Jan 14, 2019

வடசொற் கிளவி வடவெழுத்து ஒரீஇ… பகுதி 2

பைந்தமிழ்ச் செம்மல்
தமிழகழ்வன் சுப்பிரமணி

மொழிமுதல் எழுத்துகள்

தமிழார்வலர்களுக்கு வணக்கம்!

சென்ற பகுதியில் மெய்ம்மயக்கம் பற்றிப் பார்த்தோம். இப்பகுதியில் மொழிமுதல் எழுத்துகளைப் பற்றிப் பார்ப்போம்.

ஒவ்வொரு சொல்லும் எந்தெந்த எழுத்தில் தொடங்கலாம் என்பதைப் பற்றிக் கூறும் பகுதியே மொழிமுதல் எழுத்துகளாம்.

தொல்காப்பியம் காட்டும் மொழிமுதல் எழுத்துகள்:

உயிரெழுத்துகள் பன்னிரண்டும் மொழிமுதலாகும்.

மெய்யெழுத்துகள் மொழிமுதலாகா.

உயிர்மெய்யெழுத்துகளில் மொழிமுதலாகும் எழுத்துகளின் பட்டியலைக் கீழே காண்போம்.

க - வரிசையில் 12 உயிர்மெய்யெழுத்துகள்

த - வரிசையில் 12 உயிர்மெய்யெழுத்துகள்

ந - வரிசையில் 12 உயிர்மெய்யெழுத்துகள்

ப - வரிசையில் 12 உயிர்மெய்யெழுத்துகள்

ம - வரிசையில் 12 உயிர்மெய்யெழுத்துகள்

ச - வரிசையில் ச, சை, சௌ ஆகிய மூன்று எழுத்துகளைத் தவிர மற்ற ஒன்பது எழுத்துகள்

வ - வரிசையில் வ, வா, வி, வீ, வெ, வே, வை, வௌ ஆகிய எட்டு எழுத்துகள்

ஞ - வரிசையில் ஞா, ஞெ, ஞொ ஆகிய மூன்று எழுத்துகள்

ய - வரிசையில் யா என்னும் ஒரே எழுத்து

எந்த எழுத்தும் தன்னைக் குறிக்கும் இடத்து மொழிமுதல் ஆகி வரும்

நு - குற்றியலுகரமாகி மொழிமுதலில் வரும்

மேலே கூறப்பட்ட இலக்கண மரபிலிருந்து, வேறுபட்டுச் செய்யுளின்கண் திரிந்து முடிவனவும், இருவகை வழக்கின்கண்ணும் வழங்குமிடத்தான் மருவித் திரிவனவும் ஆகியவற்றை நல்லளவையாகிய ஆராய்ச்சியான் வழக்கு நடக்கும் இடத்தை உணர்ந்து, கூறப் பெற்ற இலக்கண நெறியோடு பொருந்த நடத்த வேண்டும் என்னும் தொல்காப்பியப் புறனடையை வழியாய்க் கொண்டு நன்னூலார் காலத்தில் சில மாற்றங்கள் எழுந்தன. அவையாவன:

ச - வரிசையில் மேலே குறிப்பிட்ட ஒன்பது எழுத்துகளோடு, ச, சை, சௌ ஆகியனவும் (பன்னிரண்டும்)

ய - வரிசையில் ‘யா’வுடன் ய, யு, யூ, யோ, யௌ ஆகியனவும்

ஞ - வரிசையில் ஞா, ஞெ, ஞொ ஆகிய மூன்றோடு 'ஞ'கரமும் மொழிமுதல் ஆகி வரும்.

ங - அ, இ, உ, எ, யா ஆகிய எழுத்துகளின் பின், மொழிமுதல் ஆகி வரும்.

இனி, அவற்றுக்கான எடுத்துக்காட்டுகள் சிலவற்றைக் காண்போம்.

உயிரெழுத்துகள்: அம்மா, ஆடு, இலை, ஈசல், உரல், ஊஞ்சல், எலி, ஏணி, ஐந்து, ஒளி, ஓடம், ஔவியம்

மெய்யெழுத்துகள்: எந்தச் சொல்லும் தனித்த மெய்யெழுத்துகளை மொழிமுதாலாகக் கொள்ளாது. அது வடமொழியிலும் பிறமொழிகளிலும் மட்டுமே வரும். எனவே "க்ருபா, த்ருதி, ப்ரபு, ம்ருணாளினி, வ்யாசா" - போன்ற வட சொற்கள் "கிருபா, திருதி, பிரபு, மிருணாளினி, வியாசர்" என எழுதப்பட வேண்டும்.

உயிர்மெய்யெழுத்துகள்:

க - கடை, காக்கை, கிளி, கீரி, குயில், கூட்டம், கெண்டை, கேழல், கை, கொட்டை, கோட்டம், கௌவை

த - தன்மை, தாழை, திண்மை, தீது, துன்பம், தூக்கம், தென்றல், தேக்கம், தை, தொண்டு, தோண்டு, தௌவை

ந - நங்கை, நாடு, நிலம், நீலம், நுகர்ச்சி, நூல், நெல், நேற்று, நை, நொய், நோய், நௌவி

ப - பட்டம், பாடம், பித்தன், பீடு, புகழ், பூதம், பெண்மை, பேறு, பை, பொன், போட்டி, பௌவம்

ம - மண், மான், மின், மீன், முரண், மூடன், மென்மை, மேன்மை, மை, மொழி, மோதிரம், மௌவல்

ச - சருகு, சான்றோர், சிலை, சீற்றம், சுற்றம், சூழ்ச்சி, செற்றம், சேவல், சைகை, சொல், சோறு, சௌரம்

வ - வண்டு, வான், விடு, வீடு, வெற்று, வேல், வையம், வௌ

ஞ - ஞமலி, ஞாண், ஞெகிழி, ஞொள்கிற்று

ய - யவனர், யாறு, யுகம், யூகி, யோகி, யௌவனம்

நு - நுந்தை

ங - அங்ஙனம், இங்ஙனம், உங்ஙனம், எங்ஙனம், யாங்ஙனம்

தன்னைக் குறிக்கும் இடத்து எல்லா உயிர்மெய்களும் மொழிமுதல் ஆகி வருதல் - ஙிகரம், டகரம், வுகரம், ரகரம், யீகாரம், வூகாரம், ஞைகாரம்

இவ்வாறு, மேலே குறித்த மொழிமுதல் எழுத்துகளைத் தவிர மற்ற எழுத்துகளில் தொடங்கும் எந்தச் சொல்லையும் ஆராய்ந்து ஏற்றவாறு பயன்படுத்த வேண்டும். எடுத்துக்காட்டாக, வடமொழியிலும் பிற மொழிகளிலும் பல்கிப் பெருகி வழங்கிவரும் பல சொற்கள் லகரம், ரகரம், டகரம் ஆகியவற்றையும் அவற்றின் வரிசை எழுத்துகளையும் மொழிமுதலாகக் கொண்டுள்ளன. அத்தகைய சொற்கள் தமிழுக்கு வரும்போது எப்படியெல்லாம் மாற்றிப் பயன்படுத்த வேண்டும் என்பதைப் பிறகு பார்க்கலாம்.

மொழிமுதல் எழுத்துகளைப் பற்றிப் பேசும்போது, ஔவையாரின் ஆத்திசூடியும், கொன்றை வேந்தனும் நமக்கு நினைவில் வரும். (தொடரும்)

No comments:

Post a Comment