Feb 23, 2023

தமிழே!

மஞ்சள் குளிப்பாட்டி மையிட்டு முப்பாலும்
மிஞ்சப் புகட்ட மிகவளர்ந்தாய் - மஞ்சரையே
கொஞ்சிப் புகட்டுவோம் கொண்டாடிக் கொண்டாடி
நெஞ்சம் புகட்டுவோம் நீடு

Feb 19, 2023

தேவைப்படும்போது...

தேவைப் படும்போது தேடுவாய்! நீபிறர்க்குத்
தேவைப் படும்போது தேடப் படுவாய்!
உலகத்(து) இயக்கம் இதுவே இதுவே
பலகற்(று) அறிந்து பழக்கு

Jan 30, 2023

நேயக்காரி

நெஞ்சைப் பிழியும் நேயக் காரியே
மஞ்சள் பூசிய மாயக் காரியே

செஞ்சவளே செஞ்சவளே
சிவந்த கண்களால் செஞ்சவளே

மல்லிப் பூவின் வாசம்
மனத்தைப் மயக்கிப் பேசும்
சொல்லிச் சென்றாயே
சோகம் வென்றாயே

என்ன நினைப்போ
எப்படி நான் அறிவேன்
வண்ணச் சிலையே
வடிப்பவன் வந்தேனே

இருளான என்றன் நெஞ்சம்
பொருளான வெளிச்சம் கொஞ்சம்
மருளாதே மருளாதே
மாற்றிப் பேரொளி தருவாயே

முத்துமணியே முத்துமணியே
சற்று தணியே சற்று தணியே

கற்றுத் தருவாய் கற்றுத் தருவாய்
கனியக் கனியக் கற்றுத் தருவாய்

இன்னதென்று சொல்லாமல்
என்னவென்று அறிவேனோ
என்னை வென்ற உன்மொழியில்
என்னை மறந்து தவிப்பேனே

காலம் மாறும் கருத்துகள் மாறும்
காதல் மட்டும் மாறாது
வேதனை வேண்டாமே
போதனை ஏன்தானோ?

Jan 11, 2023

நண்பன் புகழேந்தி - பிறந்தநாள் வாழ்த்து

விரும்பிய யாவும் பெற்று
   விளக்கென விளங்குங் கோவாம்
கரும்பெனப் பேச்சில் நின்று
   கவியென விளங்கும் பேரான்
பெரும்படை வந்த போதும்
   பேறெனும் பொறுமை காத்துச்
சுரும்பெனச் சுறுசுறுப்பாய்ச்
   சுழற்றுவான் மட்டைப் பந்தே

கிள்ளி எறிவோம்

அள்ளி விடுதற்கோர் அளவில்லை வாய்வந்த
கள்ளச் சேதியெலாம் கணக்காக வடிவமைப்பார்
எள்ளி நகையாட ஏற்றமணிக் கருத்துகளைக்
கிள்ளி எறிவோமிக் கீழ்மையை அகற்றுதற்கே

Jan 10, 2023

மொழிபெயர்ப்பு

காணவில்லை மாயமானாரே
நம்ம சிவா
கைலாச ஊரு சென்றாரே
கொடுப்பதைக் கொடுங்கள்
விடுவதை விடுங்கள்
கையைக் கொடுத்துவிட்டு ஓடிவிட்டாரே (காணவில்லை)

ஆகாயம் மேலே இட்டாரே
நம்ம சிவா
பாதாளம் கீழே விட்டாரே
நடுவில் இந்த பூமியை
தோணிபோல மிதக்கவிட்டாரே (காணவில்லை)

காண தந்த மாய வாதனு (கன்னடப் பாடல்)

Dec 20, 2022

என்னவெல்லாம்?

எனக்குள்ளே இருக்கும்
கவிதைக் கிறுக்கன்

கணத்திற்குக் கணம்
எட்டிப் பார்த்தவன்

இப்போது
எட்ட முடியா உயரம் சென்று
எல்லாம் தொலைத்துவிட்டான்

என்னவெல்லாம்?

கவிதோய்ந்த நெஞ்சினளின்
கருத்தறியக் காத்திருந்த
காதல் உள்ளம்

மாங்காயும் விளங்காயும்
மனத்தில் ஏற்றிச்
செப்பும்படிச் செய்த
செழிப்பால் கனிந்த உள்ளம்

கனியின்றிக் கனிவேது?
வஞ்சியின் தளையினுள்
வாஞ்சை மிகமிகக்
கருணை பிறந்த உள்ளம்

காட்சிப் படகில்
கருத்துத் துடுப்புடன்
காலக் கடலில்
உல்லாசமாய் இருந்து
உவந்த உள்ளம்

கருத்தில் மூழ்கிக்
கவிதையில் மூழ்கித்
தனிமையியிலும்
தனிமை தொலைத்து
மகிழ்ந்த உள்ளம்

யாப்புக் காட்டில்
ஆரவாரத்தோடு
ஆடிப் பாடித் திரிந்து
ஆனந்தப்பட்ட உள்ளம்

மா மத்தக யானையின்
மலைமீது பட்டுத் தெறிக்கும்
கடாஅம் கடாஅம்
ஓசையில் ஒன்றிய
ஒளிப்பில்லா உள்ளம்

இன்னும் இன்னும்
எத்தனையோ தொலைத்துவிட்ட
ஏதுமில்லா வாழ்க்கை
ஏந்திய செல்வத்தால்
என்ன பயன்?

கவிதை

கவலை தோய்ந்த போதெல்லாம்
   கவிதை வந்து கைகொடுக்கும்
கவரும் சொல்லின் ஆட்சியினால்
   கவலை துன்பம் கழன்றோடும்
துவண்ட நெஞ்சைத் தேற்றிவிட்டுத்
   துணையாய் வந்து நடப்பிக்கும்
உவகை ஊக்கம் உள்மயக்கம்
   உணர்வில் கலந்து நலம்பயக்கும்

Dec 6, 2022

ஆற்றலுடை அண்ணா மலை

காற்றுக்கும் மாரிக்கும் காணாத ஆணவமோ?
வீற்றிருந் தாளும் விமலனோ - தீத்தாளால்
மாற்றம் விளைவிக்கும் மாச்செயலைக் காண்பீர்அவ்
ஆற்றலுடை அண்ணா மலை

Nov 17, 2022

கார்த்திகைத் திங்கள்

கார்த்திகைத் திங்கள் கவினுறு நன்னாளால்
போர்த்திக்கொள் ளாதீர் பொழுது புலர்ந்தது
நீர்த்திவலை யெல்லாம் நெடும்பனை காட்டும்ஓ!
ஆர்த்தெங்கும் செல்கின்ற ஐயன் படைகாணீர்!
சாத்தன் சரித்திரம் சாய்த்துப்பேர் நின்றாலும்
ஏய்த்துப் பிழைப்பார்தம் எண்ணம் ஒடுங்கட்டும்
மூத்த தமிழ்க்குடியே! முன்னெழுந்து வாராய்!உன்
வார்த்தெடுக்கும் மாத்திறங்கள் பார்போற்றும் நாள்வருமே!