Dec 27, 2024

விரும்புவீர்

நேரிசை ஆசிரியம்

அண்டத் துள்ளது பிண்டத் துள்ளதான்
அனைத்தும் தொடர்புடை ஆற்ற லுடைத்தாய்க்
கொடுப்பது கொடுக்கும் விடுப்பது விடுக்கும்
வினைத்தது விளைக்கும் விளைத்தது வினைக்கும்
நினைப்பது நடத்தும் நடந்தது நினைக்கும்
இனைத்தென உணரா இன்னுயிர்
வினைத்தகு மக்காள் விரும்பு வீரே!

Dec 19, 2024

சமத்துவ இந்தியா - பெயரில் மட்டும்தான்

சாதிக்கு மட்டுமன்று
சமூக நீதிக்கும்தான்
சலுகைகள் வழங்கும்
சட்டங்கள் கொண்டது
சமத்துவ இந்தியா
பெயரில் மட்டும்தான்

இலஞ்சப் பேய்கள்
அஞ்சாமல் வாழும்
வஞ்ச நாய்கள்
நிமிர்ந்து நடக்கும்
கருத்துச் சுதந்திரம்
கறுத்த தந்திரமான
சமத்துவ இந்தியா
பெயரில் மட்டும்தான்

Dec 9, 2024

சமூக வலைத்தள உறவுகள்

அகமே அகமே தனிமையினை
   ஆளத் தெரியா எனக்கென்றே
இகமே வாய்த்த தென்பதுவாய்
   இந்தச் சமூக வலைத்தளங்கள்
முகமே அறியா உறவுகளை
   முழுதும் நம்பிப் பேசுகிறேன்
திகட்டத் திகட்டப் பேசுகின்ற
   தித்திப் பான பேச்சுடையள்

அண்ணன் தம்பி என்றேயான்
  அழைத்தல் மூலம் என்னுறவைத்
திண்ண மாக உரைக்கின்றேன்
   தீமை யில்லா என்பேச்சை
வண்ண மயமாய் மாற்றுவது
   வாஞ்சை எனக்கு வேறென்ன?
எண்ணம் தூய்மை என்போக்கில்
   எந்தத் தவறும் இல்லையன்றோ?

அன்பு பாசம் அன்றாடம்
   ஆத ரிக்கும் அவர்சொற்கள்
இன்புக் கிடமாம் நிழற்படங்கள்
   எடுத்து நானும் அனுப்புவதும்
நன்று நன்றென் றவருரைக்கும்
    நயமாம் சொல்லைக் கேட்பதுவும்
துன்பம் மறக்கத் துணைநிற்கும்
    தூணாய் நின்று வழிநடத்தும்

ஆனால் இன்றோ நானவருக்(கு)
   அனுப்ப வில்லை புதுப்படத்தை
ஏனோ? பேச மறுத்துவிட்டார்
   என்மேல் அன்பைப் பொழியவில்லை
தேனாய் வந்து விழுகின்ற
   தித்திப் பான சொல்லில்லை
போனால் போதும் எனமீண்டும்
   போட்டேன் எடுத்த படத்தினையே

படத்தைப் பார்த்துப் பழையபடி
  பாசம் பொழியத் தொடங்கிவிட்டார்
அடடா என்ன நடக்கிறதோ?
   ஆர்வம் குழப்பம் எனக்கின்று
கடந்து விடவா? அவர்கொண்ட
   கருத்தும் சொல்லும் தவறென்று
தொடர்ந்து விடவா? உறவினையே
  தொல்லை ஏது மில்லையென்றே
                                   - தமிழகழ்வன்

Dec 1, 2024

பெஞ்சல் புயல் (Cyclonic storm Fengal)

இலங்கையில் நீர்பரப்பி இன்னும் போதாது
நிலைகொண்டு நிலைகொண்டு நேரிய தமிழ்நாட்டிற்
பெயல்வேண்டிப் புயலாய்ப் பெஞ்சலெனப் பேர்கொண்டு
வயனெடு வளம்பரப்பும் வான்மழை வாழியவே!
                                - தமிழகழ்வன்