Feb 17, 2015

சசிகுமார் (பிறந்தநாள் வாழ்த்து)

தரவு கொச்சகக் கலிப்பா

திவ்விய நெஞ்சத்தான் திறன்கோடல் அஞ்சத்தான்
செவ்விய தைபூத்தான் சேர்ந்துடன் ஐபார்த்தான்
பவ்வம்போல் சுற்றந்தான் போற்றுநற் சொற்றந்தான்
இவ்வையம் வாழத்தான் இயற்றுவஞ்சீர் ஆழத்தான்
                    - தமிழகழ்வன்

Jan 12, 2015

இரண்டறக் கலந்த உயக்கம் (வஞ்சித்துறை)

உள்ளத்துறை எண்ணத்தே
உறைகின்றனை திண்ணந்தேன்
உன்சொல்மதுக் கிண்ணந்தான்
அவ்வூற்றினும் அன்னம்ஏன்?                             1

ஏனோவெனக் கிம்மயக்கம்
இயக்கந்தொலைத் தேகலக்கம்
என்னைப்படுத் துந்தயக்கம்
இரண்டில்கலந் திவ்வுயக்கம்                             2

விருப்பந்தொலைத் துய்வதினும்
விருப்பங்கொளத் தைத்தற்கென்?
இருத்துன்மனத் தொய்வின்றிக்
குருத்தொன்றிணை கைவென்றி                     3
                      - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

வாண்டும் ஆண்டும் - வாழ்த்து

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

இவ்வாண்டை அவ்வாண்டி  ரண்டாண் டின்முன் 
      இனியதொரு சமுகவலைத் தளத்தில் கண்டே
இவ்வாறு ழகரத்தைத் தவறாய்க் கொண்டு 
      இன்தமிழுக் கிழுக்குண்டாக் காதிர் என்று
செவ்வாயால் அறிவுறுத்தி  உண்மை அறிந்து  
      செந்தமிழால் பாராட்டிச் சென்றார் பின்னே
பவ்வம்போல் விரிதளத்தில் பார்த்து மீண்டும் 
      பழையகதை நினைவுறுத்தி மகிழ்ந்து நின்றோம்.

செவ்வனசெய் இன்தமிழாள்!  தமிழைப் பற்றிச்
      சிந்திக்கும் நெஞ்சத்தாள்!  மரபு மீது
திவ்வியம்கொள்  திருத்தகையாள்! பண்ணி சைக்கும்
      திறமுள்ள இன்னாவாள்! இன்னா இரிக்கும்
இவ்வானும் இம்மண்ணும் எல்லை இல்லா 
      எல்லாவற் றிலும்உயர்ந்த இறைவன் அருளால் 
இவ்வாண்டு யான்பெற்ற அன்புத் தோழி!
      எந்நாளும் பேரின்பம் பெற்று வாழி!
                    - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

தேவதை (பண்ணத்தி)

அழகுச்சிலை என் அருகில் வந்ததே!
பழகுதமிழ்ப் பார்வையைப் பகர்ந்ததே!

அவளோ ஓர் இளந்தென்றல்
நெஞ்சில் ஒரு களங்கண்டாள்
களர்நிலம் கலைமிகு விளைநிலம்
வித்துதான் வியப்புகொள் முத்துதான்

அவள்தான் உலகில் தேவதை
அவள்தன் கண்களின் நேரலை
காணாமல் போனது கவின்நிலா 
நாணாமல் போகுமோ? கவிழ்நிலா

பேசிய ஒரு மொழிப் புன்னகை மின்னலில் 
உதடுகள் தாமரை வேண்டுமோ இனிமறை?
காதலோ? காதலோ? கண்களில் மோதலோ?
தாகந்தான் நெஞ்சிலே! தவிப்புகள் உதட்டிலே!
                        - தமிழகழ்வன்

ஆசையா? ஆசுவா?

நிலைமண்டில ஆசிரியப்பா

நெஞ்சமே நெஞ்சமே நினைவுகள் கொஞ்சமே
ஆசைகள் தஞ்சமே ஆழ்மனம் பொங்குமே!
கனவிலே காண்பது கருத்தினில் கலந்தது
வாய்ப்புகள் என்பன வாய்ப்பதே இல்லையோ?
ஏங்கும் என் எண்ணங்கள் எனக்குள்ளே புதைந்தன
தாங்குமோ ஆழ்மனம் தூண்டுமே மேல்மனம்
என்மனம் இங்ஙனம் எழுத்திலே உதிர்ந்ததும்
இலகிடும் சிறிதுநாள் இன்னிசைப் பொன்மனம்
ஆசைகள் வேண்டுமோ? ஆசுதான் நீங்குமோ?
மாசுகள் என்பன மனதுதான் அறியுமோ?
புண்படும் எளிதிலே புற்றனம் புரைமனம்
பண்படும் என்றுதான்? பகுத்தறி வூட்டியே!
                      - தமிழகழ்வன்

நலம்பெறுவை

நேரிசை ஆசிரியப்பா

நீயென் சொலினு மென்னுள மேற்கா
தேயென் செய்வன் தேய்ந்தன னுள்ளம்
எங்ஙன மிங்ஙன மேது மறியா
திங்குளங் கொண்டன னுளங்கொண் டனனே
உளம்மறுத் தனையஃ துளமறுத் திடுவனோ
உளனினி யும்மென உளமுரைத் திடுவனோ
நலம்பெறு வைநலம் பெறுவை
குலமினி தோங்கிட குவலயம் வாழ்குவை

              - தமிழகழ்வன்

பிரீத்திஶ்ரீ (,பிறந்தநாள் வாழ்த்து)

தரவு கொச்சகக் கலிப்பா

எலியாய வெழிற்கிளியே! எந்நாளு மின்பமொடு
தலையாய கீர்த்தியுஞ் செம்மாந்த வுள்ளமுங்
கலையாய செல்வமுங் கனியான சுற்றமும்
வலையாய நட்புடனும் வாழியவே! வாழியவே!
                                  - தமிழகழ்வன்

Dec 17, 2014

தீவிரவாதம் ஒழிக

நிலைமண்டில ஆசிரியப்பா

என்னதான் வேண்டுமென ஏதுமொரு தெளிவுமின்றிச்
சொன்னதனைச் செய்கின்ற சுயபுத்தி யில்லாத
பேரறிவுக் கொழுந்துகளே! பெருந்தீமை புரிந்திட்டீர்!
ஆறறிவு உமக்கிருந்தால் ஆரவரென் றெண்ணியுளம்
பேதமிலா தொற்றுமையைப் பேணியுளங் குளிர்ந்திருப்பீர்!
பேதைகளாய் வாழ்ந்தோடி அரக்ககுணப் போதையிலே
மேதைகளாய் விளங்குயிரைப் போக்கிவிட்டீர்! போக்கிடமும்
இல்லாத புறம்போக்குப் போக்கிரிகாள் செத்தொழிவீர்
பொல்லாத உன்குழுமம் நில்லாமல் போகட்டும்
ஆருயிரை வதைப்பதற்கு ஆருரிமை தந்ததுமக்
கீதெனுளம் ஈதென்னூர் இஃதென்றன் நாடுலகம்
யாதொன்றும் அறியீரோ? ஏன்பிறப்பு பெற்றீர்கள்?
போகுவழி தவறென்று போதிக்க வில்லையுமைப்
பெற்றெடுத்துப் பேதைகளாய் ஆனாரே அவர்க்கென்ன
பெற்றுக்கொ டுத்தீஇர் பெருந்தீமை வடிவெய்தி!
புற்றுக்கி ரையாவீர் நற்சாவே வாராது!
                         - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

Oct 10, 2014

வெண்பாவாய்ப் பட்டேன்

நேரிசை வெண்பா

நெஞ்சமெலாம் நீயே நிறைந்திருக்க வேறேதுங்
கொஞ்சமேனு மச்சிந்தைக் கெட்டாதே - தஞ்சமடைந்
திட்டேனென் னாழ்மனத்தி னெண்ணமே வெண்பாவாய்ப்
பட்டேனென் னேயென்னே பண்

                                 - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

நெஞ்சமெல்லாம் நீயே நிறைந்திருக்க வேறு ஏதும் கொஞ்சமேனும் அச்சிந்தைக்கு எட்டாதே! தஞ்சம் அடைந்திட்டேன் என் ஆழ்மனத்தின் எண்ணமே! வெண்பாவாய்ப் பட்டேன் என்னே என்னே பண்!

       என்னவளே! என் நெஞ்சமெல்லாம் நீயே நிறைந்திருக்கிறாய், ஆதலால் வேறு எதைப்பற்றியும் சிறிதளவுகூட சிந்திக்க முடியாமல் தவிக்கும் என் மேலோட்ட மனம், என் ஆழ்மனத்தில் புதைந்த உன்னைப்பற்றிய எண்ணங்களிடம் தோற்றுப்போய்த் தஞ்சம் அடைந்துவிட்டது.
      இக்கருத்தைக் கொண்ட என்மனம், இயல்பான உரைநடையில் இதை எடுத்துரைக்கத்தான் முதலில் எண்ணியது. ஆனால், போகிற போக்கில், அஃது அக்கருத்தை நல்ல கட்டமைந்த தளைகளால் உண்டாகும் வெண்பாவின் வடிவிலே உருவாக்கிவிட்டது. அந்த வெண்பாவாகிய பாடலின் அருமையை எண்ணி வியக்கிறேன்.

உடைந்த உளத்தன்

கலிவிருத்தம்

உடைய வுடனிலா(து) உடைந்த வுளத்த!தே(டு)
உடையன் அடிமனத்(து) உறைய மறைக்குமா?
கொடைய ளித்தெனத் தங்கை தன்னுரை
கடைப்பி டிப்பனோ? காண்பன் காண்பனே!

                             - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்