Aug 18, 2021

அரங்கேற்றம் - ஐந்தணிப் பாட்டு (அலங்காரப்பஞ்சகம்) - ஐம்புலனைந்தணி - பகுதி 4

வெண்பா
புரியும் செயல்யாவும் பூவிழி இன்றிப்
புரிதலும் செம்மையாய்ப் போகா - அரிய
விழியிரண் டின்றி விரைந்து பணியில்
எழிலாய் இயங்குவதெவ் வாறு (31)

கட்டளைக் கலித்துறை
உடுப்பது மேனி, விழிப்பவை கண்கள், உலகினர்சொல்
மடுப்பது காது மடமட என்றே விழுங்கிடும்வாய்
சொடுக்கிடும் மூளை நடத்திட நால்வர் சொலுமறிவை
முடிப்பதும் வாழ விடுப்பதும் நானென் மூச்செனவே! (32)

அகவல்
மூச்சுப் பிடிக்க மொடமொடக் குடித்துப்
பேச்சுக் குழறிப் பிறவி மறக்கச்
சாக்கடை சந்து தெருக்கள்
போக்கிடந் தெரியாது புரளவைப் பேனே (33)

விருத்தம்
புரளப் பஞ்சுப் பொதிகட்டில்
  புரக்க வாசச் சவுக்காரம்!
திரண்டு கொழிக்கப் பலபயிற்சி!
  தேடி யணியும் நல்லாடை!
மிரட்டும் நோய்கட் கெதிராக
  மேனி முழுதுஞ் சோதனைகள்!
உருளும் புவிவாழ் மாந்தரெனக்
  குவந்தே செய்யும் பணிகளிதே! (34)

வண்ண விருத்தம்
தனதன தந்தந் தனதானா
  தனதன தந்தந் தனதானா

பணிகளி லென்றுங் குறைவேது
  பகலிர வென்றுங் கிடையாது
இணையொடு நெஞ்சங் கனிவாக
  இறைதொழ வன்புந் துணையாக
குணநலன் விஞ்சுந் தமிழாலே
  குருவரு ளென்றுந் துணைதானே
அணிகளு மின்பந் தருமோசொல்
  அழகிசை சிந்துஞ் செவிதானே! 35

வெண்பா
தானே இயங்கும் தரத்தோ டிமைகொண்
டேனோ இறைவன் எமைப்படைத்தான் - ஏனென்னில்
எந்தம் சிறப்பினை இவ்வுலகம் உய்த்துணர
இந்தக்காப் பெந்தமக் காம் (36)

கட்டளைக் கலித்துறை
காம்பெனக் காணும் கடிமலர் உண்டதில் கண்வழுக்கும்
சோம்பலில் மேனியும் தூங்கையில் காதும் தொடர்பிழக்கும்
ஓம்பிடும் மூச்ச தொருநொடி ஓய்ந்தால் உயிர்வருமோ?
வேம்புணும் வாயுமென் வேலையைப் பார்க்க முயன்றிடுமே (37)

அகவல்
முயற்சி இன்றி மூன்று வேளையும்
அயர்ச்சி இன்றி அள்ளி யுண்ணப்
பயிற்சி வேண்டுமோ பாரீர்
வயிற்றின் ஆணைக்கும் வணங்கா தவனே (38)

விருத்தம்
வணக்கம் பலவுண் டென்றாலும்
  மடங்கித் தரையில் நான்வீழ
வணங்கும் வணங்கே தலைவணங்காம்!
  மற்றீ தெதனா லென்பீரேல்
வணக்கம் பெறுவார் திருமுன்னர்
  வணங்கும் என்னைச் சரணமெனப்
பிணக்கம் இன்றித் தருவதனால்!
  பெருமை சேர்க்கும் என்பணிவே! (39)

வண்ண விருத்தம்
தான தனன தனதான
  தான தனன தனதான

வேத வொலியில் மகிழ்வோடு
  மேவி யுலவு புலனாவேன்
நாத வடிவி லிறையோனை
  நாடு மடிய ரொடுவாழ்வேன்
பாதை யறியு முணர்வோடே
  பாயு மெனது மனமேதான்
காத ணிகளி னசைவோடே
  காத லுறவை யறிவேனே (40)

No comments:

Post a Comment