May 1, 2012

தூக்கத்தில் எழுப்பிக் கேள்வி கேட்டாலும் பதில் சொல்லணும்

என் அலைபேசி மதுர கானத்தை (இப்படிச் சொன்னால்தான் இனிக்குமோ?) எழுப்பி, என் தூக்கத்தைக் கெடுத்தது. தட்டுத் தடுமாறி அலைபேசியைக் கண்டுபிடித்து, அழைப்பை ஏற்றேன். அழைப்பில் அலுவலகத் தோழி.

"சுப்பிரமணி, தூங்கிட்டு இருக்கிங்களா...?"

இந்த வாரம் எனக்கு இரவுப்பணி முறை. முடித்துவிட்டுப் பகலில் நன்றாய்த் தூங்கிக் கொண்டிருந்தேன். அதனால் இது வழக்கமான கேள்வியாகிப் போய்விட்டது.

"இல்ல பா...! முழிச்சுட்டேன் சொல்லுங்க..." வழக்கமான பதில்தான்.

"அந்த முரணாய் உருவான (junk) தகவலை வழங்கியிலிருந்து (server) அழிக்கச் (delete) சொல்லி விட்டார்கள். ஆனால் அதைப் பட்டியலிட (list) முடியவில்லை. எப்படி எடுப்பது? கட்டளையை (command) எப்படிப் பயன்படுத்துவது? வழக்கமான கட்டளையைக் கொடுத்தால், தகவல் (data) வரமாட்டேங்குது. 'பொருள் அல்லது தகவல்' (object) காணவில்லை என்று பிழை சுட்டப்படுகிறது."

"அந்த முரண் தகவல் அப்படி அப்பாவித்தனமாய் நிரலியால் (program) உருவாக்கப்பட்டிருக்கிறது. அதனால், அதன் முழுப்பெயரையும் கட்டளைக்குள் பயன்படுத்தித் தகவலை எடுங்கப்பா..."

என் தோழிக்கும் எப்படிக் கட்டளையைப் பயன்படுத்துவது என்று தெரியும். ஆனால் அந்த முரண் தகவலைக் காண்பவர் சற்றுக் குழப்பமடைவர். இப்படி ஒரு முரண் தகவல் உருவாகி இருக்கிறது என்று அடையாளம் கண்டு, அதை எங்களது மேலதிகாரிகளுக்கு அறிவித்து இருந்தேன். அந்த முரண் தகவல் ஏன் உருவானது என்ற ஆய்வுக்குப் பின், அதனை அழிப்பதற்கான ஒப்புதல் (approval) இன்றுதான் கிடைத்தது. அந்த முரண் தகவலை எப்படிப் பட்டியலிடுவது என்பது எனக்குத் தெரிந்திருந்ததால் என்னை அழைத்தாள் தோழி.

மணி நண்பகல் 12:36. அலைபேசி அழைப்பைத் துண்டித்துவிட்டு அப்படியே படுத்திருந்தேன். அப்போதுதான் தோன்றியது. நாம் பள்ளியில் படிக்கும்போது, ஆசிரியர்களில் சிலர், 'தூக்கத்தில் எழுப்பிக் கேள்வி கேட்டாலும் பதில் சொல்லணும்'னு சொல்லி சொல்லி அடிப்பாங்களே... அது இப்போதுதான் பயன்பட்டு இருக்கிறது...

சரி, எழுந்து பண்டிக்குச் சிறிது உண்டி கொடுத்து, அப்படியே இந்தத் தகவலையே வலையத்தில் ஏற்றிவிட்டு உறங்குவோம்.

நான்காம் வேற்றுமைத்தொகை - தமிழ் கூற்று

நிறைவில்லாமை

மறந்து விட்டவையும், தொலைந்து விட்டவையும் சிறுபான்மையாய் இருக்கும்போது கவிஞனின் உள்ளமும் நிறைவில்லாமல் தேற்றிக் கொள்கிறது.

காவிரி ஆறும் கைக்குத்தல் அரிசியும் மறந்து போகுமா?
தாவணிப் பெண்களும் தூதுவிடும் கண்களும் தொலைந்து போகுமா?...

வெளிநாட்டிலிருந்து வரும் தலைவனுக்குத் தமிழ்நாட்டின் ஏக்கங்கள் எனச் சொன்னாலும், சொல்லப்பட்டவை சிறுபான்மை நிலைக்குத் தள்ளப்பட்டவை.

'முழுதும் ஆளப் பிறந்தவன்; தனக்கு மீறிய சக்தி இல்லை; தான் எண்ணுவதே நடக்க வேண்டும்'. இப்படிப்பட்ட தன்னம்பிக்கை போய்விட்ட காலம். 'கடைசிச் சொட்டுக் குருதி உள்ளவரை போராடுவேன்; கடைசி மாத்திரை நேரம் வரை முயற்சியைக் கைவிட மாட்டேன்' என்ற நிலைக்கு ஆளாக வேண்டியிருக்கும் அளவுக்குக் காலம் மாறிவிட்டது.


இசைநன்று - ஔவை கூற்று

இது பற்றிப் பாயும் பாமாலை
செவிச் சேர்த்து செல்லும் காதலை
தீண்டும் நெஞ்சில் சாரலை
தீண்டாதோ மின்னலை
தேடும் தென்றலை

இயைபுத்தொடையத் தேடும் முயற்சியில் இயைபு மறந்துபோய், போதும் இது இக்காலத்திற்கு என்றாகிவிடும் நிலை.


மறைதமிழ் - வினைத்தொகை

முன்னமே வடமொழிக்கலப்பால் எது தமிழ், எது வடமொழி என்று பிரித்தறிய இயலாத நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டோம். வடமொழி கலந்த தமிழில் பேசுவதும், பாடுவதும் பெருமையாக எண்ணப்பட்ட காலங்களும் உண்டு. (இவ்வரிகளில் கூட தமிழ்ச்சொற்கள் எத்தனையோ? தமிழுக்கு மட்டுமே தெரியும்).

ப்ரபுட தேவ மாராஜர் உளமு மாட வாழ்தேவர் பெருமாளே!

என்ற அருணகிரியார் காலமாயினும் சரி,

வதனமே சந்திர பிம்பமோ? மலர்ந்த சரோஜமோ?
மாறன் அம்போ? நீள் விழியோ? மதுர கானமோ?

என்ற எம்.கே.தியாகராஜ பாகவதர் காலமாயினும் சரி.

இப்போது இன்னும் ஒருபடி மேலேறி, தமிங்கிலம் (தங்லிஷ்) என்னும் கொடுமை

'Why this கொலவெறி'

Mar 30, 2012

பிறந்த நாணல் வாழ்த்து

பொற்றாமரை நிற்றாமரைப்
பொழிலோவியம் எழிற்காவியம்
நற்பேருளம் உற்றாயுனைக்
கற்றார்கவிப் பொற்கோவிறை
உற்றேநலம் பெற்றேயுயர்
செஞ்சொற்றிறம் கொஞ்சுந்தனி
அஞ்சேலென நெஞ்சுக்குரை
பல்லாண்டிவண் நல்லாசியோ
டெல்லாமுறு நல்லாயிவள்
எனவாங்குப்
பிறந்த நாணல் வாழ்த்து
சிறந்த குறளடி வஞ்சி வாழ்த்தே!

Mar 27, 2012

கார்த்திகேயன் DBA

தேமலர் பொழியொளிக் கார்த்திகை வாழ்த்தொடு
தாமரை உந்தியில் தாங்கியார் உளம்நிறை
மாமனி தன்னென மாநிலம் போற்றிட
யாமுள நிறைவொடு வாழ்த்துவம் இந்நாள்!


நாற்றிசையும் நாற்றிசையை நாற்றி சைந்து
       நலம்பரப்பும் வளம்நிறைக்கும் இனிய வாழ்க்கை
போற்றுரையே! போற்றுரையைப் போற்று கின்றேன்
      பேறுபதி னாறுமெனும் பெற்று வாழ்க!
காற்றிகையும் கார்த்திகையன் காணும் முன்பே
      கடந்தோடும் பெயர்கேட்டே நீடு வாழ்க!
ஆற்றுமொழி காட்டுவிழி அனைத்து மிங்கே
     அதிநுட்பம் காட்டுவழி யாகும் வாழ்க!

Feb 27, 2012

மார்கழி

பாரெங்கும் பனிமூட்டமாய்ப்
பச்சைப் பசுமையாய்ப்
பகலவன் வரக் காத்திருக்கத்

துயில்கலையும் விண்மீன்கள்
துள்ளி எழுந்து ஒளிவீசித்
துன்பம் விலக்குதல் போல்

உயர்ந்த எண்ணங்கள்
உள்ளத்தில் ஊற
உயர்குரம்பில் தடம்பதித்துச்

செல்லும்போது அங்குச்
செழித்தோங்கு உயர்பனையைச்
சிறுபுல் நுனிப்பனி காட்ட

உயர்வும் தாழ்வும்
உலகில் எங்குளது?
உளத்திலே உளது...
உளத்தால் ஒன்றுபட்டு
உயர்செய்கை செய்வோம்

தோப்பிலே சிறுகுருவி
திந்தியுந் தொந்தன
தீந்தமிழ்ப் பாட

எங்கேயுளது என
எட்டும் தூரம்வரை
இருவிழிகளால்

துழாவியே விடிந்த பொழுது
தூய்மைச் சூழலை
நினனவுக்குக் கொண்டுவர
துளிப்பனியாய்த் தலைநனைக்கத்
துன்பமெலாம் பறந்தோடி
துவாரக புரி வரதனைத்
தொழுது செல்லும்
நாரா யணனே
நமக்கே பறைதருவான்
தேன்றமிழிசைச் செவியேறித்
தானும் தனதடி நகர்த்தி
ஆவலில் அகிலம் மறந்தேன்...

Jan 11, 2012

கடல், கல்வி

ஆம்... சொல்லு பா...!

சுப்பிரமணி, கவிதை வேணுமாம்.. கல்வி, கடல்-ங்கற தலைப்புல.

ஆ... (அதிர்ச்சி..), எப்ப வேணுமாம்.

இப்பவே வேணும், நாளைக்குப் பள்ளிக்கூடத்துல கவிதைப் போட்டியாம்.
எட்டு வரியில வேணுமாம்.

மரபுக்கவிதையா? புதுக்கவிதையா?

சின்ன புள்ள கேட்குது, பத்தாவது தான் படிக்குது. எதோ புரிய மாதிரி எழுதிக் கொடுப்பா...

சரி எழுதிட்டு கால்(call) பண்றேன்.

ஓகே பா... பை.

வீட்டில் வேறு ஒரு பிரச்சினை பற்றிய பேச்சு ஓடிக்கொண்டிருக்க, அரைகுறை மனத்தோடு சிந்திக்கத் தொடங்கினேன்.

கல்வி

உள்ளம் உயர்வுபட
உலகம் விரலில்விழக்
கொள்ளும் செயல்யாவும்
குறைவு ஏதுமின்றித்
திறமை வெளிக்கொணர்ந்து
திண்மை உழைப்புயர்ந்து
சிறப்புப் பெற்றிடுதல்
சீர்மைக் கல்வியினால்
ஒருங்கமை மனம்பெறுதல்
உயர்ந்த கல்வியினால்.


கடல்

நிலவளம் நன்மைபெற
நீலவளம் தரும்கொடையே
கலைவளம் கவினுறவே
கணக்கரிய பொருளீவாய்

விண்ணீர் விரைந்துவந்து
மண்ணீர் எனமாறும்
ஓயாத சுழற்சிக்கு
உயரா தாரம்நீ

இயலும் இவ்வுலகில்
எவ்வகை விளைவுக்கும்
ஏது என்னென்றால்
அழகிய கடல்நீதான்

உன்னுள் உள்ளவை
எண்ணவும் கணக்கரிது
உன்னுள் உறைந்தவையால்
உள்ளமும் கனத்துரிது.

Jan 3, 2012

உயிரினமும் உயிரில்லினமும்

மனிதன் என்பவன் யாவன்? மனிதம் என்பது யாது?
உயிரினமாகவும் உயிரில்லினமாகவும் கருதுவதற்கான ஏது எது?

வெவ்வேறு பண்புகளைக் கொண்ட ஒவ்வொரு பொருளும் தனிமமாகவோ அல்லது சேர்ந்த ஒரு மூலக்கூறாகவோ இணைந்து, ஏற்பட்ட பொருட்கள், வெவ்வேறு நிலைகளின்கீழ் வெவ்வேறு மாற்றங்கள் பெற்ற, ஒரு பொருளாய் உருவாவதுதான் உயிரினமும் உயிரில்லினமும்.

இயற்கையின் பார்வையில் மனிதனும் ஒரு வேதிப்பொருள்தான். அஃதாவது உயிரில்லினம். மனிதனின் பார்வையில், மற்றப் பொருட்களின்றும் மிகவும் வேறுபட்டு, மிகவும் உயர்ந்துள்ளதோர் உயிரினம்.

யார் கண்டார்? இயந்திர மனிதர்களை உருவாக்கத் தெரிந்த மனிதனுக்கு, இயற்கை மனிதர்களைச் செயற்கையாய் உருவாக்கத் தெரியாமலா போய்விடும்? இங்கு நான் குறிப்பிடுவது, அடிப்படை மூலக்கூறாகிய ஒரு 'செல்'லிலிருந்து, உயிரினம் தோற்றுவிக்கப்படும் முறையன்று; முற்றிலும் வேதி மூலக்கூறுகளை எவ்வெவ்வளவு தேவையோ அவ்வவ்வளவில் அமைத்து, முற்றிலும் செயற்கையாய் உயிரினம் தோற்றுவிக்கப்படும் முறையை.  இங்ஙனம் உருவாக்கிய பின், ஆயுட்காலங்களையும் நியமிக்கலாம்.