Oct 20, 2023

போரை நிறுத்துவீர்

நேரிசை வெண்பா

ஒன்றா(து) உடைகின்ற உள்ளத்தார்க்(கு) எந்நாளும்
பொன்றாது போரே புரிந்துணர்வீர் - நின்று
நிலைவாழ நேயமே நேரிய வாறாம்
குலையாது காப்போம் குடி

Oct 5, 2023

என்செய்வேன் பராபரமே!

தரவு கொச்சகக் கலிப்பா

எண்ணரும் எண்ணங்காள்! எனைவைத்துச் செய்கின்ற
இன்னல்கள் என்னுமா(று) இயக்குவதைக் காண்கின்றேன்
இன்னரும் மூளையினை ஏன்பற்றித் தாக்குகின்றீர்?
என்னையாட் கொண்டீரோ ஏதுக்கும் உதவாதே!

விண்ணுக்கும் மண்ணுக்கும் வீழ்ந்தெழுந்து குதிக்கின்ற
எண்ணங்கள் கண்டீரோ? எனைப்பாடு படுத்துவதே
கண்ணாகக் கொண்டுய்யும் காணாத எலாஞ்செய்யும்
அண்ணாஅ மலையானே! அருளுவாய் அடிச்சரணே!

மதுவுக்கே அடிமையென மனம்நொந்து குடிப்பாரோ
எதுவுமிங்குத் தாங்குகின்றார் எண்ணத்தின் வலைவீழ்ந்து
சிதையாது காக்கின்றார் சிகைநரையும் இல்லாது
அதுவுமில்லை இதுமில்லை எதுவுமில்லை என்பிழைப்போ?

ஒன்றுமிலை என்றாலும் ஓயாஅ(து) ஒழியாது
நின்றநிலை மாறாது நிம்மதியாய் வீடாது
வென்றநிலைச் சிரிப்போடு வேடிக்கை பார்க்குமந்த
என்றனிலை எண்ணத்தை என்செய்வேன் பராபரமே!

Oct 3, 2023

இராஜதுரை - இரங்கற்பா

நேரிசை ஆசிரியப்பா

இராஜ துரையெனும் இன்பெயர் தாங்கி
வராத வரமாய் வாய்த்த தவனே!
அறிவியல் அறிஞனாய் அனைத்தும் முயலும்
நெறியில் நின்று நினைத்தன செய்து
காட்டும் திறமை கைவரப் பெற்று
வாட்டம் போக்கும் வடிவழ கோனே
மின்னைக் கொண்டு தன்னை முடித்த
நின்னை எண்ணி எண்ணி யுருகிக்
கண்ணீர் உகுக்கும் குடும்பம்
காணாய் காணாய் கானுறைந் தவனே!

Sep 10, 2023

நான் ஏணி பேசுகிறேன்

கவியரங்கத் தலைவர் வணக்கம்

யாப்புக் கென்ன குறையிங்கு?
   யாரும் கவிஞர் ஆகிடலாம்
தோப்புக் குள்ளே பலகுயில்கள்
   தோன்றும் வண்ணம் ஊக்கிடலாம்
காப்புக் காடாய் விளங்குகின்றார்
   கலைகள் வளர்க்க முனைப்புடனே
சேர்ப்புச் செய்வார் செம்மலவர்
   சேலம் பாலன் வாழ்கவையா!

அவையடக்கம்

தோப்புக்குள் ளேபுகுந்து தோரணங்கட் டத்துணிந்தேன்
யாப்புக் கவிஞர்காள்! ஏற்றருள்வீர் எம்பாவை!

பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

ஏற்றி விட்ட ஏணியினை
   இனியும் வேண்டா என்றுரைப்பார்
எட்டி உதைப்பார் உதைத்தாலும்
   என்றன் மக்கள் இவரன்றோ?
காற்றில் விட்ட பட்டமது
   கயிற்றை அறுத்துப் பறக்குமன்றோ?
கண்கள் தூசு பட்டதுமே
   கண்ணீர்க் குளத்தில் தவிக்குமன்றோ?
மாற்றம் வாழ்வைப் புரட்டிவிடின்
   மக்கள் மனங்கள் திருந்துமன்றோ?
மற்றும் ஓர்வாழ் உள்ளதென்று
   மானம் துறந்து வழிசேரும்
ஊற்றி னைப்போல் பெருக்கெடுக்க
   உடைய இடமே சேருமன்றோ?
உண்மை உடைமை எதுவென்றங்(கு)
   உள்ளம் தெளிவு பெறுமன்றோ?                  1

எண்ணி எண்ணி உளம்நிறைத்தேன்
   ஏணி ஆனேன் ஏற்றிவிட்டே
எனக்கோ இன்னும் ஏமாற்றம்
   ஏனோ இந்தத் தடுமாற்றம்?
நண்ண வேண்டும் நல்வழியை
   நாளும் உணர்ந்து கைக்கொள்ளேன்
நட்டார் நலனே நலனென்று
   நட்ட மரமாய் நான்நின்றேன்
கண்ணே மணியே எனப்போற்றி
   கருத்தை அகத்தே நன்றேற்றிக்
கடலே அன்ன தமிழுணர்த்திக்
   கவிழ்ந்த கலமாய் ஆனேனே
அண்ணற் கெளிதா யகம்விளைத்தும்
   அண்ணல் என்றே பேர்பெற்றும்
அன்பே என்றன் வழியென்றும்
   அற்றேன் வாழ்க்கை பிறர்வாழ!                  2

என்றன் வாழ்க்கை இயல்பறிந்தார்
   என்றன் உள்ளப் பொருளுணர்ந்தார்
இன்றும் இல்லை இனியுமில்லை
   என்னும் நிலைமை வாராது
நன்றே உலக நலன்கருதி
   நலமே விளைக்கும் செவியுள்ளார்
பொன்றும் துணையும் வாழ்ந்திருப்பார்
   புவியில் புனிதர் பேறுபெற்றே
அன்றும் இன்றும் எப்பொழுதும்
   அறமும் பொருளும் நனிவிளக்கி
அகிலம் காக்கும் இலக்கியத்தை
   அள்ளிப் பருகி நலம்வாழ்வோம்
கன்று தாயை மறப்பதில்லை
   கவிதை அறத்தை மறப்பதில்லை
கவிஞன் உலகை வழிநடத்திக்
   கடமை செய்தல் வாழ்வாகும்                     3

Sep 1, 2023

ஓ! ஏணியே!

ஓ! ஏணியே!
ஏன் நீயே
உன்னைக் குறைத்து மதிப்பிட்டு
உடைந்து போகிறாய்?

வாழ்வின் ஏற்றங்கள் எல்லாம்
வகைவகையாய் வந்துசேர
ஊற்றுப் பெருக்காய்
உடையன தருகிறாய்!

ஏணியென வாழ்ந்துவிட
ஏற்றுக்கொண்ட வாழ்விலே
ஆணியெனப் புதைந்துவிட்ட
ஆற்றலை எல்லாம்
வெளிக்கொணர்ந்து
மாற்றங்கள் பலவரினும்
மாறாதது ஏணியென
மார்தட்டுவதில்
மண்ணுக்கும் பயனில்லை

மாற்றத்தை ஏற்காத
வசதியான இடம்
சதியான இடம் என்பதை மறவாதே

எதிர்பார்ப்புகளால்
ஏமாற்றங்கள் ஏற்படுவது
இயற்கைதான்
எதிர்பாராமல்
என்னத்தை மாற்றிவிட முடியும்

மாற்றம் வேண்டுவார் மனத்தில்
குறிக்கோள் எனும் எதிர்பார்ப்பு வேண்டும்.

Aug 31, 2023

மடையுடைத்து வெள்ளம் வருமே!

கடைந்தவெணம் குடைந்தகுணம் நடைதளர்ந்த(து) எனவே
உடைந்தமனம் அடைந்தவினப் படைமறத்தல் தகுமோ?
இடையிடையே இணங்கமுடி யாதிருக்க ஏதோ
மடைபோட்டுத் தடுத்தாலும் உடைத்துவெளம் வருமே!

Aug 23, 2023

மூன்றாம் சந்திரயான்

தென்புலம் காணத் தெளிந்து தெளிந்து
இன்புளத் தோடு இறங்கிய சந்திரயான்!

***

அதோ பார்!
மூன்றாம் சந்திரயான்
அழகாய்த் தரை இறங்கியதை!

நிலவின் தென்துருவத்தை
வெற்றியோடு தொட்டது 
விளங்கொளிக் கதிர்வீசி!

***

நிலவே! நலமா?
சந்திரயான் எனும் எந்திரன் யான்
வந்திறங்கினேன் மூன்றாம் தலையினன்

நீ சுற்றிவரும் தாய்ப் பூவுலகின்
பெருமக்கள் பரவலுடை
இந்தியாவின் வேட்கை
என் வேட்கை

உன் தென்புலத்துத் துருவத்தைக்
காணாத பல கண்களின் வேணவா தீர்க்க
விவேகத்தோடு விரைந்து வந்தேன்

எத்தனை எத்தனை உள்ளங்கள்
கைகூப்பி வேண்டிக் கைதட்டிக் கொண்டாடுகின்றன

வரலாற்றுச் சிறப்புடைத்தாய்
வார்த்தெடுத்துச் சூழ்ந்தனர்
வளமிக்க இந்தியர்!

இனி,
பாட்டி சுட்ட வடையை
வாங்கித் தின்ன நேரில் வருவர்
நேர்த்திக் கடன் செலுத்த விரைதல் போல

***

Aug 22, 2023

அருஞ்செயலுக்குத் தேவை ஆர்வமே

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

ஆயிரம் உந்தல் இருந்தாலும்
   ஆர்வமி லாத செயலென்னின்
மாயிருள் போலக் கண்கட்டும்
   மடுவெனப் போகும் மாமலையும்
ஆயிரம் தடைகள் வந்தாலும்
   ஆர்வம்நி றைந்த செயலுக்குத்
தீயன தாரா(து) அதுவளரும்
   தெரிந்து செய்வீர் அருஞ்செயலே

Jul 17, 2023

காக்கைக்குச் சோறு!

வானத்து நிலா
காணாமல் போகட்டும்
வயிறாரச் சோறு கிடைக்கும்
காக்கைக்கு!

Jul 9, 2023

எண்ணம் தெளிவு பெறுக

இல்லை இல்லை இல்லை இல்லை
    உண்மை யாக இல்லையே
தொல்லை தொல்லை தொல்லை தொல்லை
    ஆசை கொள்ளல் தொல்லையே
எல்லை எல்லை எல்லை எல்லை
    இல்லை எல்லை யானவன்
மெல்ல மெல்ல மெல்ல மெல்ல
    நெஞ்சி லேற்று வாழவே!

எண்ணி எண்ணி எண்ணி எண்ணி
    ஏனு ழந்து நைகிறாய்
திண்ணி தென்ற உன்ற னுள்ளம்
    தெளிவி ழந்து பொங்கவே
மண்ணி லேது மன்ன லில்லை
    மண்ணை யன்றி உலகிலே
எண்ணி எண்ணி எண்ணி எண்ணி
    எண்ணம் தெளிவு பெறுகவே

என்ன மாயம் என்ன மாயம்
    இந்த மனித வாழ்வுதான்
என்ன வென்று ணர்ந்து தெளிதல்
    என்ன என்ன என்னவோ?
மின்னி மின்னி மின்னி மின்னி
    மின்னும் ஒளியி ழக்குமே
மன்னி மன்னி மன்னி மன்னி
    மண்ணில் நிலைப்ப தில்லையே