அகமே அகமே தனிமையினை
ஆளத் தெரியா எனக்கென்றே
இகமே வாய்த்த தென்பதுவாய்
இந்தச் சமூக வலைத்தளங்கள்
முகமே அறியா உறவுகளை
முழுதும் நம்பிப் பேசுகிறேன்
திகட்டத் திகட்டப் பேசுகின்ற
தித்திப் பான பேச்சுடையள்
அண்ணன் தம்பி என்றேயான்
அழைத்தல் மூலம் என்னுறவைத்
திண்ண மாக உரைக்கின்றேன்
தீமை யில்லா என்பேச்சை
வண்ண மயமாய் மாற்றுவது
வாஞ்சை எனக்கு வேறென்ன?
எண்ணம் தூய்மை என்போக்கில்
எந்தத் தவறும் இல்லையன்றோ?
அன்பு பாசம் அன்றாடம்
ஆத ரிக்கும் அவர்சொற்கள்
இன்புக் கிடமாம் நிழற்படங்கள்
எடுத்து நானும் அனுப்புவதும்
நன்று நன்றென் றவருரைக்கும்
நயமாம் சொல்லைக் கேட்பதுவும்
துன்பம் மறக்கத் துணைநிற்கும்
தூணாய் நின்று வழிநடத்தும்
ஆனால் இன்றோ நானவருக்(கு)
அனுப்ப வில்லை புதுப்படத்தை
ஏனோ? பேச மறுத்துவிட்டார்
என்மேல் அன்பைப் பொழியவில்லை
தேனாய் வந்து விழுகின்ற
தித்திப் பான சொல்லில்லை
போனால் போதும் எனமீண்டும்
போட்டேன் எடுத்த படத்தினையே
படத்தைப் பார்த்துப் பழையபடி
பாசம் பொழியத் தொடங்கிவிட்டார்
அடடா என்ன நடக்கிறதோ?
ஆர்வம் குழப்பம் எனக்கின்று
கடந்து விடவா? அவர்கொண்ட
கருத்தும் சொல்லும் தவறென்று
தொடர்ந்து விடவா? உறவினையே
தொல்லை ஏது மில்லையென்றே
- தமிழகழ்வன்