Jun 29, 2015

கணினித் தளை

நேரிசை ஆசிரியப்பா

விடிந்தும் முடிந்தும் ஓடும் பொழுது
மடிந்து போகிற தென்றன் வாழ்க்கை
கடத்தப் பட்டது கணினியில் காலம்
கடவுளே! ஏனிங் கென்னைப் படைத்தாய்?
ஈரா யிரமாண் டின்முன் அல்ல(து)
ஓரிரு நூற்றாண் டின்முன் பிறக்க
வழிசெய் திருந்தால் மகிழ்ந்திருப் பேனே!
அக்கா லத்தே வாழ்ந்தோர் தத்தம்
நற்கா லத்துச் சிந்தனை செயல்மொழி
செய்யுள் எல்லாம் என்னுளம் சேர்க்க
எத்துணை மகிழ்வை யானடை கின்றேன்
அவர்தம் கற்பனைக் குரலென் னகத்தே
தவழ்ந்திடும் போதெனை மறக்கின் றேஎன்
இந்தக் கணினி யுகத்தில் எல்லை
இல்லாத் தளைகட் குட்பட் டென்னை
இழக்கின் றேன்விடு தலைச்சிற(கு)
இல்லாப் பறவை என்ன என்னே! 

--------------------------
பொழுது போனால் 
பொழுது விடிந்தால்
கணினியின் முன்னே 
காலம் கடந்துவிடுகிறது

இறைவா! 
இப்படிப்பட்ட யுகத்தில் 
ஏன் எனக்குப்
பிறப்பு கொடுத்தாய்

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரோ
இருநூறு ஆண்டுகளுக்கு முன்னரோ
நான் பிறந்திருக்கக் கூடாதா?

காலம் கடந்தவர்தம் வாழ்வை 
எண்ணிப் பார்க்கும்போது
அவர்தம் கவிதைகளையும் வரலாறுகளையும்
கண்முன்னே 
கொண்டுவந்து நிறுத்தும்போது
என்னுள்ளம் 
எத்துணைப் பூரிப்பை எய்துகிறது

என்னுடன் அவர்கள்
நேரில் நின்று பேசுவதாகவே
எனக்குப் படுகிறது
அவர்தம் கற்பனைக் குரல்களிலேயே
என் அகத்துக்குள் பேசும்போது
நான் நானாகவே இல்லை

இந்தக் கணினி யுகத்தில்
எல்லாவற்றினுள்ளும்
கட்டுண்டவனாய்க்
காண்கிறேன் என்னை
விடுதலைச் சிறகுகள் முளைக்காத
சிறுகூட்டுப் பறவையாய்
                   - தமிழகழ்வன்

1 comment:

Post a Comment