கவியரங்கத் தலைமை
பைந்தமிழ்ச் செம்மல் வள்ளி முத்து
கவிஞர் அழைப்பு - வள்ளி முத்து
பலமுள் இருக்குமாம் பால்முகமும் காட்டும் சிலநாரொ ளிக்கவுள்தித் திக்கும் - புலவோரே.!
நேரகழ்ந்து பார்த்தால்தான் நீரறிவீர் தீம்பலவும்
வேறல்ல சுப்ரமணி என்று
குமிழுடையும் சொற்களின்றி கொள்கைசூழும் பாவேந்தி
அமுதமன்ன பாக்களூடே ஆழ்கருத்தை ஆளுகின்ற
தமிழகழ்வ.! அருங்கவியே.! தைப்பொங்கல் பாடவாரும்.!
இமிழ்கடலாய் ஒலிக்கட்டும் இதயமீதில் இப்பொழுதே.!
தமிழகழ்வன் சுப்பிரமணி
வாழ்த்து, அவையடக்கம்
பைந்தமிழ்ப் பாவுக் கடிமைசெய் பாவலர் ஆவல் வாழியவே
பைந்தமிழ்ச் சோலைக் கவியரங்கப்
பாவலர் தலைவர் வாழியவே
பைந்தமிழ்ச் சோற்றை உண்டுள்ளம்
பண்படும் நோக்கம் வாழியவே
பைந்தமிழ் சிறிதே உண்டவன்யான்
பார்வையில் பிழைதீர்த்(து) அருள்வீரே!
பழைமை காக்கும்
புதுமைப் பொங்கல் பொங்குக
ஏறிய வேதனை; இன்றுள்ளம்
வெதும்பி உழவன் சாகின்றான்
விளைச்சல் இன்றி நமக்கெல்லாம்
புதுமைப் பொங்கல் என்பதென்ன?
புதிதாய்ப் பொங்க என்னுளது?
புதுப்பா னையில் புத்தரிசி
பொங்கு வோமா இவ்வாண்டு? 1
புதுப்பித்து வாழ்வோம் என்ற
புதுப்பித்துப் பிடித்தல் நன்றே
புதுப்பித்தல் என்ப தென்ன?
பழைமையை மறந்தி டாமல்
புதுப்பானை ஆனால் கள்ளோ
பழையதே என்று சொல்லப்
புதுமையைச் செய்தல் தானே
பழைமையை மறத்தல் ஏனோ? 2
பழைமை அறிய முயல்கின்ற
பாதை தன்னில் புதுமையினைத்
தழைக்கச் செய்வோம் நல்லுலகைத்
தாங்கி நிற்கும் தூணாவோம்
பழைமை என்றால் என்னென்று
பகுத்துக் காணாப் புற்றனத்தை
வழமை யாகக் கொள்கின்ற
மடமைத் தனத்தைக் கைவிடுவோம் 3
பழைமைப் பொங்கல் பொங்கிடுவோம்
பழனம் பண்பட் டிடவியற்கை
வழங்கும் இன்ப வளங்காப்போம்
மழைநீர் சேர்த்து மண்காப்போம்
உழவைக் காப்போம் உயிர்காப்போம்
உலகைக் காக்க முன்னெழுவோம்
வழமை மறவா திருந்தேநாம்
வரும்பின் தலைமு றைகாப்போம் 4
No comments:
Post a Comment