Nov 5, 2024

இந்தக் காலப் பிள்ளைகள் - சமுக வலைத்தள அடிமைகள்

புரியாத புதிராய்ப்
புளகாங்கிதம் அடைந்தேன்
புன்னகை பூத்தன உதடுகள்
புதுமலர்ச்சி கொண்டது என் முகம்
புதிதாய் ஓர் உறவு

நட்பு நாடி வந்தது...
நலமா? என்றது
நாட்டமெல்லாம் என்ன?
நாளெல்லாம் என்செய்வாய்?
நானாகக் கூறும் முன்
நாலாயிரம் கேள்விக் கணைகள்

அடுக்கடுக்காய் வந்ததிலே
அசந்து போனேன்
அப்படி என்ன
ஆர்வம் அவளுக்கு?

ஒருவேளை
உளவு பார்ப்பவளோ?
இல்லை இல்லை
உதவி கேட்பவளோ?
இல்லை இல்லை
உடன்பிறவாத உறவானவளோ?
இல்லை இல்லை
ஒரே வகை விருப்பமுள்ள
உள்ளம் நாடி வந்தவளோ?
உண்மையைச் சொல் எனக்
கேட்க மனமில்லை
கேட்டுக் கொண்டே இருந்தேன்
கேண்மையானவளின்
கேள்விகளையே
ஏன் ஏன் என்று

ஊர் உறங்கிய பொழுதிலும்
உள்ளம் உறங்காமல்
உறவாடிக் கொண்டே இருந்தது
உவகை உற ஆடிக் கொண்டே இருந்தது
உனக்கென்ன பிடிக்கும்? என்றாள்
உன்னுடைய கொள்கை என்னென்றாள்?
தனக்கென்ன பிடிக்கும்
தன்கொள்கை இதுவென்று
தாராளமாய்ப் பகிர்ந்தாள்

ஆறு மாதம் ஆனதும் அவள்
வேறு விதமாய் வந்தாள்
கொஞ்சங் கொஞ்சமாய்த்
தன் பேச்சை அடக்கிக் கொண்டாள்
என்பேச்சையும் கேளாமல்
அடங்கிக் கொண்டாள்

காரணம் என்னவென்று
புரியாமல் விழித்தேன்
காலத்தை வெறுமையில் கழித்தேன்

"முகம் பார்த்திராத
மூத்தவனாய்க் கொண்ட ஒருவன்
வேலைப் பளுவால்
விட்டு விலகியவன்
மீண்டும் வந்துவிட்டான்
முன்போல் என்னிடம் 
பேச வியலாது" என்றாள்
"அவன் சொன்னால்
அப்படியே நிற்பேன்
அப்படிப்பட்ட அண்ணனவன்"

எப்படி இப்படிப் பேசினாள்
எதிரே இருந்தும்
இழுபறியாய்க் கடக்கும்
முகிற்கூட்டம்போல்
முனைந்து சென்றாளோ?
காலத்தைக் கடக்க மட்டுமே
கடிதில் உறவைக் கொண்டாளோ?
அவளே அதை முறித்தாளோ?