தொடக்கமும் பாடு பொருளும் தொடுக்க
மடையுடைத்து வெள்ளம் வரும் 1
வருவெள்ளத் தாவல் வழியறியா தாயின்
பெருவெள்ளம் ஏய்த்து விடும் 2
விடாஅ முயற்சியான் வேறு படுத்தி
அடாதனசெய் வாரை அடக்கு 3
அடக்கம் புகழ்ச்சிக்(கு) அழகாம் மடக்கிக்
கடக்கப் பழகல் கலை 4
கலைகட் குயிராய்க் கருதச் செறிவாய்
நிலைக்க மனத்தால் நினை 5
நினைப்புப் பிழைப்பைக் கெடுக்குமாம் என்ற
நினைப்பை நிலைகுலையச் செய் 6
செய்கை சரியில்லை சேர்க்கை சரியில்லை
வைவாய் வழுத்தட்டும் வாழ் 7
வாழ்வு முறையினை மாற்றி யமைத்தற்குப்
பாழ்வாய்ப் பழக்கங்கள் போக்கு 8
போக்கும் பொழுதெலாம் போதும் இனித்தொலை
நோக்கிப்பார் நோக்கா தன 9
நோக்கம் இலாத நொடிக்கும் அதனாற்சீர்
தூக்கி உயரம் தொடு 10
No comments:
Post a Comment