நிலைமண்டில ஆசிரியப்பா
சொல்பேச் சாவது கேட்க வேண்டும்
சுயபுத்தி யாவ(து) இருக்க வேண்டும்
என்ற உன்றன் அறிவுரை எம்மை
என்றும் நன்னெறிக்(கு) இட்டுச் செல்லும்
கந்தர் சஷ்டி கவசம் மூலம்
எந்தையே என்றன் அச்சம் களைந்தாய்
மீன்பி டித்தல் மீன்வலை பின்னல்
நோன்புக் கயிறு திரித்தல் மரமறுத்தல்
குடைசரி செய்தல் குளிர்பனி உறைநிலை
அடைகுழை வதனை விற்றல் இன்னும் 10
சோதிடம் நாட்டு வைத்தியத் தோடு
சிலம்பு பம்பை தெருக்கூத் தென்று
பலகலை அறிந்த வித்தகர் நீயே!
சேகர் என்னும் பெயருக்(கு) ஏற்றதாய்ச்
சேகரம் செய்த செவ்வறி வெல்லாம்
சேகரம் யானும் செய்திடு வேனோ?
எண்ணும் போதே என்னுளம் பெருமை
நண்ணும் நாளும் வாழ்க வாழ்க! 18
இலக்கணக் குறிப்பு:
குளிர்பனி, உறைநிலை, அடைகுழைவு – வினைத்தொகை,
உளம் – உள்ளம் என்பதன் இடைக்குறை,
நன்னெறி
- பண்புத்தொகை
சொற்பொருள்:
நண்ணும் – அடையும்.
கந்தர் சஷ்டி கவசம் – முருகப்பெருமானின்மீது பாடப்பட்ட கவச நூல்.
நன்னெறி – நல்ல வழி.
அச்சம்
– பயம்,
களைந்தாய் – நீக்கினாய்.
பொருள்:
தந்தையின் அறிவுரை:
சொல் பேச்சாவது கேட்க வேண்டும் அல்லது சுயபுத்தியாவது இருக்க வேண்டும்.
தந்தை மகற்காற்றும் நன்றி: நாள் தோறும் கந்தர்
சஷ்டி கவசம் படிக்கச் சொல்லி, என்னுள் இருந்த பயத்தைப் போக்கித் தமிழறிவு வளரச் செய்தார்.
தந்தை செய்கின்ற தொழில்கள்: மீன் பிடித்தல்,
மீன்வலை பின்னல், நோன்புக் கயிறு திரித்தல், மரம் அறுத்தல், குடை சரிசெய்தல், குளிர்பனி
உறைநிலை அடை குழைவு (ICE CREAM) விற்றல், சோதிடவியல், நாட்டு மருத்துவம், சிலம்பாட்டம்,
பம்பை, தெருக்கூத்து.
சேகர் என்னும் பெயருக்கு ஏற்றதாக, நீர் சேர்த்து வைத்த செம்மையான
அறிவையெல்லாம், யானும் எனக்குள் சேர்த்து வைப்பேனோ? உன்னை எண்ணும்போதே என் உள்ளம் பெருமை
அடைகிறதே! தந்தையே! நீர் நாளும் வாழ்க.