Mar 15, 2016

ஒற்றிலா வெண்பா

நேரிசை வெண்பா 

திகடி கடலை தெளிய ருடனா
லகடு முகடு மறியா - வகட
விகட கவித மிதனை யெழுத
வகட கவித மது.
                                 - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர் 

பிரித்தறிய:

திகழ் திகழ் தலை தெளி யருள் தன்னால் அகடும் முகடும் அறியா அகட 
இகழ்தக விதம் இதனை எழுத அகழ்தக விதம்  அது.

Mar 6, 2016

ஆசானைப் போற்றுவோம்

நேரிசை வெண்பா 

தருவாய்த் தரும்வாய்; தகுதமிழ்த் தேனீ
தருக்கள் பலவாய்த் தழைக்கக் - கருவாய் 
வரந்தரும்  ஆசான் வரத இராசர் 
மரபினைப் போற்றும் வழி 
                             - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்
------------------
தகுந்த தமிழ்த்தேனைத் தரும் மரங்களைப் பலவாறாகத் தழைக்கச் செய்யும் ஆதியாக வரம் தரும் ஆசான் வரதராசனார் மரபினைப் போற்றும் வழியில் மரத்தைப் போலத் தம்வாய்மொழியால் தமிழ் தருவோம்.
ஈ தருக்கள் - வினைத்தொகை.
-----------------
மரத்தைப் போலத் தன் வாய்மொழியால் தமிழைத் தருவார்;
தகுந்த தமிழ்த் தேனீ;
மரங்கள் பலவாய்த் தழைக்கப் பேருதவி புரியும் ஆதியாக வரம் தரும் ஆசான் 
மரபு கவிதையைப் போற்றிப் பாதுகாக்கும் வழியை அமைத்துக் கொடுப்பவர்

Feb 14, 2016

இசைத்தமிழ்க் கவிதை

தரவு கொச்சகக் கலிப்பா

கவிதைநதி கட்டற்றுக் கானகமெல் லாமோடிப்
புவிதனிலே புனிதருக்குள் புன்னகையைச் சேர்த்திடுமே!
செவியதற்கோர் இன்பூற்றுச் செழுமையினால் இசைத்தமிழை
நவில்நாவின் பெருமையினை நான்பாடி நாடுவனே!
                           - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

மடலேறல்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

காய் மா மா காய் மா மா

மடலேறுந் தேவைக்(கு) ஆக்கி 
        மனமேறு மாம டந்தாய்!
இடரூட வென்னை விட்டிங்(கு) 
       "ஈடல்லள் என்னை விடுக"
தடமேற உன்றன் சொற்கள் 
       தடுமாற்றத் தென்றன் கொள்கை 
மடமேற யான ழிந்தேன் 
        வாய்க்காதான் வாய்க்கால் தானே!
                         -  தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

சச்சிதானந்தத்தை மனத்தில் கொள்

முற்று முடுகு, ஒருவிகற்ப நேரிசை வெண்பா

கொத்துதித்துக் கொத்துதித்துக் கொத்துபித்தத் தத்தகத்துத்
துத்ததத்துக் கொத்துகுக்கத் துத்துகுத்துச் - சத்தகத்துத்
தத்தகத்துச் சுத்தசித்துத் தத்திதத்துச் சச்சிதத்துப்
புத்தகத்துக் கத்துதொத்திப் பொத்து.
---------------------------
பிரித்தறிய :
கொத்து உதித்துக் கொத்து உதித்துக் கொத்து பித்தத் தத்து அகத்துத் 
துத்து அதத்துக் கொத்து உகுக்கத் துத்து உகுத்துச் சத்து அகத்துத் 
தத்து அகத்துச் சுத்த சித்துத் தத்து இதத்துச் சச்சிதத்துப் 
புத்தகத்துக்கு அத்து தொத்திப் பொத்து.
---------------------------
பொருள் :
கொத்து உதித்துக் கொத்து உதித்து - கொத்துக் கொத்தாக உதித்து

கொத்து பித்தத் தத்து அகத்து - கொத்துகின்ற (தீமையை உண்டாக்கும்) பைத்தியம் நிறைந்த மனத்தே

துத்து அதத்து - வஞ்சம், பொய்மையின்கண் உண்டாக்கும் அழிவை

கொத்து உகுக்க - முழுமையாக அழியுமாறு

துத்து உகுத்து - அத்தீய குணங்களை அழித்து

சத்து அகத்துத் தத்து - மனத்தில் வலிமை நிறையுமாறு வந்து நிறையும்

(அகத்து - மனத்தில்)

சுத்த சித்துத் தத்து இதத்துச் சச்சிதத்து - தூய்மையே வடிவான சச்சிதானந்ததின்

புத்தகத்துக்கு அத்து தொத்திப் பொத்து - புதுமையான உள்ளத்தின் கரையைக் கண்டு, (மனத்தில்) கொள்வாயாக.
---------------------------
இலக்கணக் குறிப்பு :

கொத்து பித்தம், தத்து அகம், தத்து இதம் - வினைத்தொகை

துத்து உகு, அத்து தொத்தி - இரண்டாம் வேற்றுமைத் தொகை

சுத்த - பெயரெச்சம்

புத்தகம் - பண்புத்தொகை

தொத்தி - வினையெச்சம்.
---------------------------

Feb 12, 2016

தமிழ்க்கோள்


தரவு கொச்சகக் கலிப்பா

வஞ்சியவள் உணராத வாஞ்சையினால் உறவாகா
நெஞ்சுதனி யாய்நின்று நேர்வதனைத் தணிக்காது

துஞ்சிடுதல் தனைத்தடுத்துத் தூவாஅம் எக்கோள்கொல்?
செஞ்சொல்லில் தேற்றுதலைச் சேர்தமிழ்க்கோள் கொள்நெஞ்சே!
                                         - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

என்னாம் யானிங்கு இருந்தினியே?

வஞ்சி விருத்தம்

நின்றாய் நில்லா நிலையின்று
சென்றா யுள்ளஞ் சீர்குலையக்
கொன்றா யன்பே! கொள்ளாமல்
என்னா மியானிங் கிருந்தினியே?
           - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

Jan 21, 2016

போற்றப்பட வேண்டியது - தாய்மை

(தமிழ் வாழ்த்து)
மாறாத பேரின்பம் மனஞ்சேர வெனையாளும்
ஆறாகப் பேரருவித் தேராகத் தேருள்ளப்
பேறாகப் பாவலர்தம் பாவாக நாவாகக்
கூறாக வுயிர்தன்னுள் குடிகொள்ளும் தமிழ்வாழி!

(அவையடக்கம், தலைமைக்கு வாழ்த்து)
கற்றபெ ருந்தகை! முற்றுமு ணர்ந்திடு
நற்றவஞ் சேர்கவி! நற்றுணை யாகுக! 
சிற்றறி வுள்ளவன் குற்றங்கள் பொறுத்துயர்
கற்றலு ரந்தருங் கவிஞரே! வாழிய!

அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா
(தரவு)
ஆற்றலுளங் கொள்ளவரும் ஆதரவாய் அங்கிருந்தே
ஏற்றவொரு தெளிவினையும் எண்ணத்தே விதைத்துயிர்த்தே
ஆற்றுதலுக் குரியதொரு ஆற்றலையும் அதுதளர்ந்தால்
ஆற்றுதலும் அந்தவுளம் அடைந்ததுயர் அனைத்தினையும் 
ஊற்றெனமுன் வந்துதவும் உயர்பண்பால் மேலோங்கி
போற்றுதலுக் குரித்தான பொன்மனங்கொள் தாயவளே!

(தாழிசை)
கருசுமந்து கருதாத கருத்தெல்லாம் மிகச்சுமந்து
பெருதுயர்ம றந்துபெறும் பிஞ்சுள்ளக் கொஞ்சலுக்காய்
ஒருபத்துத் திங்கடவத்(து) உழன்றுதரந் தொட்டுமகிழ்ந்(து)
உருவாக்கும் பெரும்பிறவி உயர்தாய்க்கோர் உவமையிலை

பிள்ளைதனக் காகவந்தப் பிறைநிலவைப் புவிக்கிழுத்துத்
தெள்ளமுதந் தனையூட்டித் தென்றலெனச் சீராட்டிக்
கொள்ளமனம் அருங்கதைகள் கூறிநலம் பேணியுல(கு)
உள்ளதென வாழ்கின்ற உயர்தாய்க்கோர் உவமையிலை

தன்னலத்தைக் கருதாத தன்னிகரில் தனிப்பிறவி!
தன்மகவே உலகமெனத் தாங்கியுளம் மிகமகிழ்ந்து
தன்னிறைவு பெறுகின்ற தவவாழ்க்கைக்(கு) அணிகலனாய்த்
தன்னன்பைப் பொழிகின்ற தாய்தனக்கோர் உவமையிலை

(நாற்சீரடி இரண்டு அம்போதரங்கம்)
யாதொரு துயரும் எனைநெருங் காமல்
காதலி னால்பொழி கனியுளங் கொண்டவள்;
ஆதர வாக அணைத்துக் காத்துச்
சாதனைச் சிகரம் தொட்டிடச் செய்பவள் 

(நாற்சீர் ஓரடி நான்கு அம்போதரங்கம்)
மழலை மொழிதனில் மற்றவை மறப்பவள்;
மழலை மொழிக்கே மற்றவை துறப்பவள்;
நிழலாய் நிதமும் நின்று காப்பவள்;
நிழலை உண்மை நிலைக்குநேர் விப்பவள்

(முச்சீர் ஓரடி நான்கு அம்போதரங்கம்)
பொறுமையின் சிகரம் தாய்;
புனிதத்தின் உறைவிடம் தாய்;
திறமையின் பிறப்பிடம் தாய்;
திகழ்குணம் தருபவள் தாய்

(இருசீர் ஓரடி எட்டு அம்போதரங்கம்)
அன்பும் அவள்;
பண்பும் அவள்;
இன்பும் அவள்;
நண்பும் அவள்;
உலகும் அவள்;
உயிரும் அவள்;
கலையும் அவள்;
கவினும் அவள்

(தனிச்சொல்)
ஆதலின்,

(சுரிதகம்)
போற்றத் தகுந்த புனித குணம்;பெறும்
பேற்றில் பெருமைப் பேறது; பொறுமை;
தன்னல மில்லாத் தவமும் அன்புங்கொள்
தாய்மைக் குணத்தைப் போற்றித்
தாய்மன முணர்ந்து தொண்டுசெய் வோமே!
                     - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

முகநூல் குழுமம் - "பைந்தமிழ்ச் சோலை" நடத்திய கவியரங்கத்தில் பங்கேற்க எழுதிய பாடல் 

Jan 12, 2016

எம் தங்கச்சியே! எம் தம் கச்சி யேகம்ப!

கலிவிருத்தம் 

எந்தங் கச்சியே கம்ப வமுதச் 
சந்தம் பருகுயர் ஞானத் தமிழ்ச்சம் 
பந்தம் பெறுகுவாய் மகிழ்வா மஃதே

எந்த வொன்றும னதனுக் கிணையோ?
                - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

கைக்கிளை

குறளடி வஞ்சிப்பா

உரையாதுறை பெருங்காதலும்
நிலையாநிலை யிருகால்களும் 
வருத்தந்தனைப் பெருக்கஞ்செயும்
பொருத்தங்கொள வுறக்கந்தொலைத்
தினியாதிய துயராகிடும்
நிலையொடு
வாழ்ந்தி ருக்கும் மனனே
தாழ்ந்தி ராதே தனிச்சுகந் தானே!
     - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்