Oct 26, 2024

மீனழகு - ஆசிரிய விருத்தம்

மின்னி மின்னிச் சிரிக்கின்ற
   மீன்கள் கோடி வானத்தில்
கண்ணில் பட்ட ஒருமூன்று
   கருத்தில் நுழைந்து களிப்பூட்டும்
மின்னும் அவையோ நேர்க்கோட்டில்
   மீண்டும் காணோம் எனத்தேடும்
அன்ன நிலவு குழந்தையைப்போல்
   ஆர்வத் தோடு நான்களிப்பேன்

பல்வான் அலகு தூரத்தில்
   பல்லைக் காட்டும் மீனழகு
நில்லா மேகம் மறைத்தாலும்
   நின்றொ ளிர்ந்தொ ளிந்திருக்கும்
எல்லாம் உணர வைக்கின்ற
   எண்ணம் கூட்டும் இவ்வுலகில்
இல்லாச் சுவையும் பொதித்திருக்கும்
   இன்னும் இன்னும் களிப்பூட்டும்

எண்ணி எண்ணி வியந்திருந்தேன்
   எல்லா மீனும் ஒளிருமெனக்
கண்கள் விருந்தால் களித்திருக்கக்
   கடிதில் மறையும் சிலமீன்கள்
விண்ணில் தொலைவில் ஒளிர்வதெல்லாம்
   விரும்பா தோவந் தருகமைய
நண்ண லில்லை நம்கைக்கு
   நடப்ப தில்லை நம்மோடே

- கருத்தாக்கம்: அருண்குமார்
- கவியாக்கம்: தமிழகழ்வன்

No comments:

Post a Comment