Dec 26, 2010

ஏன் தோற்றுப்போனேன் நான்?

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

ஏன்தோற்றுப் போனேன்நான் என்மீ துனக்கு
     
யெள்ளளவும் விருப்பமிலை என்ப தாலோ?
'நான்மாற மாட்டேன்'என் றேநீ சொன்னாய்
      நானினைத்தேன் 'மனிதமனம் தானே மாறும்'
ஆனாலென் எண்ணமெல்லாம் தவிடு பொடியாய்
       ஆகியதுன் னொருவார்த்தை கேட்ட கணமே
ஏனென்னை நம்புகிறாய்? ஏமா றாதே!
       எனையுன்றன் நினைவினின்று நீக்கென் றாயே!

எனக்கினியும் உரிமையிலை உன்னை நினைக்க
      என்தோழி தன்கடமை நன்றாய்ச் செய்தாள்
உனக்கென்றன் மீதில்லா விருப்பம் தன்னை
      உணர்ந்துகொண்டு வுண்மையொன்று ரைத்தாள் பாரேன்
'உனக்குமந்த தைரியந்தான் வரவே யில்லை
      உடன்படித்த நண்பனைஏன் புண்ப டுத்த?'
எனநினைத்தாய் அவள்செய்தாள் நட்பின் கடமை
      எனைமிகுதிக் கண்மேற்சென் றிடித்து ரைத்தாள்

அவள்கேட்ட வம்மூன்று கேள்வி கள்தான்
      அம்பைப்போல் என்னுளத்தைத் துளைத்தெ டுக்க
தவம்போன்று வுனைநினைந்த என்றன் வாழ்க்கை
      தவறென்றும் வழிமாறும் என்று ரைக்க
அவமெனக்கு மனப்பேச்சைக் கேட்ட ழிந்தேன்
      அறிவுக்கண் திறந்தாளே! மூன்றே வார்த்தை
'கவலையே மாற்றந்து ரோகம்' என்றாள்
     முதலுனக்கு யிடையெனக்குக் கடைபி றர்க்கு

என்செய்ய? தேவதையே! முருகா! என்றேன்
      எல்லாமே இன்றமிழ்ச்சொல் விளையாட் டாக
என்பிதற்றல் இலக்கணம்பொ ருந்து கவிதை
      எனப்பதிந்தே யெனைப்பார்த்து யெள்ளி நகைக்கும்
என்னாகும்? என்செய்வாய்? என்றக் கறைதான்
      இனியார்மேல் யான்கொள்வேன் இன்னும் ஒன்று
என்னெதிர்கா லக்குறிக்கோ ளாக நிற்கும்
       ஆற்றுமொழிக் கென்னுரைப்பேன் அஃதுன் பெயரே!

எங்கிருந்தா லும்வாழ்க நன்றாய்! இனியும்
       எள்ளளவும் உனைத்துயரப் படுத்த மாட்டேன்
தங்காது யென்மனதில் உன்னைப் பற்றித்
       தான்கொண்ட எண்ணங்கள் முயற்சி செய்வேன்
தங்களுடை வாய்மொழியாம் 'நன்றி'  தன்னைத்
       தான்செலுத்தப் பெருங்கடமை அருணா வுக்கு
எங்கிருந்தா லும்வாழ்க நன்றாய்! பெண்ணே!
       எங்கிருந்தா லும்வாழ்க நன்றாய்! பெண்ணே!
                          - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

3 comments:

சரவண வடிவேல்.வே said...

இது அகநானூறா?? எந்த நூறாக இருந்தால் நமக்கு என்ன :)..

ஆனால், இதில் கூட அனைவருக்கும் புரிவது போல் கவிதை எழுத முடியும் என்று நீருபித்து வீட்டீர்கள்.

அந்த மூன்று கேள்விகள் எனக்கு புரியவில்லை!!!

அதைப்போல் "முதலுனக்கு யிடையெனக்குக் கடைபி றர்க்கு" இதற்க்கு அர்த்தம்??

சுப்பிரமணி சேகர் said...

நன்றி அண்ணே!
இது எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(சில குற்றம் குறைகள் இருந்தால் மன்னிக்கவும்)

"அந்த மூன்று கேள்விகள், முதலுனக்கு யிடையெனக்குக் கடைபிறர்க்கு."

1. ஏன் அவளைக் கவலைக்கு உள்ளாக்குகிறாய்? (கஷ்டப் படுத்துகிறாய்?)
2. ஏன் உன்னையே ஏமாற்றிக் கொள்கிறாய்?
3. ஏன் வருங்காலத் துணைவிக்குத் துரோகம் விளைவிக்கிறாய்?

முதல் - கவலை
இடை - ஏமாற்றம்
கடை - துரோகம்

இரண்டு கேள்விகளுக்கும் ஒரே விடைதான்.

"தங்களுடை வாய்மொழியாம் 'நன்றி' தன்னைத்
தான்செலுத்தப் பெருங்கடமை அருணாவுக்கு"

இதைத்தான் முதலில் கவனித்திருப்பீர் என நினத்தேன்.

சரவண வடிவேல்.வே said...

"தான்செலுத்தப் பெருங்கடமை அருணாவுக்கு" - படித்தவுடனே புரிந்துவிட்டது.. இந்தளவு கருத்தாக வேறு யாரால் பேச முடியும் :)

காதலிப்பது, வருங்கால மனைவிக்கு துரோகமா?? இது என்ன சார் புது Rules..

ஒரு பெண்ணை காதலிப்பது துரோகம் அல்ல, ஒரே பெண்ணை காதலிப்பது என்பதுதான் நமக்கு நாமே செய்துக்கொள்ளும் துரோகம்..

சும்மா ஒரு காமெடிக்கு பாஸ்..

Post a Comment