Dec 15, 2007

தூது

இதழிடை நின்ற இனிய பேச்சில்
நுதலிடை நின்று நெய்த நோக்கில்
அகத்திடை நின்ற அன்பின் நினைவில்
மிகக்கொள உணர்ந்த உணர்வின் மேன்மையை
மெல்லிழைத் தென்றல் மேனி தன்னில்
புல்லிழை நுண்மைப் புல்லிய அலைவில்
தூதினை விடுவேன் யானே
ஏதென அறியின் எனைக்கொள் மானே!

செஞ்சுவை

தஞ்சம்நி னக்கென் நெஞ்சகம் என்றால்
கொஞ்சுமம் மழலைக் கெஞ்சலை என்றும்
சஞ்சல மின்றிச் செஞ்சுவை என்று
நெஞ்சினிற் புகுத்திக் கொஞ்சுவேன் நானே

Jul 8, 2007

அன்புள்ள இறைவனே

அன்புள்ள இறைவனே
ஆற்றலின் வடிவனே
இன்புள்ள உலகிலே
ஏற்றத்தைத் தருகவே

Jun 8, 2007

நுதல்விழியாய்!

மென்மையான உன்றன் பேச்சு
என்றன் செவியில் ஏறிப் போச்சு
மயங்கிப் போனேனே - நான்
மயங்கிப் போனேனே

உன்றன் நெஞ்சில் ஒளிந்திருக்கும்
உயர்ந்த குணங்கள் எல்லாம் நானே
கண்டுகொண்டேனே - நான்
கண்டுகொண்டேனே

அன்பே! இது முதல்முறையோ?
என்னெஞ்சில் இளம்பிறையோ?
சுழல்கின்ற கடும்புயலோ?
சுடுகின்ற பெரும் அனலோ?

வருங்காலம் வசந்தகாலம்
இப்போதே வந்ததென்று
எண்ணம் சொல்கிறதே - என்
நெஞ்சம் சொல்கிறதே

நுதலில் வைத்தாய் 
நேயக் கண்ணை
அதனில் விழுந்த 
மாயக் கண்ணன்
நான்தானே நான்தானே