Mar 14, 2021

முருகாதலம் காரிகை - பகுதி 1

 பைந்தமிழ்ச் செம்மல் 

தமிழகழ்வன் சுப்பிரமணி


 அருவினை யாவும் அழிக்கும் வலனே அறுமுகனே!

வருவினை யாவும் வடிவேல் செலுத்தி வருத்துகவீங்(கு)

ஒருவினை என்னை உழலும் துயரில் உறுத்துவதோ?

மருவினை நீக்கு மருத்துவ மாமணி மாமுருகே!                                                      1


முருகைய! முத்தமிழ் முத்தைய! என்றும் முடிவிலனே!

உருவு மருவுமென் றோருதற் கேலா ஒருதனியே!

பெருவெளி எங்கிலும் பேரொளி யாயுள பேரிறையே!

அருவெளி என்றன் அகத்தினுக் குன்றன் அருளொளியே!                                             2


ஒளிர்ந்தெழுந் தோங்கி உலகினை ஊக்கும் ஒருதனியே!

தெளித்தருள் வாயே சிலைநாள் உறக்கத் திருந்தெழுந்து

தெளிந்த மனத்தொடு தேர்ந்தன செய்யத் துணையிருப்பாய்

துளிர்த்தநற் சூழ்ச்சி செயல்வழி நன்றாய்த் துலங்குகவே!                                  3


துலங்கு கதிர்வேல் துணைசெயுந் தொட்டுத் தொடங்குவன

இலங்கும் வழிதரும் எங்கும் நிறைந்த எழிலவனைக்

கலங்கா திருந்து களிப்பொடு காண்பாய் கடம்பமலர்

அலங்குநல் லாரமும் ஆற்றுப் படையும் அகத்தாற்றவே                                  4


ஆற்றுப் படுத்தென் னகத்தைக் குளிர்வித் தருமணியே!

ஊற்றுப் படுத்தென் னுணர்வு பெருகி உயரருவி

காற்றுப் படுத்துங் கடிதெனத் தேடக் கழலிணைகள்

ஆற்றுப் படுத்தி அருள்வாய் முருகா அடியனுக்கே!                                                5


அடியார்க் கடியவர் அன்பருக் கன்பர் அகத்துறையும்

மடியா தனவெனும் மாத்துய ரெல்லாம் மடித்தருளும்

படியாய் விளங்கலின் பாடிப் பரவிப் பணிதலுக்கே

துடிப்பவர் நெஞ்சில் துளைத்தழிக் கின்ற துயரிலையே                                      6


துயரந் தொலைத்தெழுந் தோடத் துணைசெய் தருளுகவென்

றயக்கங் களையுந் தரந்தந் துயர்த்துக தான்விழைந்து

முயல முயல முதலென நின்று முனைதலுடைச்

செயலுக் குருவாய்ச் சிறப்பொடு நின்றருள் செவ்விறையே!                           7


இறைவ னடிதொழு தின்புறு நெஞ்சே இடரெனவொன்

றுறைவ திலையுனை ஊக்குமவ் வாற்றல் உயிர்த்தெழுக!

சிறையென வாழ்வைச் சிதைத்தல் சிறப்போ சிறைவிரிக்க!

குறைபல போக்கும் குமரனைத் தேடுக குன்றினிலே                                       8


குன்றுகள் தோறும் குடியிருக் கின்ற குழக்குமரா!

இன்றெழுந் தேனென் இயற்கை எதிலும் இனிதிருப்பாய்!

பொன்றுந் துணையும் புதுக்குவாய் என்றன் புலன்றெளிய

வென்றுளம் வாழ்குவாய் வெற்றி யளிகொற் றவைமகனே!                                 9


மகனே! களைவாய் மயக்கம் செயலை மகிழ்வுடனே

அகத்தில் பொருத்தி அணுவணு வாக்கி அவைதுணிக!

இகத்தில் செயலே இனிமை பயக்கும் இறுதிவரை

வகைப்படுத் தாற்றலின் மாச்செயல் எல்லாம் வழிப்படுமே                                       10

(தொடரும்)

No comments:

Post a Comment