü சிவபெருமானின் நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றிய தீப்பொறிகளை வானம், காற்று, தீ, நீர், நிலம் ஆகிய ஐவருள் ஒருவரான தீயானவர், தன் அழகிய கையிலே தாங்கிக் கொண்டு வந்து நெடிய பெரிய இமய மலையின் உச்சியில் 'சரவணம்' எனப்படும் தருப்பை வளர்ந்த பசுமையான சுனையில் இடவும், கார்த்திகைப் பெண்டிர் அறுவரால் பாலூட்டப் பெற்று வளர்ந்த ஆறு திருமுகங்களையுடைய பெருமானே!
ü கல்லால மரத்தின் கீழ் எழுந்தருளிய சிவபெருமானின் புதல்வரே!
ü இமயவான் மகளான பார்வதி தேவியாரின் மைந்தரே!
ü தீயோராகிய பகைவர்களுக்கு யமன் போன்றவரே!
ü வெற்றியை உடைய வெல்லும் போர்த்தெய்வமான கொற்றவையின் மைந்தரே!
ü அணிகலன்களை அணிந்த தலைமைத்துவம் உடைய காடுகிழாளின் குழந்தையே!
ü வானவர்களாகிய தேவர்களின் விற்படைகளுக்குத் தலைவரே!
ü கடம்பு மலர்களாலாகிய மாலையினை அணிந்த மார்பினை உடையவரே!
ü அனைத்து மெய்யான நூல்களின் உண்மையான பொருளை அறியும் புலமை உடையவரே!
ü போர்த்தொழிலில் ஒப்பற்றவரே! உலகமெலாம் அழியும் காலத்திலும் தீயோரை எதிர்த்துப் போரிடுவதற்கென்று எஞ்சி நிற்கும் ஒரே கடவுளே!
ü அந்தணர்க்குச் செல்வமாக விளங்குபவரே!
ü புலமையுடைவர்கள் புகழ்ந்து கூறும் சொற் கூட்டமாய் விளங்குபவரே!
ü தெய்வயானை, வள்ளி அம்மையார் ஆகிய மங்கையரின் கணவரே!
ü வலிமை உடைய வீரர்களுக்குள் அரியேறு போன்றவரே!
ü ஞான சத்தியாகிய வேலினைப் பெற்று விளங்கும் பெருமை பொருந்திய கையினை உடைய செல்வரே!
ü கிரௌஞ்ச மலையில் ஒளிந்திருந்த சூரபன்மனை அழித்து வென்ற குறையில்லாத வெற்றியையும் பெருமையையும் உடையவரே!
ü வானத்தைத் தொடும் குறிஞ்சி நிலத்திற்கு உரிமை உடைய தலைவரே!
ü உலகில் உள்ள எல்லா மொழிகளிலும் நூல் இயற்றும் புலவர்களுக்கெல்லாம் தலைவரே!
ü மூத்த பரம்பரையினையும் சிறந்த புகழினையும் உடையவராக என்றென்றும் இளைஞனாகவும் அழகனாகவும் திகழ்வதால் முருகன் என்னும் திருப்பெயரை உடையவரே!
ü விரும்பிச் செல்கின்றவர் வேண்டும் எல்லாவற்றையும் தந்தருளும் கொடை வள்ளலே!
ü பொருள் இல்லாது துன்புறுவோர்களுக்குத் தர வேண்டியே பொன்னால் ஆகிய அணிகளை அணிந்துள்ளவரே!
ü பரிசில் பெற வருகின்ற அனைவரையும் தழுவித் தாங்கிக் காத்து அருள்பவரே!
ü அசுரன் சூரபன்மனையும் அவன் தன் சுற்றத்தினரையும் அழித்து வென்ற காரணத்தால் 'மதவலி' என்னும் பெயரை உடையவரே!
ü மிகச்சிறப்பாகப் போரிடும் இளமை பொருந்திய வீரரே!
ü உண்மையான தலைவரே!
இவ்வாறு திருமுருகப் பெருமானைப் போற்றி வணங்குதலில் யான் அறிந்த அளவு கூறுகிறேன். இறைவனின் தன்மை அனைத்தையும் அளவிட்டறிதல் இயலாது. நீயும் அறிந்தவாறெல்லாம் திருமுருகப் பெருமானைப் போற்றி வணங்குவாயாக!
புலவர்: நன்றி ஐயனே! நற்பேறுடையேன்! ஒப்பில்லாத மெய்யறிவை உடைய பெருமானே! நின் திருவடிகளை அடைய எண்ணி வந்தேன் என்றும் உரைப்பேன் ஐயனே!
நக்கீரர்: நன்று. நன்று. அவ்வாறு உரைத்து நீர் எண்ணிய பரிசிலைப் பற்றிக் குறிப்பிடுவதற்கு முன்பே அவருடைய ஏவலாளர்கள், திருவிழா நிகழும் களத்தில் தோன்றுவது போலப் பொலிவுடன் தோன்றித், திருமுருகப்பெருமானை நோக்கி என்ன உரைப்பார்கள் தெரியுமோ?
புலவர்: அவர்கள் யாது உரைப்பர் ஐயனே?
நக்கீரர்: 'பெருமானே, அறிவு முதிர்ந்த சொற்களையுடைய இந்த இரவலன் இரங்கத்தக்கவன்; நின் அருளுக்குரியவன்; நின்னுடைய புகழை விரும்பி வந்துள்ளான்' என்று இனிய உறுதி பயக்கும் சொற்களைக் கூறி நிற்பார்கள்.
அப்போது தெய்வத்தன்மையும் வலிமையும் பொருந்திய வானத்தைத் தொடும் வடிவுடைய திருமுருகப்பெருமான் நின்முன்னே எழுந்தருள்வான். ஆயினும் காண்பவர்களுக்கு அச்சத்தைத் தரும் தெய்வ வடிவினை உள்ளடக்கிக் கொண்டு முந்தைய மணம் கமழும் தெய்வத்தன்மை உடைய இளமை பொருந்திய வடிவினைக் காட்டி, 'நீ அஞ்ச வேண்டா; உன்னைக் காத்தருள்வேன்; நின்வருகையை யான் முன்னரே அறிவேன்' என்று அன்புகூர்ந்த சொற்களைக் கூறி அருள்வான்.
மேலும் இருண்ட கடலால் சூழப்பட்ட இப் பெரிய உலகத்தில் தனிப்பெருமை வாய்ந்த ஒருவனாக நீ விளங்குமாறு மற்றவர்களும் பெறுவதற்கு அரிய பரிசிலைத் தந்தருள்வான்.
புலவர்: அருமை. நன்றி ஐயனே! திருமுருகப் பெருமானைக் காணும் ஆவலோடு செல்கிறேன்.
நக்கீரர்: இன்னுமோர் அழகிய இடத்தில் திருமுருகப்பெருமானைக் காண்பீராக!
புலவர்: அஃது எவ்விடம் ஐயனே?
நக்கீரர்: பல சிறு ஊற்றுகள் இணைந்து வெவ்வேறான துகிலால் ஆகிய பல கொடிகளைப் போன்று மலை உச்சியிலிருந்து அசைந்து அருவியாக வரும். அஃது, அகிற்கட்டையைச் சுமந்து கொண்டு வரும். பெரிய சந்தன மரத்தைச் சாய்த்துத் தள்ளும். சிறு மூங்கிலின் மலர் பொருந்திய கொம்பு தனிப்பட வேரைப் பிளந்துகொண்டு வரும்.
புலவர்: அடடா! அஃது வளப்பமுடைய அருவியாயிருக்கும் எனத் தோன்றுகிறதே.
நக்கீரர்: ஆம். அதனால் என்னவெல்லாம் நிகழும் தெரியுமா?
ü வானத்தைத் தொடுவது போன்ற நெடிய மலை மீது கதிரவனைப் போல் சிவந்து தோன்றி ஈக்கள் மொய்க்கின்ற குளிர்ச்சியும் மணமும் பொருந்திய தேன் கூடு சிதைவுறும்.
ü பலாப்பழத்தின் பல முற்றிய சுளைகள் அருவியில் விழுந்து கலக்கும்.
ü மலையின் உச்சியில் உள்ள சுரபுன்னை மரத்தின் பூக்கள் உதிரும்.
ü கருங்குரங்குடன், கரியமுகத்தை உடைய பெண் குரங்குகளும் குளிரால் நடுங்கும்.
ü நெற்றியில் புள்ளிகளை உடைய 'பிடி' எனப்படும் பெண் யானையும் மிகுதியான குளிர்ச்சியை உணரும்.
ü பெரிய யானையின் முத்தினை ஒத்த கொம்புகளையும், நல்ல பொன், மணிகள் ஆகியவற்றையும், பொடி வடிவத்தில் உடைய பொன்னையும் கொண்டு சேர்க்கும்.
ü வாழை மரத்தின் அடிப்பாகம் ஒடிந்து விழும்.
ü தென்னையின் இளநீர்க் குலைகள் உதிரும்.
ü மிளகின் கரிய கொத்துகள் விழுந்து சாயும்.
ü அழகான இறகைப் புறத்தேயுடையதும் இளமையுடன் கூடிய நடையையும் உடைய பல மயில்கள் அச்சமுறும்.
ü வலிமையுடைய பெண் கோழிகளும் அஞ்சி ஓடும்.
ü ஆண் பன்றியும், கரிய பனையின் புல்லிய செறும்பைப் போன்ற கரிய மயிரை உடைய உடலையும் வளைந்த அடியினையும் உடைய கரடியும் பெரிய கற்குகைக்குள் சென்று சேரும்.
ü கரிய கொம்பினையுடைய காட்டுப் பசுவின் நல் எருது அச்சத்தால் கதறும்.
இத்தகு விளைவுகளையெல்லாம் ஏற்படுத்தும்.
அவ்வாறு மலையின் உச்சியிலிருந்து 'இழும்' என்னும் ஓசையுடன் குதித்து விழும் அருவியினையும் முற்றிய பழங்களையும் உடைய சோலைகளைப் பெற்று விளங்கும் குறிஞ்சி நிலமாகிய பழமுதிர்சோலைக்கு உரிமை உடையவர் திருமுருகப்பெருமான்.
புலவர்: நன்றி ஐயனே! தாங்கள் என்னைத் திருமுருகப் பெருமானிடத்தில் ஆற்றுப்படுத்திய விதம் என்னுள் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்போதே திருமுருகப் பெருமானைக் காணச் செல்கிறேன்.
நக்கீரர்: நன்று. நன்று. திருமுருகப் பெருமானின் திருவருளால் நற்பேறு பெறுக. வாழிய நலம்.
********
மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரர் புலவர் ஒருவரைத் திருமுருகப் பெருமானிடத்தில் ஆற்றுப்படுத்திய 'திருமுருகாற்றுப்படை உரையாடல்' நிறைவுற்றது.
*********
எடுத்தாண்ட நூல்கள்:
1. திருமுருகாற்றுப்படை உரை - பேராசிரியர் சிங்காரவேலு சச்சிதானந்தம் (மலேசியா) (http://www.kaumaram.com)
2. திருமுருகாற்றுப்படை விளக்கம் - கி.வா.ஜெகந்நாதன் அவர்கள்

Feb 20, 2022

திருமுருகாற்றுப்படை- பகுதி 8

புலவர்: அருமை ஐயனே! வேலன் மகளிரோடு கூடி ஆடும் குரவைக் கூத்தைப் பற்றிச் சொன்னீர். அவன் திருமுருகப் பெருமானாகத் தன்னை ஆக்கிக் கொண்டு மகிழ்ச்சிக் கூத்தாடுவது கேட்கவே இன்பமாயிருக்கிறது. நேரில் பார்க்க வேண்டும் என்னும் ஆவல் மேலிடுகிறது.

நக்கீரர்: அது மட்டுமா? மற்றுமொரு விழாவைப் பற்றிச் சொல்கிறேன், கேளுங்கள் புலவரே!

புலவர்: அஃது என்ன விழா ஐயனே!

நக்கீரர்: செறிவான மலைப்பக்கங்களில் வாழும் மக்கள் அனைவரும் திருமுருகப் பெருமானை வாழ்த்திப் பாடி விழாக் கொண்டாடுகிறார்கள்.

விழாக் கொண்டாடுவதற்கான களத்தில் கோழிக் கொடி நட்டுக் கொடியேற்றத்துடன் தொடங்குவர். அவ்விழாவில் சிறிய தினை அரிசியைப் பூக்களுடன் கலந்து பல பாத்திரங்களில் பரப்பிப் 'பிரப்பு அரிசி'யாய் வைத்து, ஆட்டுக் கிடாயை அறுத்துக் கொண்டாடுகிறார்கள்.

[பிரப்பு - கூடை நிறைய இட்டு வைக்கும் நிவேதனப் பொருள்]

புலவர்: அவ்விழாவைப் பற்றி விளக்கிச் சொல்லுங்கள் ஐயனே! எங்கெல்லாம் அந்த விழாவைக் கொண்டாடுகிறார்கள்?

நக்கீரர்: அன்புடைய அடியார் திருமுருகப் பெருமானை

ü வழிபட்டுப் போற்றத் தக்க பொருத்தமான இடங்களிலும்,

ü வேலன் மிக்க மகிழ்ச்சியுடன் ஆடும் களத்திலும்,

ü காட்டிலும், சோலையிலும், அழகான தீவு போன்று ஆற்றின் நடுவே உள்ள சிறு நிலத்திலும்,

ü ஆறு, குளம் ஆகியவற்றின் கரைகளிலும், வேறு பல இடங்களிலும்,

ü நான்கு தெருக்கள் சந்திக்கும் இடங்களிலும் [நாற்சந்தி, சதுக்கம்],

ü மூன்று தெருக்கள் சந்திக்கும் இடங்களிலும் [முச்சந்தி],

ü புதுமலர்களை உடைய கடம்பு மரத்தின் அடியிலும், ஊரின் நடுவில் உள்ள மரத்தின் அடியிலும்,

ü மக்கள் கூடும் பொது மேடையை உடைய மன்றங்கள், பொதியில் ஆகியவற்றிலும்,

ü கந்து நடப்பட்டுள்ள இடங்களிலும் கொண்டாடுகிறார்கள்.

புலவர்: ஓ! நன்று ஐயனே! அவ்விழாவை எப்படிக் கொண்டாடுகிறார்கள்? என்ன செய்கிறார்கள்?

நக்கீரர்: அவர்கள்

ü நெய்யுடன் வெண்மையான சிறு கடுகினைக் கலந்து கோயிலின் வாயிலில் அப்புவர்;

ü திருமுருகப் பெருமானின் திருப்பெயரை மென்மையாக உரைத்து, இரு கைகளையும் கூப்பி வணங்குவர்;

ü வளம் பொருந்திய செழுமையான மலர்களைத் தூவுவர்;

ü வெவ்வேறு நிறமுடைய இரு ஆடைகளை ஒன்றன் மேல் ஒன்றாக அணிந்திருப்பர்;

ü கையில் சிவப்பு நூல் காப்பு நூலாகக் கட்டியிருப்பர்;

ü வெண்மையான பொரியைத் தூவி, வலிமை வாய்ந்த ஆட்டுக் கிடாயின் இரத்தம் கலந்த தூய வெண்மையான பிரப்பு அரிசியை பலி அமுதாகப் பல இடங்களில் வைப்பர்;

ü சிறிய பசுமையான மஞ்சளையும் நல்ல நறுமணப் பொருள்களையும் பல இடங்களில் தூவித் தெளித்திருப்பர்;

ü செவ்வரளி மலரால் ஆகிய மாலையைச் சீராக நறுக்கிக் கோயிலைச் சுற்றித் தொங்க விட்டிருப்பர்.

புலவர்: ஓ! மிகச் சிறப்பாகக் கொண்டாடி மகிழ்கிறார்கள் ஐயனே! அவர்கள் இவ்விழாவில் வேறு என்னவெல்லாம் செய்கிறார்கள்?

நக்கீரர்:

ü மணப்புகையை எடுத்து ஆராதனை செய்கின்றனர்;

ü குறிஞ்சிப் பண்ணில் இயற்றப் பெற்ற பாடல்களைப் பாடுகின்றனர்;

ü மலைமீதிருந்து விழும் அருவியின் ஓசைக்கேற்ப இசைக் கருவிகளை ஒலிக்கின்றனர்;

ü பல்வேறு வடிவமுடைய அழகான பூக்களைத் தூவுகின்றனர்.

இவை மட்டுமா?

புலவர்: இன்னும் வேறு என்ன சிறப்புள்ளது ஐயனே!

நக்கீரர்: குறமகளின் வெறியாடலைக் கேட்பீர்.

திருமுருகப் பெருமானுக்கு விருப்பமான குறிஞ்சி யாழ், துடி, தொண்டகம், சிறுபறை போன்ற இசைக் கருவிகளைக் குறமகள் இயக்கிப் பாடி ஆடுகிறாள். அவ்வாறு ஆடித் திருமுருகப் பெருமானைத் தன்மீது வரவைக்கிறாள். மாற்றுக் கருத்துடையோரும் இந்நிகழ்வைக் கண்டு அஞ்சும் அளவுக்கு ஆவேசம் அடைகிறாள். இவ்வாறு திருமுருகன்பால் வழிப்படுத்துகின்றாள். அத்தகு அழகு பொருந்திய அகன்ற ஊரில் கோயில் வழிபாடு அமைகின்றது.

புலவர்: ஓ! நன்று… நன்று. இத்தகு கோயில்களிலும் திருமுருகப் பெருமான் தங்குகிறார் எனச் சொல்ல வருகிறீர். அப்படித்தானே ஐயனே!

நக்கீரர்: ஆம் புலவரே! அவ்வாறு, மிகுதியான மகிழ்ச்சியுடன் ஆடிய களத்தில் ஆரவாரம் ஏற்படுவதற்குரிய பாடல்களைப் பாடி, ஊது கொம்புகள் பலவற்றையும் ஊதி, வளைந்த மணியினையும் ஒலிக்கச் செய்து, என்றென்றும் கெடாத வலிமையுடைய யானையை அல்லது மயிலினை வாழ்த்தித், தாம் விரும்பும் அருட்கொடைகளை விரும்பியவாறு அடைய வேண்டி அடியார்கள் வழிபடுவதற்கென்று, அந்தந்த இடங்களில் திருமுருகப்பெருமான் தங்குகிறான்.

புலவர்: நன்றி ஐயனே!

(தொடரும்...)

Feb 12, 2022

திருமுருகாற்றுப்படை - பகுதி 7

புலவர்: இன்னும் வேறு எங்கெல்லாம் திருமுருகப்பெருமான் உறைகிறார் ஐயனே?

நக்கீரர்: மற்றுமொரு சிறப்பான இடத்தைக் காணலாமா புலவரே?

புலவர்: ஆம் ஐயனே! அறிவுறுத்தி அகம் குளிரச் செய்க!

நக்கீரர்: அறுவகைப் பணிகளைச் செய்வோர் யாவர்?

புலவர்: அறுவகைப் பணிகளா? அவற்றைப் பற்றிச் சொல்லுங்கள் ஐயனே!

நக்கீரர்: ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஏற்றல், ஈதல் ஆகியன.

புலவர்: ஓ! நூல்களைக் கற்றல், கற்பித்தல், வேள்வி செய்தல், ஏனையோரின் நன்மைக்காக வேள்வி செய்வித்தல், மற்றவர்களிடமிருந்து பொருளைப் பெறுதல், மற்றவர்களுக்குப் பொருளைக்கொடுத்து உதவுதல் என்பன.

நக்கீரர்: ஆம். அந்த ஆறு வகைப் பணிகளையும் தவறாமல் நிறைவேற்றுபவர்கள் அந்தணர்கள்.

புலவர்: அவர்கள் எப்படிப்பட்டவர்கள்?

நக்கீரர்: அவர்கள் பழம்பெரும் குடியில் தோன்றியவர்கள்; நாற்பத்தெட்டு ஆண்டுகள் திருமணம் புரியாது வாழ்பவர்கள்; அறம் பொருந்திய கோட்பாடு உடையவர்கள்; மூவகைத் தீயால் வேள்வி செய்து பெறும் செல்வத்தை உடையவர்கள்; இயற்கையாகப் பிறக்கும் பிறப்போடு, கல்வியறிவு, அறிவுமுதிர்ச்சி ஆகியவற்றை எய்திய பிறகு 'மீண்டும் பிறத்தலால்' 'இரு பிறப்பாளர்' என அழைக்கப்படுபவர்கள்; ஒவ்வொரு நாளுக்கும் உரிய நல்ல நேரத்தைக் கணித்து மற்றவர்களுக்குத் தெரிவிப்பவர்கள். ஒவ்வொரு புரியிலும் மூன்று நூல் இழைகளைக் கொண்ட புரிகள் மூன்றால் ஆகிய ஒன்பது நூலிழைகளைக் கொண்ட பூணூலை அணிந்து கொண்டிருப்பவர்கள்.

புலவர்: அவர்கள் என்ன செய்கிறார்கள்?

நக்கீரர்: நீராடிய பின்னர் ஈரமான அந்த ஆடையையே அணிந்து தலையுச்சி மீது இரு கைகளையும் குவித்து, ஆறெழுத்து மந்திரத்தைச் சொல்லித், தம் நாவினால் மென்மையாகவும் இனிமையாகவும் பாடி நறுமணமுடைய மலர்களைத் தூவித் திருமுருகப் பெருமானை வழிபடுகின்றார்கள்.

புலவர்: அருமை அருமை!

நக்கீரர்: அத்தகு அந்தணர்கள் வாழ்ந்துவரும் திருவேரகத்திலும் திருமுருகப் பெருமான் மன மகிழ்வோடு அமர்ந்திருக்கிறார். அதுமட்டுமா…

புலவர்: அடடா! இன்னும் வேறு யாரெல்லாம் திருமுருகனை வணங்குகிறார்கள் ஐயனே!

நக்கீரர்: வேலனின் குரவைக் கூத்தைக் கண்டீரா?

புலவர்: குரவைக் கூத்தா? அஃது என்னவென்று அறியத் தருவீர் ஐயனே!

நக்கீரர்: பசுமையான கொடியால் நறுமணமுடைய சாதிக்காயையும் அழகான புட்டில் போன்ற தக்கோலக்காயையும் நடுவில் வைத்துக் காட்டு மல்லிகை மலருடன் வெண்கூதாள மலரையும் சேர்த்துத் தொடுக்கப்பட்ட கண்ணியைத் தலை முடி மீது அணிந்திருப்பான் வேலன். அவன் நறுமணம் பொருந்திய சந்தனம் பூசப்பெற்ற மஞ்சள் நிறத்தால் விளங்கும் மார்பினை உடையவன். கொடிய வில்லால் விலங்குகளை வேட்டையாடிக் கொடுமையான கொலைத் தொழிலைச் செய்பவன். அவன், நீண்ட மூங்கிற் குழாயில் முற்றி விளைந்த தேனாலான கள்ளின் தெளிவை மலையில் சிற்றூரில் வாழும் தம் சுற்றத்தாருடன் உண்டு மகிழ்ந்து தொண்டகப் பறையின் தாளத்துக்கு ஏற்பக் குரவைக் கூத்தாடுவான்.

புலவர்: குரவைக் கூத்தைப் பற்றி இன்னும் விளக்கிச் சொல்லுங்கள் ஐயனே!

நக்கீரர்: விரல்களால் அரும்புகளைத் தொட்டு அலைத்து அலர்த்தப்பட்டமையால் பல்வேறு வகை நறுமணம் வீசுவதும், ஆழமான சுனையில் மலர்ந்த மலர்களால் தொடுக்கப்பட்டதும், வண்டுகள் மொய்ப்பதுமான மாலையையும், தொடுக்கப்பட்ட ஏனைய மாலைகளையும் சேர்த்துக் கட்டிய கூந்தலையும் உடையவர்களாகவும், இலையைத் தலைமுடி மீது அணிந்த கஞ்சங் குல்லையையும் நறிய பூங்கொத்துகளையும் கடம்பு மரத்தின் மலர்க்கொத்துகளை இடையே இட்டுக் கட்டிய பெரிய குளிர்ந்த அழகிய தழையையும் வடங்களோடு கூடிய அணிகலன்கள் அணியப் பெற்ற இடுப்பில், ஆடையாக உடுத்தியவர்களாகவும், மயிலைப் போன்ற சாயலை உடையவர்களாகவும் விளங்கிய மகளிரொடு ஆடுவான் வேலன்.

புலவர்: ஓ! மகிழ்ச்சியோடு ஆரவாரிக்கும் கூத்தாக இருக்குமோ?

நக்கீரர்: ஆமாம் புலவரே! திருமுருகனே உள்ளத்தில் புகுந்தவனாக வேலினைக் கையில் கொண்டு ஆடுவதால் அவன் வேலன் ஆவான்.

புலவர்: கேட்கவே ஆவலாக உள்ளதே! நேரில் கண்டால் எப்படி இருக்கும்..?

நக்கீரர்: இன்னும் சொல்கிறேன். கேளுங்கள் புலவரே! அந்த வேலன் சிவந்த மேனியனாகக் காட்சியளிப்பவன்; சிவப்பு நிற ஆடையை அணிந்துள்ளவன்; அசோக மரத்தின் குளிர்ச்சி பொருந்திய தளிர்களை இரு காதுகளிலும் அணிந்துள்ளவன்; இடையில் கச்சை அணிந்துள்ளவன்; கால்களில் வீரக் கழல்களை அணிந்துள்ளவன்; சிவந்த வெட்சி மலர்களைத் தலைமுடியில் கண்ணியாக அணிந்துள்ளவன்; புல்லாங்குழல், ஊதுகொம்பு, இன்னும் பல இசைக் கருவிகளை உடையவன்; ஆடு, மயில், அழகிய சேவல் கொடியை உடையவன்; உயரமானவன்; 'தொடி' எனப்படும் அணிகலன் அணியப்பெற்ற தோள்களை உடையவன்; நரம்பாலாகிய இசைக் கருவிகளின் இசையை ஒத்த இனிய இசையோடு வருகின்ற மகளிர் குழாத்துடன் வருபவன்; சிறிய புள்ளிகளும் நறுமணமும் குளிர்ச்சியும் அழகும் உடையதாக, நிலத்தில் தோய்கின்ற ஓர் ஆடையை அணிந்திருப்பவன். குரவை ஆடவிருக்கும் பெண்மானைப் போன்ற மகளிரை முழவு போன்ற பெருமையுடைய தன் கைகளால் பொருந்தத் தாங்கித் தோளைத் தழுவியவாறு தன் பெருமை பொருந்திய கையை முதற் கையாக அம் மகளிர்க்குத் தந்து, ஒவ்வொரு குன்றின் மீதும் திருமுருகனைப் போல ஆடுவான்.

(தொடரும்…)

Feb 6, 2022

திருமுருகாற்றுப்படை - பகுதி 6

புலவர்: இன்னும் வேறு எங்கெல்லாம் திருமுருகப்பெருமான் உறைகிறார் ஐயனே?

நக்கீரர்: இதுவரை திருப்பரங்குன்றத்திலும் திருச்சீரலைவாயிலும் உறைபவன் திருமுருகப் பெருமான் என்று கண்டோமல்லவா? இப்போது ஒரு சிறப்பான இடத்தைப் பார்க்கப் போகிறோம் புலவரே!

புலவர்: அப்படியா! அப்படி என்ன சிறப்பு என்பதையும் விளக்கிச் சொல்லுங்கள் ஐயனே!

நக்கீரர்: சொல்கிறேன் புலவரே! அவ்விடத்தில் ஒரு திருக்கோயில் இருக்கிறது. அத்திருக்கோயிலில் முன்னே சென்று புகுவோர் யாரென்று அறிவீரோ?

புலவர்: யாருக்கு அந்த நற்பேறு கிட்டும்? அவர்கள் யார் ஐயனே?

நக்கீரர்: அவர்கள் மரவுரியை ஆடையாக உடுத்தியவர்கள்; வடிவாலும் நிறத்தாலும் அழகுடையவர்கள்; வலம்புரிச் சங்கைப் போன்ற வெண்மையான நரைமுடியை உடையவர்கள்; தூய்மையாக விளங்கும் வடிவினை உடையவர்கள்; மானின் தோலைப் போர்வையாகப் போர்த்துக் கொண்டுள்ளவர்கள்; உணவினை விலக்கிய நோன்பின் காரணமாகத் தசை வற்றிய நிலையில் மார்பு எலும்புகள் வெளிப்படும் தோற்றத்தை உடையவர்கள்; பகற்பொழுதிலும் உணவு உண்ணா நோன்பினைப் பல நாட்கள் கடைப்பிடிப்பவர்கள்.

புலவர்: அப்பப்பா, மிகவும் எளிமையாகவும் தவத்தில் வலிமையாகவும் இருக்கின்றனரே!

நக்கீரர்: ஆம்… அவர்கள் பகையினையும், நெடுங்காலம் தொடரும் சீற்றத்தினையும் அகற்றிய மனத்தினை உடையவர்கள்; பலவற்றைக் கற்றவரும் அறிந்திராத கல்வி அறிவினை உடையவர்கள்; கல்வியால் பெறும் அறிவிற்கே எல்லையாக விளங்கும் தலைமைப் பண்புடையவர்கள்; ஆசையினையும் கொடிய சினத்தினையும் விலக்கிய அறிவுடையவர்கள்; ஒரு சிறிதும் துன்பம் அறியாதவர்கள்; யாரிடத்தும் வெறுப்பில்லாது பொருந்தி ஒழுகும் மெய்யறிவினை உடையவர்கள். அத்தகு முனிவர்களே முன்னே சென்று திருக்கோயிலின் உள்ளே புகுவர்.

புலவர்: அடடா… அவர்களை எண்ணும்போதே உள்ளம் பூரிக்கிறது. ஆமாம்.. ஐயனே! ஓர் ஐய வினா! ஏன் அவ்வாறு? யாவரும் ஒரே நேரத்தில் சென்று காண முடியாதா? இறைவன் எல்லாருக்கும் பொதுவானவன்றானே!

நக்கீரர்: ஆம் புலவரே! யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் திருமுருகப் பெருமானைக் காணலாம். ஆனால், அங்கு நடந்த நிகழ்வையும், அத்திருக்கோயிலின் சிறப்பையும் அறியத் தருகிறேன். முனிவர்கள் ஏன் முன் சென்றார்கள் என்பது அப்போது புரியும்.

புலவர்: நல்லது ஐயனே! கேட்கும் ஆவல் மிகுந்துவிட்டது. கூறுங்கள்.

நக்கீரர்: முனிவர்கள் முன் சென்றார்கள் அல்லவா? அவர்களைத் தொடர்ந்து யார் செல்கிறார்கள் என்று பார்ப்போம். அவர்கள் வெண்புகை அல்லது பாலாவியை முகந்து ஆடையாக உடுத்தியதைப்போல் தூய மெல்லிய ஆடையினை அணிந்தவர்கள்; மலர்ந்த அரும்புகளாலாகிய மாலையினை அணிந்த மார்பினை உடையவர்கள்; தம் செவிகளால் இசையை அளந்து நரம்புகளைக் கட்டிய வார்க்கட்டினை உடைய நல்ல யாழ் இசையில் பயிற்சி பெற்றிருந்தவர்கள்; நல்ல உள்ளத்தை உடையவர்கள்; எப்பொழுதும் இனிய சொல்லையே பேசுபவர்கள். அத்தகைய இசைவாணர்களாகிய பாணர்கள் இனிய யாழின் நரம்புகளை இயக்குவதற்காக வருகை புரிந்தனர்.

புலவர்: ஓ! இசைவாணர்களா? நன்று நன்று. அவர்களைத் தொடர்ந்து?

நக்கீரர்: அவர்களைத் தொடர்ந்து, வேறு யாராக இருக்க முடியும்? சொல்கிறேன்

புலவரே! அவர்கள் நோயற்ற உடலை உடையவர்கள்; மாமரத்தின் ஒளி பொருந்திய தளிர் போன்ற நிறமுடையவர்கள்; உரைகல்லில் பொன்னை உரைக்கும்போது தோன்றும் பொன் துகள் போன்ற தோற்றமுடைய அழகு தேமலை உடையவர்கள்; காண்பதற்கினிய ஒளி பொருந்திய பதினெட்டு வடங்களாலாகிய மேகலையை அணிந்தவர்கள்; யாரென்று தெரிகிறதா? அவர்கள் பாடினி என்று அழைக்கப்படுகின்ற இசை வாணிகளாகிய மகளிர். அவர்களும் வருகை புரிந்தனர்.

புலவர்: ஓ! பாணர்களைத் தொடர்ந்து பாடினிகள். அப்பப்பா. அவர்கள் பாடுவதைக் கேட்கவே உள்ளம் இனிக்குமே! அவர்களைத் தொடர்ந்து?

நக்கீரர்: அவர்களைத் தொடர்ந்து, பெருந்தலைவர்கள்.

புலவர்: பெருந்தலைவர்களா? அவர்கள் யார்?

நக்கீரர்: நஞ்சுடன் கூடிய துளையையும் வெண்மையான பற்களையும், நெருப்புப்போல மூச்சுவிடும்போது காண்பவர்களுக்கு அச்சத்தை விளைவிக்கும் கடுமையான வலிமையினையும் உடையன பாம்புகள் அல்லவா? அத்தகைய பாம்புகளும் மடியும்படி அவற்றை அடித்து வீழ்த்துவதும் பல வரிகளை உடைய வளைந்த சிறகுகளையுடையதுமானது கருடன் எனப்படும் பறவை. அத்தகைய கருடன் தோற்றமளிக்கும் கொடியையுடைய திருமால்…

புலவர்: ஓ! கருடக் கொடியான். அவருக்கு அங்கே என்ன வேலை?

நக்கீரர்: அவர் மட்டுமா? தம் ஊர்தியான வெண்ணிறக் காளை தோற்றமளிக்கும் கொடியினை உயர்த்தியுள்ளவரும், பலரும் புகழ்ந்து போற்றும் திண்மையான தோள்களையுடையவரும், உமையம்மையைத் தம் இடப்பக்கத்தில் உடையவரும், இமைக்காத மூன்று கண்களையுடையவரும், முப்புரங்களை எரித்து அழித்தவருமான சிவபெருமான்…

புலவர்: அவருமா?

நக்கீரர்: அவர் மட்டுமா? ஆயிரம் கண்களை உடையவனும், நூற்றுக்கு மேற்பட்ட வேள்விகளைச் செய்து முடித்தலால் பகைவரை வென்று அவர்களைக் கொல்லும் வெற்றியை உடையவனும், முன்பக்கம் உயர்ந்த நான்கு கொம்புகளையும் அழகிய நடையினையும், நிலத்தைத் தொடுமாறு நீண்ட வளைந்த துதிக்கையினையும் உடையதும், புலவர்களால் புகழப்படுவதுமான 'ஐராவதம்' எனப்படும் யானையின் பிடரியின் மீது அமர்ந்தவனுமான இந்திரன். அம்மூவரும் அத்திருக்கோயிலில் வந்து சேர்ந்தார்கள்.

புலவர்: ஓ! அவர்களுக்கு என்ன வேண்டும்? அவர்கள் திருமுருகப் பெருமானைத் தேடிச் செல்லக் காரணம் என்ன?

நக்கீரர்: அவ்வாறு நான்கு பெருந்தெய்வங்களில் பிரமன் அல்லாத மற்ற மூவரும் உலகத்தைக் காத்தலையே தங்கள் கோட்பாடாகக் கடைப்பிடித்து வரவும், திருமாலின் கொப்பூழ்த் தாமரையில் தோன்றிய பிரமனுக்காகத், திருமுருகப் பெருமானின் திருவருளினை வேண்டி முப்பத்து முக்கோடித் தேவர்களுடனும் பதினெட்டுக் கணங்களுடனும் ஞாயிறு போன்ற ஒளியுடன் வரலாயினர்.

புலவர்: அவர்கள் விண்மீன்களைப் போன்ற தோற்றத்தினர்; காற்றினைப் போல் விரைவாகச் செல்லும் ஆற்றல் உடையவர்கள்; காற்றில் தீ எரிவதைப் போன்ற வலிமை உடையவர்கள்; வானத்தில் மின்னலுடன் இடி இடிக்கும் ஓசையை ஒத்த குரலை உடையவர்கள் ஆயிற்றே.

நக்கீரர்: ஆம் புலவரே! அத்தகையவர்கள் பிரமனைச் சிறையிலிருந்து விடுவிக்கவேண்டும் என்னும் வேண்டுகோளுடன் வானத்தில் வட்டமாய்ச் சுழன்று வந்து நின்றனர்.

புலவர்: அப்பப்பா... திருமுருகப் பெருமானின் புகழ் ஓங்குக!

நக்கீரர்: ஆம். அத்தகைய திருக்கோயில் உடைய திரு ஆவினன்குடி என்னும் ஊரில் குற்றமற்ற கொள்கையை உடைய தெய்வயானை அம்மையுடன் சில நாள்கள் அமர்ந்து இருப்பவர் திருமுருகப் பெருமான்.

(தொடரும்...)